வெள்ளி, 29 ஜூலை, 2022

புனித மார்த்தா நினைவு....(29.7.2022)

புனித மார்த்தா நினைவு....(29.7.2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்று தாய்த்திரு அவையானது புனித மார்த்தாவை பற்றி நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

மார்த்தாவை  பற்றி விவிலியத்தின் துணைகொண்டு ஆய்வு செய்கின்றபோது லூக்கா நற்செய்தி 10 ஆம் அதிகாரத்தில் மார்த்தாவின் வீட்டிற்கு இயேசுவும் அவரோடு சீடர்களும் வருவதை நாம் வாசிக்க கேட்கலாம்.

இந்நிகழ்வில் மார்த்தா வீட்டிற்கு வந்த ஆண்டவர் இயேசு உபசரிக்க வேண்டும் என்பதில்  மட்டும் நிலைத்திருக்கக் கூடியவராக,  பற்பல பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதனைத் தொடர்ந்து மார்த்தாவினை விவிலியத்தில் யோவான் நற்செய்தி 11 ஆம் அதிகாரத்தில் 
 நாம் வாசிக்க கேட்கலாம்.
இந்த இடத்தில் இறந்து போன லாசருடைய வீட்டிற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருகிற போது மார்த்தா அவரை எதிர்கொண்டு, நீர்  எங்களோடு இருந்திருந்தால் எங்கள் சகோதரன் ஆன லாசர் இறந்திருக்க மாட்டான் என எடுத்துரைக்கக் கூடியதை நாம் வாசிக்க கேட்கலாம். 

        அச்சமயத்தில் மார்த்தா இயேசுவினிடத்தில், நீர் விரும்பி கேட்பதை எல்லாம் இறைவன் தருவார் என்பதை நாங்கள் அறிவோம் என கூறுகிறபோது கடவுள் மீது அவர் எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவ்வார்த்தைகள் வெளிப்படுத்துவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    அதனை தொடர்ந்து மார்த்தாவை யோவான் செய்தி 12 ஆம் அதிகாரத்தில
 நாம் காணலாம். 

லாசரின் உயிர்ப்புக்குப் பிறகாக இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் உணவு விருந்தை  மார்த்தா பரிமாறுவதை குறித்து இப்பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. 

மொத்தத்தில் மார்த்தாவின் வாழ்வு ஆண்டவரை புரிந்து கொண்ட ஒரு வாழ்வாக, தம்மை நாடி வருகின்றவர்களை எல்லாம் உபசரிக்கின்ற ஒரு வாழ்வாக அமைந்தது என்பதை, விவிலியத்தின் பின்னணியோடு நாம் அறிந்து கொள்ள முடியும். 

வரலாற்றை சற்று திருப்பிப் பார்க்கிறபோது, இயேசுவின் இறப்பிற்கு பிறகு, இந்த மார்த்தா, மரியா, லாசர் மூவரையுமே ஒரு துடுப்பு இல்லாத படகில் வைத்து, யூதர்கள் கடலில் அனுப்பி வைத்ததாக வரலாறு கூறுகிறது. அப்படி கடலில் சென்றவர்கள் கடவுளின் அருளால் பிரான்ஸ் நாட்டு பகுதிக்குச் சென்று கரை இறங்குகிறார்கள். 

மக்களுக்கு இயேசுவை குறித்து அறிவித்து லாசர் ஆயராக செயல்பட்டார். அங்கு மரியா ஒரு குகையில் சென்று தவ வாழ்வை மேற்கொண்டு தன் வாழ்வை கழித்துக் கொண்டதாகவும், மார்த்தா பெண்களுக்கென ஒரு துறவு மடத்தை நிறுவி, தன் வாழ்வை கழித்துக் கொண்டதாகவும், வரலாற்றின் அடிப்படையில் அவர்களைப் பற்றி பதிவு செய்கின்றார்கள்.

    இன்று நாம் நினைவு கூருகின்ற இந்த மார்த்தாவின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது நம்மை நாடி வருகிற ஒவ்வொருவரையுமே நாம் உபசரிக்கின்ற மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். 

அதே சமயம் உபசரிப்பு மற்றும் நிலையானது அல்ல. வந்திருக்கின்ற விருந்தினர்களோடு, வருகின்ற நபர்களோடு, அமர்ந்து உரையாடுவதும் அவர்ளுக்கு செவி கொடுப்பதும், அவர்களின் இன்ப துன்பத்தை கேட்டு நமது உடன் இருப்பை வழங்குவதும் அவசியம் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக, நாம் நினைவு கூருகின்ற புனிதரின் வாழ்வு வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 

      இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, இறைவனை நோக்கிய பாதையில் நாமும் அவரை பின்தொடர்ந்து பயணம்  செய்வோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வியாழன், 28 ஜூலை, 2022

புனித அல்போன்சா அவர்களை பின்பற்ற...(28.7.2022)

புனித அல்போன்சா அவர்களை பின்பற்ற...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
        இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் செய்கின்ற எல்லா செயல்களிலும் கடவுள் உடனிருந்து ஆசிகளை வழங்குவார் என்று வாக்குறுதியானது வழங்கப்படுதலை நாம் வாசிக்க கேட்டோம். 

           இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது பலருக்கு பயன் தராது என்பதை எடுத்துரைக்கின்றார். 

              இந்த இரண்டு வாசகங்களையும் இன்று நாம் தாய்த்திரு அவையாக இணைந்து நினைவு கூருகின்ற புனித அல்போன்சா அவர்களுடைய வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது,  அல்போன்சா அவர்கள் சிறு வயது முதலே ஆண்டவருக்கான பணியை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். 
 அடுத்தவர் நலனை பேணுவதிலும் அடுத்தவருக்காக ஜெபிப்பதிலும் நிலைத்திருக்க வேண்டும் என எண்ணியவர், துறவு மடத்திற்கு சென்று ஒரு அருட்சகோதரியாக மாற விரும்பினார். ஆனால் இவரது விருப்பத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இவருக்கு மணமுடித்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த போது, தன் காலில் தீக்காயத்தை ஏற்படுத்தியாவது இந்த திருமணத்தை தடுத்து விட வேண்டும் என எண்ணியவர், அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால்,  தெரியாமல் தீயில் முழுவதுமாக  விழுந்து விடக்கூடிய சூழலை அவர் சந்தித்தார்.  இந்நிலை காரணமாக,  திருமணமானது தடைப்பட்டு போனது. தன் வாழ்வை ஆண்டவருக்கென அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தமையால்,  துறவு மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நல்லதொரு அருட்சகோதரியாக  பலருக்கான பல நல்ல பணிகளை முன்னெடுத்தவராக, எப்போதும் அடுத்தவருக்காக செபிக்கக்  கூடிய கூடிய ஒரு பெண்மணியாக இச்சமூகத்தில் வாழ்ந்து மறைந்தார். 

        இவர் நமது பங்கின் பாதுகாவலையான குழந்தை தெரசாவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். இந்த குழந்தை தெரசாவை போல தானும் ஒரு புனிதையாக மாற வேண்டும் என்ற எண்ணத்தோடு எப்போதும் அனுதினமும் செபத்தின் வாயிலாக இறைவனோடு உரையாடக் கூடிய ஒரு நபராக இவர் இருந்தார் என்பதை இவரது வாழ்வில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

        இப்புனிதையை. நினைவு கூருகின்ற இந்த நன்நாளில் நாம் நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டியது எது என சிந்திக்கின்ற போது,  மண்ணில் பிறந்த மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வை நமக்கான வாழ்வாக மட்டும் கருதாது, நமது வாழ்வு பலருக்கு பயன் தரக்கூடிய வாழ்வாக அமைய வேண்டும் என்ற சிந்தனையினை உள்வாங்கியவர்களாக, ஆண்டவர் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப அடுத்தவரை அன்பு செய்யக்கூடியவராக, அடுத்தவரின் நலனில் அக்கறை காட்டக் கூடிய மனிதர்களாக புனித அல்போன்சா அவர்களை பின்பற்றி நமது வாழ்வையும் அமைத்துக் கொள்ள  இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

புதன், 27 ஜூலை, 2022

இழக்கத் துணிந்த மனிதர்களாக...(27.4.2022)

இழக்கத் துணிந்த மனிதர்களாக...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
      மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனும் மகிழ்வோடு இருக்க  வேண்டும் என  எண்ணுகிறான். இந்த மகிழ்விற்காக பலவற்றை இந்த உலகத்தில் தேடித்தேடி சேர்த்து வைக்கிறான். ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது,  ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டு, அதன்படி வாழ்வதில் தான் அடங்கி இருக்கிறது என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

             இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா ஆண்டவரின் வார்த்தைகளை அறிவித்து, அதன் விளைவாக சுற்றி இருந்த மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டு தனிமையில் வாடுகின்ற போது கடவுளை நோக்கி புலம்பக்கூடிய  புலம்பலை தான் இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

புலம்பிய எரேமியாவின் குரலுக்கு செவி கொடுத்த இறைவன், "நான் உன்னோடு இருக்கிறேன். உன்னை அவர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்துவேன்" என்று கூறி, துன்பத்தில் துணையாக நிற்கின்ற இறைவனை இன்றைய முதல் வாசகமானது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


       இந்த இறைவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது, கடவுள் நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் உடனிருந்து நம்மை வழிநடத்தக் கூடியவராக இருக்கின்றார். 

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, விலை உயர்ந்த ஒரு புதையலை கண்டுபிடித்த ஒரு மனிதன் தன்னிடம் இருப்பதை எல்லாம் விற்று, அதிலிருந்து வரக்கூடிய பணத்தை கொண்டு புதையலை உரிமையாக்கி கொள்கிறான் என இறைவன் ஒரு உவமையை சுட்டிக் காட்டுகின்றார்.  அதுபோலவே விலை உயர்ந்த முத்தை ஒருவன் உரிமையாக்கிக் கொள்ள, தன்னிடம் இருப்பதை எல்லாம் விற்றுவிட்டு அதிலிருந்து கிடைக்கின்ற பணத்தைக் கொண்டு அந்த விலை உயர்ந்த முத்தை உரிமையாக்கி கொள்கிறான் என்கின்றார். 

         இந்த உவமைகள் அனைத்துமே நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது,  நம்மிடம் இருக்கின்ற அனைத்தையும் இழக்கத் துணிந்தவர்களாய், இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் வழங்குகிறார். இறைவன் வழங்கும் இந்த வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாய், ஆண்டவரின் வார்த்தைகளின்படி வாழ்வதற்காக,  அனைத்தையும் இழக்கத் துணிந்த மனிதர்களாக நாம் இருப்பதற்கு இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க(24.7.2022)

வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
            இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே நாம் அடுத்தவருக்காக பரிந்து பேசக்கூடிய நபர்களாக அடுத்தவருக்காக மன்றாடக் கூடிய நபர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை வழங்குகின்றன.

                       இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் கோபத்திற்கு ஆளான சோதோம் கொமாரா பகுதி மக்களுக்காக ஆபிரகாம் பரிந்து பேசுவதை முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

              இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, நமக்காக, நமது மீட்புக்காக, தன் இன்னுயிரை தியாகம் செய்த இயேசுவின் தியாகத்தை நாம் நினைவு கூருகின்றோம். 

             நற்செய்தி வாசகத்தின் வாயிலாக கடவுள், நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதை தம் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்ததை நாம் வாசிக்க கேட்டோம். 

              இந்த வாசகங்கள் அனைத்துமே நமது செபங்களிலும், நமது மன்றாட்டுக்களிலும் நாம் அடுத்தவர்களை மையப்படுத்தியவர்களாக, அடுத்தவர் நலனுக்காக மன்றாடக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகின்றார். நாம் கேட்பதற்கு முன்பதாகவே நம் தேவைகளை அறிந்து வைத்திருக்கின்ற இறைவன், தகுந்த நேரத்தில் நம் தேவைகளை நிவர்த்தி செய்வார். நம்பிக்கையோடு நாம் அவரிடம் கேட்கவும், நம்மை சுற்றி உள்ளவர்களின் நலனுக்காக அவரிடம் பரிந்து பேசவும், இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம்.

          வாசகங்கள் தருகின்ற வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் எடுத்துக் கொண்டவர்களாய், நமது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க இறையருள் வேண்டுவோம் இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

அர்த்தம் உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...(23.7.2022)

