திங்கள், 20 ஜூலை, 2020

இயேசுவின் சகோதரர்களாவோம்...


இயேசுவின் சகோதரர்களாவோம்...

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...

"என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?"
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு கேள்விகளும் அன்னை மரியாவை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது போல தோன்றுகிறது ...

ஆனால் உண்மையை அறிந்தாக வேண்டும். கேள்வியோடு நின்றுவிடாமல் இயேசுவின் அடுத்த வரிகளை நாம் வாசித்து பார்க்க வேண்டும்.

"விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்" என இயேசு குறிப்பிடுகிறார் ...

விண்ணகத்தில் உள்ள தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவை இயேசுவை வயிற்றில் கரு தாங்க வேண்டும் எனக் கேட்டபோது "நான் ஆண்டவரின் அடிமை" எனக்கூறி விண்ணிலுள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியவர் இந்த அன்னைமரியா ...

"ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் தாயும் சகோதரர்களும் என தன் சீடர்களை நோக்கி கையை நீட்டுகிறார்" என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணலாம்.

விண்ணிலுள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கூடியவர்களாக நாம் செயல்படும்போது அன்று இயேசு சீடர்களை நோக்கி கை நீட்டியது போல நம்மையும் கைநீட்டி சொல்லுவார் என் சகோதரர்கள் என்று...

இயேசுவின் சகோதரர்களாக நாம் மாற வேண்டுமாயின் விண்ணில் உள்ள தந்தையின் விருப்பமான அன்பு, நீதி, கருணை போன்றவற்றை நமது வாழ்வில் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் செயல்படுத்தும்போது விண்ணிலுள்ள தந்தையின் திருவுளத்தை நாம்  நிறைவேற்றுவோம்...
  
விண்ணிலுள்ள தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் போது இயேசு நம்மையும் கைநீட்டி சொல்வார்  நீங்கள் என் சகோதரர்கள் என்று....

இயேசுவின் சகோதரர்களாவோம்...

ஞாயிறு, 19 ஜூலை, 2020

"சமூகத்தில் அடையாளமாகத் திகழ்ந்திட...."




"சமூகத்தில் அடையாளமாகத் திகழ்ந்திட...."


இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..

இயேசுவிடம் சிலர் "போதகரே நீர்  அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்..."என்று கேட்பதை இன்று இச்சூழலில் நாம் இவ்வாறாக சிந்தித்துப் பார்க்கலாம் ...


இன்று அடையாளம் அனைவரும் தேடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சிலர் மற்றவர்களின் முன்பாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு பல விதமான செயல்களை முன்னெடுக்கின்றனர். இன்னும் சிலர் யாராவது எதையாவது கூறினால் அவர்கள் கூறுவது உண்மையா? என அடையாளம் கேட்கின்றனர் ...  இவ்வாறு கேட்பதில் தவறு இல்லை மாறாக எதிர்மறை எண்ணத்தோடு அடையாளங்கள் கேட்பது ஏற்க இயலாத ஒன்றாகும். இதனையே இன்றைய நற்செய்தி வாசகங்களில் நாம் காண்கின்றோம் ...   

இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணக் கூடிய கூட்டம் அவருடைய சொல்லையும் ,  செயலையும் மதித்து அவரை ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்னும் சிலரோ இவர்தான் மெசியாவாக இருப்பாரோ? என்ற எண்ணத்தோடு அவர் அடையாளங்கள் தந்தால் அதை கண்டு அவரை ஏற்றுக் கொள்ளலாம் என எண்ணினர்.  எனவே இயேசுவிடம் அடையாளம் ஒன்றை கேட்டனர்.

அடையாளம் கேட்பவர்களின் நோக்கத்தை உணர்ந்த இயேசு அவர்களுக்கு அடையாளங்கள் எதுவும் தராமல்  அவர்களின் இறுதிகாலம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி அவர்களுக்கு எச்சரிக்கிறார் ...


இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அடையாளங்களை விரும்பியவராக இருக்கவில்லை. மாறாக அடையாளமாகவே  இருந்தார்.
 இயேசுவின் சொல்லும், செயலும் தான் மிகப்பெரிய அடையாளம். அதை கண்டு தான் அவர் மீது பற்று கொண்டு அவரைப் பின் தொடர்ந்தது ஒரு கூட்டம் .... அவரைப் பின் தொடர்ந்த கூட்டம் என்றுமே அடையாளங்களை எதிர்பார்த்த கூட்டமல்ல, மாறாக  அடையாளங்களாக மாற விரும்பிய கூட்டம்.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகிலும் அடையாளங்களைத் தேடி அடையாளங்களை நாடி ஓடி திரிவதை விட.... நாம் பிறருக்கு அடையாளங்களாக மாறக் கூடியவர்களாக உருமாற ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். 
இயேசு அடையாளங்களை தந்தவர் மட்டுமல்ல அடையாளமாக இருந்தவர் அவரை பின்தொடர கூடிய நாம் அடையாளமாக மாற வேண்டும். அடையாளங்களை எதிர்பார்த்து ஓடுவதை விட ...  சமூகத்தில் அடையாளமாகத் திகழ்ந்த இயேசுவைப் போல நாமும் அடையாளங்களாக மாறிட இயேசுவின் அடிச்சுவட்டை பின் தொடர்வோம் ....

"சமூகத்தில் அடையாளமாகத் திகழ்ந்திட...."




சனி, 18 ஜூலை, 2020

"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகில் உருவாக்கும்"



"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகில் உருவாக்கும்"

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் ....

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் பயிர்களுக்கு இடையே விளைந்த களைகள் உவமை,  கடுகு உவமை, புளிப்பு மாவு உவமை என பல உவமைகளை இயேசு கையாளுகிறார் ...

இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது புரியாத புதிர்களை கொண்டு இவ்வுலகில் நற்செய்தி பணியாற்ற வில்லை, மாறாக எளிதாக மக்கள் பயன்படுத்த கூடிய பொருட்களை கொண்டே அவர்களுக்கு இறையாட்சியின் மகத்துவத்தை உணர்த்துகிறார்...மேலும்  
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரக்கூடிய உவமைகளுக்கான விளக்கத்தினை இயேசுவே உணர்த்துகிறார்.

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகிலும் எளிய பொருட்களை கொண்டு நமது வாழ்க்கைக்கான பாடத்தை நாம் கற்கவும் கற்பிக்கவும் இன்றைய வாசகம் நமக்கு உணர்த்துகின்றன...

"இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை" என்கிறது இறை வார்த்தை ... 
வயலில் விழுந்த களைகள் என்பதோ,கடுகு என்பதோ, புளிப்பு மாவு என்பதோ மிகவும் சிறியதுதான். ஆனால் அவைகள் விளைவிக்கக்கூடிய மாற்றம் மிகப்பெரியதாகும் ...

உவமைகளில் பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இந்த உலகில் தனி மனிதராக நாம் மிகவும் சிறியவர்கள் தான் ஆனால் நாம் செய்யக்கூடிய சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகில் உருவாக்குகிறது ...


இன்று நாம் வாழக்கூடிய உலகில் மிகப்பெரிய அரிய காரியங்களை எல்லாம் செய்து இவ்வுலகில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என பலர் முயன்றனர். ஆனால் சிறு சிறு செயல்களில் கவனம் செலுத்தக்கூடிய பலர் மக்கள் அனைவரும் அறியாதவராக இருந்தாலும், பல நல்ல உள்ளங்களால் அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

 உதாரணமாக: இன்று தங்களுடைய  குடும்பங்களில் நடக்கக்கூடிய இன்ப துன்ப நாட்களில் அந்த இன்ப துன்பத்தை அடுத்தவர்  மகிழ்வில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் செல்லக்கூடிய ஒவ்வொருவரையும் நாம் நினைவில் கொள்ளலாம் ...

சிறிய செயல் தான் ஆனால் பல உள்ளங்களில் அது நிறைவையும், மிகப் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்குகிறது. இயேசு பயன்படுத்திய உவமைகள் அனைத்தும் மிகவும் பெரியவை அல்ல, மிகவும் சாதாரன அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்பிக்க முயற்சித்தார், அதில் வெற்றியும் கண்டார். நாமும் பெரிய பெரிய காரியங்களை பேசுவதைவிட மிகச் சிறிய காரியங்களில் முழுமனதோடு கவனம் செலுத்தி செயல்படுவோம். 

இந்த உலகில் நாம் தனி மனிதர்கள் தான் இருந்தாலும் சிறு செயல்களால் நம்மால் பல நல்ல உள்ளங்களை இயேசுவைப் போல தொட முடியும் என்பதை உணர்ந்தவர்களாக சிறு செயலாக இருந்தாலும் மனநிறைவோடு நல்ல செயல் செய்ய, நல்ல வார்த்தைகளை வழங்க இன்றைய நாளில் உறுதி ஏற்றவர்களாய் இயேசுவின் உண்மை சீடர்களாக அவரின் பாதையில் பயணிப்போம் ...

"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகில் உருவாக்கும்"


வெள்ளி, 17 ஜூலை, 2020

இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்"


"இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்" 

பிரியமானவர்களே உங்கள் அனைவரோடும் இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் குறித்த என் சிந்தனைகளை பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் .

"இவர் நான் தேர்ந்து கொண்டவர்"  என இயேசுவை கடவுள் சுட்டிக்காட்டுகிறார். இன்று நாம் வாழும் சமூகத்தில் "இவர் நான் தேர்ந்து கொண்டவர்"  என யாரேனும் ஒருவர் நம்மை சுட்டிக் காட்டுகிறார்களா? என சிந்திக்க உங்களை அன்போடு அழைக்கிறேன்...

இயேசுவை கடவுள் சுட்டிக்காட்டுவது போல நம்மையும் பிறர் சுட்டிக்காட்டக் கூடிய அளவிற்கு இயேசுவைப் போல நமது செயல்கள் இருந்தனவா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்ப்போம்.

 இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவைப் பற்றி இவ்வாறு கூறுகிறது. 

"இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார், கூக்குரலிட மாட்டார், தன் குரலை தெருவில் எழுப்ப மாட்டார், நீதியை வெற்றிபெறச் செய்யும் வரை நெரிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார். எல்லா மக்களினத்தாரையும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்" ...

