வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே நாம் அடுத்தவருக்காக பரிந்து பேசக்கூடிய நபர்களாக அடுத்தவருக்காக மன்றாடக் கூடிய நபர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை வழங்குகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் கோபத்திற்கு ஆளான சோதோம் கொமாரா பகுதி மக்களுக்காக ஆபிரகாம் பரிந்து பேசுவதை முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, நமக்காக, நமது மீட்புக்காக, தன் இன்னுயிரை தியாகம் செய்த இயேசுவின் தியாகத்தை நாம் நினைவு கூருகின்றோம்.
நற்செய்தி வாசகத்தின் வாயிலாக கடவுள், நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதை தம் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்ததை நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த வாசகங்கள் அனைத்துமே நமது செபங்களிலும், நமது மன்றாட்டுக்களிலும் நாம் அடுத்தவர்களை மையப்படுத்தியவர்களாக, அடுத்தவர் நலனுக்காக மன்றாடக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகின்றார். நாம் கேட்பதற்கு முன்பதாகவே நம் தேவைகளை அறிந்து வைத்திருக்கின்ற இறைவன், தகுந்த நேரத்தில் நம் தேவைகளை நிவர்த்தி செய்வார். நம்பிக்கையோடு நாம் அவரிடம் கேட்கவும், நம்மை சுற்றி உள்ளவர்களின் நலனுக்காக அவரிடம் பரிந்து பேசவும், இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம்.
வாசகங்கள் தருகின்ற வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் எடுத்துக் கொண்டவர்களாய், நமது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க இறையருள் வேண்டுவோம் இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக