செவ்வாய், 28 ஜூலை, 2020

எதைத் தேடி செல்கிறோம்...?

எதைத் தேடி செல்கிறோம்...?


அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"வணிகர் ஒருவர் நல்முத்துக்கள் தேடிச் செல்கிறார்..." என்று இயேசு கூறக்கூடிய முத்து உவமையின் அடிப்படையில் நாம் எதைத் தேடி செல்ல வேண்டும்? என்று  சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

அனுதினமும் பலவிதமான தேடல்களுடன் நகர்ந்து கொண்டிருக்க கூடிய நாம் உண்மையில் எதை தேடிச் செல்கிறோம்? என்ற கேள்வியை இன்று நமக்குள் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.

இன்று நாம் வாழக்கூடிய உலகில் பலரும் பலவற்றை தேடிச் செல்கிறோம். சிலர் அன்பை தேடி செல்கின்றனர், சிலர் பணத்தை தேடி செல்கின்றனர், சிலர் நல்ல மனிதர்களை தேடிச் செல்கின்றனர், இன்னும் சிலர் எதை தேடி செல்கிறோம் என்பது கூட தெரியாமல் தேடிக் கொண்டே இருக்கின்றனர். 

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்... என்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு  ஏற்ப ஏதோ ஒரு தேடல் நம் வாழ்வை நகர்த்துகிறது என்பது மட்டும் உண்மை. அத்தேடல் பணமாகவோ, பொருளாகவோ, உறவாகவோ என ஒவ்வொருவரை பொருத்தும் அது அமைகிறது. மொத்தத்தில் வாழ்க்கையில் தேடல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.


நிலத்தில் புதையலை கண்ட ஒருவன் தன்னிடம் இருந்த அனைத்தையும் விற்று அந்த புதையலை தனதாக்கிக் கொள்ள முயன்றான். அதுபோலவே நல்ல முத்தை தேடிச்சென்ற ஒருவன் நல்ல முத்தை கண்டதும் தன்னிடமிருந்த எல்லாம் விற்று, அந்த முத்தை தனதாக்கிக் கொள்ள முயன்றான். அதுபோலவே நம்மிடமுள்ள அனைத்தையும் இழந்து இறையரசை தமதாக்கிக் கொள்ள வேண்டுமென  இயேசு கூறுகிறார்.

இன்று  நாம் தேடக் கூடியது  எதுவாக இருந்தாலும், அது அனைவருக்கும்   நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும்.  அகிலத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை தரக்கூடியதையே நாம் நாடித் தேடி செல்ல வேண்டும். அதை அடைவதற்காக நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் நாம் இழக்க தயாராக இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடியவற்றை வெளி உலகில் தேடுவதை விட நமக்குள் நாம் தேடவேண்டும்.  நமக்குள் புதைந்து கிடைக்கக்கூடிய மனிதநேயத்தை நாம் இன்று தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

சமீபத்தில் படித்த சில வரிகள் 
"தன் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த இனத்தைச் சார்ந்த எல்லா உயிர்களும் அதற்காகப் போராடுகின்றன, ஆனால் மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றன ..."

இவ்வரிகள் முழுமையாக உண்மையாக இல்லாது இருக்கலாம். ஆனால் இன்று நாம் வாழக்கூடிய உலகில் இந்த மனநிலையோடு மனிதர்கள்  நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சகமனிதனின் துன்பத்தையும் நமது துன்பமாக எண்ணி செயல்படும்போது மட்டுமே இச்சமூகத்தில் மனிதம் மலர முடியும். அதற்கு அவசியமானது மனிதநேயம்.

மனித நேயம் என்பது தேடி கண்டுபிடிக்க முடியாத ஒன்று அல்ல.  நாம் துன்புறும் போது நமக்கு உதவ ஒருவர் வரமாட்டாரா? என்று ஏங்கக்கூடிய நமக்குள் அடுத்தவர்களும் அப்படித்தானே ஏங்குவார்கள் என்பதை புரிந்துகொண்டு செயல்படும் பொழுது மனித நேயம் வெளிப்படும்.

நமக்குள் மறைந்திருக்கக் கூடிய மனிதநேயத்தை தேடி கண்டு உணர்வோம். அதை அடைவதற்காக நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் இழக்கத் தயாராவோம்.
நமக்காக இன்னுயிரையும் இழந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உண்மை சீடர்களாக அவரைப்போலவே நம்மிடம் இருப்பதை எல்லாம் இழந்து மனிதநேயத்தை நமதாக்கிக்கொண்டு அடுத்தவரின் துயரையும் நம் துயர் எனக்கருதி, அடுத்தவர் துயர் துடைக்க ஆண்டவர் இயேசுவின் வழியில் துணை நிற்போம் ...

"மனிதநேயத்தை தேடியவர்களாய்..."

1 கருத்து:

  1. நமது தேடல் என்பது, அற்பமான ஒன்றாக இல்லாமல், அதி உன்னதமான மனித நேயமாக அமைந்திட அழைப்பு விடுக்கும் தம்பி சகாயராஜ் அவர்களுக்கு சிறப்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...