செவ்வாய், 16 மார்ச், 2021
இணைந்திருப்போம் ... (17.3.2021)
திங்கள், 15 மார்ச், 2021
புதிய வாழ்வுக்கு எதை புறம் தள்ள வேண்டும்?... (16.3.2021)
ஞாயிறு, 14 மார்ச், 2021
இன்று புதிதாய் பிறப்போம்... (15.3.2021)
சனி, 13 மார்ச், 2021
பொக்கிஷங்களை குப்பையில் எறியாதீர்கள் .. (14.3.2021)
வெள்ளி, 12 மார்ச், 2021
வார்த்தைகள் இல்லாத இதயம்... ( 13.3.2021)
வியாழன், 11 மார்ச், 2021
அலட்சியம் செய்யாதே... (12.3.2021)
சிலுவைப்பாதை (02.04.2021)
சிலுவைப்பாதை
முன்னுரை:
இயேசுவில் பிரியமானவர்களே, நாம் நினைவுகூர்கின்ற இந்த சிலுவைப்பாதை என்றோ எங்கோ நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வல்ல.மானிட வரலாற்றை புரட்டிய, சமூகமாற்றத்திற்கு வித்திட்ட ஒரு போராட்ட பாதை. கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்ற வாழ்வின்பாதை. தடம்பார்த்து நடந்த மனிதனின் பாதையல்ல இந்த சிலுவைப்பாதை மாறாக, நாம் தடம் பார்த்து நடக்க தடம்பதித்து சென்ற புனிதனின் பாதை. தான் வாழவேண்டும், தன்னுடைய விருப்பமே நிறைவேற வேண்டுமென்று வாழுகின்ற மனிதர்கள் மத்தியில் தன்விருப்பமல்ல, தன் தந்தையின் விருப்பமே நிறைவேற வேண்டுமென்று, காயப்பட்டவராய், எதார்த்தங்களை துணிவோடு ஏற்று தன்னையே பலியாக்கிய துடிப்புமிக்க 33வயது இளைஞனின் இலட்சியப்பாதை.
இன்று இச்சிலுவைப்பாதையில் இயேசுவின் பாடுகளில் அவரோடு உடன்நடந்தவர்கள், அவருக்கு உடனிருந்து உதவியவர்கள், அவர் நிலைகண்டு கலங்கியவர்கள் என்று அனேகர் கல்வாரிப்பாதையின் பிம்பங்களாக நம்முன் காட்சிதருகிறார்கள். அந்த பிம்பங்களின் வழியாக இயேசுவின் பாடுகளைத் தியானிப்போம். பார்வையாளராய் பங்கேற்க ஏராளமானோர் இருக்கிறார்கள், பங்கேற்பாளராய் பங்கேற்க பலர் இருக்கிறார்கள் ஆனால் பயணிப்பவர்களாய் உடன்நடக்கயாருமில்லை. உடன் பயணிக்க நாம் தயாரென்றால் நம்மையே இக்கல்வாரிப்பயணத்தில் இணைத்துக் கொள்வோம் வாருங்கள்.
முதல்நிலை: இயேசுவைத் தீர்ப்பிடுகிறார்கள்
பிலாத்து பேசுகிறான்:
நான் போந்தியு பிலாத்து பேசுகிறேன். ஆம், இயேசுவைக் கொன்றவன் என்று இந்த உலகமே பழிதூற்றும் அந்த போந்தியு பிலாத்து தான் பேசுகிறேன். நான் பதவி ஆசையின் காரணமாக இயேசுவின் கொலைக்கு உடந்தையாக இருந்தவன் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால், குற்றமற்றவர் இயேசு என்பதை அறிந்து, நான் அவரை விடுவிக்க வழிகளைத் தேடிய போது நீதிமாளிகையின் அத்தனை கதவுகளையும் அடைத்தது யார்?. அவனை சிலுவையில் அறையுமென்று ஒலித்தது உங்கள் குரலொலிகள் தானே! சரி அது இருக்கட்டும். இயேசுவால் குணமடைந்த ஆண்கள், பெண்கள், தொழுநோயாளிகள், ஏன் மிகவும் நேசித்த சீடர்கள் என்று யாராவது ஒருவர் சாட்சி சொல்ல வந்திருக்கலாமே. அத்தனை பேரும் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்தார்களே அந்த செய்நன்றி மறந்த மனிதர்கள்.
இயேசு பேசுகிறார்:
நீங்களும் பிலாத்தைப் போல கைகளில் அழுக்கை வைத்துக்கொண்டு கண்ணாடிகளைச் சுத்தப்படுத்தும் வேலையைத் தான் இன்னும் செய்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் மனசாட்சிகளில் படிந்திருக்கும் அநியாய ஒட்டடைகளை அகற்றுங்கள். நல்லவர்களுக்கு அநியாயத் தீர்ப்புகள் சொல்லி, விமர்சனங்களால் கொன்ற காலம் பிலாத்துவோடு போகட்டும். உங்கள் விமர்சனங்கள் அடுத்தவர்களை வளர்த்தெடுக்கவும், உங்கள் தீர்ப்புகள் உடனிருப்பவரை நெறிப்படுத்தவும் மட்டும் உதவட்டும்.
நாம் பேசுவோம்:
அன்பான இயேசுவே! எங்களுடைய சுயநலன்களுக்காக அடுத்தவர்களை வதைக்கின்ற மனநிலையை எங்களிடம்ருந்து நீக்கியருளும். உம்மைப் போன்று உறவை வளர்க்கும் நலமான வார்த்தைகளை பேச நல்ல இதயத்தை தந்தருளும்.
இரண்டாம் நிலை: இயேசுவின் மீது சிலுவை சுமத்தப்படுகிறது
சிலுவை பேசுகிறது:
நான் தான் இயேசுவின் தோள்களைத் தழுவியதாலேயே எல்லாருடைய இதயங்களிலும் இடம்பிடித்த பாரமான சிலுவை பேசுகிறேன்!. இறைவன் எங்களை கனி தரும் மரங்களாகத் தான் படைத்தார் ஆனால், இதயமற்ற மனிதர்கள்தான், எங்களை மரணக்கருவிகளாக உருமாற்றினார்கள்!. கருவறையில் சேயைச் சுமக்கும் தாயைப்போல, கல்விகற்க புத்தகத்தை சுமந்து செல்லும் மாணவர்களைப் போல என்னை விரும்பி ஏற்று கல்வாரிநோக்கி சுமந்து செல்கிறார் இறைமகன் இயேசு.
இயேசு பேசுகிறார்:
உங்கள் பாவங்களுக்காக, நீங்கள் விடுதலை பெறுவதற்காக பாரமான சிலுவையை நான் சுமக்கிறேன் ஆனால், நீங்களோ உங்கள் அன்றாடச் சிலுவைகளை சுமக்க விரும்புவதில்லையே ஏன்?. நீங்கள் சுமக்கின்ற சிலுவைகள் உங்கள் தோள்களைத் தழுவியது எதனால்?. ஆடம்பர ஆசையால் வந்தது கடன்சிலுவை. முயற்சியும், உழைப்பும் இல்லாததால் வந்தது வறுமைச் சிலுவை. உறவுகள் பதுங்கியதால் வந்தது முதுமைச் சிலுவை. வாழ்வதற்காக உண்ணாமால், உண்பதற்காகவே வாழ்ந்ததால் வந்தது உடல் சிலுவை. இப்படி நீங்களே வருவித்துக் கொண்ட சுமைகளைச் சுமக்க வருந்துவது ஏன்?. வாருங்கள் நான் உங்களோடு பயணிக்கிறேன்.
