"தியாகமே... சுதந்திரமானது..."
இன்றைய நாளிலே நான் ஒரு தாய் திரு அவையானது புனித அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா கொண்டாடுகிறது. அதேசமயம் நமது நாடும் தனது 74வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் இடம்பெறக்கூடிய மரியா ஏறக்குறைய ஆறு மாதங்கள் எலுசபெத்தோடு தங்கியிருந்த பின் வீடு திரும்பினார் என்ற இறுதி வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தத்தை உணராதவர்களாக தான் நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம்.
நம் நாட்டுக்கான சுதந்திரம் தானாக கிடைத்ததல்ல பல நல்ல மனிதர்களுடைய முயற்சியின் விளைவாக கிடைத்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த சுதந்திரத்தை நாம் அனுபவிப்பதற்கு காரணமாக இருந்த தியாகிகளை இன்றைய நாளில் நினைவு கூற நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய ஒவ்வொருவருமே அன்னை மரியாவை போல தனக்காக வாழாமல் அடுத்தவருக்காக வாழ்ந்தவர்கள்.
மரியா கருவுற்றிருந்த காலத்திலும் ஏற்கனவே எலிசபெத் என்ற பெண்மணி கருவுற்று இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து அந்த பெண்மணிக்கு உதவி செய்வதற்காக அந்த பெண்மணியை தேடிச்சென்று ஏறக்குறைய ஆறு மாதங்கள் தங்கியிருந்து அப்பெண்மணிக்கு உதவி செய்து அதன் பிறகு தன் வீடு திரும்பினார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம் .
அன்னை மரியாவை போலவே நமது நாட்டிலும் பல தியாகிகள் இந்த சுதந்திரத்தை தாம் அனுபவிக்க விட்டாலும் பரவாயில்லை நமது வருங்கால சந்ததியினர் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சுதந்திரத்திற்காக போராடி உயிர் இழந்தார்கள்.
எலிசபெத்தின் வாழ்த்தொளியை கேட்டதும் அன்னை மரியா கடவுளை நோக்கி ஆண்டவரை என் உள்ளம் ஏற்றிப் போற்றிப் பெருமைப்படுகிறது... எனக்கூறி பாடியது போல நாமும் பலரின் தியாகத்தால் நமக்கு கிடைத்த இந்த சுதந்திரத்தை பெற காரணமாக இருந்து உயிர் நீத்த தியாகிகளை நன்றியோடு நினைவு கூர்ந்து அவர்கள் வழியாக நமக்கு கிடைத்த இந்த சுதந்திரத்தை பேணி பாதுகாத்து, நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம்.
இன்று நாளுக்கு நாள் பல விதமான சூழ்ச்சிகளால் நமது சுதந்திரமானது அடியோடு பாறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அனுதினமும் சிலர் மக்கள் மனதில் நஞ்சை விதைத்து பலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மனதில் நோய் பயத்தை உருவாக்கி மனிதனை மனிதன் தொட மறுக்க கூடிய சூழல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை தந்தது மக்கள் என்பதை மறந்து மக்களை மட்டமாக நினைக்கக்கூடிய நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சுதந்திர நாட்டில் சுதந்திரமாக பேசவும் எழுதவும் தடை விதிக்கக் கூடிய சூழல்கள் உருவாகின்றன.
நாளுக்கு நாள் மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசினால் பாறிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றன.
வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்ட நாம் என்று பலவிதமான சூழ்ச்சிகளால் பலவித சூழ்ச்சிகாரர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையிலிருந்து நாம் அனைவரும் மாற்றம் பெற சுதந்திரக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்க கூடிய நிலை நம் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே இன்றைய நாளில் நாம் அனைவரும் உணர வேண்டிய ஒன்றாகும்.
இது எளிதான காரியம் அல்ல இதற்கான முயற்சியில் ஈடுபடும் போது நாம் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரலாம் பல நேரங்களில் உயிரையும் இழக்க நேரலாம்.
ஆனால் மனம் தளராது தன்னலத்தை நாடாது பொது நல நோக்கத்தோடு செயல்பட்ட நமது நாட்டுக்காகப் போராடிய தியாகிகளை போல நாமும் நமது வாழ்வை அர்ப்பணித்து, நமது வருங்கால சந்ததியினர் சுதந்திரத்தோடு சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கான உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை இன்றைய நாளில் உணர்ந்துகொள்ள இன்றைய வாசகங்கள் அழைக்கின்றன.
தன்னலம் கருதாது பொதுநலம் நோக்கத்தோடு அடுத்தவருக்கு உதவி செய்து வாழ்ந்த அன்னை மரியாவை போல ... தனக்காக இல்லாவிட்டாலும் அடுத்தவரின் நலனுக்காக சுதந்திரத்திற்காக தன் உயிரை விட்ட தியாகிகளை போல ... நமது வாழ்வும் தியாகம் கொண்ட நல்ல வாழ்வாக அமைந்திட இறைவனது அருளை வேண்டி தியாகத்தின் உருவாக இம்மண்ணில் இருக்கக்கூடிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உண்மை சீடர்களாக அவரைப் பின்தொடர்ந்து செல்வோம்.
"தியாகமே... சுதந்திரமானது..."
பிறருக்காக தியாகங்கள் செய்வோம்! நன்றி!
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு