அர்த்தம் உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா கடவுளின் உடனிருப்பை உணர்ந்தவர்களாக இந்த கடவுளை நாடிச் செல்லக்கூடிய ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து இருந்தாலும், அந்த இஸ்ரேல் மக்கள் கடவுளை ஆலயத்தில் இருக்கின்ற இறைவனாக மட்டுமே எண்ணிக்கொண்டு ஆலயத்திற்கு வந்து செல்வதும், அங்கு வந்துவிட்டு கடவுளை சந்தித்து செல்வதும் தங்களுக்கு பாதுகாப்பை தருவதாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் வாழ்வானது இந்த ஆண்டவரின் வார்த்தைகளுக்கு முற்றிலுமாக புறம்பான ஒரு வாழ்வாக இருந்தது. இதை அறிந்த இறைவன் இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆலயத்திற்கு வந்து செல்லுகிறவர்களின் காதுகளில் விழும் வண்ணமாக எருசலேம் தேவாலயத்தின் முற்றத்தில் நின்று கொண்டு இறைவாக்கினர் எரேமியா வழியாக அவர்களின் தவறான வாழ்வினை சுட்டிக்காட்டுவதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த முதல் வாசகத்தின் பின்னணியோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது அனுதினமும் ஆண்டவரை தேடி அவரின் சன்னதிக்கு வந்து செல்லுகின்ற நமது மனநிலை எத்தகைய மனநிலையாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம். கடவுளைத் தேடி, கடவுளை நாடி வருகின்ற நாம் கடவுளோடு உரையாடுகின்ற இடமாக இதை கருதுகிறோமா? அல்லது மற்றவரை பார்த்து பெருமை கொள்வதும், மற்றவர் நம்மை புகழ வேண்டும் என்ற எண்ணத்தோடும் ஆடம்பரத்திற்காகவும் வேடிக்கையாகவும் இந்த ஆலயத்திற்கு வந்து சென்று விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோமா? என சிந்திப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். நாம் பார்க்கின்ற பல மனிதர்கள் இத்தகைய தவறான வாழ்வை தங்கள் வாழ்வாக கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்வையே நாமும் நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு பல நேரங்களில் பயணம் செய்கிறோம். அப்படிப்பட்ட நிகழ்வைதான் இறைவன் கதிர்களுக்கு இடையே முளைத்த களைகளாக குறிப்பிடுகின்றார். நற்செய்தி வாசகத்தில் கதிர்களையும் களைகளையும் ஒனறாக வளர விட்டு, உரிய காலம் வரும்போது களைகளை பிடுங்கி தீக்கிரையாக்குவதற்கு கட்டுகின்ற இறைவன், தானியங்களை களஞ்சியத்தில் சேர்த்து வைக்கின்றார். நாம் ஆண்டவரை நாடி வருகின்ற போது இதயத்தில் களைகளை சுமந்தவர்களாக ஆண்டவரின் சன்னதியில் அமர்ந்திருக்கிறோமா? அல்லது களஞ்சியத்தில் சேர்க்கப்படுகின்ற தானியங்கள் போல நற்பண்புகளை நம்மகத்தே கொண்டு, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக இந்த ஆலயத்தை நாடி வருகின்றோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து, சிந்திப்பதற்கும் செயல் வடிவில் மாற்றத்தை உருவாக்குவதற்கும் இறைவன் இந்த நாளில் அழைப்பு தருகின்றார்.
இறைவன் தரும் அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய் ஆலயத்திற்கு வந்து செபிக்கின்ற நாமும் அல்லது இணைய வழியில் இறைவனோடு இணைந்து இருக்கக்கூடிய நாமும் அர்த்தம் உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக