வியாழன், 6 ஆகஸ்ட், 2020

"சொல்லிலும், செயலிலும் தேவையானது மனிதநேயமே..."

"சொல்லிலும், செயலிலும் தேவையானது மனிதநேயமே..." 

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

"என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்...." என்ற இயேசுவின் வார்த்தைகளின் வழியே என் சிந்தனைகளை பகிர விழைகிறேன்.

சமீபத்தில் என்னை பாதித்த ஒரு செய்தி கொரோனோ தொற்று பரவாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு பாதிப்பின் காரணமாக மரணமடைந்தார். மரணமடைந்தவரின் உடலைத் தொடுவதற்கு உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை தன் தந்தையின் உடலை தொட முடியாமல் குழந்தைகள் கதறி அழுத காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தபோது எப்போது மாறும் இந்த நிலை? என்ற எண்ணம் எனக்குள்  எழுந்தது. அதேசமயம்    இந்த காவல்துறை அதிகாரி இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப தன்னலம் துறந்து தன் சிலுவையை சுமந்து கொண்டு சென்றவர் என்ற எண்ணம் எழுந்தது.

அதுபோலவே திருச்சி மறைமாவட்ட  கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் தலைவராக உள்ள செல்வன் பிரபு என்பவருடைய தந்தை மரணம் அடைந்த போது கொரோனோ  பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு  கொரோனோ தொற்று  என இரண்டு நாட்களுக்கு பிறகு அரசு அறிவித்த போது அவரது உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்வதற்கு எவரும் முன்வரவில்லை. அந்நேரத்தில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினர் தாமாக முன்வந்து அவரது தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கை செய்தார்கள் என்ற செய்தியை செல்வன் பிரபு அவர்கள் பகிர்ந்த போது தன்னலம் மறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவை பின் செல்லக்கூடிய கிறிஸ்தவர்கள் எங்கே?  என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.

கொரோனோ தொற்றுநோய் என்பது மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது என்பதில் துளியளவும் ஐயமில்லை. அதேசமயம் அச்சத்தை கடந்து அகிலத்தில் மனித நேயம் எங்கே சென்றது? என்ற கேள்விக்கும் பஞ்சமில்லை.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு "தன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார். மாறாக என் பொருட்டு தன் உயிரை அழித்துக் கொள்ளும் எவரும் வாழ்வடைவார்..." என்று குறிப்பிடுகிறார். இவ்வார்த்தைகளை இன்றைய நாளில் இவ்வாறாக பொருள் கொண்டு பார்க்கலாம் ... 

தன் உயிரை விட தன்னை சார்ந்தவர்களின் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்த வண்ணம் அடுத்தவருக்கு கொரோனோ தொற்றுநோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு உயிர்நீத்த அந்த காவல்துறை அதிகாரியின் செயல் இன்னும் பல நூறு தலைமுறை கடந்தும் இம்மண்ணில்  வாழும் என்பதில் ஐயமில்லை.  

இன்று அச்ச உணர்வு காரணமாக நோயாளிகளை தள்ளி நின்று பார்க்கக்கூடிய நாம் அனைவரும்  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளான "ஒருவர் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?..."  என்ற கேள்வியை நமக்குள் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

இன்று இவ்வுலகில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் குறிப்பாக இந்தியாவில் நிலவக்கூடிய இந்த கொரோனா தொற்று சூழல்கள் பலவிதமான கேள்விகளை எழுப்புகின்றன.

இந்த நோய்க்கு உலகிலேயே மருந்து இல்லை. ஆனால் இந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அரசால் 5 நாட்கள் அல்லது 7 நாட்கள் சில மருந்துகள் கொடுக்கப்பட்டு நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் எனக்கூறி வீட்டுக்கு அனுப்பும் நிலை  அரசு மருத்துவமனைகளில் இன்று தொடர்கிறது.

மக்கள் பெருந்திரளாக கூடினால் அங்கு நோய்த்தொற்று உருவாகும் என்று கூறப்பட்ட நிலையிலும் சில இடங்களில் அரசு அனுமதியோடு பல நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் பூமிபூஜையானது நடந்தேறுகிறது.

உலகில் உள்ள அனைவருமே நோய் தொற்றிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது பல விதமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. 

பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு அருகில் பக்கபலமாக இருங்கள் என்று கூறக்கூடிய நிலைகள் மாறி... பாதிக்கப்பட்டவனின் பக்கத்தில் சென்றால் நீயும் பாதிக்கப்படுவாய் என்று அச்ச உணர்வை வளர்க்க கூடிய நிகழ்வுகள் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டே செல்கின்றன.

இத்தகைய சூழலில் தன்னலம் மறந்து தன் சிலுவையை சுமந்து கொண்டு ஆண்டவர் இயேசுவை பின் செல்ல நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

 இயேசுவை பின் செல்லுதல் என்பது இயேசுவைப் பற்றி பேசும்  மதத்தைப் பின் செல்வது அல்ல.  மாறாக  இயேசுவின் வார்த்தைகளிலும், செயலிலும் காணப்பட்ட மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்தொடர்வதாகும். 

இன்று நிலவக்கூடிய இச்சூழலில் தன்னலம் மறந்து தன் சிலுவையை சுமந்த வண்ணம்... தம் வாழ்வைக் காத்துக் கொள்வதைவிட அடுத்தவர் வாழ்வை காத்திடவும்... மனிதநேயத்தை மனதில் கொண்டு சொல்லிலும், செயலிலும் வெளிகாட்டக் கூடிய உண்மை சீடராக இயேசுவை பின் செல்ல நமது வாழ்வை மாற்றிய வண்ணம் இயேசுவை பின் தொடர்வோம். 

"சொல்லிலும், செயலிலும் தேவையானது மனிதநேயமே..." 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...