அர்த்தம்  உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
            இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா கடவுளின் உடனிருப்பை உணர்ந்தவர்களாக இந்த கடவுளை நாடிச் செல்லக்கூடிய ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து இருந்தாலும், அந்த இஸ்ரேல் மக்கள் கடவுளை ஆலயத்தில் இருக்கின்ற இறைவனாக மட்டுமே எண்ணிக்கொண்டு ஆலயத்திற்கு வந்து செல்வதும், அங்கு வந்துவிட்டு கடவுளை சந்தித்து செல்வதும் தங்களுக்கு பாதுகாப்பை தருவதாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் வாழ்வானது இந்த ஆண்டவரின் வார்த்தைகளுக்கு முற்றிலுமாக புறம்பான  ஒரு வாழ்வாக இருந்தது. இதை அறிந்த இறைவன் இறைவாக்கினர் எரேமியா  வழியாக ஆலயத்திற்கு வந்து செல்லுகிறவர்களின் காதுகளில் விழும் வண்ணமாக எருசலேம் தேவாலயத்தின் முற்றத்தில் நின்று கொண்டு இறைவாக்கினர் எரேமியா வழியாக அவர்களின் தவறான வாழ்வினை சுட்டிக்காட்டுவதை  இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த முதல் வாசகத்தின் பின்னணியோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது அனுதினமும் ஆண்டவரை தேடி அவரின் சன்னதிக்கு வந்து செல்லுகின்ற நமது மனநிலை எத்தகைய மனநிலையாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம்.  கடவுளைத் தேடி, கடவுளை நாடி வருகின்ற நாம் கடவுளோடு உரையாடுகின்ற இடமாக இதை கருதுகிறோமா? அல்லது மற்றவரை பார்த்து பெருமை கொள்வதும், மற்றவர் நம்மை புகழ வேண்டும் என்ற  எண்ணத்தோடும் ஆடம்பரத்திற்காகவும் வேடிக்கையாகவும் இந்த ஆலயத்திற்கு வந்து சென்று விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோமா? என சிந்திப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். நாம் பார்க்கின்ற பல மனிதர்கள் இத்தகைய தவறான வாழ்வை தங்கள் வாழ்வாக கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்வையே நாமும் நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு பல நேரங்களில் பயணம் செய்கிறோம். அப்படிப்பட்ட நிகழ்வைதான் இறைவன் கதிர்களுக்கு இடையே முளைத்த களைகளாக குறிப்பிடுகின்றார். நற்செய்தி வாசகத்தில் கதிர்களையும் களைகளையும் ஒனறாக வளர விட்டு, உரிய காலம் வரும்போது  களைகளை பிடுங்கி தீக்கிரையாக்குவதற்கு கட்டுகின்ற இறைவன்,  தானியங்களை களஞ்சியத்தில் சேர்த்து வைக்கின்றார். நாம் ஆண்டவரை நாடி வருகின்ற போது இதயத்தில் களைகளை சுமந்தவர்களாக ஆண்டவரின் சன்னதியில் அமர்ந்திருக்கிறோமா? அல்லது  களஞ்சியத்தில் சேர்க்கப்படுகின்ற தானியங்கள் போல நற்பண்புகளை நம்மகத்தே கொண்டு, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக இந்த ஆலயத்தை நாடி வருகின்றோமா? என்ற  கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து, சிந்திப்பதற்கும் செயல் வடிவில் மாற்றத்தை உருவாக்குவதற்கும் இறைவன் இந்த நாளில் அழைப்பு தருகின்றார். 

     இறைவன் தரும் அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய் ஆலயத்திற்கு வந்து செபிக்கின்ற நாமும் அல்லது இணைய வழியில் இறைவனோடு இணைந்து இருக்கக்கூடிய நாமும் அர்த்தம்  உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

மகதலா மரியா வழியாக...(22.7.2022)

மகதலா மரியா வழியாக...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய் திருஅவையானது மகதலா மரியம்மாளுடைய திருநாளை கொண்டாடுகிறது. உயிர்த்த ஆண்டவரை முதன் முதலில் கண்டு கொண்டவர் இந்த மகதலா மரியா.
தானறிந்த இயேசு கிறிஸ்துவை இயேசுவின் சீடர்களிடத்தில் வந்து சொல்லி அறிந்து கொள்வதற்கு காரணமாக அமைந்திருந்தவர்  இந்த மகதலா மரியா. இவரை குறித்து விவிலியத்தில் பல இடங்களில் பலவற்றை நாம் வாசிக்கலாம்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணாக இந்த மகதலா மரியா விவிலியத்தில் காட்டப்படுகிறார். இவரிடத்தில் இருந்து ஏழு பேய்களை ஆண்டவர் இயேசு விரட்டியதாக  கூறுகிறது. ஆண்டவரே இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்குகின்ற போது சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த பெண்மணிகளுள் இவரும் ஒருவர். இறந்த இயேசுவின் கல்லறைக்கு இயேசுவைத் தேடிச் சென்ற பெண்மணியும் இவர். உயிர்த்த ஆண்டவரை முதல் முதலில் கண்டு கொண்டவரும் இவர்.

        இவரிடம் காணப்பட்ட ஆழமான நம்பிக்கை நமது நம்பிக்கையாக மாற வேண்டும் என்பதைத்தான் இன்றைய நாள் நமக்கு வலியுறுத்துகிறது. ஆண்டவரோடு இணைந்திருந்தவர்கள், அவரோடு உடன் பயணித்தவர்கள், அவர் சொன்னதை கேட்டு தங்கள் வாழ்வை செதுக்கி கொண்டவர்களுள் முதன்மையான நபராக இந்த மகதலா மரியாவை நாம் அடையாளப்படுத்தி காட்டலாம். 

     இந்த நன்னாளில் நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்ப்போம். தவறுகள் செய்திருந்தால் மனம் மாறி ஆண்டவரை நோக்கி திரும்பி வரவும், அவரது வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் மகதலா மரியாவை போல பயணம் செய்ய இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாளில் ஜெபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

வியாழன், 21 ஜூலை, 2022

கடவுளுக்கு அர்ப்பணம்....(21.7.2022)

கடவுளுக்கு அர்ப்பணம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

             இன்றைய நாள் முதல் வாசகத்தின் வாயிலாக இஸ்ரேல் மக்கள் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள்  என்பதை இறைவாக்கினார்கள் வாயிலாக  இறைவன் எடுத்துரைப்பதை நாம் வாசிக்க கேட்டோம். நாம் ஒருவருக்கு ஒன்று செய்தால் அவர் நமக்கு மற்றொன்று செய்வார் என்ற எண்ணத்தோடு நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுமே  நமது சுயநலத்தின் வெளிப்பாடாக அமைகிறது. 

             ஆனால் நமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் நாம் ஒருவருக்காக அர்ப்பணிக்கிறோம் என்றால் அதற்குப் பெயரே அர்ப்பணம் என கருதப்படுகிறது. இந்த அர்ப்பணம் மனிதர்களிடத்தில் நடைபெற வேண்டியது அல்ல, மாறாக கடவுளிடத்தில் நடைபெற வேண்டியது.

      இஸ்ரேல் மக்கள் தங்களை கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதற்கு பதிலாக தங்கள் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பிற சமய மனிதர்களைப் போல தங்கள் கைகளால் சிலைகளை செய்து அந்த சிலைகளுக்கு முன்பாக தங்களை அர்ப்பணம்  செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் இச்செயல் தவறு என்பதை இறைவன் இறைவாக்கினார்கள் வாயிலாக எடுத்துரைப்பதை இன்றைய நாளில் முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.

         இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு உவமைகளை பயன்படுத்துவதை குறித்து சீடர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசுவின் ஒவ்வொரு கற்பித்தலுமே பலவிதமான பாடங்களை பலருக்கு கற்பித்தது. அதன் அடிப்படையில் தான் இறைவாக்கினர்கள் வாயிலாக இறைவன் உரையாடியதும் உவமைகள் வாயிலாக இயேசு உரையாடியதும் உண்மையான அர்ப்பணம் கடவுளிடத்தில் நடைபெற வேண்டும். அந்த அர்ப்பணம் கடவுளின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக் கொண்டு அந்த வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகின்ற இத்தகைய ஒரு வாழ்வை நாம் நமது  வாழ்வாக மாற்றிக்கொள்ள வேண்டுமாயின் நம்மை முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணம் செய்தவர்களாக அவரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று அதை செயலில் வெளிக்காட்டக் கூடிய மனிதர்களாக நாம் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என்ற சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார். இறைவன் தருகின்ற இந்த சிந்தனையை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாய் நமது செயல்கள் மூலம் அதற்கு வடிவம் தரக்கூடிய மனிதர்களாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ ....(20.7.2022)

ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ ....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

                   இன்றைய முதல் வாசகத்தில் எரேமியாவின் அழைப்பை பற்றி நாம் வாசிக்க கேட்கின்றோம். எரேமியாவின் அழைப்போடு இந்த புத்தகமானது துவங்குகிறது. தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே கடவுள் நம்மை அறிந்திருக்கிறார் என்பதற்கான மிகப்பெரிய உதாரணமாக எரேமியாவின் அழைப்பு பார்க்கப்படுகிறது.

