"இரக்கத்தை முதன்மையாக கொண்டு கண்ணில் காணும் மனிதர்களை அன்போடும், இரக்கத்தோடும் அரவணைக்க கூடிய இயேசுவின் சீடர்களாக நாம் உரு மாறுவோம்"
இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களே...
"பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்" என்ற இயேசுவின் நற்செய்தி வார்த்தைகளை மையமாக கொண்டு எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இயேசுவுடன் வாழ்ந்த சீடர்களின் செயலை குற்றம் என குற்றம்சாட்ட கூடியவர்களுக்கு இயேசு தருகின்ற பதில் மொழியை இன்றைய நற்செய்தி வாசகமாகும்...
இயேசுவின் சீடர்கள் பசியின் மிகுதியால் தங்கள் உணவுக்காக கதிர்களைக் கொய்து உண்டதை குற்றம் என குற்றம் சாட்டுகிறது ஒரு கூட்டம். ஆனால் இயேசுவோ உணவுக்காக அவர்கள் செய்தது தவறு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இதன் அடிப்படையில் சட்டம் என்பது மனிதனுக்காக... சட்டத்திற்காக அல்ல மனிதன்... என்பதை நாம் உணர இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்கு அழைப்பு தருகின்றன...
சட்டங்கள் என்பது பொதுவாகவே மனித வாழ்க்கையை நெறிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று சட்டங்களை கையில் வைத்துக்கொண்டு மனிதநேயமற்ற முறையில் பலவிதமான அநீதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஜெயராஜ் அவரது மகனின் இறப்பை நாம் நினைவில் கொள்ளலாம்.
இச்சூழலில் சட்டத்திற்கு அஞ்சி வாழ்வதைவிட சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புவதும், அந்த சட்டத்தை மாற்ற அனைவரும் இணைந்து அணி திரள்வதும் அவசியமான ஒன்றாகும். இதையே இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இன்று சட்டத்தால் அநீதி இழைக்கப்படும் போது அதனை எதிர்த்து குரல் எழுப்பக் கூடிய இயேசுவின் சீடர்கள் மிக குறைவு. ஆனால் இந்த இயேசுவின் சீடர்களை விமர்சனப் பார்வையோடு குற்றம்சாட்ட கூடிய கூட்டத்தினர் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர்.
தாங்களும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பாமல், குரல் எழுப்பக் கூடிய ஒரு சிலரையும் விமர்சன பார்வையோடு குற்றம்சாட்ட கூடியவர்களாக இன்றைய சமூகத்தில் பலரும் வாழ்ந்து வருகின்றனர். இதனை நாம் சரி செய்து கொள்ள இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புவது பலியை அல்ல இரக்கத்தையே ... சட்டத்தை கையில் கொண்டு அநீதிகள் இழைக்கப்படும் பொழுது அதனை பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்போமாயின், கண்டிப்பாக நாம் கடவுளுக்கு பலியை கொடுக்கக் கூடியவர்களாக தான் இருக்கிறோம்...
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புவது இரக்கத்தையே... அநீதி இழைக்கப்படும் பொழுது அதனை எதிர்த்து குரல் எழுப்பி, ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தை அநீதி இழைக்கப்படக்கூடிய நபர்களுக்கு தர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது...
இதை உணர்ந்து செயல்படும் பொழுது அநீதிக்கு எதிராக குரல் எழுப்பக் கூடியவர்களை நாம் விமர்சனப் பார்வையோடு குற்றம்சாட்ட கூடியவர்களாக அல்லாமல் இயேசுவைப் போல ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறமுடியும்...
இயேசுவைப் போல "இரக்கத்தை முதன்மையாக கொண்டு கண்ணில் காணும் மனிதர்களை அன்போடும், இரக்கத்தோடும் அரவணைக்க கூடிய இயேசுவின் சீடர்களாக நாம் உரு மாறிட" இன்றைய நாளில் உறுதி ஏற்று நம் வாழ்வை இயேசுவின் பாதையில் அமைத்துக் கொள்வோம் ...
"இரக்கத்தை முதன்மையாகக் கொண்டு"- இந்த வார்த்தைகள் எல்லோரின் இதயத்திலும் இருந்தால் இந்த உலகம் இனிமையாய் இருக்கும். இயேசுவோடு இணைந்து இரக்கத்தை பிறருக்கு கொடுப்போம்!
பதிலளிநீக்கு