நாம் பேசுவோம்:
எங்கள் சுமைகளைத் தாங்கி சுமந்த இயேசுவே! நாங்களாக தேடி வருவித்துக் கொண்ட சிலுவைகளை மனமுவந்து சுமந்து செல்ல உமதருளைத் தந்தருளும் இறைவா.
மூன்றாம் நிலை: இயேசு முதல் முறையாக கீழே விழுகிறார்
நிலம் பேசுகிறது:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்று சொல்வார்களே அந்த நிலம்தான் பேசுகிறேன். அகிலத்தை படைத்த இறைவனையே அரவணைத்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு. தாங்கி நிற்பதற்காக படைக்கபட்ட என்மேல் தடுக்கி விழுகிறார் இயேசு. எது அவரை முகம் குப்புற விழுத்தாட்டியது?. தோள்களை அழுத்தி கீழே தள்ளிய சிலுவையின் பாரமா? இல்லை, பரிதவிக்கவிட்டு பறந்து போன சீடர்களின் துரோகமா?. நடக்க பழகிய பருவத்தில் தடுக்கிவிழாமல் நடை பழகியவர்கள் யாருமில்லை. ஆனால், பழக பழக நடையைக்கூட்டி விழுவதைக் குறைப்பதில் தானே அர்த்தமும், வாழ்வின் அனுபவமும் பிறக்கிறது அதைத் தான் இயேசுவின் வாழ்வில் நான் கண்டேன்.
இயேசு பேசுகிறார்:
இன்று உங்களில் எத்தனை பேர் உயிரையும், உறவையும் சிதைக்கும் போதையில் விழுந்துகிடக்கிறீர்கள்?. நம்பிக்கையையும், பாசத்தையும் தகர்க்கும் சந்தேகத்தில் விழுந்துகிடக்கிறீர்கள்?. மதிப்பையும் மரியாதையையும் குலைக்கும் தாழ்வு மனநிலையில் விழுந்துகிடக்கிறீர்கள்?. வீழ்வது தவறல்ல ஆனால் நிலத்தில் வீழ்ந்துகிடப்பதில் சுகம் காண்பதுதான் தவறு. மழையென விழுந்த நீர் மேகமாய் எழுவது போல் உங்கள் வீழ்ச்சிகளில் எழுச்சிகாணுங்கள.; மண்ணில் விழுந்த போதும் மீண்டெழுந்த என் எழுச்சி உங்களுக்கு கைகொடுக்கும் என்பதை மறவாது எழுந்து புறப்படுங்கள்.
நாம் பேசுவோம்:
வீழ்ந்தபோதும் மீண்டெழுந்த இயேசுவே! எங்கள் அன்றாட வாழ்க்கையில், எங்கள் வார்த்தைகளாலும், செயல்களாலும் வீழ்ந்து போனதை எண்ணி நாங்கள் மனம்வருந்துகிறோம். வீழ்ச்சி கண்டு துவண்டுவிடாது உமது எழுச்சிகண்டு நாங்களும் துணிந்து பயணிக்க உமது வல்லமையைத் தந்தருளும்.
நான்காம் நிலை: இயேசு தனது அன்னையை சந்திக்கிறார்
மௌனம் பேசுகிறது:
என்னை எல்லாரும் வாய் பேச முடியாதவர்களின் தாய்மொழி என்கிறார்கள். அமைதி, நிசப்தம், மௌனம் என பல்வேறு வார்த்தைகளால் அழைக்கின்றார்கள் என்னை. ஆனால், இன்று ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையில் உலவுகின்றேன். பத்துமாதம் வயிற்றினில் சுமந்து பெற்றெடுத்த மகன் இன்று சிலுவையினை சுமந்துகொண்டு செல்லுவதைக் காணும்போது தாய் மரியாவுக்கு மௌனமாகிய நானே துணையாக நிற்கின்றேன். கல்வாரி நோக்கிசெல்லும் மகனுக்கு கண்ணீரால் பிரியா விடைகொடுத்து மௌனமாய் நிற்கின்றார் வீரத்தாய் அன்னை மரியாள்.
இன்றும் எத்தனையோ தாய்மார்கள் என்னைத்தான் பல்வேறு சூழ்நிலைகளில் தங்களின் துணையாகக் கொண்டுள்ளார்கள். குடித்துவிட்டு தீய வார்த்தைகளால் கணவன் திட்டுகின்றபோதும், ஆண் சொல்வதை பெண் கேட்கவேண்டும் என்று ஆணவத்தோடு ஆண்கள் பேசும்போதும், திருமணமான இடத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் அமைதியாக இரு என்று பிறந்த வீட்டுச் சொந்தங்கள் பெண்களுக்கு அறிவுரை கூறும்போதும் நான் தான் அவர்களுக்கு ஆறுதலாய், துணையாய்; அவர்களின் தாய்மொழியாய் உள்ளேன்.
இயேசு பேசுகிறார்:
சிறுவயதில் எனக்கு பேசக் கற்றுதந்த என் அன்னை மரியாவின் உதடுகள் ஏன் இன்று மௌனமாய் அமைதியாய் இருக்கின்றன?. இன்று என் தாய் மரியா எனக்கு இந்த உலகில் இன்னொரு மொழியாகிய மௌனத்தை இந்த கல்வாரிப் பாதையில் கற்றுத் தருகின்றார். இத்தனை கூச்சலுக்கு நடுவில் என் தாயின் அமைதிமொழி என்னை புதுத்தெம்புடன் நடக்கச்செய்கிறது.
நாம் பேசுவோம்:
அன்பான இயேசுவே! இன்று எம் நடுவே இந்த மௌனமொழி பேசி வெளியே சொல்லமுடியா துயரோடு வாழுகின்ற அனைத்து தாய்மார்களின் வேண்டுதலையும் உம் பாதம் வைக்கின்றோம் நீரே அவர்களுக்கு ஆறுதலாய் இருந்து புதுத்தெம்பினை தந்தருளும்.
ஐந்தாம் நிலை: இயேசுவுக்கு சீமோன் உதவி செய்கிறார்
சீமோன் பேசுகிறார்:
வானத்து மழையை நம்பி விவசாயம் செய்து, வாரிசுகளை வளர்த்தெடுப்பதற்காக, வயல்வெளிகளில் அறுவடைசெய்து வாழும் சீரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் பேசுகிறேன். அன்றொரு நாள் வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் வீதியில் கண்டேன் இயேசுவை. உடலைங்கும் இரத்தம் சொட்ட காலிரண்டும் நிலைதடுமாற, தள்ளாடி தளர்நடை போட்டு, சிலுவை சுமந்து சென்றது ஒரு செம்மறி. கூட்டத்தில் ஆயிரம்பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது தோளோடு தோள்கொடுத்து இயேசுவின் பாரம் சுமக்க அழைப்பு வந்தது ஏனோ என்னிடம். அன்று இயேசுவின் சிலுவையை சில நூறு அடிகள் மட்டுமே சுமந்த என்னை இன்று வரலாறு வாழ்த்துகிறது. வானுலகம் போற்றுகிறது. சக மனிதனுக்கு ஒரு தேவையென்றால் மடைதிறந்த வெள்ளம் போல் தேடிச்சென்று உதவுவதுதானே மனிதம் அதைத்தான் நான் செய்தேன்.
இயேசு பேசுகிறார்:
பிறர் துயரத்தில் உங்களது மனநிலை என்ன?. அண்டைவீட்டில் தீப்பிடிக்கும் வேளையில் அணைக்கட்டும், சென்று ஆறுதல் சொல்வோம் என்று அமைதிகாக்கும் கூட்டமா நீங்கள்? அல்;லது துயரம் வந்தால் தூரப்போகும் உறவுகளாக இல்லாமல் நெருங்கிவந்து உதவிடும் சீமோனா?. வாழ்வது ஒரு முறை சீமோனைப் போன்று வாழ்ந்தால் இந்த தலைமுறையும் உங்களை வாழ்த்தும்.
நாம் பேசுவோம்:
துயர் துடைக்கும் உன்னதரே எம் இறைவா! பாரமான இதயத்தோடு வருபவர்களுக்கு, பரிவாய் செவிசாய்த்து சீமோன் போன்று உதவிக்கரம் நீட்டி துணைநிற்கும் உயர்ந்த உள்ளத்தை எங்களுக்குள்ளே படைத்தருளும்.
ஆறாம் நிலை: இயேசுவின் முகத்தை வெரோணிக்காள் துடைக்கிறார்
வெரோணிக்காள் பேசுகிறார்:
நான் வெரோணிக்காள் பேசுகிறேன். அன்று வரை இயேசுவை நான் பார்த்தது கூட கிடையாது. அவர் குருடர்களைத் தொட்டு பார்வை கொடுப்பவர், முடவர்களை நடக்கச் செய்பவர், நோயுற்றோரைத் தொட்டு குணப்படுத்துபவர், பாவிகளை மீட்க அவர்களோடு உறவாடுபவர் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இயேசுவை காண வேண்டும் என்ற பேரன்பும், பேராவலும் கொண்டிருந்த பேதை நான். ஆனால், வெறிப்பிடித்த வேட்டை நாய்களின் கோரப்பற்களால், குதறப்பட்ட ஆட்டுக்குட்டியைப் போல் இரத்த வெள்ளத்தில் அவரைக் காண்பேன் என்று கனவில் கூட நான் நினைத்ததில்லை. இரத்தமும், வியர்வையும் இமை நனைத்து, இயேசுவின் முகம் அலங்கோலமாயிருந்த நிலையில் உருகுலைந்த அவர் முகத்தை, அவரைப் போன்று மாசில்லா வெள்ளைத் துணி கொண்டு துடைத்தேன்.
இயேசு பேசுகிறார்:
பிறர் முகத்தில் கரிபூசி, பிறர் வாழ்வில் குறை காண எப்பொழுதும் வாயில் குறையோடு அலைகின்ற மனிதர்கள் மத்தியில், பொலிவிழந்த என் முகத்தை துடைத்த வெரோணிக்காவாக வாழுங்கள். பிறர் வாழ்வை சீரழிப்பதையும், சீர்குலைப்பதையும் விட, சீர்தூக்கி பார்த்து, சீர்படுத்தி பெருமைப்படும் மனிதம் காக்கும் மாந்தர்களாக வாழுங்கள். கறை துடைத்து கறையில்லா சமூகத்தை இம்மண்ணில் மலரச்செய்ய வெரோணிக்காவை பின்தொடருங்கள்.
நாம் பேசுவோம்:
எங்களுக்காக இன்னுயிர் தந்த இயேசுவே! எங்கள் கோழைத்தனத்தை விலக்கி, வெரோணிக்காவைப் போன்று துயர்துடைக்கும் வீரமிக்க மாந்தர்களாக, எங்களால் இயன்றதைச் செய்து, மனிதநேயத்தை நிறைவாக்க உம் அருள்தாரும்.
ஏழாம் நிலை: இயேசு இரண்டாம் முறையாக கீழே விழுகிறார்
சாட்டைகள் பேசுகின்றன:
பாவம் அறியாத புண்ணிய உடலை கசையடிகளால் கண்ணிப்போகச் செய்துஇ இயேசுவை இரண்டாம் முறை நிலைதடுமாறி முகம்குப்புற விழுந்தாட்டிய சாட்டைகள் பேசுகிறேன். வாழ்ந்த காலமெல்லாம் நன்மையன்றி தீமைஅறியாதஇ மனிதருள் மாணிக்கத்தைஇ சிந்தனையாலும்இ சொல்லாலும்இ செயலாலும் தீங்கு நினையாத புண்ணியனைஇ நரம்புகள் எல்லாம் நடுங்கஇ தோல் கிழிந்து இரத்தம் பெருகஇ எலும்புகள் நொறுங்கி நிலைதடுமாறிஇ விழுந்தாட்டிய கொடுமையைச் செய்தவன் நான்.
கசையடி சப்தங்களே என் ஆற்றமையின் ஓலங்களாகிப் போயின. வீசிய பக்கமெல்லாம் விரைந்து விளைவுகளை ஏற்படுத்திஇ இழுக்கின்ற பக்கமெல்லாம் திரும்பும் சாட்டை நான். சுயமாக செயல்பட இயலாத எடுப்பார் கைப்பிள்ளை நான். நானே உயிரற்றவன் ஆனால் உங்களில் எத்தனைபேர் என்னைப் போல சுயம் அறியாத எடுப்பார் கைப்பிள்ளைகளாய் வாழ்கிறீர்கள்?
இயேசு பேசுகிறார்:
சாட்டைகளின் அடி என்னை தள்ளியதை விட வார்த்தையெனும் சாட்டையால் ஒருவர் மற்றவரின் மனச்சுவர்களை நொறுக்கும்போது நான் கீழேவிழுகிறேன். வசைமொழிகளால் பலரை நம்பிக்கை இழக்க செய்யும் போது நான் கால்கள் தடுமாறி கீழே விழுகிறேன். இனியாவது உங்கள் வார்த்தைகள் முட்டித் தள்ளாது தாங்கி தோள் கொடுப்பதாகவும் இடிந்து தகர்ப்பதாக அல்லாது கட்டி எழுப்புவதாகவும் அமையட்டும்.
நாம் பேசுவோம்:
வார்த்தைகளால் பலருக்கு நல்வாழ்வு வழங்கிய இறைவா! நாங்களும் உம்மை பின்பற்றி வாழ்வு தரும் வார்த்தைகளால் பிறரை வாழச் செய்யவும்இ தீமைகளை நன்மையால் வென்றிடவும்இ தேவையான உமது அருட்கொடைகளை எங்களுக்குத் தந்தருளும்.
எட்டாம் நிலை: இயேசுவின் முன் எருசலேம் மகளிர் கண்ணீரோடு
கண்ணீர் பேசுகிறது:
இந்த கண்ணீர் கணவாயினின்று எங்களை காத்தருளும் என அனைவரும் வேண்டுகின்றனர். உலகத்தில் உள்ள அனைத்து தண்ணீரையும் விட எனக்கு மதிப்பு அதிகம். மனிதர்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் போது அவர்கள் கண்களில் இருந்து நான் வந்தேன் என்றால் என்னை ஆனந்த கண்ணீர் என்றும் துயரப்படும் போது மனிதர்கள் கண்களில் இருந்து நான் வருகின்ற போது எனக்கு கவலையின் கண்ணீர் என்றும் பெயர் சூட்டுகின்றனர். பிறக்கும் போது பிறந்த குழந்தையின் கண்ணில் இருந்து ஆரம்பமாகிறது என் பயணம் இறுதியில் கல்லறை செல்லும் வரையில் மனிதர்கள் என்னை தங்கள் கண்ணிலிருந்து பல்வேறு வாழ்க்கை நிலையில் வரவைக்கின்றார்கள். எனக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால் நான் துன்பப்படுகிறவர்களின் மற்றும் துன்ப படுகிறவர்களுக்கு துணைபோகின்றவாகள் அனைவரின் கண்களிலும் நான் தென்படுவேன். இன்று இயேசுவின் சிலுவைப் பாடுகளைப் பார்த்து எருசலேம் பெண்கள் கண்களில் நான் காணப்படுகின்றேன். பெண்கள் சொல்லமுடியா துயரைக் கண்டதால் என்னை அவர்களின் கண்ணிலிருந்து மழையெனக் கொட்டித் தீர்க்கின்றார்கள். துயரப்படுவோருக்கு தான் புரியும் என் அருமை. என் வருகையை கண்ட இயேசு தனது வார்த்தைகளால் அப்பெண்களின் கண்ணீராகிய என்னை துடைக்கிறார்.
இயேசு பேசுகிறார்:
அன்று இறந்த லாசருக்காகவும் யெருசலேமின் அழிவினை நினைத்தும் நான் கண்ணீர் விட்டு அழுதேன். இன்று என் துன்பத்தைப் பார்த்து இத்தனை பெண்கள் அழுகின்றார்கள். என்றாவது நீங்கள் உங்கள் அன்புக்குரியோரின் துயர்கண்டு கலங்கி கண்ணீர் சிந்தியிருக்கிறீர்களா? அப்படி சிந்தியிருந்தால் நீங்கள் சிந்திய ஒரு துளி கண்ணீரும் வீண்போகாது.
நாம் பேசுவோம்:
அன்பு இயேசுவே! எங்கள் வாழ்வில் நாங்கள் அன்பு செய்கின்ற மனிதர்களின் துன்பதுயரங்களில் கண்ணீர் சிந்தவும் அவர்களது கண்ணீரை துடைக்கின்ற கரங்களாகவும் நாங்கள் வாழ உமதருள் தாரும்.
ஓன்பதாம் நிலை: இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
கல்வாரி மலை பேசுகிறது:
நான் தான் கல்வாரி மலை பேசுகிறேன். வானத்துக் கதிரவனாய் பிறந்திருந்தால் உலகிற்கு ஒளிதந்து வாழ்ந்திருப்பேன். வற்றாத நதியாய் பிறந்திருந்தால் ஊரெங்கும் ஓடி வளம் சேர்த்து மகிழ்ந்திருப்பேன். இப்படி மலையாக நின்று தனிமைத்துயரில் தவிக்கும் வேளையில் என் மலையெங்கும் குருதி வழிய வழியெங்கும் அடித்து துவைக்கப்பட்ட கந்தைத் துணியாக அந்த மனிதருள் மாணிக்கத்தை என் மலைமீது வதைத்தார்கள். மூன்று முறை கால் இடறி அவர் விழுந்த நிலை கண்டு மலையாகிய நானே மனம் வெதும்பித் துயரில் தவிக்கும் வேளையில் என்மீது மலைபோல பலர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இயேசு பேசுகிறார்:
மலை மீது நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுள் நீங்களும் ஒருவர் தானா?. சக மனிதர்கள் வதைபடும் போது தூரம் நின்று வேடிக்கைப் பார்த்து பாவம் என்று பரிதாப வார்த்தைகளை உதிர்த்துவிட்டு எதுவும் நடக்காதது போல் மலைத்து போய் நிற்கின்றீர்களா?. கண்முன்னே நிகழ்ந்ததைக் கண்டும் காணதவராய் மனிதாபிமானமே இல்லாதது போல் வாழ்ந்தது போதும். விழுந்து கிடக்கும் மனித மாண்பை தூக்கி நிறுத்த மலையாய் ஒதுங்கி நிற்காது மனிதனாய் முன்வாருங்கள்.
நாம் பேசுவோம்:
அன்பு இயேசுவே! பிறரது துன்பத்திலும் தடுமாற்றங்களிலும் மலையாய் மலைத்து நிற்காமல் மனிதனாய் மனமுவந்து கைகொடுத்து தூக்கி விட தேவையான நல்லெண்ணத்தை தந்தருளும் இறைவா!
பத்தாம் நிலை: இயேசு ஆடையின்றி அலங்கோலமாக்கப்படுகிறார்
வெட்கம் பேசுகிறது:
நான் தான் நீங்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் வெட்கம் பேசுகிறேன். இதோ இங்கே ஒரு மனிதர் இயேசு. பகையாளிகள் அவர் ஆடைகளை உரிந்தெடுத்து அவரை ஆடையற்றவராக விட்டுவிட்டனர். வெட்கத்தை மட்டுமே ஆடையாக அணிந்தவராய் இந்த மனிதன். வெட்கமாகிய எனக்கே வெட்கமாய் இருக்கிறது. வெட்கம் என்ற சொல்லை அதிகமாக கொச்சைப் படுத்தியே பழகிவிட்டீர்கள். நீங்கள் ஆடை, உடல,; கற்பு இவற்றோடு மட்டும் வெட்கமாகிய என்னை முடக்கிவிட்டீர்கள். இதோடு மட்டும்தானா நான்? இல்லை எவ்வளவோ பொருள் என்னுள் அடங்கியுள்ளது. ஊழல் செய்தவர் என்றும் வெட்கப்படுவதில்லையே! இன்றைய சூழலில் சாதிச் சாக்கடையில் ஊறி இருக்கும் சாதி இனப்பித்து பிடித்தவர்கள் வெட்கப்படுவதில்லையே! சக மனிதர்களின் வீழ்ச்சியில் தம் வாழ்வை வளர்த்துக் கொள்ளும் பெருமுதலைகள் வெட்கப்படுவதில்லையே! பொறாமை கோபம் ஆசை தன்னலம் என்ற பாவ எண்ணங்களோடு வாழ்பவர்கள் வெட்கப்படுவதில்லையே! என்னை ஆடையோடும் உடலோடும் பெண்ணோடும் மட்டும் குறுகிய வட்டத்தில் அடைத்து விடாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னைப் பொருத்தி பொருள் கொள்ளுங்கள்.
