கடமையா....? விருப்பமா....?
ஒரு தெருவில் சாக்கடை மூடி திறந்து கிடந்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 7 குழந்தைகள் அந்த சாக்கடை குழியில் விழுந்து விடுகிறார்கள். அதை கவனித்த அந்த குழந்தைகளுள் ஒரு தாய் வேகமாக ஓடிவந்து எல்லா குழந்தைகளையும் காப்பாற்றுகிறார். அத்தோடு அக்குழந்தைகளை அருகில் இருக்கக்கூடிய குழாய் அருகே அழைத்துச் சென்று அனைவரையும் கழுவினால். இதை கவனித்த மற்ற குழந்தைகளின் தாய்மார்கள் வேகமாக ஓடிவந்து நீ எங்கள் குழந்தைகளை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் அனைத்து குழந்தைகளையும் கழுவிக் கொண்டு இருக்கிறாயே உன்னைப் போன்ற மனநிலை கொண்டவர்களாய் யாரும் இவ்வுலகில் இருக்கவே முடியாது என்றார்கள்.
அதற்கு அந்த தாய் ஏ மா நீ வேற... எல்லா குழந்தைகளையும் கழுவினால் தான் என் குழந்தையை கண்டுபிடிக்க முடியும் என்றால்.
நகைச்சுவையாக தோன்றினாலும் இன்றைய உலகில் வாழக்கூடிய பலருக்கு பலவற்றை பற்றிய தெளிவான புரிதல் அவசியமாகிறது.
இன்று நாம் வாழக்கூடிய உலகில் நம்மில் பலருக்கு கடமை என்பது மிகவும் கடினமானதாக தோன்றும் காரணம் அது நமது விருப்பமாக இல்லாததே காரணமாகும்.
கடமை என்பது வேறு, விருப்பம் என்பது வேறு. விருப்பம் என்பது நாம் விரும்புவதை செய்வது. கடமை என்பது நாம் செய்ய வேண்டியவற்றை செய்வது.
இரண்டிற்குமிடையே ஒரு உறவுச் சிக்கல் இருந்து கொண்டுதான் இருக்கும். இவ்வுலகில் நாம் செய்யவேண்டியது ஒன்றாக இருக்கும். ஆனால் நாம் செய்வது ஒன்றாக இருக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் அரசர் ஒருவர் பலரை விருந்துக்கு அழைக்கிறார். ஆனால் அழைக்கப்பட்ட அனைவருமே அழைத்த இடத்திற்கு செல்ல விருப்பம் கொண்டவர்களாக இல்லை. எனவே அரசர் சாலையில் காணும் அனைவரையும் விருந்துக்கு அழைக்கிறார். அரசரின் பணியாட்களின் அழைப்பையேற்று அழைக்கப்பட்ட பலர் விருந்துக்கு வருகிறார்கள். அவர்களுள் ஒருவன் திருமண ஆடையின்றி இருப்பதை அறிந்த அரசர் அவனை ஏன் திருமண ஆடையின்றி விருந்துக்கு வந்தாய்? என்ற கேள்வியை எழுப்பி அவனுக்கு தண்டனையை வழங்குகிறார்.
திருமண விருந்துக்கு வருவது ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால் திருமண விருந்துக்கு வரும் பொழுது திருமண ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களின் கடமையாகிறது. கடமையை செய்யாது விருப்பத்தை மட்டும் நிறைவேற்ற எண்ணி விருந்துக்கு வந்தான் அந்த திருமண ஆடையற்றவன்.
" கடமையை செய்தால் இன்பம் கிடைக்கும். அதையே கடமைக்காக செய்தால் துன்பமே கிடைக்கும்..." என்பது போல திருமணத்திற்கு வரவேண்டுமென விரும்பியவன் திருமண ஆடையை அணிந்து வர வேண்டும் என்ற தன் கடமையை செய்யத் தவறிய போது அவனுக்கு துன்பமே விளைகிறது.
நமது வாழ்வில் நாம் நமது கடமைகளை விருப்பமாக மாற்றும் போது அனைத்தும் சமநிலை பெறுகிறது. கடமையை விருப்பமாக மாற்ற கடமையை முழு மனதுடனும், முழு அர்ப்பணத்துடனும் நாம் செய்ய வேண்டும். அதாவது திருமணத்திற்கு செல்ல விரும்புகிறோம் என்றால் திருமண ஆடையை அணிந்து கடமையை சரியாக செய்யக்கூடியவர்களாக நாம் செயல்படவேண்டும்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது மனுகுலம் வாழ்வு பெற வேண்டும் என்ற தன் கடமையை முழு ஈடுபாட்டுடனும், முழு அர்ப்பணத்துடனும் செய்தார். எனவே இன்றுவரை பல நூற்றாண்டுகள் கடந்தும் அவரை நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த இயேசுவைப் பின்பற்றி வாழக்கூடிய நமது வாழ்விலும் இயேசுவிடம் காணப்பட்ட செயல்பாடுகளான அனைத்தும் நமது வாழ்வில் செயல்வடிவம் பெற வேண்டும்.
கடமையா...? விருப்பமா....? என்று கேள்வியை எழுப்பினால்.
கடமைகளை முழு விருப்பத்தோடு செய்யக்கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும். என்பதை தீர்வாகும்.
கடமையை முழு ஈடுபாட்டுடனும், முழு அர்ப்பணத்துடன் செய்திட முயலுவோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக