வெள்ளி, 8 ஜூலை, 2022

வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.(8.7.2022)

வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இஸ்ரயேலே!  உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா என்ற அழைப்பினை கடவுள் இஸ்ரயேல் மக்களைப்  பார்த்து கொடுக்கின்றார்.  இந்த அழைப்பு இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் தரப்பட்ட ஒரு அழைப்பாக நாம் நகர்ந்து விட முடியாது. இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்குமான ஒரு அழைப்பாகவே
பார்க்கப்படுகிறது.  தவறிய வாழ்வில் இருந்து மனம் திரும்பியவர்களாய் இந்த ஆண்டவர் இயேசுவின் பாதையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய நாளில் அழைப்பு விடுக்கின்றார். 

        இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக் கொண்டு பயணிப்பது எளிதான ஒரு காரியம் அல்ல. இயேசு அன்று தன்னுடைய சீடர்களை தனது பணியை செய்ய மக்களிடையே அனுப்பிய போது,  அவர் அவர்களுக்கு அறிவுறுத்திய வார்த்தைகளை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். ஓநாய்களுக்கு மத்தியில் உங்களை அனுப்புகிறேன். எனவே விவேகத்தோடு இருங்கள் என இறைவன் வலியுறுத்துகிறார். 

       இந்த இயேசுவின் பணியை செய்வதால் பலவிதமான இன்னல்களையும் எதிர்ப்புகளையும் நீங்கள் சந்திக்க நேரலாம். சந்திக்கின்ற போதெல்லாம் மனம் தளர்ந்து விடாதீர்கள் என்ற வாழ்வுக்கான பாடத்தை இறைவன் தன்னுடைய சீடர்களிடம் கூறினார். இதே பாடத்தை தான் இன்று நமக்கும் கற்பிக்கின்றார். 

       ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, நமது செயல்களில் அதனை வெளிப்படுத்துகிற போது இந்த சமூகத்தில் பலரின் கேலி பேச்சுகளுக்கும் எள்ளி நகையாடக்கூடிய தன்மைக்கும் நாம் உள்ளாக நேரிடலாம். அவைகளை எல்லாம் கண்டு மனம் தளர்ந்து விடாமல் இறுதி வரை ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு பயணிப்பதை மட்டுமே நமது வாழ்வின் இலக்காகக் கொண்டு நாம் நமது பயணத்தை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். 

            இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், அவரது வார்த்தைகளை வாழ்வாக்கும் மனிதர்களாக, நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருளினை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...