ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

"மனமாற்றம் உன்னை அறியவே..." (24.08.2020)


உன்னை அறிந்தால் -  நீ 
உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம்...

என்ற பாடல் வரிகள் ஒருவன்  வாழ்வில் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி நடப்பதற்கான பக்குவத்தை அடைய வேண்டும் என்றால், ஒருவன் தன்னை தானே புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. இன்று நம்மில் பலர் நம்மை பற்றி நாம் அறிவதை விட, அடுத்தவரை பற்றி அறிவதில் அதிக  ஆர்வம் காட்டுகின்றனர்.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட பிலிப்பு நத்தானியேலிடம் இயேசுவைப் பற்றிக் கூறும் போது, நாசரேத்து ஊர் மக்களைப் பற்றிக் கொண்டிருந்த முன் சார்பு எண்ணத்தின் அடிப்படையில் நத்தானியேல் நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமா?.. என்கின்றார்.  பின் இயேசுவைக் கண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி, அதன்பிறகு அவர் மீது நம்பிக்கை கொள்கின்றார்.
நல்லது யாவும் ஆண்டவரிடமிருந்து வருகிறது... என்கிறது யாக்கோபு புத்தகம்(1: 17).

இன்று நாம் வாழும் உலகில், நாம் முன் சார்பு எண்ணங்களை களைந்து நம்மை நாம் முதலில் நன்கு அறிந்தவர்களாக செயல்பட வேண்டும். நம்மை நாம் அறிந்திட மனமாற்றம் என்பது அவசியமாகிறது.

"மனமாற்றம்" இந்த வார்த்தையே சிலருக்கு வெறுப்பை கொடுக்கிறது. சிலருக்கு பயத்தைக் கொடுக்கிறது. சிலருக்கு கோபத்தை விளைவிக்கிறது. காரணம் "மனமாற்றம்" என்றாலே நமக்கு பிடித்த ஒன்றை, நாம் விரும்புகின்ற ஒன்றை இழக்க வேண்டும். அப்போதுதான் கடவுளுக்கு ஏற்றவர்களாக வாழ முடியும் என்ற செய்தி நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மனமாற்றத்தின் நோக்கம் அதுவல்ல. மனமாற்றம் என்பது நமக்கு பிடித்தவைகளை எல்லாம் விட்டுவிடுவது அல்ல, மாறாக நாம் உண்மையிலேயே யார்? என்பதை கண்டு கொள்வது .

நத்தானியேல் முன் சார்பு எண்ணம் கொண்டிருந்தார். இயேசுவைக் கண்டு அவருடன் உரையாடிய பின் முன் சார்பு எண்ணங்களை களைந்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டார்.  இவரே முதன்முதலில் இயேசுவை மெசியா என கண்டு கொண்டவர் (யோவான் 1: 49).

இன்று முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் நமது வாழ்வை நகர்த்தாமல், (அல்லது) முன்புசார்பு எண்ணங்களை நியாயப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை தொடராது, திறந்த மனதோடு உண்மையை ஏற்றுக் கொள்ள முயலுவோம். நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள முன் சார்பு எண்ணங்களைப் பற்றி இன்றைய நாளில் சிந்திப்போம். 

நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் நம்மை புரிந்து கொள்வோம். நமது வாழ்க்கையில் நத்தானியலைப் போல மனமாற்றத்தின் அடிப்படையில் நம்மை நாம் அறிந்திட மாற்றத்திற்கு வித்திடுவோம்.

"மனமாற்றம் உன்னை அறியவே..." 

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...