"மனம் என்னும் நல்ல நிலத்தில் நல்ல வார்த்தைகளை விதைத்திட..."
விதைப்பவர் உவமைக்கான விளக்கத்தினை இயேசு வழங்குவதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கின்றோம் ..
விதைப்பவர் உவமையில் விதைகள் நான்கு இடங்களில் விழுகின்றன.
1. வழியோரம்
2. பாறைகள் இடையே
3. முட் செடிகளுக்கு இடையே
4. நல்ல நிலம்...
விதை என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவார்த்தைக்கு ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்.
இறைவார்த்தை என்பது அனைவருக்கும் நல்லதை தரக்கூடிய வார்த்தைகளாகும்...
நமது வாழ்வில் நாம் நல்ல வார்த்தைகளை பேசிவருகிறோம்.
நல்ல வார்த்தைகளை அடுத்தவருக்கு கொடுக்கிறோம். நல்ல வார்த்தைகளை பலர் நமக்கு கொடுக்கிறார்கள். ஆனால் பிறர் நமக்கு கொடுக்க கூடிய நல்ல வார்த்தைகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? என சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம் ...
நல்ல வார்த்தைகளே இறைவார்த்தையாக கருதப்படுகிறது இறைவார்த்தையை குறித்து திருவிவிலியத்தில் இவ்வாறு கூறப்படுகிறது... "இறைவனுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது, எந்த பக்கமும் வெட்டக் கூடிய வாழினும் கூர்மையானது ..."
இவ்வுலகில் அதிக வலிமை படைத்தது வார்த்தைகள் எனக்கூறலாம். வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும்,ஒருவரை இரணப்படுத்தவும் முடியும் ...
திருக்குறளில் கூட திருவள்ளுவர் "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" என்று வார்த்தைகளுக்கு இந்த உலகில் வலிமை அதிகம் என்பதை எடுத்துரைத்துள்ளார்.
ஆண்டவர் இயேசுவினுடைய வார்த்தைகள் பலருக்கு ஆறுதலையும், பலருக்கு உடல் சுகத்தையும், பலருக்கு அறிவுத் தெளிவையும் தந்தது...
விவிலியத்தில் "வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது.கடவுளையும் இருந்தது..." என வார்த்தையை
கடவுளோடு இணைத்து யோவான் நற்செய்தி ஒன்றாம் அதிகாரம் ஒன்றாம் வசனம் குறிப்பிடுகிறது. (யோவான்1:1).
இன்று நாம் பலவிதமான வார்த்தைகளை சமூகத்தில் அனுதினமும் பேசுகிறோம் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு ஆண் 2000 வார்த்தைகளையும், பெண் 4000 வார்த்தைகளையும் பேசுகிறார்கள் என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது ...
ஆனால் இயேசுவின் வார்த்தைகள் பல விதமான மாற்றங்களை சமூகத்தில் உருவாக்கின. நமது வார்த்தைகள் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் உருவாக்குகின்றன? என சிந்திப்போம் ...
சில நேரங்களில் நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் விவிலியத்தில் நாம் காண்பது போல அவை வழியோரங்களிலும், முள் செடிகளுக்கு நடுவிலும், பாறையின் இடையிலும், நல்ல நிலத்திலும் என்ற அடிப்படையில் நம் மனதில் பதியலாம்.
நாம் வாழக்கூடிய இச்சமூகத்தில் அடுத்தவர் தரக்கூடிய நல்ல வார்த்தைகளை நம் மனம் என்னும் நிலத்தில் எப்படிப்பட்ட இடத்தில் நாம் பதிய வைக்கிறோம் என சிந்திப்போம்... அதுபோலவே நமது வார்த்தைகளை அடுத்தவர்கள் மனம் என்னும் தங்களுடைய நிலத்தில் எப்படி பதிய வைக்கிறார்கள் என்பது அவர் அவரைப் பொறுத்தது. இதனை உணர்ந்து கொள்வோம்.
நான் கூறினேன் நான் கூறியபடி அவன் தன் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ளவில்லை என அடுத்தவரை குற்றம் சாட்டுவதை விட நல்ல வார்த்தைகளை நாம் அவ்வப்போது பகிர்ந்து கொண்டே இருப்போம்.... நம்மை நோக்கி வரக்கூடிய நல்ல வார்த்தைகளை மனம் என்னும் நல்ல நிலத்தில் பதிய வைப்போம் ...மனம் என்னும் நல்ல நிலத்தில் நல்ல வார்த்தைகளை விதைக்க கூடியவர்களாக இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வோம்...
"மனம் என்னும் நல்ல நிலத்தில் நல்ல வார்த்தைகளை விதைத்திட..."
மனதில் ஊக்கமுடன் எதிர்வரும் நிகழ்வுகள் எத்தகையதாயினும் நல்ல வார்த்தைகளை தொடர்ந்து விதைப்போம்! நன்மைகள் விளையட்டும்!
பதிலளிநீக்கு