இயேசு பேசுகிறார்:
அன்பர்களே! வெட்கத்தை மட்டுமே என் ஆடையாக அணிந்து ஆடையற்றவனாக நிற்கின்றேன். எதற்காக? அடைய வேண்டிய இலட்சியத்திற்காக. உங்களுக்கு கிடைக்க வேண்டிய மீட்புக்காக. நீங்கள் உங்கள் நெறிமாறிய செயல்களுக்காக வெட்கப்பட்டு, என்னைப் போல பிறர் வாழ எத்துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனம் பெற்றால் நீங்களும் மறுகிறிஸ்துவாகலாம்.
நாம் பேசுவோம்:
இறைவா! எங்கள் தீயசெயல்களுக்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். எங்கள் பாவங்கஞக்காக வெட்கி தலைகுனிகிறோம். பிறர் வாழ எங்களையே பரிசாக்கும் மனநிலையை பெற்றிட உம் அருள் தாரும்.
பதினொறாம் நிலை: இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்
ஆணிகள் பேசுகின்றன:
மாசற்ற இயேசுவின் தசையைத் தின்று குருதியைப் பருகும் முதல் வாய்ப்பினைப் பெற்ற கூர்மையான ஆணி பேசுகிறேன். உழைக்கவும் ஆழமான பிணைப்புகளை உருவாக்கவும் தானே நாங்கள் ஆணிகளாகப் படைக்கப்பட்டோம். கருணையே உருவான இயேசுவின் கைகளையும் கால்களையும் துளைப்பதற்கு எங்களைப் பயன்படுத்தி விட்டார்களே இந்தக் கொடிய மனிதர்கள். பார்வையற்றோரையும் நோயால் பீடிக்கப்பட்டோரையும் தொட்டு மறுவாழ்வு தந்த உன்னத கரங்களை செயலிழக்கச் செய்ய எங்களை பயன்படுத்தி விட்டார்கள் இந்த சதிகாரர்கள். படைப்பு பொருளான நாங்களே எங்களை படைத்தவரை பதம் பார்த்து விட்டோமே.
இயேசு பேசுகிறார்:
மூன்று ஆணிகளால் என்னை அன்று சிலுவையில் அறைந்த கயவர்கள் போன்று இன்று இந்த சமூகத்திலே வன்முறை எனும் ஆணியை அமைதி மீதும,; பொய் என்கிற ஆணியை உண்மை மீதும், சந்தேகம் எனும் ஆணியை நம்பிக்கை மீதும், பொறாமை எனும் ஆணியை அன்பின் மீதும,; இரக்கமின்மை யெனும் ஆணியை மனித நேயத்த்தின் மீதும் அறைந்து மனிதத்தை செயலிழக்கச் செய்கின்ற கயவர்களிடமிருந்து உங்களைக் காத்துக் கொண்டு சமூகத்தின் மீது அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கி எறியுங்கள் அப்போது எனது ஆணிகளும் களையப்படும்.
நாம் பேசுவோம்:
அன்பு இறைவா! சமூகத்தின் மீது அறையப்பட்டுள்ள ஆணிகளை களைந்து ஆணி கொண்டு அறையும் மூர்க்க குணத்தை எங்களிடமிருந்து அகற்றிட உம் வல்லமை தாரும் இறைவா.
பனிரெண்டாம் நிலை: இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்
காற்று பேசுகிறது:
உலகமெல்லாம் நிறைந்து வாழும் உயிர்கெல்லாம் வாழ்வு தரும் காற்று பேசுகிறேன். மனிதரை மீட்க மனுவுருவெடுத்து மாசு மறுவற்ற இறைவனின் செம்மறி இறுதியில் தன் இன்னுயிர் துறந்து என்னில் இரண்டரக் கலந்தார். பாய்ந்த இடமெல்லாம் பசுமையை அள்ளித் தெளிக்கும் நதிபோலஇ பேய்ந்த இடமெல்லாம் குளிர்வித்து உயிர் வாழச் செய்யும் மழை போலஇ சென்ற இடமெல்லாம் வார்த்தைகளால், செவிவழி சிகிச்சைகள் செய்து, ஆன்மாக்களின் ஆறாத இரணங்களை ஆற்றியவர் அவர். பாவத்தில் மூழ்கி திக்குத் தெரியாது தவித்த மாந்தருக்கு இரக்கமும்இ மன்னிப்பும்இ வழங்கி வாழ வழிகாட்டிய வள்ளல் அவர். இன்று மேலாடையில்லாமல் இன்னுயிர் நீத்து உயிரற்ற உடலாய் கழுமரத்தில். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை துன்பமும்இ துயரமும் என்று வெதும்பி வேதனைப்படும் மனிதருக்கெல்லாம் துன்பமும்இ துயரமும்இ வேதனையும்இ சோதனையும் மனித வாழ்வில் பிரிக்க முடியாத அங்கம் என்று மௌனமாய் பதில் சொல்லும் மனிதருள் மாணிக்கம்.
மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துண்பங்களைத் தன்மேல் சுமந்து கொண்டார். அவரே நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். நமக்கு நிறைவாழ்வு அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகிறோம்.
இயேசு பேசுகிறார்:
பாடல்
நாம் பேசுவோம்:
எங்களுக்காய் சிலுவையில் கொலையுண்ட இயேசுவே! உமது இறப்பை நினைந்து அழுது புலம்பி அமைதியாகச் சென்றுவிடாமல், எங்களுடைய முரண்பட்ட வாழ்வை மாற்றி எங்கள் வாழ்க்கைப் பாதையை சீரமைத்துக் கொள்ளும் உள்ளத்துணிவை எங்களுக்குத் தாரும்.
பதிமூன்றாம் நிலை: இயேசுவின் உடல் அன்னையின் மடியில் கிடத்தப்படுகிறது
அன்பு சீடர் பேசுகிறார்:
இயேசுவின் தோள்களில் சாய்ந்திடும் பாக்கியம் பெற்றதால் என்னை எல்லோரும் இயேசுவின் அன்புச் சீடன் என்று அழைத்தார்கள். அவரோடு இராவுணவில் அப்பம் பகிர்ந்துண்டு, அவர்தம் கிண்ணத்தில் பருகி அவரோடு ஒட்டி உறவாடிய எனக்கு, அவருடைய துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள வழி தெரியவில்லை. தூரம் நின்று அவர் பட்ட பாடுகளைப் பார்த்து பதறி, அவரடைந்த துயரம் கண்டு துடிதுடித்து கல்வாரி வரை பின் தொடர்ந்து வந்தவன் நான். கடைசி துளி உயிருள்ள வரையிலும் தந்தையே இவர்கள் தாங்கள் செய்வதை அறியாது செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்று சொல்லி மனதார மன்னித்த என் தலைவன் உயிரற்ற உடலாய் அன்னையின் மடியில் இன்று உறங்குகிறார். சகோதரமே யாருக்காக இந்த தியாகச் செம்மலின் வாழ்வு சிலுவையில்? நமக்காகவே……
அன்னை மரியாள் பேசுகிறார்:
உங்களுக்காக எனக்கென வைத்திருந்த ஒரே மகனையும் பலியாக கொடுத்து விட்டேன். உலகம் நல்வாழ்வு பெற வேண்டி தன்னை கையளித்த என் மகனின் கனவுகள் தொடர்ந்து நனவாக அவரது ஆட்சிக்காய் உழைக்க நீங்கள் முன் வருவீர்களா? பாவச்சூழலில் மூழ்கியிருக்கின்ற அறியாமையெனும் அறையிலிருந்து வெளியேறி என் அன்பு மகனின் அன்புச் சீடராய் வாழ முன்வாருங்கள்.
நாம் பேசுவோம்:
அன்னைமரியே! இயேசுவின் இறையாட்சி கனவு நனவாக எங்களால் இயன்ற மட்டும் முழுமனதோடு உண்மைக்காய் எங்களை அர்ப்பணிக்க எங்களுக்காய் உம் திருமைந்தனிடம் மன்றாடும்.
பதினான்காம் நிலை: இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
கல்லறை பேசுகிறது:
சமரசம் உலாவும் இடம் நான். ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்ற பாடல் வரிகளுக்கேற்ப அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருடைய ஆட்டமும் அடங்குமிடம் கல்லறையாகிய என்னில் தான்.
கயமையே உருமாய் வாழ்க்கையைக் குலைப்பதே வேலையாய் கொண்டுள்ளோh,; இன்று கல்லறையில் வைக்கபட வேண்டியோர், உல்லாசமாய் உலகத்தை உலா வருகையில், பேசிய வார்த்தைகளாலும் ஆற்றிய செயல்களாலும் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்து வாழ்வை நிறைவாக வழங்கியவர் இங்கு கல்லறையாகிய என்னில் வைக்கப்படுகிறார். அவருடைய கொட்டத்தை அடக்கிவிட்டோம், ஆட்டத்தை முடக்கி விட்டோம் என்ற மமதையோடு சென்றவர்களுக்குத் தெரியவில்லை ஒரு விடியலை அவர்கள் கல்கொண்டு அடைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை.
மனிதர்களே! கருவறைக்கும் கல்லறைக்கும் இடையே தோற்றம் மறைவு என்ற இரு மலைகளுக்கிடையே வாழ்க்கை என்கிற கயிறு கட்டி பயணம் செய்கிறீர்கள். நிறைவான பாதைகளில் இனிதாக பயணம் செய்யுங்கள் அதுவே உங்களுக்கு பெருமை.
இயேசு பேசுகிறார்:
வாழ்க்கையை நிறைவாக வாழ என் வாழ்வின் வழி கற்றுதந்துள்ளேன். உங்கள் பாவச்சுமைகளையும் தீய எண்ணங்களையும் கல்லறைகளில் புதைத்து புது மனிதர்களாய் என் அன்பின் சாட்சிகளாய் வாழ்ந்திடுங்கள்.
நாம் பேசுவோம்:
நிறைவான வாழ்வை கற்றுத் தந்த உத்தமரே! அன்பு சீடர்களாய் நாங்கள் வாழ தடையாய் இருக்கின்ற பதவிஇ புகழ்இ பேராசை போன்ற தீய எண்ணங்களை கல்லறைக்குள் அடக்கி புத்தம் புது படைப்பாய் அவனியில் உயிர்த்திட உம் அருள் தாரும்.
புதன், 10 மார்ச், 2021
இதயத்தில் இருத்த வேண்டியவை... (11.3.2021)
உயிர்ப்புப் பெருவிழா (03.04.2021)
உயிர்ப்புப் பெருவிழா
திருப்பலி முன்னுரை:
இயேசுவில் பிரியமானவர்களே! சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது என்று இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடுவதுதான் இந்த உயிர்ப்புப் பெருவிழா. உண்மையை உறங்க வைக்க முடியாது, நீதியை சாகடிக்கமுடியாது. உண்மையும் உயிர்த்தெழும், நீதியும் செழித்தோங்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் இன்றைய உயிர்ப்பு பெருவிழா. விதையை மண்ணில் புதைத்தால் அது முளைக்காது போகுமா?, உண்மையை அடக்கம் செய்தால் அது உயிர்க்காமல் இருக்குமா?. இயேசுவையும், அவரது இலட்சியத்தையும் இம்மண்ணிலே புதைத்துவிட்டோம்; இனி வாழ்வு சாத்தியமே இல்லை என்று மகிழ்ந்தார்கள் அறிவிலிகள். ஆனால், இயேசு மண்ணைப் பிளந்து கொண்டு புதுப்பிறப்பு எடுத்தார். சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” என்று இயேசு மரணத்தை மண்டியிடச் செய்தார் இந்த நன்நாளிலே. இயேசுவின், இறையாட்சியெனும் இலட்சியம், அதனை மலரச் செய்ய அவரிடமிருந்த ஆர்வம், அது நிச்சயம் இறையாட்சி இம்மண்ணில் மலரும் என்ற நம்பிக்கை இம்மூன்றும்தான் மாபரன் இயேசுவை உயிர்ப்பித்தது.
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடி மகிழ கூடியிருக்கும் நாம் அனைவரும் இந்த உயிர்ப்பை நமது இலட்சியமாக்க அழைப்பு விடுக்கிறது நம் திருஅவை. அர்த்தமற்ற வாழ்க்கையை விட்டுவிட்டு, நறுமணம் வீசும் புதுவாழ்வில் இணையவும், அச்சம் நீக்கி துணிவைப் பெறவும், அநீதியை எதிர்த்து நீதிக்குக் குரல் கொடுக்கவும், தடைகளைத் தகர்த்து சரித்திரம் படைக்கவும், ஒவ்வொரு நாளும் புதுவாழ்விற்;கு இயேசுவில் உயிர்க்கவும், நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து இந்த உயிர்ப்புப் பெருவிழாவிலே பங்குபெறுவோம்.
இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.
1. ஒளி வழிபாடு
2. இறைவார்த்தை வழிபாடு
3. திருமுழுக்கு வழிபாடு
4. நற்கருணை வழிபாடு.
இயேசுவின் இலட்சியத்தில் நம் கண்களைப் பதிய வைத்து, அவரது ஆர்வத்தையும், நம்பிக்கையையும் நமதாக்கி அவரோடு நாமும் உயிர்க்க இறையருள் வேண்டி இன்றைய வழிபாட்டில் பக்தியோடு பங்கேற்போம்.
ஒளி வழிபாடு:
கடவுளை வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியாகவும், அறியாமை இருள் அகற்றும் ஒளியாகவும் அனைத்து மதங்களும் வெளிப்படுத்துகின்றன. பழைய ஏற்பாட்டின் தொடக்கமே ஒளியின் தோற்றத்தோடுதான் தொடங்கியது. தந்தையாம் இறைவன் நெருப்புத்தூணின் வடிவில் இஸ்ரயேல் மக்களை பாலைநிலத்தில் வழிநடத்தினார். இயேசுவோ நானே உலகின் ஒளி என்றுரைத்து இருளில் நாம் விழாமல் இருக்க வழிகாட்டினார். நெருப்புநா வடிவில் தூய ஆவியானவர் திருத்தூதர்கள் அனைவரின் மீதும் பெந்தகோஸ்து நாளில் இறங்கினார். நம் அனைவரையுமே இயேசு உலகின் ஒளி என்றுரைத்தார். ஒளியின் பண்பு மேல் நோக்கி எறிவது, இருள் களைவது. நாமும் இயேசுவின் மதிப்பீட்டுகளின்படி வாழவும், உலகின் இருளை களையவும் அழைக்கப்பட்டவர்கள் என்னும் சிந்தனையோடு இந்த ஒளிவழிபாட்டில் பங்கெடுப்போம்.
இதோ குருவானவர் புதுத்தீயையும், அதைத்தொடர்ந்து பாஸ்காத்திரியையும் மந்திரிப்பார். இயேசு என்றும் வாழ்பவர் என்பதை பாஸ்காத்திரியிலுள்ள ஐந்து காயங்கள் விளக்குகின்றன. கிறிஸ்துவே நம்முடைய ஒளி, அவரைப் பின்பற்றியே நாம் பயணிக்கின்றோம் என்பதின் அடையாளமாக பாஸ்காதிரி பவனி நடைபெறும். குருவானவர் கிறிஸ்துவின் “ஒளி இதோ” எனப்பாட நாம் அனைவரும் இணைந்து “இறைவா உமக்கு நன்றி” எனப் பாடுவோம்.
2. இறைவாhத்தை வழிபாடு:
முதல் வாசக முன்னுரை: தொ.நூல் 1:1-2:2
மீட்பின் திட்டத்தில் படைப்பு முதலிடம் பெறுகிறது. இறைவன் இவ்வுலகைப் படைத்தவிதம் அற்புதமானது. கைதேர்ந்த சிற்பியைப் போல, ஒவ்வொன்றையும் அழகுறப் படைத்தார் ஆண்டவர். படைப்பின் சிகரமாக, தனது சாயலாக மனிதனைப் படைத்தார். இறுதியில், அனைத்தும் நல்;லதெனக் கண்டார். இறைவனது கைத்திறமைகளைக் கண்டு கொள்ள முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: வி.பயணம் 14:15- 15:1
இறைவன் தான் தேர்ந்து கொண்ட மக்களை என்றுமே கைவிடுவதில்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இன்றைய இரண்டாம் வாசகம். எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ரயேல் மக்களை, செங்;கடலை இரண்டாகப் பிரித்து, அவர்களைப் பார்வோன் படைவீரர்களிடமிருந்து காக்கிறார். இறைவனது அளப்பரிய ஆற்றலை முழக்கமிடும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மூன்றாம் வாசக முன்னுரை: எசே 36:16-28
பார்வோன் மன்னனின் படைவீரர்களிடமிருந்து விடுதலை தந்த யாவே கடவுளை காலப் போக்கில் இஸ்ரயேல் மக்கள் மறந்து, வேற்றுத் தெய்வங்களை வழிபட்டனர். இதனைக் கண்டு இறைவன் வேதனையுற்றாலும், அவர்களை வெறுத்து அழிக்காமல், “பழைய வாழ்விலிருந்து மனந்திருப்பி புதிய வாழ்வுக்கு இட்டுச் செல்வேன்,” என்கிறார் ஆண்டவர். இவ்வாறு, அவரது பொறுமையையும், பரிவையும் பறைசாற்றும் மூன்றாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நான்காம் வாசக முன்னுரை: உரோ 6:3-11
இயேசு கிறிஸ்துவின் மாட்சியில் பங்குபெற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அவரது மாட்சியில் பங்கு பெற வேண்டுமென்றால், நம்முடைய பழைய பாவ வாழ்வைச் சிலுவையில் அறைந்து, அடக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான், புதிய மனிதர்களாய், புதுப்பிறப்பாய் மாறி அவருடன் மாட்சி பெறுவோம் என நல்வாழ்வுக்கு வழிகாட்டும் புனித பவுல் அடியாரின் வார்த்தைகளுக்கு நமது கவனத்தைத் திருப்புவோம்.
3. திருமுழுக்கு வழிபாடு:
திருமுழுக்கு வழியாய் இறைவனின் அன்புப் பிள்ளைகளாய், தந்தையாகிய இறைவனை, அப்பா, தந்தையே என அழைக்கும் உரிமையைப் நாம் பெற்றுள்ளோம். நாம் பெற்ற திருமுழுக்கு நம்மை மறுகிறிஸ்துவாய், இவ்வுலகில் வாழ அழைப்பு விடுக்கின்றது. கிறிஸ்துவின் மதிப்பீடுகளை இம்மண்ணில் வளரச் செய்வது, திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து, இத்திருமுழுக்கு வழிபாட்டில் பங்கு பெறுவோம். நம் பாவத்திற்காய் தன்னைக் கையளித்து, நமக்கு மீட்பை வழங்கிய இயேசு கிறிஸ்துவின் மீட்பின் ஆற்றலை உணர்ந்து, பாவத்தை வெறுத்து ஒதுக்கி, இறைநம்பிக்கையில் நம் கண்களைப் பதிய வைத்து, இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழ, நம்மை அழைக்கும் இவ்வழிபாட்டில் பக்தியோடு பங்கேற்போம்.
புனிதர்கள் மன்றாட்டு மாலை:
மனிதர்களாய்ப் பிறந்து இறைவார்த்தையில் வேரூன்றி, இறைமகன் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்து மரித்தவர்களே புனிதர்கள். நமக்காகத் தொடர்ந்து பரிந்து பேசவும், நம் வாழ்விற்கு முன்மாதிரியாய் இருக்கவுமே திருச்சபை நமக்குப் புனிதர்களைத் தந்துள்ளது. இதோ நம்மீதும் இத்தண்ணீர் மீதும் தூய ஆவி இறங்கி புனிதப்படுத்தவும் புனிதர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி நாமும் புனித வாழ்வு வாழவும் நமக்காகப் பரிந்து பேச வேண்டி மன்றாடும் இப்புனிதர்கள் மன்றாட்டு மாலையில் பக்தியோடு இணைவோம்.
திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்:
நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு, கடவுளோடுள்ள உறவை புதுப்பித்துக் கொள்ள இயேசுவின் உயிர்ப்பு நாளாகிய இன்று, திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம் திருமுழுக்கு நாளன்று நமது சார்பாக நம் பெற்றோர் மற்றும் ஞானப் பெற்றோர் நமது விசுவாசத்தை அறிக்கையிடட்டனர். இன்று, நாம் நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு, புது இயல்பை அணிந்து கொண்டவர்களாக, குருவானவர் கேட்கின்ற கேள்விகளுக்கு, ஒருமையில் பதில் அளித்து, நம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்போம்.
திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்:
விவிலியத்தில் தண்ணீரானது, புதிய வாழ்விற்கு அடையாளமாகக் காட்டப்படுகிறது. குறிப்பாக, திருமுழுக்கில் தண்ணீர் நமது ஜென்மப்பாவத்தைக் கழுவப் பயன்படுகிறது. இப்போது, திருமுழுக்குத் தண்ணீரைப் புனிதப்படுத்த, குருவானவர் இறைத்துணையை நாடிச் செபிக்க இருக்கிறார். இச்செபத்தில் தண்ணீர் எவ்வாறாறெல்லாம் மீட்பின் வரலாற்றில் இடம்பெற்றது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
4. நற்கருணை வழிபாடு:
இப்போது, நற்கருணை வழிபாடு ஆரம்பமாகிறது. இந்த அப்ப இரச காணிக்கைகள் வழியாக நமது குடும்பங்களையும், நமது மன்றாட்டுக்களையும் இறைவனிடம் சமர்ப்பித்து, நமது வாழ்வில் மாற்றங்கண்டு மகிழ்ச்சியடைய இறைவனை வேண்டுவோம்.
செவ்வாய், 9 மார்ச், 2021
புனித வெள்ளி (02.04.2021)
புனித வெள்ளி
முன்னுரை:
உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே முப்பத்து மூன்று ஆண்’டுகள் நடந்த போராட்டத்தின் முடிவு தீர்த்துக்கட்டுவதே தீர்ப்பானது. அத்தீர்ப்பு இன்று நிறைவேறியுள்ளது. அன்பர்களே ஆண்டவரின் திருப்பாடுகளை நம்முடைய வாழ்வோடு இணைத்துத் தியானிக்கக் கூடியிருக்கும் நம் எல்லோர்க்கும் இது ஓர் அன்பின் விழா. கடவுள் அன்புமயமானவர், அவர் நம் அனைவரையும் அன்பு செய்கின்றார் என்று வெறும் கருத்துக்களுக்குள் கடவுளை சுருக்கிவிடுகின்றோம். ஆனால் அக்கருத்துக்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும் விழாவே இப்புனித வெள்ளி. ஆம், தந்தையாம் கடவுள் நம்மீது அன்பு கொண்டதால்தான் தம் மகன் இயேசுவை இவவுலகிற்கு அனுப்பினார். நம் அனைவரையும் நண்பர்கள் என்று அழைத்த இயேசு, தனது நண்பர்களாகிய நமக்காகத் தன் உயிரையே சிலுவையில் கையளித்து அவரது அன்பின் மகத்துவத்தை நமக்கு வெளிப்படுத்தினார். இப்படித் தன் அன்பை சிலுவையில் வெளிப்படுத்திய இயேசு நான் உங்களை அன்பு செய்வது போல, நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் என்ற புதிய கட்டளையை நமக்கு வழங்கினார். இதையே “அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் இருப்பதாக,” எனப் பவுலடியார் குறிப்பிடுகின்றார். இந்த அன்பே நம் வாழ்வின் மையம். அதுவே நம் கிறிஸ்தவத்தின் மையம்.
இந்த உண்மையை உணர்த்தும் இவ்வழிபாடு
1. இறைவார்த்தை வழிபாடு,
2. திருச்சிலுவை வழிபாடு,
3. நற்கருணை வழிபாடு என மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. இதோ இப்பொழுது குருவானவர் திருஉடை அணிந்து திருப்பீடத்தின்முன் முகம்குப்புற தரையில் விமுந்து மௌனமாக மன்றாடுவார். இயேசு நம்மீது கொண்ட அன்பினால் தம்மையே வெறுமையாக்கிக் கொண்டார் என்பதை இத்திருச்சடங்கு விளக்குகின்றது. நாமும் நமக்கு அடுத்திருக்கும் சகோதர சகோதரிகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு, அன்பு செய்யும் வரம் வேண்டி இவ்வழிபாட்டில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை: எசா 52: 13-53:12
குவலையை கண்டு கண்ணீர் வடிக்காமல் போராடும் மனிதன் காலத்தால் அழியாதவன் என்பதற்கு ஏற்ப இயேசுவின் பாடுகள் நம்மை உடல், உள்ள நோயிலிருந்துக் குணப்படுத்தும் அருமருந்து. இயேசு தனது மகிமைக்காக, துன்பங்களையும், பாடுகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவும், அவரது மக்களாகிய நம்மை பாவ இருளிலிருந்து மீட்டெடுக்கவும், தன்மேல் ஏற்றுக்கொண்ட சுகமான சுமைத் தான் இந்த தியாகம். இயேசுவின் பாடுகளை நம் கண்முன் நிறுத்தும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: எபி 4:14-16, 5:7-9
இயேசு கிறிஸ்து முழுமையானக் கடவுள். முழுமையான மனிதன் என்பது நமது நம்பிக்கை. அதனால்தான் திருஅவையின் வழிகாட்டுதலோடு அவரை இறைமகன் என அழைக்கிறோம். அவர்தனது பாடுகளின்போது, எவ்விதத்திலும் கடவுள் தன்மையை முன்னிருத்தவில்லை. மாறாக, நம்மைப்போல் ஒரு மனிதராகப் பாடுகளை எதிர் கொண்டார். கீழ்படிதல் மற்றும் மீட்பு எனும் இலட்சிய வேட்கையோடுச் செயல்பட்டதால், நாம் அனைவரும் கடவுளின் அருளிரக்கத்தைக் கண்டு கொள்ள முடிந்தது எனக்கூறும் இரண்டாம் வாசகத்திற்கு நமது மனங்களைத் திருப்புவோம்.
திருச்சிலுவை வழிபாடு
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்று மொழிந்து, அதை தன் வாழ்வாக்கிய நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் கல்வாரி பாடுகளை, நம் கண்முன் நிறுத்தியவர்களாக இன்றைய வழிபாட்டின் இரண்டாவதுப் பகுதியான திருச்சிலுவை வழிபாட்டிற்குள் நுழைவோம்.
இப்போது குருவானவர், திருச்சிலுவையைக் கையிலேந்தி, “திருச்சிலுவை மரம் இதோ, இதிலேதான் தொங்கினார் உலகத்தின் மீட்பர்” என்று மும்முறைப் பாடுவார். அதற்கு பதில் மொழியாய் நாம் அனைவரும் இணைந்து “வருவீர் ஆராதிப்போம்” என்று பாடுவோம். மும்முறைப் பாடியப்பின் வரிசையாக வந்து திருச்சிலுவையை முத்தமிட்டு ஆராதனை செய்வோம். நம்மீது கொண்ட உயர்ந்த அன்பினாலும், நமது பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து, நம்மை உருமாற்றிட, அவமானங்களைத் தாங்கி, காயங்கள்பட்டு, இரத்தம் சிந்திய இயேசுவின் வேதனைகளை உள்வாங்கியவர்களாய், பாவங்களைக் களைந்துப் புனித வாழ்வு வாழ உறுதியெடுத்தவர்களாய் இவ்வழிபாட்டில் பங்கேற்போம்.
திருவிருந்து வழிபாடு:
இப்போது, திருவிருந்து வழிபாடு ஆரம்பமாகிறது. பீடத்தின்மீது துணிவிரிக்கப்பட்டு, திருமேனித்துகிலும், திருப்பலிப் புத்தகமும் வைக்கப்படும். பின்பு நேற்றையத் திருப்பலியில் புனிதப்படுத்தப்பட்ட நற்கருணைப் பீடத்திற்கு எடுத்து வரப்படும். நமது உள்ளங்களில் எழுந்தருள இருக்கும் இறைவனை வரவேற்க தொடர்ந்துப் பக்தியுடன் இத்திருவிருந்து வழிபட்டில் பங்கேற்போம்.
Photography Topics with Pictures...
Photography Topics: 1. Street Photography: 2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...























