"அன்பே தலைசிறந்தது..."
வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும்
அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது
மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமென்றே ?
யானெதற்கும் அஞ்சுகிலேன் ,
மானுடரே ,
நீவிர் என்மதத்தைக் கைக் கொண்மின் ;
பாடுபடல்வேண்டா ;
ஊனுடலை வருத்தாதீர் ; உணவியற்கை கொடுக்கும் ;
உங்களுக்குத் தொழிலிங்கே
அன்புசெய்தல் கண்டீர்...."
அதாவது மனிதர் உழா விட்டாலும் வரப்பு காட்டாவிட்டாலும், மழை பொழிய வேண்டிய நேரத்தில் பொழியும். அதுபோலவே மரம், செ,டி கொடிகள் வளர வேண்டிய நேரத்தில் வளரும் இம்மண்மீது.. ஆனால் நான் அஞ்சுவது எதற்கு எனில்...
மனிதரே!
மதம் என்னும் பெயரால் நீங்கள் செய்வதை கண்டு தான் அஞ்சுகிறேன். இந்த உலகில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை அன்பு செய்வது மட்டுமே என்கிறார் பாரதி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவை சோதிக்கும் நோக்குடன் தலைசிறந்த கட்டளை எது? என கேள்வியை எழுப்புகிறார்.
இயேசு அவரிடம் உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் கடவுளை நேசிப்பது என்கிறார். மேலும் உன்மீது அன்பு கூறுவது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை என்கின்றார்.
விவிலியம் நம்மை இரண்டு வகையான நபர்களை அன்பு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. ஒன்று நமக்கு அடுத்து இருப்போரை, மற்றொன்று நமது பகைவர்களை.
இந்த இரண்டு பேரும் பெரும்பாலும் ஒரே நபரேயன்றி. இரு நபர்கள் அல்ல. அதாவது நமது பகைவர்கள் அடுத்து இருப்பவர்களேயொழிய எங்கோ இருப்பவர்கள் அல்ல என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜி.கே. செஸ்டர்டன்.
நம்மில் பலருக்கு கடவுளை நேசிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மனிதர்களை நேசிப்பதில் தான் அதிலும் குறிப்பாக அருகில் இருப்பவர்களை நேசிப்பது தான் பெரிய சிக்கலாக இருக்கிறது.
கண்ணில் காணும் மனிதரை அன்பு செய்ய இயலாத நம்மால், கண்ணில் காண இயலாத கடவுளை ஒருபோதும் அன்பு செய்ய இயலாது என்கிறார் அன்னை தெரசா.
சற்று ஆழமாக இறைவார்த்தைகளை உற்று நோக்கினோம் என்றால் "கடவுள் மனிதரை தன் உருவிலும் சாயலிலும் படைத்தார்" என விவிலியத்தில் தொடக்க நூல் கூறுகிறது. அப்படியாயின் உலகிலுள்ள ஒவ்வொருவரும் கடவுளின் உருவமே, கடவுளின் சாயல் மிக்கவர்களே. இவர்களை அன்பு செய்யாது கடவுளை அன்பு செய்ய நம்மால் இயலாது.எனவே கண்ணில் காணும் அடுத்த நபர்களை அன்பு செய்து வாழ நமது வாழ்வை மாற்றி விடுவோம்.
இன்றைய நமது சிந்தனையும், செயலும் நமது நாளைய வாழ்க்கையை வடிவமைக்கும் என்பார்கள். எனவே அடுத்தவரை அன்பு செய்யக்கூடிய அன்பின் உருவமாக, அகிலத்தில் திகழ்ந்திட... நமது சிந்தனையையும், செயலையும் மாற்றிட இறையருளை வேண்டி... காண்பவரை இன்முகத்தோடும், அன்போடும் நோக்கிட முயலுவோம்.
"அன்பே தலைசிறந்தது..."
காண்பவரை இன்முகத்தோடும் அன்போடும் நோக்குவோம்! நன்றி!
பதிலளிநீக்கு