அன்புக்குரியவர்களே!
  இன்று நாம் வாழும் உலகில் நீதி வேண்டுமென வீதிகளில் குரல் எழுப்புகின்ற கூட்டங்கள் ஏராளமாக இருந்துகொண்டுதான் இருக்கின்றன...

பெரும்பாலான இந்தக் கூட்டங்கள் தங்களுக்கான நீதியை கேட்கின்றன அல்லது அடுத்தவருக்கு நீதியை வழங்க வேண்டுமென முழக்கங்கள் இடுகின்றன. இதில் துளியளவும் தவறில்லை. ஆனால் நீதியை நிலைநாட்ட வேண்டும் என முழக்கமிடுவதோ அல்லது அடுத்தவருக்கு நீதியை தரவேண்டும் என விரும்புவதோ வெறும் வாய் வார்த்தைகளாக இல்லாமல் அவை செயல்வடிவம் பெற வேண்டும் .

 இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நீதியை நிலைநாட்ட வேண்டும் என வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தவர் அல்ல, மாறாக எந்த நீதி அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என எண்ணினாரோ அந்த நீதியை தனது செயலில் அவர்களுக்குத் தந்தவர்  இந்த இயேசு கிறிஸ்து...

தொழுநோயாளிகள் என சமூகத்தால் புறம்தள்ளி ஒதுக்கப்பட்ட மக்களை தொட்டவர் இந்த இயேசு.   தொழு நோயாளர்களை ஒதுக்கி வைக்காதீர்கள் என வாய் வார்த்தைகளால் மட்டும்    அறிவித்தவர் அல்ல, மாறாக  தான் அறிவிக்க வேண்டும் என  எண்ணியதை செயல்வடிவமாக்கி காட்டியவர் இந்த இயேசு...

 இன்று நாம் வாழும் உலகில் ல்லதை, நீதியை பற்றி பேசும் நபர்கள் ஏராளம் ஆனால் பேசக்கூடிய வார்த்தைகளை செயல் வடிவமாக மாற்றுபவர்கள் மிகவும் குறைவு ...

இயேசு சொல்வதை விட, அறிவிப்பதை விட செயல்வடிவமாக்கிக் காட்டியவர். அவரை பின்தொடர கூடிய நாம் வெறும் வாய் வார்த்தைகளால் சமூகத்தில் வலம் வருவதை விட அவரின் வார்த்தைகளை செயல் வடிவமாக்கக் கூடிய உண்மையான சீடர்களாக இச்சமூகத்தில் உருவாக வேண்டும்... அவ்வாறு நாம் உருவாகும்போது கண்டிப்பாக கடவுள் மட்டுமல்ல கண்ணில் காணக்கூடிய ஒவ்வொரு நபர்களும் சொல்வார்கள் இவர்"இவர் நான் தேர்ந்து கொண்டவர்"   என்று ...  

இயேசுவின் உண்மையான சீடராக மாறிட... இயேசுவின் வார்த்தைகளை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயல் வடிவமாக்க கூடியவர்களாக இவ்வுலகில் வலம் வருவோம்.

இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்" 


வியாழன், 16 ஜூலை, 2020

"பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்"


"இரக்கத்தை முதன்மையாக கொண்டு கண்ணில் காணும் மனிதர்களை அன்போடும், இரக்கத்தோடும் அரவணைக்க கூடிய இயேசுவின் சீடர்களாக நாம் உரு மாறுவோம்"

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களே...

"பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்" என்ற இயேசுவின் நற்செய்தி வார்த்தைகளை மையமாக கொண்டு எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இயேசுவுடன் வாழ்ந்த சீடர்களின் செயலை குற்றம் என குற்றம்சாட்ட கூடியவர்களுக்கு இயேசு தருகின்ற பதில் மொழியை இன்றைய நற்செய்தி வாசகமாகும்...

இயேசுவின் சீடர்கள் பசியின் மிகுதியால் தங்கள் உணவுக்காக கதிர்களைக் கொய்து உண்டதை குற்றம் என குற்றம் சாட்டுகிறது ஒரு கூட்டம். ஆனால் இயேசுவோ உணவுக்காக அவர்கள் செய்தது தவறு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இதன் அடிப்படையில் சட்டம் என்பது மனிதனுக்காக... சட்டத்திற்காக அல்ல மனிதன்...  என்பதை நாம் உணர இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்கு அழைப்பு தருகின்றன...

சட்டங்கள் என்பது பொதுவாகவே மனித வாழ்க்கையை நெறிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று சட்டங்களை கையில் வைத்துக்கொண்டு மனிதநேயமற்ற முறையில் பலவிதமான அநீதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  உதாரணமாக ஜெயராஜ் அவரது மகனின் இறப்பை நாம் நினைவில் கொள்ளலாம்.

இச்சூழலில் சட்டத்திற்கு அஞ்சி வாழ்வதைவிட சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புவதும், அந்த சட்டத்தை மாற்ற அனைவரும் இணைந்து அணி திரள்வதும் அவசியமான ஒன்றாகும். இதையே இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.   

இன்று சட்டத்தால் அநீதி இழைக்கப்படும் போது அதனை எதிர்த்து குரல் எழுப்பக் கூடிய இயேசுவின் சீடர்கள் மிக குறைவு. ஆனால் இந்த இயேசுவின் சீடர்களை விமர்சனப் பார்வையோடு குற்றம்சாட்ட கூடிய கூட்டத்தினர் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர்.

தாங்களும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பாமல், குரல் எழுப்பக் கூடிய ஒரு சிலரையும் விமர்சன பார்வையோடு குற்றம்சாட்ட கூடியவர்களாக இன்றைய சமூகத்தில் பலரும் வாழ்ந்து வருகின்றனர். இதனை நாம் சரி செய்து கொள்ள இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன. 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புவது பலியை அல்ல இரக்கத்தையே ...  சட்டத்தை கையில் கொண்டு அநீதிகள் இழைக்கப்படும் பொழுது அதனை பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்போமாயின், கண்டிப்பாக நாம் கடவுளுக்கு பலியை கொடுக்கக் கூடியவர்களாக தான் இருக்கிறோம்... 
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புவது இரக்கத்தையே... அநீதி இழைக்கப்படும் பொழுது அதனை எதிர்த்து குரல் எழுப்பி, ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தை அநீதி இழைக்கப்படக்கூடிய நபர்களுக்கு தர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது...

இதை உணர்ந்து செயல்படும் பொழுது அநீதிக்கு எதிராக குரல் எழுப்பக் கூடியவர்களை நாம் விமர்சனப் பார்வையோடு குற்றம்சாட்ட கூடியவர்களாக அல்லாமல் இயேசுவைப் போல ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறமுடியும்...  

இயேசுவைப் போல "இரக்கத்தை முதன்மையாக கொண்டு கண்ணில் காணும் மனிதர்களை அன்போடும், இரக்கத்தோடும் அரவணைக்க கூடிய இயேசுவின் சீடர்களாக நாம் உரு மாறிட" இன்றைய நாளில் உறுதி ஏற்று நம் வாழ்வை இயேசுவின்  பாதையில் அமைத்துக் கொள்வோம் ...

புதன், 15 ஜூலை, 2020

"மனிதநேயத்தோடு ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தருவோம்" ஜூலை - 16


"மனிதநேயத்தோடு ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தருவோம்"

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகம்   நமக்கு உணர்த்தும் பாடமாக "நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மையமாகக்கொண்டு என் சிந்தனைகளை உங்களோடு பகிர விரும்புகிறேன். 

இயேசு இம்மண்ணில்  வாழ்ந்த போது சமூகத்தில் துன்பத்தில் வாடிய பலருக்கு இளைப்பாறுதல் தந்தார் என்பதில் துளியளவும் மாற்றுக்கருத்து இல்லை என்பதை நாம் அறிவோம் ...  

இயேசுவின் பணியை செய்ய முன்வந்துள்ள நாம் இன்று யாருக்கு இளைப்பாறுதல் தந்து கொண்டிருக்கிறோம்? என சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

இன்று நாம் வாழும் உலகில் நம்மில் பலர் எப்போதும் அடுத்தவரின் ஆறுதலை பெறுவதற்கும், அடுத்தவரின் நிழலில் இளைப்பாறுதல் அடையவும் விரும்புகிறோம்.

ஆனால் இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது இளைப்பாறுதலை தேடினார் தனக்காக அல்ல அடுத்தவருக்காக...

 சமூகத்தில் யூதர்களால் பிற இனத்தார் என ஒதுக்கி வைக்கப்பட்டும், தீண்டத்தகாதவர்கள் எனக்கூறி தொழுநோயாளர்களை ஒதுக்கிவைத்து வாழ்ந்துவந்த சமூகத்தில் அவர்களுக்கு ஆறுதலும், இளைப்பாறுதலும் தந்தவர் இயேசு. 
 இச்சமூகத்தில் உள்ள  மனிதர்கள் மனிதர்களை மதிக்க வேண்டும், அவர்களை ஒதுக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு மனிதநேய அடிப்படையில் ஒருவர் மற்றவருக்கு ஆறுதலையும், இளைப்பாறுதலையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியவர் இந்த இயேசு...
இயேசு தான் சொன்னதை தன் செயலில் காட்டினார் என்பதை விவிலியத்தில் பல சான்றுகள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். (இயேசு பலரை குணப்படுத்திய நிகழ்வுகள்)

அன்று அவர் செய்ததையும், சொன்னதையும் இன்றைய நாளில் நமக்கு நினைவூட்டும் வண்ணமாக இன்றைய நற்செய்தி  வாசகத்தின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை சரிசெய்துகொள்ள அழைக்கப்படுகிறோம்... 

இன்று நாம் வாழும் சமூகத்தில் சாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும், இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஒருவர் மற்றவரை ஒதுக்கி வாழக்கூடிய இச்சூழலில்...நாம் பார்க்க வேண்டியது மனிதத்தை என்பதை உணர்ந்தவர்களாக மனிதநேயத்தோடு ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தரக்கூடிய இயேசுவாகவும் அவரின் சீடர்களாகவும் இச்சமூகத்தில் வலம்வர இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்...

"நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்ற  இன்றைய நாளில் துணிவோடு தொடர்ந்து மனிதத்தை நேசிக்கும் மனிதர்களாக ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தரும் இயேசுவின் சீடர்களாக உரு மாறுவோம் ...

"மனிதநேயத்தோடு ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறுதல் தருவோம்"

"நம் தந்தை எல்லாவற்றையும் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்" ஜூலை - 15



 "நம் தந்தை எல்லாவற்றையும் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்"

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிக்கும் போது மனதுக்குள் மனநிறைவானது உருவானது. இன்றைய வாசகத்தில் "என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்" என்ற வார்த்தைகளை  மையமாகக்கொண்டு என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இறைவன் படைத்த இந்த அழகிய உலகில் அனைத்து விதமான உரிமைகளையும், சுதந்திரத்தையும் நமக்கு தந்திருக்கிறார் .
இயேசு இந்த சமூகத்தில் வாழ்ந்தபோது தேவையில் இருப்பவருக்கு தன்னாலான உதவிகளை செய்தார், சமூகத்தில் நிலவிய அவலங்களை எதிர்த்து குரல் எழுப்பினார், சமூகத்தில் உயர்ந்தவர்கள், கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என எண்ணியவர்களின் தவறுகளையும் சுட்டிக் காட்டினார். இயேசுவைப் போலவே  இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ உரிமையும் சுதந்திரமும் உள்ளது. ஆனால் இன்று இயேசுவை பின்பற்றி வருவேன் எனக் கூறக்கூடிய நம்மில் பலர் இயேசுவைப்போல வாழவில்லை.  காரணம் அவரைப்போல மரணத்தையும் இன்முகத்தோடு ஏற்க நம்மிடம் துணிவு சற்று குறைவாகவே உள்ளது .

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார் என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்கும் பொருந்தக்கூடியவை கடவுள் நம்மிடமும் எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார் . ஆனால் இயேசுவை பின்பற்றுகிறோம் என்று சொல்லக்கூடிய நாம் எதை செய்து கொண்டிருக்கிறோம்? நேர்மறையான நல்ல செயல்களையா? அல்லது எதிர்மறையான செயல்களையா? என சந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம் ...

இயேசுவைப் போல அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வாழ நம்மால் இயலும். ஆனாலும் அவரைப்போல் வாழவேண்டுமென மறையுரை நிகழ்த்துவதும், அவரைப்போல் வாழவேண்டும்  என்று கூறுவதும் எளிதாக உள்ளது ஆனால் வாழ்வது மிகவும் சவாலாக இருக்கிறது ...

சவாலை எதிர்கொள்ள... இயேசுவைப் போல வாழ... சிறுவயது முதலே நம் குழந்தைகளை நாம் பழக்குவதும், உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் ...  
தவறு என்றால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை  நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.... தவறு என்றால் அதை  சுட்டிக் காட்டக்கூடிய நல்ல பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நாம் இன்றைய நாளில் உறுதி ஏற்போம் ...

ஏனெனில்  நம் தந்தையாம் இறைவன்   இந்த உலகில் உள்ள   அனைத்தையும்   நம்மிடம்  ஒப்படைத்திருக்கிறார் ஒப்படைத்தவற்றை  நாம் சரியாக பயன்படுத்தாவிட்டாலும்,  நம் குழந்தைகள் நேர்வழியில் சரியாக அவற்றை பயன்படுத்த நாம் வழிகாட்டக் கூடியவர்களாக இருப்போம் ...  
புதிதாக உருவாகி வரக்கூடிய இந்த இளம் தலைமுறையினர் இயேசுவாக உருவாகவும், இயேசுவாக செயல்படவும் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டியது நம் கடமையாகும் ...

கள்ளம் கபடமற்ற குழந்தைகளுக்கு நம் வழியாக நல்லவற்றை இயேசு வெளிப்படுத்த விரும்புகிறார். அவற்றை  வெளிப்படுத்த கூடியவர்களாக உரு மாறுவோம் ...ஏனெனில் "நம் தந்தை எல்லாவற்றையும் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்"

திங்கள், 13 ஜூலை, 2020

நம்வாழ்வு இயேசுவைப்போல அடுத்தவருக்கு வாழ்வு தரவே ..." (ஜூலை -14)



"நம்வாழ்வு இயேசுவைப்போல அடுத்தவருக்கு வாழ்வு தரவே ..." 

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகனமானது இயேசுவின் கோபத்தை வெளிப்படுத்துவதாக நமக்கு தோன்றும் வகையில் அமைந்துள்ளது ...

இயேசுவால் பலவிதமான வல்ல செயல்கள் செய்யப்பட்ட நிலையிலும் அந்த  நகரங்களில் இருந்த மக்கள் மனம் மாறாத காரணத்தினால் அவர்களை சாடக்கூடிய நிகழ்வினை இன்றைய வாசகங்களாக நாம் வாசிக்கிறோம் ...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல ஊர்களை 
இயேசு  சாடுகிறார். அவற்றுள் கப்பர்நாகும் என்ற ஒரு ஊரினை மையமாகக் கொண்டு அங்கு நிகழ்ந்த அருஞ் செயல்களும், மனம் மாறாத மக்களின் போக்கும், இயேசுவின் கோபமும், அது நமக்கு நமக்கு உணர்த்தும் பாடத்தினையும் உங்களிடம் பகிர விரும்புகிறேன் ...

