சனி, 1 ஆகஸ்ட், 2020

"தேடிச் செல்வோமா ....?"

"தேடிச் செல்வோமா ....?"

அன்புக்குரியவர்களே இன்றைய  நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசு பலருக்கு  பகிர்ந்து அளித்ததை நாம் வாசிக்க கேட்கிறோம்.

இயேசுவின் அப்பம் பகிர கூடிய இந்த நிகழ்வு பலருக்கு பலவிதமான பாடங்களை கொடுக்கிறது. ஆனால்  இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் இந்நிகழ்விற்கு அடிப்படையாக அமைந்தது எது? என்பது பற்றி சிந்திக்க உங்களை அழைக்கின்றேன். 

இயேசு படகில் ஏறி பாலைநிலத்தில் தனிமையான ஒரு இடத்திற்குச் செல்கிறார். அதை அறிந்த  பெரும் திரளான மக்கள் அவருக்கு முன்பாக அவரை தேடி  கால்நடையாக  செல்கிறார்கள்.

இந்த ஆண்டவரை தேடி செல்லக்கூடிய நிகழ்வு தான் இயேசு  ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும்  பலருக்கு பகிர்ந்து அளிப்பதற்கு அடிப்படையாக அமைந்ததாகும் . 

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகில் நாம் யாரை தேடி?, எதை தேடி சென்று கொண்டிருக்கிறோம்? என சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

ஆண்டவர் இயேசுவை தேடிச் செல்வதை நாம் இன்றைய சூழலில் நல்லதை தேடி செல்வதையும், நல்லதை செய்பவர்களை தேடி, அவர்களுக்குத் துணை நிற்க கூடியவர்களாய் அவர்களை பின்தொடர்ந்து செல்வதையும் குறிப்பதாக பொருள் கொள்ளலாம்.

ஆண்டவர் இயேசு தன்னைத் தேடி வந்த மக்கள் மீது பரிவு கொண்டார். அவர்களின் தேவைகளை அறிந்தவராய், அவர்களை துயரத்தில் விட்டுவிடாமல் அவர்களின் துயர் நீக்கினார்.
இன்று ஆண்டவர் இயேசுவை பின்பற்றக் கூடியவர்களாகிய நாம் நல்லது செய்யக்கூடிய பல மனிதர்கள், நல்லதுக்காக போராடும் பொழுதும், அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் பொழுதும், இந்த மக்கள் நமக்குத் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையோடு நம்மைத்தேடி வரும்போது நாம் அவர்கள் மீது இயேசுவைப்போல பரிவு கொண்டவர்களாக, அவர்களுக்கு துணை நிற்க கூடியவர்களாக, அவர்களை தேடிச்செல்ல கூடியவர்களாக, நாம் இருக்கின்றோமா? என இன்றைய நாளில் சிந்தித்துப் பார்ப்போம்...

இன்று நாம் வாழும் உலகில் பெரும்பான்மையான மக்கள் பணம், பதவி, பட்டம், விலை உயர்ந்த பொருள்களை நாடித்தேடி செல்கிறோம். சில மனிதர்கள் சமூகத்தில் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட கூடியவர்களை தேடிச் செல்கிறார்கள்.... ஆனால் உண்மைகாகவும், நீதிக்காகவும் போராட கூடியவர்களையோ அல்லது ஏழைகளையோ பெரும்பான்மையான மக்கள் தேடிச் செல்வதில்லை. இவர்களைத் தேடிச் செல்வது தான் உண்மையில் இயேசுவைத் தேடி செல்வதாகும். 
அன்று இயேசுவை தேடிச் சென்ற மக்கள் மீது இயேசு பரிவு கொண்டு அவர்களின் துயர் நீக்கியது போல இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் உண்மைக்காகவும், நீதிக்காகவும் ஏழை மக்களின் நலனுக்காகவும் அவர்களின் துயரத்தை நீக்க வேண்டும் என்பதற்காக பல விதமான வழிகளில் முயற்சிக்கு கூடியவர்களை நாமும் தேடி செல்லும் போது மட்டுமே கடவுளின் அருஞ்செயல்களையும், அவரின் உடனிருப்பையும் நாம் கண்டு அனுபவிக்க இயலும். 

இன்று உண்மைகாகவும், நீதிக்காகவும் , ஏழை எளியவர்களின்  நலனுக்காகவும்  பேசக்கூடியவர்கள் பலர். ஆனால் பேசுவது மட்டும் போதாது அது பேசக்கூடியவர்களின் செயலில் வெளிப்பட வேண்டும்.  அதுபோலவே இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் உண்மைக்காகவும், நீதிக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் போராடக்கூடியவர்களை நாம் தேடிச் செல்லாமல் வெறுமனே ஆலயங்களுக்கு மட்டும் சென்று விட்டு நாம் ஆண்டவரை தேடிச் செல்கிறோம் என கூறுவதில் அர்த்தமில்லை. இதை உணர்ந்தவர்களாக உண்மையில் ஆண்டவர் இயேசுவை தேடி செல்லக்கூடிய உண்மை சீடர்களாக நாம் உருவாக இன்றைய நாளில் உறுதி ஏற்றவர்களாக ஆண்டவர் இயேசுவை தேடிச் செல்வோம்.

"தேடிச் செல்வோமா ....?"

1 கருத்து:

  1. ஏழை எளிய மக்களின் வளர்ச்சியில் ஆண்டவர் இயேசுவை தேடிச் செல்வோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...