நல்ல ஆயனாக மாறுவோம்!
இயேசுவில் அன்புக்குரியவர்களே ...
இன்று நிலவக்கூடிய இக்கட்டான இந்தச்சூழ்நிலை,.. அனுதினமும் அச்சத்தை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. திரும்பும் திசை எங்கும் மரண ஓலங்கள் கேட்கின்றன. எங்கு பார்த்தாலும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்ற வார்த்தைகள் தான் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன. நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் மறைத்துவிட்டு கொரோனா தொற்றுநோயின் தாக்கம் மட்டுமே அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியாக உள்ளது. பரபரப்புச் செய்திகளை கேட்டாலே அச்சம் வரக்கூடிய நிலை உருவாகியுள்ள இச்சூழ்நிலையில், இன்றைய நாள் வாசகங்களின் வழியாக இறைவன் நம்மை நல்ல ஆயனாக மாறிட அழைப்பு தருகின்றார்.
நல்ல ஆயன் ஆடுகளுக்காக தன் உயிரையே தரக்கூடியவர். இயேசு நமக்காக தன் இன்னுயிரை தந்தார். நம்மிடையே வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுநோய் காரணமாக பல விதமான இன்னல்களையும் துன்பங்களையும் அடைகிறார்கள். இந்நேரத்தில் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அடுத்தவரின் துயரை கண்டும் காணாமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் கல்லான இதயம் கொண்டவர்கள் அல்ல. நம் அருகாமையில் இருக்கக்கூடியவர்கள், நோய் தொற்று காரணமாக துன்புறுபவர்களுக்கு நமது பாதுகாப்பை மனதில் வைத்துக்கொண்டு, நாம் பாதுகாப்போடு இருந்து அவர்களுடைய துன்பங்களை துடைப்பதற்கு நாம் அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்திட இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.
இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது, அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் நல்ல ஆயனாக விளங்கினார். இன்று நாமும் நல்ல ஆயராக விளங்க வேண்டிய தருணம் இது. நிலவும் சூழல் அனைத்தும் நல்ல ஆயராக மாறி, ஒருவருக்கொருவர் உதவி செய்து அடுத்தவர்களின் துயரத்தில் பங்கெடுக்கக்கூடிய நல்ல மனிதர்களாக வாழ்ந்திட நமக்கு அழைப்பு தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் பெயரால், அங்கு உள்ளவர்கள் இயேசுவின் பெயரால் நலம் அடைந்தார்கள் என்ற செய்தியினைை நாம் வாசிக்க கேட்டோம். நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கொண்டுள்ள மனித நேயத்தின் அடிப்படையில் நாம் செய்யும் சிறு சிறு உதவிகள் மூலமாக, கண்டிப்பாக நோய்த் தொற்றில் உள்ள ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் ஆறுதல் பெறுவர். இன்று ஊடகங்களுடைய பரபரப்பு செய்தி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் மனிதர்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொடக்க காலத்தில் மக்கள் நம்பிக்கையைை இழக்கும் தருவாயில் இருக்கும் போதெல்லாம் தொடக்க காலத்தில் திருத்தூதர்கள் நம்பிக்கையை ஊட்டினார்கள். இயேசுவின் பெயரால் நம்பிக்கையை தந்தார்கள். இன்று நாமும் நம்பிக்கையை தரக்கூடிய நல்ல ஆயனாகவே இருக்க அழைக்கப்படுகிறோம். நோய்த்தொற்று இருந்தால் நாம் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் உள்ள மனிதர்களிடம், ஒன்றுமில்லை! நீங்கள் நலமாக உள்ளீர்கள் விரைவில் குணமாவீர்கள். நீங்கள் நலம் அடைவீர்கள்.
உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற ஆறுதலான வார்த்தைகளை கொடுக்க முயலுவோம். அப்படிக் கொடுக்கும் பொழுது கண்டிப்பாக ஒவ்வொருவர் மனதிலும் நம்பிக்கையை விதைக்க முடியும். அந்த நம்பிக்கை அவர்களை நலமாக்கும் என்ற எண்ணத்தோடு, அந்த எண்ணத்தை நமக்குள்ளும் விதைத்துக் கொண்டு நமது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் நாம் செயல்படத் துவங்கிட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய இரண்டாம் வாசகமும் அன்பை மையப்படுத்துகிறது.
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.
1 யோவான் 3:1 என்ற இறை வார்த்தை கடவுள் நம்மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்துகிறது. அதன் அடிப்படை நோக்கமே நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான்.
தன் பெண்டு,
தன் பிள்ளை
தன் வீடு
தன் சோறு
சம்பாத்தியம்,
இவையுண்டு தானுண்டு என்போர் கடுகு உள்ளம் கொண்டோர். என்ற பாரதிதாசனின் பாடல் வரிகளின் நிலையை கடந்து, இன்று நான் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணமானது மனிதர்களின் மனதில் ஆழமாக குடிகொள்கிறது. எனவே மனிதனுக்குள்ளாக இருக்கக்கூடிய மனிதநேயமானது, சிறிது சிறிதாக நோய்த்தொற்று காரணமாக அழிந்து வருகிறது. இந்நேரத்தில் நமக்குள் இருக்கும் மனித நேயத்தை, முன் நிறுத்துவோம். அதனை அழிந்து விடாமல் காத்துக் கொள்வோம். அந்த மனித நேயத்தின் அடிப்படையில், அடுத்தவர் மீது அன்பு கொண்டவர்களாக, துன்புறக்கூடிய மக்களுக்கு துணை நிற்க கூடியவர்களாகவும், அவர்களுக்கு ஆறுதல் தரக் கூடியவர்களாகவும் அவர்களுக்கு நல்வழி காட்டக்கூடிய நல்லாயனாகவும் நாம் மாறிட இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.
நமக்காக உயிரை கொடுத்த நல் ஆயராம் இயேசு கிறிஸ்துவின் வழிவரக் கூடிய நாமும் அவரைப்போல நல்ல ஆயர்களாக மாறிட உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
உள்ளத்தில் உறுதி ஏற்பது முக்கியமல்ல. நாம் ஏற்ற உறுதியானது நமது செயலில் வெளிப்பட வேண்டும். எனவே நம்மாலான சின்னஞ் சிறு உதவிகள் மூலமும், நல்ல ஆறுதலான வார்த்தைகள் மூலமும், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடியவருடன் உரையாடுவோம். இந்த கொரோனாத் தொற்றுநோய் ஓர் அரசியல் என்று ஒருபுறம் பேச்சு இருந்தாலும், வதந்தி என்று ஒருபுறம் பேச்சு இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களே நமது இலக்காக இருக்க வேண்டும். அவர்களே நமது மந்தையின் ஆடுகள். அவர்களைத் தேடிச் செல்வோம். அவர்களுக்கு வழிகாட்டுவோம். அவர்களோடு உரையாடல் நடத்துவோம். அவர்களுக்கு ஆறுதலைத் தருவோம். நம்பிக்கையை அவர்களுக்குள் துளிர்விடச் செய்வோம். அந்த நம்பிக்கை அவர்களை குணமாக்கும். நமது நம்பிக்கையும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் கண்டிப்பாக நல்ல ஆயரின் பாதையில் அனைவரும் நடந்திட வழிவகுத்திடும் என்ற உறுதிப்பாட்டுடன் இன்றைய சூழலில் நல்ல ஆயனாக நாம் விளங்கிட இறையருளை வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்.
இயேசுவின் பின்னால் நாமும் செல்வோம்! 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
பதிலளிநீக்குsirappu
பதிலளிநீக்கு