"துன்பங்களுக்கு மத்தியில் துணிவோடு செயல்படுவோம்..."
போர்க்கப்பல் ஒன்று ஆபத்துக்கள் சிக்க நேரிட்டால், படை வீரர் ஒருவர் 'அப்படியே நிற்க' என்ற ஒரு கட்டளையை இடுவார். உடனே அனைவரும் ஒரு சில வினாடிகள் அசையாமல் இருப்பர். அந்த ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு ஆபத்தை மேற்கொள்ளும் முயற்சியில் படைவீரர்கள் அனைவரும் இணைந்து ஈடுபடுவர்.
இந்த ஒரு சில வினாடிகள் பதற்றம் அடையாமல் எது சரியானதோ அதை சிந்தித்து அதை செய்வதற்கான தெளிவை கொடுக்கிறது என அங்குள்ள அனைவரும் கூறுவார்கள்.
இன்று நாம் வாழ கூடிய உலகில் எதிர்பார்ப்பே இல்லாமல் வாழக் கூடிய மனிதர்கள் இல்லை. வாழ்வில் எதிர்பார்ப்புகள் உள்ளவரை ஏமாற்றங்களுக்கு வாய்ப்புகள் உண்டு. ஏமாற்றங்கள் ஏற்படும் போது உடனே தொற்றுக் கொள்ளக் கூடிய நோய்தான் சந்தேகம். சந்தேகம் நம்மையும் வாழவிடாது பிறரையும் வாழ விடாது. இச்சந்தேகம் உறவில் விரிசல், ஒதுங்கி வாழுதல், வீண்பழி சுமத்தல், பிரிந்து போதல் என தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்விலே ஏமாற்றங்கள் ஏற்பட்டு விட்டால் அவற்றை அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளக்கூடிய பக்குவத்தை நாம் பெற வேண்டும். எச்சரிக்கை உணர்வு என்பது நமது அனுபவங்களிலிருந்து மட்டுமன்று பிறர் அனுபவங்களில் இருந்தும் கற்க வேண்டிய பாடமாகும்.
இன்றைய நற்செய்தி வாசகங்கள் அடிப்படையில் இயேசுவின் வாழ்வில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
இயேசு தனது சொந்த ஊர் மக்களால் வெருக்கப்படுகிறார். இயேசுவிடமிருந்து சொந்த ஊர் மக்கள் பலவிதமான அதிசயங்களை எதிர்பார்த்தனர். ஆனால் இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களின் வாழ்வை மாற்றிக் கொண்டு, அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய அங்கு யாரும் முன்வரவில்லை. தனது சொந்த ஊர் மக்களின் எண்ணத்தை அறிந்த இயேசு அவர்களின் நிலையை அவர்களுக்கு விளக்குகிறார். அதன் விளைவாக பலவிதமான இன்னல்களை சந்திக்கின்றார். இருந்தபோதும் மனம் மாறி அவர்கள் நற்செய்தியை எடுத்துரைக்கவும், கடவுளின் உண்மைச் சீடராக அவர்கள் மாறிவிட வேண்டும், அவர்கள் வாழ்வை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு எசாயா சுருளேட்டை எடுத்து வாசித்த போது அதில் வாசிக்கப்பட்ட இறைவார்த்தையின் அடிப்படையில் கடவுளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.
திருக்குறளில் திருவள்ளுவர்...
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
அதாவது ஒரு செயலின் முடிவில் இன்பம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு ஒரு செயலைத் தொடங்கும் போது, துன்பங்கள் மிகுதியாக வந்தாலும், தளராத துணிவோடு நாம் அச்செயலை செய்யவேண்டுமென திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
இயேசுவும் இவ்வுலகில் வாழ்ந்த போது மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், என்பதற்காக சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், தன் நிலை மாறாது இறையாட்சிக்கு வித்திட்டார். அதன் விளைவாக பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தாலும் தன் பணியில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. அவரைப் போலவே நமது வாழ்வில் நாமும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்கிட இயேசு காட்டிய பாதையில் பயணமாவோம்.
உலகில் எதுவுமே நிரந்தமில்லாத போது நம்முடைய துன்பங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்?
பதிலளிநீக்கு"இதுவும் கடந்து போகும்" என்ற நம்பிக்கையோடு இறை இயேசுவின் பாதையில் துணிவோடு பயணிப்போம். நன்றி.