திங்கள், 27 ஜூலை, 2020

கதிரவனைப் போல் ஒளி வீசுட..."


கதிரவனைப் போல் ஒளி வீசுட..." 

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் இடம்பெறக்கூடிய "நேர்மையாளர்கள் தன் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவார்கள்..." என்ற வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது நேர்மையாளராக வாழ்ந்தார். நேரியவற்றையே செய்துவந்தார்.
அதன் விளைவு குற்றம் ஏதும் செய்யாதவர் குற்றவாளியாக தேடப்பட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் அறையப்பட்டு தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த இயேசுவைப் போலவே உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதர்களும் வாழ வேண்டும் என விரும்புகிறோம் ஆனால் இயேசுவுக்கு நடந்த கொடுமைகளும் வேதனைகளும் துன்பகரமான மரணமும் நமக்கும் வாய்த்த விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக நம்மில் பலர் நேர்மை தவறி நடக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.

ஆனால் இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள தயாராக இருக்கக் கூடிய பல பத்திரிக்கையாளர்கள் பல சமூகப் போராளிகள் நேர்மையாக நடந்து  நேர்மையை தன் சொல்லிலும் செயலிலும் காட்டியுள்ளனர்.

உதாரணமாக கலெக்டர் சகாயம் அவர்களை கூறலாம்.
நீதி வழுவாது தீர்ப்பளித்த மைக்கேல் டி குன்கா அவர்களை குறிப்பிடலாம்.
உண்மையை பேசுவதாலும் எழுதுவதாலும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் அவர்களை குறிப்பிடலாம்.
 இவர்களைப் போல இன்னும் ஏராளமானோர் இன்றும் நேர்மையாக நேர்மையின் வழியில் செயல்படுகின்றனர் அதன் விளைவாக அவர்கள் சந்திக்கும் துன்பங்கள் எண்ணிலடங்கா இருந்த போதும் மனம் தளராது இயேசுவைப் போலவே அப் பணியை செய்து வருகின்றனர். இவர்களைப் போல இவர்களோடு நாமும் நேர்மை தவறாது சொல்லிலும் செயலிலும்  நடக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

ஆனால் தன் குடும்பம் தன் உறவினர்கள்  என்ற அச்ச உணர்வு காரணமாக இன்று நேர்மையாய் நடந்துகொள்ளாமல் நேர்மை தவறக்  கூடியவர்களாக நாம் நாளுக்கு நாள் மாறி வருகிறோம்.இந்நிலையில் இருந்து மாற்றம் பெற்று ஒவ்வொரு நாளும் நேர்மையாக நேர்மை தனத்தோடு இச்சமூகத்தில் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

"தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று -  பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் 
கூற்றுக் கிரையானப்பின் மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போல - நான் 
வீழ்வே னென்று நினைத்தாயோ ?..." என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப இதுநாள்வரை நாம் இருந்த நிலைதனை மாற்றி இனிவரும் காலங்களில் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக அவரைப் போல நேர்மையாகச் செயல்பட நமது சொல்லிலும் செயலிலும் நேர்மை தனத்தோடு வாழ புதிய மனிதர்களாக அவரை பின் தொடர்வோம். அப்போது நாம் "நேர்மையாளர்கள் தன் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவார்கள்..."  என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பல நல்ல உள்ளங்கள் நேர்மையை பின்பற்றவும் நேர்மையோடும் செயல்படவும் கதிரவனைப் போல ஒளி வீச கூடியவர்களாக நாம் திகழ்வோம். 


"கதிரவனைப் போல் ஒளி வீசி..."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...