வெள்ளி, 9 ஏப்ரல், 2021

எதை செய்வது? (10.4.2021)

எதை செய்வது?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் கல்வியறிவற்ற இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றி அறிவிப்பதை கண்டு அச்சமுற்ற பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடி அவர்களை கைது செய்து, இனிமேல் இயேசுவைப் பற்றி பேசவோ கற்பிக்கவோ கூடாது என ஆணை பிறப்பிக்கிறார்கள். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில்,  இயேசு தன்னுடைய உயிர்ப்புச் செய்தியை தன் சீடர்களுக்கு அறிவித்து, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என நற்செய்தியின் பணியாளர்களாக வாழ அழைப்பு தருகின்றார். இயேசுவின் அழைப்பு ஒன்றாக இருக்க,  இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய சட்டதிட்டங்களும், அதனை6 தங்கள் கையில் வைத்திருக்கக் கூடிய அதிகாரிகளின் அச்சுறுத்தலும் ஒரு புறம் இருக்க, இயேசுவின் சீடர்கள் இரண்டில் எதை தேர்வு செய்வது என்ற எண்ணத்தோடு பயணித்தாலும், தெளிவு கொண்டவர்களாக துணிச்சலோடு இறைவன் பணியை செய்வதே எங்களது நோக்கம் எனக் கருதி ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.  இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் நாமும் இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். நமது முன்பாக ஒரு அநீதி இழைக்கப்படும் போது நடப்பது அநீதி என்பதை எடுத்துரைத்து அந்த அநீதியை நடக்காமல் தடுப்பதா? அல்லது தன்னைத் தீண்டவில்லை இது, யாரோ ஒருவரின் வாழ்வில் தானே அரங்கேறுகிறது என்று கூறிவிட்டு,  கண்டும் காணாமல் இருந்து போவதா? என்ற  இரண்டு விதமான பார்வைகளையும் அன்றாடம் நமது வாழ்வில் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் எதை நாம் முன்னிறுத்துவது? எந்தப் பணியை செய்வது?  எதை செய்வது? என சிந்திக்கவும் செயல்படவும் இன்று நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் சீடர்கள் இவ்வுலக சட்டதிட்டங்களுக்கும் அதிகாரங்களைத் தன் கையில் வைத்திருக்கக் கூடிய அதிகாரிகளுக்கும் அஞ்சவில்லை. அவர்கள் ஆண்டவருக்கே அஞ்சினார்கள். எனவே தான் ஆண்டவர் பணியை செய்வோம். அதனால் துன்பங்கள் கிடைக்குமானால் இன்பதோடு அதனை ஏற்றுக் கொள்வோம். உயிரையும் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகுமானால், அதையும் துணிவோடு எதிர் கொள்வோம் என்ற எதிர்நோக்கோடு இயேசுவின் பணியை முன்னெடுத்துச் சென்றார்கள். 
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் இத்தகைய சீடத்துவ மனப்பான்மை நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். நம் கண் முன்பாக நடப்பது அநீதி எனத் தெரியும் பொழுது, அது நமக்கு நடந்தாலும் சரி, அடுத்தவருக்கு நடந்தாலும் சரி, அது அநீதி என்பதை சுட்டிக்காட்டவும், அங்கு நீதியை நிலைநாட்டக் கூடிய இயேசுவின் சீடத்துவ பணியைச் செய்வதற்கு இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். இப்பணியைச் செய்வதால் பலவிதமான இன்னல்களையும் துன்பங்களையும் சந்திக்க நேரலாம். மனம் துவண்டு விட வேண்டாம். நாம் செய்கின்ற சிறுசிறு நன்மையும் மிகப்பெரிய மாற்றத்தை இச்சமூகத்தில் உருவாக்கும்.  எப்படி இயேசுவின் சீடர்களுடைய துணிச்சல் மிக்க போதனை பலரின் உள்ளங்களைக் கவர்ந்ததோ, பலரின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அதுபோல நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு செயல்களும்  சின்னஞ்சிறிய நீதிக்கான செயல்களும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதை மனதில் கொண்டவர்களாக நாமும் இயேசுவின் சீடர்களைப் போல சீடத்துவ பணியை மேற்கொள்ள இன்றைய நாளில் இறையருளை வேண்டி பயணிப்போம்.

1 கருத்து:

  1. நீதியான செயல்களை நமக்கும் பிறருக்கும் செய்திட நீதியால் மற்றவரின் வாழ்வையும் உயர்த்திட நம்மை அன்போடு அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும்! செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...