இன்றைய வாசகத்தில் இளைஞன் நிலை வாழ்வைத் தேடி வருகிறான். நிலை வாழ்வை அடைய என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் எனக் கேட்கிறான். வாழ்வைப் பெறவும் நன்மைகள் செய்யவும் அவனுக்கு இருந்த ஆவலை தேடலாக இயேசுவிடம் வெளிப்படுத்துகிறான்.
கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்தாலே அது நன்மைகளை விளைவிக்கும் என்று இயேசு கூறுகிறார். கட்டளைகளை கடைபிடித்து வாழும் போது நம்மில் நமக்குள் ஒழுக்கமும் உறுதிப்பாடும் மேம்படும். நேர்மறை எண்ணங்களையும் நலம் தரும் செயல்பாடுகளையும் விளைவிக்கும். இவ்வாறு கட்டளைகளை கடைபிடித்து வாழும் பொழுது ஒரு மனிதன் தனக்குள்ளே நல்லவனாக வாழ்கின்றான்.
ஏழைகள் உயிர் வாழ்வதற்கு கூட வழி இல்லாது தவிக்கும் பொழுது தான் மட்டும் நல்லவனாக இருந்து வாழ்வது ஒரு சுயநல வாழ்வு. அது நிலை வாழ்வுக்கு இட்டுச் செல்லாது. இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து மனிதரையும் அன்பு செய்து அனைவரையும் வாழவைப்பது இயேசு கூறிய இறையாட்சி இதுவே நிலை வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும். இயேசு நம்மிடம் உள்ள பொருள்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து அவர்களுக்கு வாழ்வு கொடுத்து வாழ வைப்பதே நிலை வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்கிறார்.
மனிதர்களை நேசியுங்கள் பொருட்களை பயன்படுத்துங்கள் என்று கூறுவார்கள். இன்றைய நாட்களில் நாம் பொருள்களை சேகரிப்பதற்காக மனிதர்களை பயன்படுத்துகிறோம்.
இன்றைய நாளில் நாம் நம்மிடம் இருக்கின்ற பொருள்களை பயன்படுத்தி நமக்கு அருகில் உள்ள ஏழை எளியோரின் பசி நீங்க அவர்களின் வாழ்வு வளம் பெற செய்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உன்னிடம் உள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடு என்கிறார். ஆனால் நிலை வாழ்வைத் தேடிய மனிதனுக்கும் தன்னிடம் உள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க மனமில்லை. எனவே அவன் அமைதியாக இயேசுவை விட்டு விட்டுச் சென்றார் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.
பகிர்வு என்பது பேசும் பொருளல்ல அது நமது வாழ்வில் செயலாக்கப்பட வேண்டிய ஒன்று. இன்று பகிர்வை பற்றி பலர் பல மணிநேரங்கள் பேசுகிறார்கள் ஆனால் தங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளவோ அவர்கள் மறுக்கிறார்கள். பகிர்வு என்பது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வேண்டும்.
நிலைவாழ்வு என்பது தன்னலம் கருதாமல் பொது நலனுடன் வாழுவதை குறிக்கும். தனக்கு என சேர்த்துக்கொண்டு தன்னலம் கொண்ட மனிதர்களாக வாழாமல். இருப்பதை அடுத்தவரிடத்தில் பகிரக்கூடிய நல்ல மனிதர்களாக இயேசுவின் சீடர்களாக உருமாற இன்றைய நாளில் முயலுவோம்.
"பகிர்வு என்பது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வேண்டும்..."
பகிர்தலை நமது செயலில் வெளிப்படுத்துவோம்! நன்றி!
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு