மனிதநேயமிக்க மனிதர்களாக...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தில் அசீரியப் படையெடுப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்த எசேக்கியா தன் வாழ்நாள் முடிவதற்குள்ளாக தனது உரிமை நாட்டிற்கு சென்று விட வேண்டுமென கடவுளை நோக்கி மன்றாடுகிறார். கடவுளும் அவரது குரலுக்கு செவி கொடுக்கிறார். இதுநாள் வரை அவர் செய்த நன்மைத்தனங்களின் நிமித்தமாக அவரது வாழ்நாளை அதிகரிக்க செய்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாள் சட்டங்களை பின்பற்றாமல் கதிர்களை கொய்தார்கள் எனக் கூறி குற்றம் சாட்டப்படுகிறார்கள். கடவுள் அவர்களுக்கு தாவீதின் செயலை சுட்டிக் காண்பித்து,
சட்டங்களைவிட மனிதத்துவம் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். லேவியர் புத்தகம் 25 ஆம் அதிகாரம் குறிப்பிடுகின்றது, கடவுளின் திருமுன்னிலையில் இருக்கின்ற மேஜையின் மீது ஆறு அப்பங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும். இந்த ஆறு அப்பங்களையும் குருக்கள் மட்டுமே உண்ண வேண்டும். அதனை உண்டதற்குப் பிறகாக மாற்று ஆறு அப்பங்களை எப்பொழுதும் கடவுள் திருமுன்னிலையில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த காரணத்தினால் , குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பத்தை அவர்கள் உண்டார்கள் என்ற , நிகழ்வை சுட்டிக் காண்பித்து
இறைவன், மனிதத்துவம் முக்கியமானது; மனிதத்துவம் மதிக்கப்பட வேண்டியது; சட்டங்களை விட மனித நேயத்திற்கும் மனிதத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.
இந்த மனிதநேயத்தை மனதில் கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து விதமான நற்செயல்களின் வழியாக கடவுளின் ஆசிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அப்படித்தான் எசேக்கியா அவர்களும் பெற்றுக் கொண்டார்; தன் வாழ்நாளை காத்துக்கொண்டார்.
இந்த எசேக்கியாவைப் போல நாமும் இந்த சமூகத்தில் பலவிதமான சட்ட திட்டங்கள் இருந்தாலும், சட்ட, திட்டங்கள் வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான நெறிகளை உள்ளத்தில் உணர்ந்தவர்களாக, அதே சமயம் மனிதநேயமிக்க மனிதர்களாக இந்த சமூகத்தில் பயணம் செய்ய இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் உங்களை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக