கடவுளுக்கு அர்ப்பணம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் முதல் வாசகத்தின் வாயிலாக இஸ்ரேல் மக்கள் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள் என்பதை இறைவாக்கினார்கள் வாயிலாக இறைவன் எடுத்துரைப்பதை நாம் வாசிக்க கேட்டோம். நாம் ஒருவருக்கு ஒன்று செய்தால் அவர் நமக்கு மற்றொன்று செய்வார் என்ற எண்ணத்தோடு நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுமே நமது சுயநலத்தின் வெளிப்பாடாக அமைகிறது.
ஆனால் நமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் நாம் ஒருவருக்காக அர்ப்பணிக்கிறோம் என்றால் அதற்குப் பெயரே அர்ப்பணம் என கருதப்படுகிறது. இந்த அர்ப்பணம் மனிதர்களிடத்தில் நடைபெற வேண்டியது அல்ல, மாறாக கடவுளிடத்தில் நடைபெற வேண்டியது.
இஸ்ரேல் மக்கள் தங்களை கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதற்கு பதிலாக தங்கள் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பிற சமய மனிதர்களைப் போல தங்கள் கைகளால் சிலைகளை செய்து அந்த சிலைகளுக்கு முன்பாக தங்களை அர்ப்பணம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் இச்செயல் தவறு என்பதை இறைவன் இறைவாக்கினார்கள் வாயிலாக எடுத்துரைப்பதை இன்றைய நாளில் முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு உவமைகளை பயன்படுத்துவதை குறித்து சீடர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசுவின் ஒவ்வொரு கற்பித்தலுமே பலவிதமான பாடங்களை பலருக்கு கற்பித்தது. அதன் அடிப்படையில் தான் இறைவாக்கினர்கள் வாயிலாக இறைவன் உரையாடியதும் உவமைகள் வாயிலாக இயேசு உரையாடியதும் உண்மையான அர்ப்பணம் கடவுளிடத்தில் நடைபெற வேண்டும். அந்த அர்ப்பணம் கடவுளின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக் கொண்டு அந்த வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகின்ற இத்தகைய ஒரு வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக்கொள்ள வேண்டுமாயின் நம்மை முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணம் செய்தவர்களாக அவரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று அதை செயலில் வெளிக்காட்டக் கூடிய மனிதர்களாக நாம் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என்ற சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார். இறைவன் தருகின்ற இந்த சிந்தனையை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாய் நமது செயல்கள் மூலம் அதற்கு வடிவம் தரக்கூடிய மனிதர்களாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக