"உரையாடல் என்பது உறவை வளர்க்கவே..."
இன்று இயேசு தாபோர் மலையில் உருமாறியது நிகழ்வை நாம் நற்செய்தி வாசகமாக வாசிக்கின்றோம். இயேசு தாபோர் மலையில் ஏலியா மற்றும் மோசேயோடு உரையாடல் நடத்துகிறார்.
உரையாடல் என்பது உறவை வளர்ப்பதற்காகவே. ஆனால் இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகில் பெரும்பாலான உரையாடல்கள் அடுத்தவரை பற்றிய எதிர்மறையான எண்ணங்களையே பிரதிபலிக்கக் கூடியதாக அமைந்துள்ளன. பல நேரங்களில் கடவுளுடன் கூடிய உரையாடல் கூட எப்போதும் நம்முடைய தேவைகளாகவே அமைகின்றன.
உதாரணமாக
ஒரு சிலர் எப்போதும் கடவுள் முன்னிலைக்குச் சென்றாலும் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என தேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லக் கூடியவர்கள் இந்த உலகில் உண்டு.
இன்னும் சிலரோ கடவுள் முன்னிலையில் அடுத்தவர்களை பற்றி குறை கூறுவதை உரையாடலாக கொண்டுள்ளனர்.
இன்னும் சிலரோ எப்போது கடவுள் முன்னிலைக்குச் சென்றாலும் நான் இதைத் தருகிறேன் நீ இதற்கு பதிலாக எனக்கு இதை தர வேண்டுமென பண்டமாற்று முறையை செய்யக்கூடியவர்களாகவே இருக்கிறனர்.
இன்னும் சிலரோ கடவுளுக்கு நன்றி சொல்வதை மட்டுமே உரையாடலாக கொண்டுள்ளனர்.
மொத்தத்தில் உரையாடல் என்பது உண்மையானதாகவும், உள்ளத்தில் இருக்கக் கூடியதை அப்படியே இறைவனிடத்தில் எடுத்துரைக்க கூடியதாகவும், அது ஒரு உறவை வளர்க்கக்கூடிய உரையாடலாக அமைய வேண்டியது அவசியமாகும் .
இன்று முறையான, தெளிவான உரையாடல் இல்லாமையே இச்சமூகத்தில் பல விதமான தனிமைக்கும், பலவிதமான சண்டைகளுக்கும், பலவிதமான விவாகரத்து சூழலுக்கும் காரணமாக உள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எலியாவோடும் மோசேயோடும் நடத்திய உரையாடல் ஒரு உண்மையான உறவை வளர்க்கக்கூடிய உரையாடல். எனவேதான் ஆண்டவரே விண்ணிலிருந்து "இவரே என் அன்பார்ந்த மகன் இவர் குரலுக்கு செவி கொடுங்கள்..." என கூறுகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகில் நமக்கிடையே நடக்கக்கூடிய உரையாடல் என்பது உண்மையானதாகவும், உறவை வளர்க்க கூடியதாகவும் அமைய வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு வழங்குகின்றன.
ஆண்டவர் இயேசுவை பின்தொடர கூடிய நாம் அனைவரும் உண்மையான, அன்பான, உறவை வளர்க்கக்கூடிய உரையாடல்களோடு நமது வாழ்வை நகர்த்திச் செல்ல அழைக்கப்படுகிறோம்.
உரையாடல் என்பது உறவை வளர்ப்பதற்காகவே... என்ற எண்ணத்தோடு நமது வாழ்வில் நாம் அருகில் உள்ளவர்களோடு நல்ல உரையாடல்களை தொடர இன்றைய நாளில் உறுதி ஏற்றவர்களாய் ஆண்டவர் இயேசுவை பின் தொடர்வோம் ...
"உரையாடல் என்பது உறவை வளர்க்கவே..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக