புதன், 27 ஜூலை, 2022

இழக்கத் துணிந்த மனிதர்களாக...(27.4.2022)

இழக்கத் துணிந்த மனிதர்களாக...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
      மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனும் மகிழ்வோடு இருக்க  வேண்டும் என  எண்ணுகிறான். இந்த மகிழ்விற்காக பலவற்றை இந்த உலகத்தில் தேடித்தேடி சேர்த்து வைக்கிறான். ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது,  ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டு, அதன்படி வாழ்வதில் தான் அடங்கி இருக்கிறது என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

             இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா ஆண்டவரின் வார்த்தைகளை அறிவித்து, அதன் விளைவாக சுற்றி இருந்த மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டு தனிமையில் வாடுகின்ற போது கடவுளை நோக்கி புலம்பக்கூடிய  புலம்பலை தான் இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

புலம்பிய எரேமியாவின் குரலுக்கு செவி கொடுத்த இறைவன், "நான் உன்னோடு இருக்கிறேன். உன்னை அவர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்துவேன்" என்று கூறி, துன்பத்தில் துணையாக நிற்கின்ற இறைவனை இன்றைய முதல் வாசகமானது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


       இந்த இறைவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது, கடவுள் நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் உடனிருந்து நம்மை வழிநடத்தக் கூடியவராக இருக்கின்றார். 

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, விலை உயர்ந்த ஒரு புதையலை கண்டுபிடித்த ஒரு மனிதன் தன்னிடம் இருப்பதை எல்லாம் விற்று, அதிலிருந்து வரக்கூடிய பணத்தை கொண்டு புதையலை உரிமையாக்கி கொள்கிறான் என இறைவன் ஒரு உவமையை சுட்டிக் காட்டுகின்றார்.  அதுபோலவே விலை உயர்ந்த முத்தை ஒருவன் உரிமையாக்கிக் கொள்ள, தன்னிடம் இருப்பதை எல்லாம் விற்றுவிட்டு அதிலிருந்து கிடைக்கின்ற பணத்தைக் கொண்டு அந்த விலை உயர்ந்த முத்தை உரிமையாக்கி கொள்கிறான் என்கின்றார். 

         இந்த உவமைகள் அனைத்துமே நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது,  நம்மிடம் இருக்கின்ற அனைத்தையும் இழக்கத் துணிந்தவர்களாய், இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் வழங்குகிறார். இறைவன் வழங்கும் இந்த வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாய், ஆண்டவரின் வார்த்தைகளின்படி வாழ்வதற்காக,  அனைத்தையும் இழக்கத் துணிந்த மனிதர்களாக நாம் இருப்பதற்கு இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...