நமது வாழ்வால் சான்று பகர....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகமானது, தவறிய நிலையில் இருந்தாலும் இஸ்ரேல் மக்கள் மீது இறைவன் இரக்கம் காட்டக்கூடியவராக இருந்தார். அந்த இரக்கத்தின் வெளிப்பாட்டை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். எந்த தவறுகளை புரிந்திருந்தாலும் உன்னை நான் எப்படி தள்ளி விடுவேன்? என்று கூறி, அவர்கள் மீது இரக்கத்தை பொழிந்து தவறிய மக்களை மீண்டும் தனது பாதையில் அழைத்து வரக்கூடியவராக கடவுள் தென்பட்டதை இன்றைய முதல் வாசகம் வலியுறுத்தியது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசுவின் பணியை செய்வதற்காக சீடர்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இயேசுவை மட்டும் இதயத்தில் சுமந்தவர்களாய் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மற்றவற்றின் மீது நாட்டம் இல்லாமல், மற்றவைகளை நம்பி தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மட்டுமே நம்பி, தங்கள் வாழ்வை நகர்த்த வேண்டும். தங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டு கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வின் லட்சியத்தை மற்றவருக்கு அறிவிக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இறைவன் இன்றைய நாளில் முன்மொழிகின்றார்.
இத்தகைய வாசகப் பகுதிகளோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டு பார்க்கிற போது நாம் தவறிய மனிதர்களாக இருந்தாலோ, அல்லது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப வாழத்தவறி இருந்தாலோ, நம்மை இறைவன் மனம் மாறி அவரது பணியை செய்ய அழைப்பு தருகின்றார். அவரது பணியை செய்ய அழைக்கப்பட்டு இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த உலக இச்சைகளை எல்லாம் புறம் தள்ளியவர்களாய், இதயத்தில் இயேசுவை மட்டுமே சுமந்தவர்களாய், அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவரது பணியை செய்யும் மனிதர்களாக இந்த உலகத்தில், அனுதினமும் பயணம் செய்ய இறைவன் அழைக்கின்றார் இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் நிறுத்திக் கொண்டவர்களாய் நமது வாழ்வால் அவருக்கு சான்று பகர இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக