இறைவன் இரக்கம் உள்ளவர்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையானது, இறைவன் இரக்கம் உள்ளவர் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. இந்த இறைவன் இரக்கம் உள்ளவராய் இருப்பதற்கான காரணம், நம் மீது அவர் கொண்ட அளப்பரிய அன்பு. அந்த அன்பை உணர்ந்து கொண்டவர்களாக, இறைவனின் இரக்கத்தை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நாம் நமது வாழ்வை சீரமைத்துக்கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வழங்குகின்றன.
இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்ட முதல் வாசகமானது, ஓசேயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த ஓசேயா புத்தகம் முழுவதுமே,
கடவுளுக்கும் மனிதர்களுக்குமான, இஸ்ரயேல் மக்களுக்குமான உறவை, ஒரு கணவன் மனைவி உறவுக்கு இணையாக ஒப்பிட்டு பேசுகிறது. எப்படி ஒரு கணவன் மனைவி உறவுக்குள் அன்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்க வேண்டுமோ, அந்த அன்பும் நம்பிக்கையும் நமக்கும் கடவுளுக்கும் இடையே நிலைத்திருக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் நமக்கு வலியுறுத்துகிறது.
கடவுள் பல்வேறு நிலைகளில் இருந்து இந்த இஸ்ரயேல் மக்களை, பாதுகாத்து பராமரித்து வந்தார். எகிப்தில் அவர்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்களின் அடிமைத்தனத்தைக் கண்டு, துயரத்தில் அவர்கள் எழுப்பிய குரலுக்கு செவி கொடுத்தவராய், அவர்களை அந்நிலையிலிருந்து நன்னிலை நோக்கி நகர்த்திச் செல்லக் கூடியவராய், கடவுள் இருந்தார். எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை அழைத்து வந்திருந்த நிலையிலும் கூட, அவர்களை பாலை நிலத்தில் அவர்களை மீட்டு வந்து கொண்டிருந்த போது கூட, அவர்கள் அனைவரும் பார்க்கும் வண்ணமாக, கடலை இரண்டாக பிரித்து அவர்களை வழி நடத்தியவர் இந்த இறைவன்.
பசியோடு அவர்கள் தங்களுக்கு உண்ண உணவு வேண்டும் எனக் கேட்டபோது, வானில் இருந்து மன்னாவை பொழியச் செய்தவர் இந்த இறைவன். எங்களுக்கு இறைச்சி வேண்டும் எனக் கேட்டபோது, காடைகளை கொடுத்தவர் இந்த இறைவன். எங்களுக்கு நல்ல தண்ணீர் வேண்டும் என கேட்டபோது, பாறையில் இருந்து பாலை நிலத்தில் தண்ணீரை வரச் செய்தவர் இந்த இறைவன்.
இவ்வாறு இறைவன் அவர்களை பாதுகாத்து பராமரித்து, வழிநடத்தி வந்தார்.
தங்களை வழிநடத்துகின்ற இந்த கடவுளை இவர்கள் பல நேரங்களில், உதறித் தள்ளக்கூடிய மனிதர்களாக, மனம் போன போக்கில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவே வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்த நேரங்களில் எல்லாம் பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும் வாழ்வில் பல விதமான துன்பங்களையும் அவர்கள் சந்தித்தார்கள். இந்த துன்பங்களை எல்லாம் அவர்கள் சந்திக்கின்ற போது, கடவுளின் கட்டளைக்கு புறம்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தங்கள் வாழ்வு நெறி தவறு என்பதை இறைவாக்கினர்களின் வாயிலாக உணர்ந்து கொண்டு, தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
பல நேரங்களில் இந்த மக்கள் தவறு இழைத்து ஆண்டவரை விட்டு விலகிச் சென்றாலும், ஆண்டவர் எப்போதும் இவர்களோடு இருந்தார். துன்பங்களுக்கு மத்தியிலும் இவர்களோடு துணையிருந்து இவர்களை வழி நடத்தினார். மனம் வருந்தியவர்களாய் அவர்கள் திரும்பி வந்த போதெல்லாம், அவர்களை தங்கள் மார்போடு அணைத்துக் கொள்ளக்கூடிய கடவுளாக, இறைவன் இருந்தார் என்பதை தான் விவிலியம் நமக்கு வெளிக்காட்டுகிறது.
இத்தகைய பின்னணியோடு தான் இன்றைய நாள் முதல் வாசகமும் அமைகிறது. தங்களை இதுநாள் வரை வழிநடத்தி வந்த இறைவனை புறம் தள்ளியவர்களாய், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களை தாங்களே தேர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, தங்களுக்காக அரசர்களை ஏற்படுத்தினார்கள். தங்களுக்காக தெய்வங்களை உருவாக்கினார்கள். தங்கள் கைகளால் உருவாக்கிய சிலைகளை, தெய்வமாக மாற்றினார்கள். தாங்கள் விரும்பிய வகையில் அதனை வழிபடக் கூடியவர்களாக இருந்தார்கள். இது தவறு, இவர்கள் செல்லுகிற பாதை தவறு என்பதை, ஓசேயா இறைவாக்கினர் வாயிலாக இறைவன் எடுத்துரைக்கின்ற ஒரு நிகழ்வையே, இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த வாசகப் பகுதியோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டு பார்க்கிற போது, பல நேரங்களில் கடவுள் நமது வாழ்வில் ஏற்பட்ட எல்லா இன்ப துன்பங்களிலும் உடன் இருந்திருந்தாலும், பல நேரங்களில் அவரை மறந்து விட்டு பயணம் செய்யக் கூடிய மனிதர்களாகவே நாம் இருக்கிறோம்.
நாம் செல்லுகின்ற பாதை தவறு என்பதை உணர்ந்து, அவரை நோக்கி திரும்புகிற போது, அவர் நம்மை அரவணைக்க கூடிய இறைவனாக இருக்கின்றார். இந்த இரக்கம் நிறைந்த இறைவனை நாம் நம்பிக்கையோடு இறுகப் பிடித்துக் கொள்ள, இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட பேச்சிழந்த ஒரு மனிதரை சிலர் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை கண்டு வியந்து போனவராய், பேச்சிழந்த மனிதரை பேச வைக்க கூடிய இறைவனாக இறைவன் இருக்கின்றார். துன்பங்களின் மத்தியில் ஆண்டவரை தேடி வரக்கூடிய அவர்களின் நிலையைக் கண்டு, அவர்கள் மீது பரிவு கொள்ளக் கூடியவராக இறைவன் இருக்கின்றார். வாழ்வில் என்ன நிலையில் நாம் இருந்தாலும், வாழ்வில் நாம் செல்லுகிற பாதை தவறு என்பதை உணர்ந்து, ஆண்டவரை நோக்கி நாம் திரும்புகிற போது, நம் மீது பரிவு கொள்ளக் கூடியவராய் , நம்மை தன் மார்போடு அணைத்துக் கொள்ளக் கூடியவராய், இந்த இறைவன் இருக்கிறார் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
இவ்வாசகங்களின் அடிப்படையில், நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்ப்போம். ஆண்டவரிடத்தில் காணப்படுகின்ற இரக்கமும் பரிவும் நம்மிடம் குடிகொண்டு இருக்கிறதா என்பதை இன்று நாம் நமக்குள்ளாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். தவறு இழைத்த நாமும் செய்தது தவறு என்பதை உணர்ந்து ஆண்டவரை நோக்கி திரும்புகிற போது அவர் நம்மை மன்னிக்கின்றார்.
நமக்கு எதிராக நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நமக்கு எதிராக தவறிழைத்த சக மனிதர்களை, நம்மால் மன்னிக்க முடிகிறதா? இயேசுவிடம் காணப்பட்ட இரக்கமும் பரிவும், நமது வாழ்வில் செயலாகிறதா? சிந்தித்துப் பார்ப்போம். அனுதினமும் நாம் பயன்படுத்துகின்ற " விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என இயேசு கற்பித்த செபத்தில் கூட, நாம் குறிப்பிடுகிறோம், பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் என்று. நம்மிடம் மன்னிப்பு மேலோங்கி இருக்கிறதா? பரிவு மேலோங்கி இருக்கிறதா? என்ற கேள்வியை இதயத்தில் எழுப்பி பார்ப்போம்.
இயேசுவிடம் காணப்பட்ட இரக்கமும் பரிவும், நம்மிடம் வெளிப்படுகிற போது, நாம் கடவுளின் மக்களாக, கடவுளைப் போல இரக்க குணம் உள்ளவர்களாக, இச்சமூகத்தில் பயணம் செய்ய முடியும். இதற்கான அருளை இறைவனிடத்தில் இன்றைய நாளில் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக