புனித அல்போன்சா அவர்களை பின்பற்ற...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் செய்கின்ற எல்லா செயல்களிலும் கடவுள் உடனிருந்து ஆசிகளை வழங்குவார் என்று வாக்குறுதியானது வழங்கப்படுதலை நாம் வாசிக்க கேட்டோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது பலருக்கு பயன் தராது என்பதை எடுத்துரைக்கின்றார்.
இந்த இரண்டு வாசகங்களையும் இன்று நாம் தாய்த்திரு அவையாக இணைந்து நினைவு கூருகின்ற புனித அல்போன்சா அவர்களுடைய வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது, அல்போன்சா அவர்கள் சிறு வயது முதலே ஆண்டவருக்கான பணியை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார்.
அடுத்தவர் நலனை பேணுவதிலும் அடுத்தவருக்காக ஜெபிப்பதிலும் நிலைத்திருக்க வேண்டும் என எண்ணியவர், துறவு மடத்திற்கு சென்று ஒரு அருட்சகோதரியாக மாற விரும்பினார். ஆனால் இவரது விருப்பத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இவருக்கு மணமுடித்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த போது, தன் காலில் தீக்காயத்தை ஏற்படுத்தியாவது இந்த திருமணத்தை தடுத்து விட வேண்டும் என எண்ணியவர், அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், தெரியாமல் தீயில் முழுவதுமாக விழுந்து விடக்கூடிய சூழலை அவர் சந்தித்தார். இந்நிலை காரணமாக, திருமணமானது தடைப்பட்டு போனது. தன் வாழ்வை ஆண்டவருக்கென அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தமையால், துறவு மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நல்லதொரு அருட்சகோதரியாக பலருக்கான பல நல்ல பணிகளை முன்னெடுத்தவராக, எப்போதும் அடுத்தவருக்காக செபிக்கக் கூடிய கூடிய ஒரு பெண்மணியாக இச்சமூகத்தில் வாழ்ந்து மறைந்தார்.
இவர் நமது பங்கின் பாதுகாவலையான குழந்தை தெரசாவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். இந்த குழந்தை தெரசாவை போல தானும் ஒரு புனிதையாக மாற வேண்டும் என்ற எண்ணத்தோடு எப்போதும் அனுதினமும் செபத்தின் வாயிலாக இறைவனோடு உரையாடக் கூடிய ஒரு நபராக இவர் இருந்தார் என்பதை இவரது வாழ்வில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
இப்புனிதையை. நினைவு கூருகின்ற இந்த நன்நாளில் நாம் நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டியது எது என சிந்திக்கின்ற போது, மண்ணில் பிறந்த மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வை நமக்கான வாழ்வாக மட்டும் கருதாது, நமது வாழ்வு பலருக்கு பயன் தரக்கூடிய வாழ்வாக அமைய வேண்டும் என்ற சிந்தனையினை உள்வாங்கியவர்களாக, ஆண்டவர் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப அடுத்தவரை அன்பு செய்யக்கூடியவராக, அடுத்தவரின் நலனில் அக்கறை காட்டக் கூடிய மனிதர்களாக புனித அல்போன்சா அவர்களை பின்பற்றி நமது வாழ்வையும் அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக