திங்கள், 24 ஆகஸ்ட், 2020

"உட்புறத்தை தூய்மையாக்கங்கள் அப்போழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்..." (25.08.2020)


"உட்புறத்தை தூய்மையாக்கங்கள் அப்போழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்..."
 

வாழ்க்கை என்பது வாழ்வதற்காகவே. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று இருப்பவனுக்கு வாழ்க்கையில்லை. 

மனிதன் என்பவன் எல்லையற்ற ஆற்றல்களின் ஊற்று, கணக்கிட முடியாத திறமைகள் அவனுக்குள் புதைந்து இருக்கின்றன. தன்னிடம் மறைந்திருக்கக் கூடிய ஆற்றலை 10 விழுக்காடு கூட ஒருவன் பயன்படுத்துவதில்லை என்பது அறிவியல் வல்லுனர்களின் கணிப்பு.

உன்னையே நீ அறிவாய் என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்களிடம் காணப்பட்ட வெளிவேடத்தன்மையை சாடுகிறார். உள்ளத்தைத் தூய்மை செய்யாது, வெளியே வேடமிடுவதால் எதுவும் நிகழாது. உட்புறத்தை தூய்மையாக்கங்கள் அப்பொழுது அதன் வெளிப்புறம் தூய்மையாகும் என்கின்றார்.

நீருக்குள் நெருப்பை உண்டாக்கும் திறன் மறைந்திருக்கிறது. அதுபோல மண்ணுக்குள் மறைந்து இருப்பவைதான் பொன்னும், வயிரமும். ஆழ்கடலின் அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிப்பிக்குள் இருப்பதுதான் முத்து. இதனை கடுமையாக முயற்சித்து தேடி கண்டு பிடிப்பவர்கள் தான் அதனை உலகிற்கு வெளி காட்டுகிறார்கள்.

அது போலவே ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் நல்லவிதமான பல நன்மைகள் புதைந்து இருக்கின்றன. அவைகள் அதிகமாகும் போது அவைகள் இவ்வுலகத்தில் நம்முடைய செயல்கள் மூலம் வெளிப்படுகின்றன.  

உருவமற்ற கோடுகள் ஓவியனின் தூரிகை படப்பட ஓவியங்களாக மாறுகின்றன. அதுபோல நமது உள்மனத்தில் இருக்கக்கூடிய நல்ல விதமான எண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய செயல்களில் அது உயிரோட்டமாக  வெளிப்படுகிறது. 

ஒருவனின் உள்ளத்தில் இருக்கக்கூடிய நல்லெண்ணங்கள் அவருடைய செயல்பாடுகளில் வெளிப்படுவதன் வாயிலாக பலரின் முன்பாக அவன் தலை நிமிர்ந்து நிற்க அவை உதவுகின்றன.

அகத் தூய்மை ஒருவனின் வெளிப்புறத்தை தூய்மை படுத்துகின்றன.  ஒரு மனிதன் தன்னுடைய உள்மனதில் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்வதும், அதிகமாக்கிக் கொள்வதும் மிகவும் அவசியமாகிறது.  இவைகள் அதிகமாகும்போது ஒரு மனிதன் விழிப்புணர்வு கொண்டவனாகவும், நன்மதிப்பு கொண்டவனாகவும் விளங்குகிறான். இத்தகைய குணநலன்களோடு வளரக்கூடிய ஒருவரின் மனதில், மற்றவர்களை போட்டியாக கருதும் மனப்பக்குவம் குறையும். மேலும் நல்ல தலைவர்களாக இச்சமூகத்தில் அவர்கள் உருவாகிடக் கூடியச் சூழல் ஏற்படும்.

திருவள்ளுவரும் திருக்குறள் வழியாக

"புறத்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும்".
என்கின்றார். அதாவது உடல் அழுக்கு நீங்கித் தூய்மையடைவது என்பது நீரால் உண்டாகும். உள்ளத்தில் தூய்மையாக இருத்தலை உண்மை கூறுதலால் அறியலாம். உள்ளத்தூய்மை எப்போதும் உண்மைக்கும், நன்மைக்கும்  வழிவகுக்கும்.

உலகை வென்ற மாவீரன் நெப்போலியன்  "ஒவ்வொருவரும் தம்மைத்தாமே வெற்றி கொள்ளுதலே மிகப்பெரிய வெற்றியாகும்..."என்று கூறுகின்றார். 

நம்மை நாமே வெற்றி கொள்ளுதல் என்பது அகத்தில் தூய்மையை உருவாக்குவதாலே நிகழும். அகத்தில் தூய்மையை உருவாக்கவும், அந்த உட்புறத்தில் ஏற்படக் கூடிய தூய்மை வெளிப்புறத்தை அழகாக்கும் என்பதை உணர்ந்தவர்களாக உள்ளத்தை தூய்மைப்படுத்தக் கூடிய இயேசுவின் உண்மை சீடர்களாக ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையோடு அடி எடுத்து வைத்து வாழ்க்கையில் முன்னேறவோம்.   


"உட்புறத்தை தூய்மையாக்கங்கள் அப்போழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்..."
 

 

1 கருத்து:

  1. திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல நாம் நம் உள்ளத்தோடு பேசி அமைதியாக இருந்தாலே போதும். நம் உட்புறம் தூய்மை அடையும். வெளிப்புறமும் தூய்மையாகும்.

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...