பகுதி: 9
மனிதரின் நிறைவு நிலை
இறப்புடன் மனித வாழ்வு முடிவு அடைவதில்லை ; வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கப்படுவதில்லை என்பதே நமது நம்பிக்கை. அதைப் பற்றிக் கிறிஸ்தவப் போதனையின் அடிப்படையில் திரு அவை சில உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது.117. கிறிஸ்தவர் இறப்பை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
இறப்பு விண்ணக வாழ்வின் பிறப்பு, ஆகவே இறப்பின் மீது வெற்றி கொண்ட நம் மீட்பராகிய கிறிஸ்துவை, முழுமையாகச் சந்திக்கும் வேளை என்னும் மனநிலையோடு, கிறிஸ்தவர் இறப்பை எதிர்கொள்ள வேண்டும்.
118. இறப்புக்குப் பின் என்ன நடக்கும்?
தனித் தீர்ப்பு நடக்கும்.
119. தனித் தீர்ப்பு என்றால் என்ன?
ஒவ்வொருவரும் அவரவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்பத் தீர்ப்பிடப்படுவதையே தனித் தீர்ப்பு என்கிறோம்.
120. தனித் தீர்ப்புக்குப் பின் என்ன நடக்கும்?
1. எவ்விதப் பாவமும் இல்லாதவர்கள் விண்ணகம் செல்வார்கள்.
2. சாவான பாவம் உள்ளவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள்.
3. அற்ப பாவம் உள்ளவர்கள் தூய்மை பெறும் நிலைக்குச் செல்வார்கள்.
121. நல்லவர்கள் விண்ணகத்தில் அடையும் பேறு என்ன?
கடவளை நேருக்கு நேராகக் கண்டு, முடிவில்லாப் பெரு மகிழ்வில் திளைத்து அவரோடு என்றென்றும் வாழ்வார்கள்.
122. பாவிகள் நரகத்தில் படுகிற வேதனை என்ன?
கடவுளை ஒருபொழுதும் காணாமல், அவரைப் பிரிந்து, அலகையோடு முடிவில்லாத் துன்பத்திற்கு உள்ளாவர்.
123. தூய்மை பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கும்?
அவர்கள் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள். முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள்.
124. உலக முடிவில் என்ன நடக்கும்?
பொதுத் தீர்ப்பு நடக்கும்.
125. பொதுத் தீர்ப்பு என்றால் என்ன?
1. உலக முடிவில் இயேசு கிறிஸ்து மாட்சியோடு மீண்டும் வருவார்.
2. இறந்த எல்லாரும் உடலோடும் ஆன்மாவோடும் உயிர்ப்பிக்கப் பெறுவர்.
3. இவர்கள் உயிருடன் உள்ளவர்களோடு தீர்ப்புக்கு வருவர்.
126. பொதுத் தீர்ப்புக்குப் பின் நடப்பது என்ன?
நல்லவர்கள் நிலை வாழ்வையும், பாவிகள் நிலையான தண்டனையும் பெறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக