சனி, 18 ஜூலை, 2020

"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகில் உருவாக்கும்"



"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகில் உருவாக்கும்"

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் ....

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் பயிர்களுக்கு இடையே விளைந்த களைகள் உவமை,  கடுகு உவமை, புளிப்பு மாவு உவமை என பல உவமைகளை இயேசு கையாளுகிறார் ...

இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது புரியாத புதிர்களை கொண்டு இவ்வுலகில் நற்செய்தி பணியாற்ற வில்லை, மாறாக எளிதாக மக்கள் பயன்படுத்த கூடிய பொருட்களை கொண்டே அவர்களுக்கு இறையாட்சியின் மகத்துவத்தை உணர்த்துகிறார்...மேலும்  
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரக்கூடிய உவமைகளுக்கான விளக்கத்தினை இயேசுவே உணர்த்துகிறார்.

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகிலும் எளிய பொருட்களை கொண்டு நமது வாழ்க்கைக்கான பாடத்தை நாம் கற்கவும் கற்பிக்கவும் இன்றைய வாசகம் நமக்கு உணர்த்துகின்றன...

"இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை" என்கிறது இறை வார்த்தை ... 
வயலில் விழுந்த களைகள் என்பதோ,கடுகு என்பதோ, புளிப்பு மாவு என்பதோ மிகவும் சிறியதுதான். ஆனால் அவைகள் விளைவிக்கக்கூடிய மாற்றம் மிகப்பெரியதாகும் ...

உவமைகளில் பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இந்த உலகில் தனி மனிதராக நாம் மிகவும் சிறியவர்கள் தான் ஆனால் நாம் செய்யக்கூடிய சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகில் உருவாக்குகிறது ...


இன்று நாம் வாழக்கூடிய உலகில் மிகப்பெரிய அரிய காரியங்களை எல்லாம் செய்து இவ்வுலகில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என பலர் முயன்றனர். ஆனால் சிறு சிறு செயல்களில் கவனம் செலுத்தக்கூடிய பலர் மக்கள் அனைவரும் அறியாதவராக இருந்தாலும், பல நல்ல உள்ளங்களால் அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

 உதாரணமாக: இன்று தங்களுடைய  குடும்பங்களில் நடக்கக்கூடிய இன்ப துன்ப நாட்களில் அந்த இன்ப துன்பத்தை அடுத்தவர்  மகிழ்வில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் செல்லக்கூடிய ஒவ்வொருவரையும் நாம் நினைவில் கொள்ளலாம் ...

சிறிய செயல் தான் ஆனால் பல உள்ளங்களில் அது நிறைவையும், மிகப் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்குகிறது. இயேசு பயன்படுத்திய உவமைகள் அனைத்தும் மிகவும் பெரியவை அல்ல, மிகவும் சாதாரன அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்பிக்க முயற்சித்தார், அதில் வெற்றியும் கண்டார். நாமும் பெரிய பெரிய காரியங்களை பேசுவதைவிட மிகச் சிறிய காரியங்களில் முழுமனதோடு கவனம் செலுத்தி செயல்படுவோம். 

இந்த உலகில் நாம் தனி மனிதர்கள் தான் இருந்தாலும் சிறு செயல்களால் நம்மால் பல நல்ல உள்ளங்களை இயேசுவைப் போல தொட முடியும் என்பதை உணர்ந்தவர்களாக சிறு செயலாக இருந்தாலும் மனநிறைவோடு நல்ல செயல் செய்ய, நல்ல வார்த்தைகளை வழங்க இன்றைய நாளில் உறுதி ஏற்றவர்களாய் இயேசுவின் உண்மை சீடர்களாக அவரின் பாதையில் பயணிப்போம் ...

"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகில் உருவாக்கும்"


1 கருத்து:

  1. இயேசுவின் சிறிய கண்மணிகளாக இவ்வுலகில் வலம் வருவோம்! பலன் கொடுப்போம்! வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்வோம்! இன்றைய கருத்துக்கள் மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...