"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்..."
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கடுகு மற்றும் புளிப்பு மாவு உவமைகளை குறிப்பிடுகிறார்...இந்த கடுகு என்பதும், புளிப்பு மாவு என்பதும் அளவில் சிறியது தான். ஆனால் அவை மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன.
உதாரணமாக: சிறிய கடுகு விதை மிகப் பெரிய மரமாக மாறி பல பறவைகள் வந்து அமருவதற்குரிய இடமாக மாறுகிறது. அதுபோலவே, சிறிதளவு புளிப்பு மாவு பாத்திரத்தில் உள்ள அனைத்து மாவையும் புளிப்பேரச் செய்கிறது.
இந்தக் கடுகு விதையையும், புளிப்பு மாவையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். நாம் பல நேரங்களில் நல்ல செயல்களை செய்ய வேண்டும் என முயலும் போதும், நம்மால் இயன்ற சிறிய உதவிகளை அடுத்தவருக்கு செய்ய வேண்டும் என எண்ணும் போதும், நம்மில் பலர் கூறக் கூடியது என்னால் இயலவில்லை. என்னிடத்தில் பெரிதளவு பணம் இல்லை, என்னிடத்தில் போதுமான வசதி இல்லை. எனவே என்னால் நற்செயல் செய்ய இயலவில்லை, என்னால் அடுத்தவருக்கு உதவும் முடியவில்லை எனக் கூறுகிறோம்.
ஆனால் உண்மையில் நல்ல செயல் செய்வதற்கும், பிறருக்கு உதவுவதற்கும் பெரிதளவு பணம் படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய கடுகை போல இச்சமூகத்தில் நாம் செய்யக்கூடிய சிறு உதவி பலருக்கு மிகவும் பயனுள்ளதாக மாறுகிறது. சிறிதளவு புளிப்பு மாவு எப்படி ஒரு பாத்திரத்தில் உள்ள அனைத்து மாவையும் புளிப்பேற்றுகிறதே, அதுபோல நாம் செய்யக்கூடிய சிறு செயல் மிகப்பெரிய மாற்றத்தை இச்சமூகத்தில் உருவாக்குகிறது...
எனவே நற்செயல் செய்வதற்கும், நம்மாலான சிறிய உதவிகளை அடுத்தவருக்கு செய்வதற்கும், நம்மிடம் பெரிதளவு வசதி வாய்ப்புகள் இல்லை என எண்ணுவதை விட, நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்கு பகிரும் பொழுது நாம் செய்யக்கூடிய சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன ....
ஆண்டவர் இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றக்கூடிய நாம், மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க விட்டாலும், மிகச்சிறிய செயல்கள் மூலம் பல உள்ளங்களை ஆண்டவர் இயேசுவிடம் திருப்புவதற்கு நல்ல மனித நேயம் மிக்க மனிதர்களாக இச்சமூகத்தில் வலம்வர கடுகு மற்றும் புளிப்பு மாவு உவமையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு பயணிப்போம்....
"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்..."
தனது சிறிய வழியில் இயேசுவை அன்பு செய்த புனித குழந்தை தெரசாள் போல நாமும் நமது சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் சிறிய எண்ணங்களில் இயேசுவை அன்பு செய்வோம்! அவரது அன்பை வெளிப்படுத்துவோம்.!
பதிலளிநீக்கு