வெள்ளி, 31 ஜூலை, 2020

கொடுத்த வாக்கா...? நீதீயான செயலா...? சிந்திப்போம்....

கொடுத்த வாக்கா...? நீதீயான செயலா...?

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய நற்செய்தி பகுதியில் திருமுழுக்கு யோவானின் இறப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது. திருமுழுக்கு யோவானை பற்றி நாம் அனைவரும் அதிகம் அறிந்திருப்போம். பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையே இருந்த ஒரு இறைவாக்கினர். உண்மையை எடுத்துரைத்தவர் . மக்களை மனமாற அழைப்பு விடுத்தவர். ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு முன் தயாரிப்பு செய்தவர் என பலவாறு இவரை பற்றி பல செய்திகளை பலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம் பெறக்கூடிய ஏரோது அரசனின் செயல்பாடு குறித்து என் சிந்தனைகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெறக்கூடிய ஏரோது பலரும் கூடியிருக்கக்கூடிய அரண்மனையில் கேட்பதை தருவதாக வாக்கு கொடுக்கிறான். அதன்விளைவாக திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து தருமாறு கேட்கக்கூடிய பெண்ணின் வேண்டுதலுக்கு இணங்கி திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்துக் கொடுக்கும் நிகழ்வை நாம் நற்செய்தி வாசகத்தின் வழியாக அறிகிறோம்.

கொடுத்த வாக்கை ஒருவன் காப்பாற்ற வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் அதற்காக அடுத்தவரின் உயிரைப் பறிப்பதையும்,  தீயச்செயல்களை செய்வதையும் எப்படி ஏற்க இயலும்.

இந்து மதத்திலுள்ள இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில்  பீஷ்மர் என அழைக்கப்படும்    தெய்வவிரதன், தன் தந்தையின் துயரத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக அஸ்த்தினாபுர அரியணையில் அமர போவதில்லை என தீர்மானம் எடுக்கிறார்.  தீர்மானம் எடுத்ததன் விளைவாக அந்த அஸ்தினாபுர அரண்மனையில் அமர்ந்து பலவிதமான  இன்னல்களைப் பாண்டவருக்கு வழங்க கூடியவர்களின் பக்கத்தில் துணை நிற்கக் கூடிய மிகப்பெரிய வீரம் பொருந்திய மனிதராக காலம் முழுவதும் இருக்கிறார். இறுதியாக மகாபாரதப்போரில் பீஷ்மரின் இந்த தீர்மானத்தை மாற்றிக் கொள்ளாத தன்மையை குற்றமென இந்த மகாபாரதத்தின் கதாநாயகனான கிருஷ்ணன் எடுத்துரைக்கிறார்.

இதுபோலவே இன்று விவிலியத்தில் இடம்பெறக்கூடிய ஏரோது அரசன் அந்த சலோமி என்ற பெண்மணி கேட்கக்கூடிய பரிசினால் ஒரு நீதிமானின்  உயிர் போகும் என்பதை அறிந்தவராய் இருந்தும், கொடுத்த வாக்கிற்காக அடுத்த உயிரை துச்சமென கருதிய வண்ணம் கொடுத்த வாக்கை அங்கு நிறைவேற்றுகிறார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது தவறில்லை ஆனால் கொடுத்த வாக்கினால் ஒரு அநீதி நடைபெறப் போகிறது என அறியும் பொழுது அதனை மாற்றிக் கொள்வது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை உணர்ந்து ஏரோது அரசன் செயல்பட்டிருந்தால்  திருமுழுக்கு யோவானின் கொலைத் தடுக்கப்பட்டிருக்கும். அதுபோலவே மகாபாரதத்தில் அநீதியானது பாண்டவர்களுக்கு இழைக்கப்படாமல் இருந்திருக்கும்.

நாம் வாழக்கூடிய இந்த உலகில் கொடுத்த வாக்கினால் அநீதி நிகழும் பொழுது கொடுத்த வாக்கை மறு பரிசீலனை செய்வதற்கு இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.   இந்த உண்மையை உணர்ந்தவர்களாக நாம் கொடுக்கக்கூடிய வாக்கினால் உண்டாக கூடிய நன்மை, தீமைகளை ஆராய்ந்து அறிந்து ஆண்டவர் இயேசுவின் வழியில் உண்மையை நோக்கி, நீதியை நோக்கி நமது சொல்லையும், செயலையும் அமைத்துக் கொள்ள முயலுவோம் ...


கொடுத்த வாக்கா...? நீதீயான செயலா...?  சிந்திப்போம்....

1 கருத்து:

  1. நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அடுத்தவருக்கு அநீதி இழைப்பது கடவுளுக்கே நாம் செய்யும் துரோகம்! இது நமது சுயநலத்தை வெளிப்படுத்துகிறது! சுயநலம் நீக்கி பிறர்நலம் பேண, தன்னலம் தவிர்த்து நீதியை செயல்படுத்த அழைப்பு விடுத்த தம்பி சகாயராஜ் அவர்களுக்கு எங்களது நன்றிகளும்! வாழ்த்துக்களும்!பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...