லூக்கா நற்செய்தியின் அடிப்படையில் இயேசுவின் சீடர்களாக இருந்த பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் மற்றும் வரி தண்டுவோரான மத்தேயு ஆகியோரின் சொந்த ஊராக இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.

 லூக்கா நற்செய்திப்படி, இயேசு கப்பர்நாகுமில் இருந்த யூத தொழுகைக்கூடத்தில் ஓய்வுநாளன்று கற்பித்தார். தொடர்ந்து, இயேசு பேய்பிடித்த ஒரு மனிதருக்கு நலமளித்தார். அதன்பின், இயேசு பேதுருவின் வீட்டுக்குச் சென்று அங்கு பேதுருவின் மாமியார் காய்ச்சலால் அவதியுற்றதைக் கண்டு, அவரைக் குணப்படுத்தினார் என்ற நிகழ்வு நிகழ்ந்தது இவ்வூரில் என்று  குறிப்பிடப்படுகின்றன.  (காண்க: லூக்கா 4:31-44).

உரோமைப் படைத்தலைவர் ஒருவர் இயேசுவை அணுகித் தம் வேலையாள் ஒருவர் முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்டதை எடுத்துக்க் கூறி, இயேசுவின் துணையை நாடுகின்றார். இயேசு அவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்று கூற, அந்நேரமே அவ்வேலையாள் குணமடைகின்றார். இந்நிகழ்வு நிகழ்ந்ததும் இவ்வூரில் தான்.

ஒருநாள் இயேசு கப்பர்நாகுமில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தபோது முடக்குவாதமுற்ற ஒருவரை அவரிடம் கொண்டுவர சிலர் முயன்றார்கள். பெருங்கூட்டமாக மக்கள் கூடியிருந்ததால் அவர்கள் வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு இயேசுவின்முன் இறக்கவேண்டியதாயிற்று. இயேசு அம்மனிதருக்குக் குணமளித்து, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறினார். இந்நிகழ்வு நிகழ்ந்ததும் இங்குதான்.  (காண்க: லூக்கா 5:17-26).


கப்பர்நாகுமில் இயேசு மக்களுக்கு அதிசயமான விதத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து உணவளித்ததும் அவர்கள் மீண்டும் அவரைத் தேடிக் குவிந்தனர். அப்போது அவர், "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் உணவுக்காகவே உழையுங்கள்...வாழ்வுதரும் உணவு நானே" என்றார். இன் நிகழ்வும் நடந்தது இந்த ஊரில்தான்.

கப்பர்நாகும் என்ற   ஊரில் இயேசு பல முறை மக்களுக்குக் கற்பித்து, பலரைக் குணமாக்கினார். இயேசுவின் பணி மையம் போல கப்பர்நாகும் விளங்கியது.  இத்தனை அருள் அடையாளங்களை அப்பகுதியில் இயேசு  செய்திருந்த நிலையிலும் அம்மக்கள் மனம் மாறாது இயேசுவின் பணிக்கு முன்பு எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறே செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் இந்நிலை கண்டு மனம் வெதும்பி அந்நகர மக்களை  இயேசு சாடுகிறார்...

இந்நிகழ்வு வழியாக இறைவன் நமக்கு தரக்கூடிய செய்தியாக இந்நாளில் நாம் காணவேண்டியது இதுவரை நம் வாழ்வில் இறைவன் செய்த நல்ல செயல்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்... 
அதேசமயம் இயேசுவினுடைய அருள் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் கண்டு அவரை நம்பி அவரை பின்தொடர கூடிய நாம் நமது வாழ்வில் நமது அருகாமையில் இருக்கக்கூடியவர்களுக்கும், தேவையில் உழல்வோருக்கும் நாம் செய்த நற்செயல்கள் என்ன ? என்ற கேள்வியை நமக்குள் எழுப்ப வேண்டும்.  இயேசுவை பின்பற்றியவர்களாகிய நம்வாழ்வு எத்தனை மனிதர்களுக்கு வாழ்வைத் தந்துள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க இன்று   நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்...  

நம்மால் இன்று வரை அடுத்தவர் வாழ்வு பெற வில்லை என்றால் இறைவன் இன்று சாடுவது நம்மை என்பதை நாம் உணர வேண்டும்...

இயேசுவின் வாழ்வு அன்று சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், சமூகத்தால் புறம்தள்ளப்பட்டவர்களுக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும், உரிமை வாழ்வை தருவதாக அமைந்தது.
இன்று அந்த இயேசுவைப் பின்பற்றி கொண்டிருக்கக்கூடிய நமது வாழ்வு யாருக்கு வாழ்வைத் தருகிறது என சிந்திப்போம். ஒருவேளை இது நாள் வரை நாம் வாழ்வு யாருக்கும் வாழ்வு அளிக்கவில்லை என நாம் எண்ணினால் நம்மை நாம் சரி செய்து கொள்ள இறைவன் தரக்கூடிய அழைப்பாக இன்றைய வாசகங்களை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்...

நம்வாழ்வு இயேசுவைப்போல அடுத்தவருக்கு வாழ்வளிப்பதற்காக என்பதை உணர்ந்தவர்களாக இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்று ஆண்டவர் இயேசுவின் பாதையில் பின் தொடர்வோம்...

"நம்வாழ்வு இயேசுவைப்போல அடுத்தவருக்கு வாழ்வு தரவே ..."

ஞாயிறு, 12 ஜூலை, 2020

"இயேசுவின் சீடர்களாக மாறுவோம், சீடர்களோடு துணை நிற்போம்..." ஜூலை - 13


"இயேசுவின் சீடர்களாக மாறுவோம் சீடர்களோடு துணை நிற்போம்..."
இன்றைய நற்செய்தி வாசகத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?

இந்தக் கேள்வி இன்றைய நற்செய்தி வாசகத்தைக் கேட்கக்கூடிய ஒவ்வொருவருக்கும், படிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இயல்பாக எழக்கூடியது... காரணம் " நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம் அமைதியை அல்ல வாளையே கொணர வந்தேன் "என்கிறார் இயேசு...

 சமூகத்தில் அநீதி நிலவும் போது அதை கண்டு அமைதியாக இருப்பது அல்ல இறைவனது விருப்பம் அதை கண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம் இதையே இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் இவ்வுலகில் செய்தார்....

அதன் விளைவாக உற்றார், உறவினர், நண்பர்கள், சீடர்கள் என அனைவரையும் இழந்து மனிதநேயமற்ற முறையில் குற்றம் ஏதும் செய்யாதிருந்தும் கொலை செய்யப்பட்டார் என்பதை நாம் அறிவோம்.

இந்த இயேசு ஏன் தன்னை விட தன் தாயையும், தந்தையையும், மனைவியையோ அன்பு செய்யக்கூடாது என கூறுகிறார் என சிந்திக்கும்போது இதனை இவ்வாறு பொருள் கொள்ளலாம் ..

இன்று அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க தடையாக இருப்பது நம் குடும்ப உறவுகளே... குடும்பத்தின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே நம்மில் பலர் கண்முன் நடக்கும் அநீதிகளை கண்டும் காணாமல் இருந்து கொண்டிருக்கிறோம். இதையே இறைவன் இன்று சாடுகிறார் ....


இந்த இயேசு இன்ற நமக்கு தரக்கூடிய செய்தி... "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்..." என்கிறார் இயேசு ...


இன்று யார் இயேசுவின் சீடர்கள் ?சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை கண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு நபரும், தேவையில் இருப்போருக்கு உதவக்கூடிய ஒவ்வொரு நபரும்  இயேசுவின் சீடர்கள் தான்.  அத்தகையோருக்கு நாம் செய்யக்கூடிய சிறு உதவி கூட இயேசுவுக்கே செய்ததாகும். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராட நாம் முன் வராவிட்டாலும் போராடக்கூடிய இயேசுவின் சீடர்களுக்கு பக்கபலமாக துணை நிற்கக் கூடியவர்களாக நாம் உருவாக வேண்டும் ...
அன்று இயேசு சமூகத்திற்காக, சமூக அவலங்களை எதிர்த்து  போராடியபோது அவருடன் யாருமில்லை,  இருந்த சிலரும்  அவரை விட்டு ஓடினார்கள்...

இன்று சமூக நீதிக்காக போராடக் கூடியவர்களுக்கு,   தேவையில் இருப்போருக்கு உதவக்கூடிய ஒவ்வொரு நபருக்கும்  பக்கபலமாக துணை நின்று 
இயேசுவின் சீடர்களாக மாறுவோம், சீடர்களோடு துணை நிற்போம்..."

இதற்கு இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்று நமது வாழ்வை சீர்படுத்திக் கொள்ள முயல்வோம்...

இயேசுவின் சீடர்களாக மாறுவோம் சீடர்களோடு துணை நிற்போம்..."

சனி, 11 ஜூலை, 2020

...விதை என்றும் உறங்காது ..." ஜீலை - 12

...விதை என்றும் உறங்காது ..."

(பொதுக்காலம் 15-ம் ஞாயிறு) 

அன்புக்குரியவர்களே இன்று விதைப்பவர் உவமை பற்றிய நற்செய்தி வாசகம் நமக்குத் தரப்பட்டுள்ளது ...

இந்த மண்ணில் வைத்து புதைக்கக் கூடிய அனைத்து பொருள்களும் ஒருநாள் மக்கிப் போகும் ஆனால் விதை மட்டுமே என்றும் உறங்காமல்  மண்ணை முட்டி கொண்டு மேலே வந்து செடியாகி மரமாகி பின் அதன் மூலம் பூக்களையும் பழங்களையும் மற்றொரு விதையையும் கொடுத்து செல்கிறது இது நாம் அனைவரும் அறிந்ததே ...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்ணிருந்தும் அவர்கள் பார்ப்பதில்லை காதுகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை என்ற வார்த்தைகள் நமது வாழ்வை திரும்பிப்பார்க்க அழைக்கின்றது ...

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பலவிதமான அநீதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன அவற்றையெல்லாம் நாம் கண்டும் காணாதவர்களா இருந்து கொண்டிருக்கிறோம் . அதுபோலவே பலவிதமான மக்களுடைய துயரக் குரல்கள் நம் செவியை நோக்கி வந்துகொண்டு தான் இருக்கின்றன ஆனால் அவற்றை எல்லாம் காதுகள் இருந்தும் நாம் கேட்காமல் இருந்து கொண்டிருக்கிறோம் ...

இந்நிலையிலிருந்து நாம் மாற்றம் பெற இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.

மண்ணுக்குள் புதைக்கப்படக்கூடிய விதை முட்டிக்கொண்டு வெளியே   வருவது போல சமூகத்தில் நிலவக்கூடிய அநீதிகளை கண்டு நாம் அவற்றுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் ..நம் காதுகளை நோக்கி வரக்கூடிய  துயரத்தில் வாடுபவர்களின் குரல்களுக்கு  நாம் செவி கொடுத்து அவர்களின் துயர் துடைக்க நம்மாலான இன்ற   உதவிகளை செய்ய வேண்டும்...

இது மிகவும் எளிதானது அல்ல அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் போது பலவிதமான இன்னல்களை நாம் சந்திக்க நேரலாம் அடுத்தவரின் துயரை துடைக்க எண்ணும் போது கண்டிப்பாக பலவிதமான சிக்கல்களை நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளக் கூடும் இருந்த போதும் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட விதையைப் போல மீண்டும் மண்ணைப் பிளந்து கொண்டு வெளிவந்து அடுத்தவரின் நலனுக்காக வாழ்வது போல நாமும் நம்முடைய செயல்பாடுகளும் அமைந்திட வேண்டும்.  அப்போதுதான் நாம் கண்ணிருந்தும் காண்பவர்களாகவும் காதுகள் இருந்தும் கேட்பவர்களாகவும் அடுத்தவருக்காக வாழ்ந்த ஆண்டவர் இயேசுவைப் போல நமது வாழ்வை அமைத்திட முடியும் ...

இயேசுவின் வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் உறுதி ஏற்றவர்களாய்  தொடர்ந்து பயணம் செய்ய உங்களை அன்போடு அழைக்கின்றேன் ...

"...விதை என்றும் உறங்காது ..."

வெள்ளி, 10 ஜூலை, 2020

ஏழைகளும் நமக்குத் தெரிந்தவர்களே (ஜூலை 11 )


"ஏழைகளும் நமக்குத் தெரிந்தவர்களே..."
அனைவருக்கும் இயேசுவின் பெயரால் இனிய வணக்கங்களும் வாழ்த்துக்களும் ...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 

"மக்களின் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவர்கரை விண்ணுலகில்  இருக்கும் என் தந்தையின் முன்னிலையில்  நானும் ஏற்றுக்கொள்வேன்..."


இவ்வார்த்தைகளின் அடிப்படையில் நாம்  யாரை ஏற்றுக்கொள்கிறோம் என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம் ...

நமது வாழ்க்கையில் நாம் பெரும்பாலும் புகழ்மிக்க உயர்ந்த மனிதர்களை நமக்கு தெரிந்தவர்களாக காட்டிக் கொள்ள விரும்புகிறோம் . ஆனால் நமக்குத் தெரிந்த ஏழைகளையும்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களையும் நமக்குத் தெரிந்தவர்களாக பலரின் முன்னிலையில் காண்பித்துக் கொள்ள தயங்குகிறோம் . 


அமைதியாக அமர்ந்து நமது வாழ்வில் இத்தகைய செயலில் நாம் ஈடுபட்டிருக்கின்றோமா? நம்மை யாரேனும் இப்படி செய்திருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்க்கும் பொழுது பல உண்மைகளை நாம் நமது வாழ்விலிருந்து உணர்ந்து கொள்ளலாம். ஒருவேளை இத்தகைய சூழலை நாம் வாழ்வில் எதிர்கொண்டு இருப்போமாயின் அப்போது நம் மனம் அடைந்த வேதனையை தான் நாம்  நமது செயலால் ஒவ்வொரு மனிதருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இது இறைவனுக்கு உகந்தது அல்ல என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன .

அன்போடு அனைவரையும் அரவணைக்க கூடியவர்களாக நாம் இந்த சமூகத்தில் உருவாகிட வேண்டும். மதிப்பு மிக்கவர்களை  நமக்கு  தெரிந்தவர்களாக காட்டிக் கொண்டு அவர்களோடு நின்று புகைப்படம் எடுக்கக் கூடிய நாம், ஏழைகளையும் அனாதைகளையும்,  சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும்  நமக்கு தெரிந்தவர்கள் என்பதை  அடுத்தவர் இடத்தில் காண்பிப்பதால் நமது மதிப்பு குறைந்துவிடும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு அவர்களோடு இணைந்து அவர்களோடு வாழ இன்றைய நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.
இதுவே இறைவன் விரும்புவதாகும். இச்செயலில் ஈடுபடும்போது இறைவனும் விண்ணுலகில் இருக்கிற நமது தந்தைக்கு முன்னால் நம்மையும் தெரிந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வார் என்ற சிந்தனையோடு இன்றைய நாளில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முயலுவோம். 

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...