சனி, 29 ஆகஸ்ட், 2020

"உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக..." (30.8.2020)


"உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக..." 


ஒரு குட்டி குரங்கு படாதபாடு பட்டு ஒரு தோட்டம் போட்டது. செடிகள் வளர்ந்து மரமாகி பூத்துக் குலுங்கி காய்கனிகள் கொட்டும் ஆசையாசையாய் அள்ளி தின்னலாம் என்று கணக்குப் போட்டது. ஆனால் எதுவுமே முளைக்கவில்லை. ஆசை நிராசையானது. ஒரு நாள் மூத்து குரங்கிடம் சென்று ஆலோசனை கேட்டது. எதுவுமே முளைக்கவில்லை என்று ஒப்பாரி வைத்தது. சமாதானப்படுத்திய அந்த மூத்த குரங்கு விதை போட்டால் தண்ணி ஊத்தணும் நீ தண்ணி ஊத்தி இருக்க மாட்டாய் என்றது. ஆனால்  குட்டி குரங்கு இல்லை ஒரு விதைக்கு 8 வாளி தண்ணீர் ஊற்றுகிறேன் என்று கூறியது. உடனே மூத்த குரங்கு ஒரு விதைக்கு எட்டு வாளி தண்ணீர்  என்றால் கண்டிப்பாக அந்த விதை அழுகிப் போய் இருக்கும் என்று கூறியது. ஆனால் குட்டி குரங்கு இல்லை இல்லை ஒரு விதை கூட அழுகவில்லை என்று உறுதியாக கூறியது. அது எப்படி  உனக்கு தெரியும்? என்று மூத்த குரங்கு கேட்டபோது, குட்டி குரங்கு சொன்னது விதை முளைத்து இருக்கிறதா? இல்லையா? என்பதை அனுதினமும் நான் எடுத்துப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியது.

தினம் தினமும் விதையை எடுத்து பார்த்தால் விதை எப்படி முளைக்கும்? அது அதற்கு என்று ஒரு காலம் இருக்கிறது. அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டியது அவரவர் கடமையாகும். அதற்குத் தேவை பொறுமை.  இந்த குட்டி குரங்கை போலவே மனித வாழ்விலும் நாம் பெரும்பாலான நேரங்களில் மகிழ்ச்சி என்பதை தேடுகிறோம். அதற்காக துன்பம் என்பதை அறவே வெறுத்து ஒதுக்குகிறோம். இன்று நமது வாழ்வில் நிலவக்கூடிய துன்பமானது ஒருநாள் நம்மிடம் இருந்து அகளும், அதற்கான காலம் வரும் என அத்துன்பத்தை எதிர்கொள்ள கூடிய மனநிலையோடு காத்திருக்க கூடியவர்களாக நாம் இவ்வுலகில் இன்று இருப்பதில்லை.  மனித மனங்களில் எப்போதும் துன்பத்தை விரும்புவதில்லை, இன்பத்தை விரும்புகின்றன. ஆனால் இங்கு மறைபொருளாக இருப்பது என்னவென்றால், துன்பத்திலிருந்தே இன்பம் பிறக்கிறது. 


இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் தனது வாழ்வில் பலரால் எள்ளி நகையாடப்பட்ட நிலையில், அவமானங்களுக்கு மத்தியில், துன்பங்களுக்கு மத்தியில் கடவுளை நம்பி தான் ஏமாந்து போனதாக எண்ணி கடவுள் மீது கோபம் கொண்டவராக தன் நிலையை வெளிப்படுத்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில்  இயேசு தன் பணி வாழ்வில், தான் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் போது, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, பேதுரு அவரை தனியே அழைத்து,  நீர் ஏன் துன்பங்களை ஏற்க வேண்டும் அது உமக்கு கூடாது என கூறும்பொழுது, இயேசு அவரை என் கண் முன் நில்லாதே சாத்தானே என்று கூறி கடிந்து கொள்கிறார். மேலும் நாம் மனிதருக்கு உரியதை அல்ல, கடவுளுக்கு உரியதை என்ன வேண்டுமெனவும், என்னை பின்பற்ற விரும்பக்கூடிய எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் இதுவே கடவுளுடைய திருவுளம் என எடுத்துரைக்கிறார்.

இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில், உலகின் போக்கின் படி இல்லாமல் உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக அதனால் கடவுளின் திருவுளத்தை நீங்கள் கண்டு கொள்வீர்கள் என்று வாழ்வுக்கு வழி காட்டுகிறார்.  

இன்று எது கடவுளின் விருப்பம் என நாம் அனைவரும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

துன்பங்களோடு கடவுளை (நல்லதை) பின்பற்றிச் செல்வது கடவுளுடைய திருவுளமாகும். துன்பங்கள் எனக்கு வேண்டாம் என்பவனால் வாழ்வில் இன்பத்தை காணமுடியாது.  சுவாமி விவேகானந்தர் அவர்கள் தன் வாழ்வில் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

"கடவுளிடம்  வலிமை கொடுங்கள் எனக் கேட்டேன்.
அவர் கொடுத்ததோ நெருக்கடியான சூழ்நிலைகள்.

 மகிழ்ச்சி கொடுங்கள் எனக் கேட்டேன்.
 மகிழ்ச்சியற்ற மனிதர்களை அறிமுகப்படுத்தினார்.

 அறிவு கொடுங்கள் எனக் கேட்டேன்.
 அவர் கொடுத்ததோ வாழ்வின் புதிர்கள்.

மனநிம்மதி கேட்டேன்.
மற்றவர்களுக்கு உதவச் சொன்னார்.

 சலுகைகள் கேட்டேன்.
 வாய்ப்புகள் கொடுத்தார்.

 நான் விரும்பியது எதையும் கடவுள் கொடுக்கவில்லை , ஆனால் எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் அவர் கொடுத்தார்...." 

இன்று நமது வாழ்விலும் நாம் சந்திக்கக் கூடிய துன்பங்கள் அனைத்தும் கடவுள் நமக்கு கற்பிக்கக் கூடிய பாடத்திற்கான ஒன்று என்பதை உணர்ந்தவர்களாக நமது சிலுவையை (துன்பத்தை) சுமந்தவர்களாக ஆண்டவர் இயேசுவை பின் தொடர்வோம். 

"உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக..." 

2 கருத்துகள்:

  1. துன்பங்கள் வழி நம்மைப் பக்குவப்படுத்துவோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. "நான் விரும்பியது எதையும் கடவுள் எனக்கு கொடுக்கவில்லை. ஆனால் எனக்குத் தேவையானவற்றை எல்லாம் அவர் எனக்கு கொடுத்தார்.?."..
    நம்முடைய சிலுவையை நாமே சுமந்து அவர் கரம்பிடித்து அவர் வழி நடப்போம்...
    அருமையான பதிவு சகோ..
    பணி சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...