புதன், 22 ஜூலை, 2020

எண்ணமே வாழ்வாக.... ஜூலை - 23

"எண்ணமே வாழ்வாக..."

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் இடம் பெறக்கூடிய "உள்ளவருக்கு கொடுக்கப்படும் அவர் நிறைவாகப் பெறுவார் இல்லாதவரிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும்" ..என்ற நற்செய்தி வாசகத்தின்  அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 


"உள்ளவருக்கு கொடுக்கப்படும் என்பது..."  ஒரு மனிதனிடம் என்ன எண்ணங்கள் இருக்கிறதோ அதுவே அவனது வாழ்க்கையை நகர்த்திச் செல்ல கூடியதாக அமைகிறது ...

ஒரு மனிதன்    அன்பு கொண்டவனாக இருப்பானாகில் அவனுக்கு அன்பு வழங்கப்படுகிறது. கண்ணில் காணும் நபர்களிடத்தில் அன்பு காட்ட கூடியவனாகவும், நீதி வழங்கக் கூடியவராகவும், உண்மையை பேச கூடியவனாகவும் இருக்கும்போது அவனைச் சுற்றிலும் இருப்பவர்களும் அவனுக்கு அன்பையும், நீதியையும், உண்மையையும் கூறக் கூடியவர்களாக இருப்பார்கள்...

ஆனால் நாம் சற்று மாறாக அன்பு காட்டாமலும், நீதி வழங்காமலும், உண்மையை பேசாமலும் இருக்கும்பொழுது நம்மைச் சுற்றி இருக்கக் கூடியவர்கள் நம்மைப்பற்றி அறிந்தவர்களாக இருப்பதனால் நம்மிடத்தில் உண்மையையும், நீதியையும், அன்பையும் வெளிக்காட்ட மாட்டார்கள் .

ஒரு சில வேளைகளில் இரக்கத்தின் அடிப்படையில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நம் மீது சிலர் அன்பையும், நீதியையும், உண்மையையும் காட்டக் கூடியவர்களாக இருக்கக்கூடும். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய எண்ணங்களை பொறுத்தே நமது வாழ்க்கை அமைகிறது. 
நமது எண்ணங்கள் நேர்மறையாக அமையும் போது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நேர்மையாக இருக்கும். எனவே நாம் நிறைவுபெற கூடியவர்களாக இருப்போம்.  ஒருவேளை நம் எண்ணங்கள் எதிர்மறையாக அநீதியும், தீமையும் நம்மிடத்தில் இருக்குமாயின் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நமக்கு அதையே வழங்குவது போல இருக்கும்.

"உள்ளவருக்கு கொடுக்கப்படும்..." என்பதை நாம் நம்மிடம் என்ன உள்ளது? என்பதை சிந்தித்துப் பார்ப்போம்...அன்பு, நீதி, உண்மை நம்மிடத்தில் இருக்குமாயின் அது நமக்கும் கொடுக்கப்படும் ...
"இல்லாதவரிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும்..." என்பதை நம்மிடத்தில் அன்பு, நீதி, உண்மை போன்றவை இல்லை என்றால், அதை நமக்கு சில நேரங்களில் இரக்கத்தின் அடிப்படையில் காட்டக் கூடியவர்கள் கூட காட்டாமல் சென்று விடுவார்கள் என பொருள் கொள்ளலாம் ...

நமது வாழ்க்கையில் நாம் எத்தகைய குணநலன்களையும்,எண்ணங்களையும் கொண்டிருக்கிறோம் என சிந்திக்க இன்றைய நாளில் உங்களை அழைக்கிறேன். நேர்மறையான நல்லெண்ணங்களை கொண்டிருந்தால் நமது வாழ்க்கை நலமானதாக  இருக்கும்.நாமும் நிறைவு பெற முடியும் ...

மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் நிறைவு பெற வேண்டுமாயின் அவர்களின் எண்ணம்,  சொல், செயல் அனைத்தும் சிறந்ததாக அமைய வேண்டும். அப்போது உள்ளவருக்கு கொடுக்கப்படும் .
இவை நம்மிடம் இல்லை என்றால் இல்லாதவரிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்பதை மனதில் இருத்தியவர்களாய் ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய நாம் அவரை போல நல்ல எண்ணமும், சொல்லும், செயலும் கொண்டவர்களாக மாற இன்றைய நாளில் உறுதி ஏற்று பயணிப்போம்.

"நம்முடைய எண்ணங்களை பொறுத்தே நமது வாழ்க்கை அமைகிறது..." 



1 கருத்து:

  1. என்னையே தருகின்றேன் எல்லாம் தருகின்றேன் என்று இறைவனுக்கு நம்மை அர்ப்பணிக்க விரும்பும் நாம் நமது தூய்மையான எண்ணங்களின் வழியாக நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம்! 👍👍👍

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...