                      நம்மை அறிந்து வைத்திருக்கின்ற இறைவன்,  அவரது வார்த்தைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான அழைப்பை அனுதினமும் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக,   நூறு மடங்கு விளைச்சல் தரக்கூடிய 
மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.  இறைவன் வலியுறுத்தும் இந்த வாழ்க்கை பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக, ஆண்டவரின் வார்த்தைக்கு கவனத்தோடு செவிகொடுத்து அவரின் வார்த்தைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நூறு மடங்கு விளைச்சல் தருகின்ற நல்ல மக்களாக, ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

திங்கள், 18 ஜூலை, 2022

வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாவோம்...(19.7.2022)

வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின்  அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகம் மீக்கா நூலில் இருந்து எடுக்கப்பட்டது.  மீக்கா புத்தகமானது கண்டனத்தோடு தொடங்கி, கடவுள் மீதான ஆறுதலான வார்த்தைகளை கொடுத்து, இறை புகழ்ச்சியோடும், பிறகு கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையோடும் இந்த புத்தகமானது நிறைவை நோக்கி செல்லும். அதன் அடிப்படையில் கடவுளுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதையும், இந்த இறைவன் நமது பாவங்களை மன்னிக்க வல்லவர், நமது  குற்றங்களை எல்லாம் மன்னித்து, ஆசிகளை நமக்கு தரக்கூடியவர் என்பதை எடுத்துரைக்கிறது. இதையே இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.

          இன்றைய நற்செய்தி வாசகத்தில் என்னுடைய வார்த்தைகளை கேட்டு கடைபிடிப்பவரே என் தாயும் சகோதரரும் என இயேசு குறிப்பிடுகின்றார். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு, அதன்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடிய நபர்களாக நாம் இருக்கின்ற போது, நாமும் கடவுளின் மீதான நம்பிக்கையோடு அவரிடம் இருந்து ஆசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.  நமது குற்றம் குறைகளை எல்லாம் மன்னித்து நம்மை ஏற்றுக்கொண்ட இந்த இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாம் வாழ இறைவனிடத்தில் தொடர்ந்து அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இறைவனோடு இணைந்த வாழ்வு....(16.07.2022)

  இறைவனோடு இணைந்த வாழ்வு....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!




இன்றைய வாசகங்கள் அனைத்துமே ஆண்டவரின் அருகில் அமர்ந்திருக்க, ஆண்டவரோடு உரையாட, ஆண்டவரோடு உறவை வளர்த்துக் கொள்ள நமக்கு அழைப்பை தருகின்றன.


             இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளின் தூதர்களை கண்டு கொள்வதையும், அவர்களை உபசரிப்பதையும், அவர்களோடு உரையாடி, உறவாடி, அவர்களின் ஆசிகளை பெற்றுக் கொள்வதையும் வலியுறுத்துகின்றன.


           இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய நபராக, ஆண்டவரின் வார்த்தைகளின் மீது அவர் கொண்டிருக்கின்ற ஆழமான நம்பிக்கையும், இந்த வார்த்தைகளின் வழியாக அவரோடு அவர் இணைந்துள்ள வாழ்வையும் நம்மிடையே எடுத்துரைப்பதாக இரண்டாம் வாசகம் அமைகிறது.


    இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மார்த்தா மரியா என்ற இருவரில், மரியா நல்ல பங்கை தேர்ந்து கொண்டார் என, தன் அருகில் அமர்ந்து தன்னோடு உரையாடிக் கொண்டிருந்த மரியாவைப் பற்றி இயேசு புகழ்ந்துரைப்பதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 


     இந்த வாசகப் பகுதிகள் அனைத்துமே வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது,  கடவுளோடு நேரம் செலவிடக்கூடிய மனிதர்களாக, அவரோடு உரையாடக் கூடியவர்களாக, உறவாடக் கூடியவர்களாக, நாளும் வளர  நமக்கு அழைப்பு தருகின்றன. இறைவனோடு இணைந்த வாழ்வை நமதாக்கிக் கொள்ள இறையருள் வேண்டுவோம், இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

அடையாளமாக நாம் மாறுவேரம்......(18.07.2022).

அடையாளமாக நாம் மாறுவேரம்....

 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!



      இன்றைய முதல் வாசகமானது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ அழைப்பு தருகிறது. நல்லது எதுவோ, நேர்மையானது எதுவோ, நீதி எதுவோ, அதனை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்ற அழைப்பு  முதல் வாசகம் வழியாக நமக்கு தரப்படுகிறது. 


                  இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவினிடத்தில் தங்களுக்கு அடையாளத்தை காட்டுமாறு பரிசேயர்களும் சதுசேயர்களும் இயேசுவை அணுகுகிறார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு அடையாளம் தரப்பட மாட்டாது என்கிறார். 


                    இயேசுவின் இந்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கின்ற போது, அடையாளங்களை கேட்கின்ற நபர்களாக நாம் இல்லாமல், நமது செயல்கள் மூலமாக நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கான அடையாளமாக நாம் மாறுவதற்கு இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...