அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
"இறைவாக்கினர்கள் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை..." என்பதை இயேசு இன்று நற்செய்தி வாசகங்கள் வழியாக குறிப்பிடுகிறார்.
அன்று இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது அவர் நிகழ்த்திய அருஞ்செயல்களைக் கண்டு, அவருடைய ஞானத்தைக் கண்டு, அவருடைய சொல்லையும், செயலையும் கண்டு பல உள்ளங்கள் அவரால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் அவரது சொந்த ஊரை சார்ந்தவர்கள் இவர் யாரென்று நமக்குத் தெரியாதா? இவருடைய தந்தை யோசேப்பு தானே... இவர்தாய் மரியா தானே... இவருடைய சகோதரர்கள் எல்லாம் நமக்குத் தெரிந்தவர்கள் தானே .... என்றெல்லாம் கூறி அவரை தங்களை விட உயர்ந்தவராகவும், ஞானமிக்கவனாகவும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
இயேசுவுடைய சொல்லும், செயலும் பல உள்ளங்களுக்கு ஆறுதல் தந்த போதும், அவரது சொல்லையும், செயலையும் கண்டு தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அவரது அருகிலிருந்தவர்கள் அதாவது அவரது ஊரார் முன் வரவில்லை ...
இயேசுவுக்கு நிகழ்ந்த இந்த ஒரு நிகழ்வு நமது வாழ்க்கையிலும் பல விதமான நிகழ்வுகள் வழியாக நாளுக்குநாள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
நம்முடைய குடும்பங்களில் நமது குழந்தைகள் மிகவும் சிறந்து விளங்குவார்கள் ஆனால் அவர்களை காட்டிலும் மற்றவர்களை நாம் பெரிதாக பேசுவோம். நமது குடும்பத்தில் உள்ள நமது உறவினர்களுடைய செயல்பாடுகளையோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் நல்ல செயல்களையோ நாம் பாராட்ட தவறுகிறோம். ஆனால் நாம் முன்பின் அறியாதவர்களுடைய செயல்பாடுகளை வெகுவாக பாராட்டுகிறோம்.
எதுவும் எளிதில் கிடைக்கும் பொழுது அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. அதுபோலவே எளிதில் நம் அருகில் இருப்பவர்களை நாம் எப்போதும் கண்டுகொள்வதில்லை, எப்போது நாம் அவர்களை விட்டுப் தூரத்தில் இருக்கிறோமோ அப்போதுதான் அவர்களைப்பற்றிய மகத்துவம் நமக்குப் புரிகிறது.
வாழ்க்கையில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்படும் பொழுது அவனை எனக்குத் தெரிந்தவன் எனக் கூறிக்கொள்வதில் அனைவரும் தயக்கம் காட்டுகின்றனர். அதே மனிதன் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியையும், உச்சத்தையும் அடையும் பொழுது, இவர் எனக்கு தெரிந்தவர்... எங்கள் ஊரைச் சார்ந்தவர்... என் அண்டை வீட்டார்... என்றெல்லாம் கூறி பெருமையைத் தேடிக் கொள்கிறோம். இந்நிலையிலிருந்து நாம் மாற்றம் பெறவே இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கின்றார் ...
இன்று கொரனோ தொற்றுநோய் காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருக்கக்கூடிய நாம் நமது குடும்பத்தில் உள்ளவர்களின் திறமைகளையும், உணர்வுகளையும், அவர்களுடைய தனித்துவத்தையும் புரிந்து கொள்ள முயல்வோம். அவைகளை எண்ணிப் பெருமை படுவோம், அவர்களை பாராட்டுவோம், ஊக்கமூட்டுவோம்.
"இறைவாக்கினர்கள் சொந்த ஊர் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை..." என்ற இயேசுவின் வார்த்தைகளில் இருக்கக்கூடிய உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, இன்றைய நாளில் அதனை சரிசெய்து கொண்டு, " அருகாமையில் இருப்பவர்களை அன்பு செய்யக்கூடிய... பாராட்டக்கூடிய... மதிக்கக்கூடிய... நல்ல நபர்களாக..."
ஆண்டவர் இயேசுவை பின் தொடரக் கூடிய இயேசுவின் சீடராக அவரை பின் தொடர்வோம்.
"நம் அருகிலேயே இருப்பவர்களின் அருமையை உணர்ந்தவர்களாக..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக