"அன்பே விலைமதிப்பில்லாத சொத்து.... அச்சொத்தால் மனிதர்களை நம்முடையவராக்குவோம்"
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பலவகையான உவமைகள் வழியாக இறையரசை பற்றி தன்னைச்சுற்றி உள்ளவர்களுக்கு விளக்கிக் கூறுகிறார் ..
நிலத்தில் மறைந்திருக்கக் கூடிய புதையல் உவமை, முத்து உவமை, வலை உவமை என பலவற்றை இயேசு கூறுகிறார் ..இந்த உவமைகளில் இடம்பெறக்கூடிய விலை உயர்ந்ததை தம்முடைய தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னிடம் உள்ளதை எல்லாம் விற்று அதை அடைய விரும்பும் மனிதர்களை இறையரசுக்கு ஒப்பானவர்கள் என இயேசு கூறுகிறார் ...
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் அனைவருமே விலை உயர்ந்த மதிப்பு மிக்க ஒன்றை நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும, நம்முடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறோம் ..ஆனால் உண்மையில் விலை உயர்ந்தது எது? என்பதைப் பற்றி சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன ..
இம் மண்ணிலிருந்து இறந்து போகும் போது நாம் விலை உயர்ந்தது என இம்மண்ணுலகில் எண்ணக்கூடிய எதையும் நம்மோடு எடுத்துச் செல்ல இயலாது.
அப்படியிருக்கையில் இந்த மண்ணில் வாழக்கூடிய நாம் இம்மண்ணில் வாழும் பொழுது விலையுயர்ந்த பொருட்களாக உயிரற்ற பொருட்களை நம்புவதைவிட, உயிருள்ள ஒவ்வொரு மனிதர்களும் தான் விலை மதிப்பில்லாத சொத்துக்கள் என்பதை உணர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரையும் அன்பு செய்யக் கூடிய, ஒவ்வொரு மனிதனாலும் நாம் அன்பு செய்யப்படக்கூடிய மனிதர்களாக வாழ வேண்டும். அவ்வாறு வாழும் போதுதான் நாம் விலை உயர்ந்த முத்துக்கு ஒப்பானவர்களாகவும், நிலத்தில் மறைந்திருக்கக் கூடிய புதையலுக்கு சமமானவர்களாகவும் இருக்க முடியும்.
கடலில் வீசப்பட்ட வலை மீன்களை வாரி வருவது போல அன்பு என்ற வலையால் நாம் அனைத்து மனிதர்களையும் ஈர்க்கக்கூடியவர்களாக இச்சமூகத்தில் வாழ வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நமது சொல்லும், செயலும் உண்மையாக அமைந்திட வேண்டும்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இம்மண்ணில் வாழ்ந்த போது அன்பு என்னும் வலையால் அனைத்து மனிதர்களையும் கவர்ந்தார், இன்றும் கவர்ந்து கொண்டு தான் இருக்கிறார். அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள் என்பதற்கிணங்க அன்பால் இந்த அகிலத்தில் வாழும் மனிதர்களை அன்பு செய்து வாழ முயல்வோம்.
அன்பே விலைமதிப்பில்லாத சொத்து
இந்த அன்பை மனிதர்களிடத்தில் காண்பித்து, நல்ல மனிதர்களை நம்முடையவர்களாக்கிக் கொள்ள ஆண்டவர் இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றக் கூடியவர்களாக ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வோம்...
"அன்பே விலைமதிப்பில்லாத சொத்து.... அச்சொத்தால் மனிதர்களை நம்முடையவராக்குவோம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக