"நம்வாழ்வு இயேசுவைப்போல அடுத்தவருக்கு வாழ்வு தரவே ..."
அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகனமானது இயேசுவின் கோபத்தை வெளிப்படுத்துவதாக நமக்கு தோன்றும் வகையில் அமைந்துள்ளது ...
இயேசுவால் பலவிதமான வல்ல செயல்கள் செய்யப்பட்ட நிலையிலும் அந்த நகரங்களில் இருந்த மக்கள் மனம் மாறாத காரணத்தினால் அவர்களை சாடக்கூடிய நிகழ்வினை இன்றைய வாசகங்களாக நாம் வாசிக்கிறோம் ...
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல ஊர்களை
இயேசு சாடுகிறார். அவற்றுள் கப்பர்நாகும் என்ற ஒரு ஊரினை மையமாகக் கொண்டு அங்கு நிகழ்ந்த அருஞ் செயல்களும், மனம் மாறாத மக்களின் போக்கும், இயேசுவின் கோபமும், அது நமக்கு நமக்கு உணர்த்தும் பாடத்தினையும் உங்களிடம் பகிர விரும்புகிறேன் ...
லூக்கா நற்செய்தியின் அடிப்படையில் இயேசுவின் சீடர்களாக இருந்த பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் மற்றும் வரி தண்டுவோரான மத்தேயு ஆகியோரின் சொந்த ஊராக இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.
லூக்கா நற்செய்திப்படி, இயேசு கப்பர்நாகுமில் இருந்த யூத தொழுகைக்கூடத்தில் ஓய்வுநாளன்று கற்பித்தார். தொடர்ந்து, இயேசு பேய்பிடித்த ஒரு மனிதருக்கு நலமளித்தார். அதன்பின், இயேசு பேதுருவின் வீட்டுக்குச் சென்று அங்கு பேதுருவின் மாமியார் காய்ச்சலால் அவதியுற்றதைக் கண்டு, அவரைக் குணப்படுத்தினார் என்ற நிகழ்வு நிகழ்ந்தது இவ்வூரில் என்று குறிப்பிடப்படுகின்றன. (காண்க: லூக்கா 4:31-44).
உரோமைப் படைத்தலைவர் ஒருவர் இயேசுவை அணுகித் தம் வேலையாள் ஒருவர் முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்டதை எடுத்துக்க் கூறி, இயேசுவின் துணையை நாடுகின்றார். இயேசு அவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்று கூற, அந்நேரமே அவ்வேலையாள் குணமடைகின்றார். இந்நிகழ்வு நிகழ்ந்ததும் இவ்வூரில் தான்.
ஒருநாள் இயேசு கப்பர்நாகுமில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தபோது முடக்குவாதமுற்ற ஒருவரை அவரிடம் கொண்டுவர சிலர் முயன்றார்கள். பெருங்கூட்டமாக மக்கள் கூடியிருந்ததால் அவர்கள் வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு இயேசுவின்முன் இறக்கவேண்டியதாயிற்று. இயேசு அம்மனிதருக்குக் குணமளித்து, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறினார். இந்நிகழ்வு நிகழ்ந்ததும் இங்குதான். (காண்க: லூக்கா 5:17-26).
கப்பர்நாகுமில் இயேசு மக்களுக்கு அதிசயமான விதத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து உணவளித்ததும் அவர்கள் மீண்டும் அவரைத் தேடிக் குவிந்தனர். அப்போது அவர், "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் உணவுக்காகவே உழையுங்கள்...வாழ்வுதரும் உணவு நானே" என்றார். இன் நிகழ்வும் நடந்தது இந்த ஊரில்தான்.
கப்பர்நாகும் என்ற ஊரில் இயேசு பல முறை மக்களுக்குக் கற்பித்து, பலரைக் குணமாக்கினார். இயேசுவின் பணி மையம் போல கப்பர்நாகும் விளங்கியது. இத்தனை அருள் அடையாளங்களை அப்பகுதியில் இயேசு செய்திருந்த நிலையிலும் அம்மக்கள் மனம் மாறாது இயேசுவின் பணிக்கு முன்பு எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறே செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் இந்நிலை கண்டு மனம் வெதும்பி அந்நகர மக்களை இயேசு சாடுகிறார்...
இந்நிகழ்வு வழியாக இறைவன் நமக்கு தரக்கூடிய செய்தியாக இந்நாளில் நாம் காணவேண்டியது இதுவரை நம் வாழ்வில் இறைவன் செய்த நல்ல செயல்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்...
அதேசமயம் இயேசுவினுடைய அருள் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் கண்டு அவரை நம்பி அவரை பின்தொடர கூடிய நாம் நமது வாழ்வில் நமது அருகாமையில் இருக்கக்கூடியவர்களுக்கும், தேவையில் உழல்வோருக்கும் நாம் செய்த நற்செயல்கள் என்ன ? என்ற கேள்வியை நமக்குள் எழுப்ப வேண்டும். இயேசுவை பின்பற்றியவர்களாகிய நம்வாழ்வு எத்தனை மனிதர்களுக்கு வாழ்வைத் தந்துள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க இன்று நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்...
நம்மால் இன்று வரை அடுத்தவர் வாழ்வு பெற வில்லை என்றால் இறைவன் இன்று சாடுவது நம்மை என்பதை நாம் உணர வேண்டும்...
இயேசுவின் வாழ்வு அன்று சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், சமூகத்தால் புறம்தள்ளப்பட்டவர்களுக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும், உரிமை வாழ்வை தருவதாக அமைந்தது.
இன்று அந்த இயேசுவைப் பின்பற்றி கொண்டிருக்கக்கூடிய நமது வாழ்வு யாருக்கு வாழ்வைத் தருகிறது என சிந்திப்போம். ஒருவேளை இது நாள் வரை நாம் வாழ்வு யாருக்கும் வாழ்வு அளிக்கவில்லை என நாம் எண்ணினால் நம்மை நாம் சரி செய்து கொள்ள இறைவன் தரக்கூடிய அழைப்பாக இன்றைய வாசகங்களை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்...
நம்வாழ்வு இயேசுவைப்போல அடுத்தவருக்கு வாழ்வளிப்பதற்காக என்பதை உணர்ந்தவர்களாக இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்று ஆண்டவர் இயேசுவின் பாதையில் பின் தொடர்வோம்...
"நம்வாழ்வு இயேசுவைப்போல அடுத்தவருக்கு வாழ்வு தரவே ..."
இயேசுவைப் போல அடுத்தவருக்கு வாழ்வு தர நாம் இயேசுவில் இணைந்து இருப்போம்! அவரோடு கரம் கோர்த்து பிறருக்கு பணிபுரிவோம்!
பதிலளிநீக்குகரம் பிடிப்போம்
பதிலளிநீக்கு