சனி, 22 ஆகஸ்ட், 2020

"நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்..." (23.08.2020)


"நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்..."

இன்றைய முதல் வாசகத்தில் எலியாக்கிமை ஆண்டவர் தேர்வு செய்து அதிகாரத்தை வழங்குவதை நாம் முதல் வாசகத்தில் வாசிக்க கேட்கின்றோம். அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவின் மீது திரு அவையை கட்டி அவருக்கு அதிகாரம் வழங்குவததை நாம் வாசிக்கின்றோம்.

இஸ்ரயேல் மக்களிடையே பலவிதமான மக்கள் இருந்தபோதும் கடவுள் எலியாக்கிமை தேர்ந்தெடுத்து அதிகாரத்தை வழங்குகிறார். அதுபோலவே தன்னோடு பயணித்த சீடர்கள் பலருல் பேதுருவை மட்டும் தேர்வு செய்து அவர்மீது திரு அவையை எழுப்புகிறார். இதில் ஆண்டவர் ஏன் எலியாக்கிமையும், பேதுருவையும் அதிகாரத்திற்கு தேர்வு செய்தார்?என்ற கேள்வியை எழுப்பினால். அது கடவுளின் விருப்பம் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக நாம் உணரலாம். புனித பவுலடியார் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் கடவுளின் மனதை அறிபவர் யார் ? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
உலகில் நடக்கக்கூடிய ஒவ்வொன்றும் கடவுளின் விருப்பத்தால் நடக்கின்றன.

ஒரு மனிதன் தன் கையில் இரண்டு குடங்களை வைத்திருந்தான். இரண்டு குடங்களை பயன்படுத்தி தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வருவது வழக்கம். அவ்வாறு ஒவ்வொரு நாளும் செய்து வந்தான். ஒரு நாள் அவரது கையில் இருக்கக்கூடிய ஒரு குடம் அவனிடத்தில் பேசத் தொடங்கியது. அந்த குடம் அவனிடத்தில் சொன்னது. நான் உங்களுடைய கையில் இருக்கிறேன். ஆனால் என்னிடம் சிறிய அளவு ஒரு துளையானது இருக்கின்றது. அந்த துளையின் காரணமாக நீங்கள் கடினப்பட்டு தண்ணீர் எடுத்துச் செல்லும் பொழுது பாதி நீரானது வெளியேறிவிடுகிறது. எனவே உங்களுடைய உழைப்புக்கான முழுமையான பலனை நீங்கள் அடைய முடியாமல் போகிறது. ஆனால் மறுபுறம் உள்ள குடமோ முழுமையாக தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது என்று கூறி வருத்தப்பட்டது. ஆனால் அந்த நபர் அந்த குடத்தை பார்த்து உன்னில் இருக்கக் கூடிய சிறு துளையை நான் என்றோ கவனித்துவிட்டேன். இருந்த போதும் நான் உன்னை அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். காரணம் நான் நாளை  தண்ணீர் எடுத்துச் செல்ல உன்னை பயன்படுத்தும்போது, நீ வரக்கூடிய பகுதிகளை உற்று நோக்கு என்று கூறினான். அந்த கூடமும் உற்று நோக்கியது. அப்போது அந்த ஓட்டை குடம் இருக்கக்கூடிய பகுதி மிகவும் வளமையாக இருந்தது. ஆனால் அதற்கு எதிர் பகுதி வளமையற்று இருந்தது. அப்போது அந்த குடம் அவனிடத்தில் எப்படி இது என்று கேட்டதற்கு அந்த நபர் கூறினார்.  உன்னுடைய ஓட்டைக் குடத்தில் இருந்து விழக்கூடிய நீர் படக்கூடிய இடங்களில், நான் சிறிய விதைகளை தூவினேன். அந்த விதைகள் எல்லாம் வளர்ந்து இன்று நிறைய பூக்களை தருகிறது. அந்த பூக்களை கொண்டு தான் நான் அனுதினமும் ஆலயத்தில் வழிபாடு செய்து வருகிறேன் என்று கூறினார்.

இன்று நாம் வாழக்கூடிய உலகில் நம்மிடத்தில் குறைகள் பல இருக்கலாம், ஆனால் அந்தக் குறைகளை எல்லாம் பல நேரங்களில் இறைவன் கண்டும் காணாமல் இருப்பதாக நமக்குத் தோன்றும். ஆனால் அதை பயன்படுத்தி இறைவன் இந்த உலகத்தில் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகிறார். 
உதாரணமாக 
ஹெலன் கெல்லர் என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். பிறந்தது முதல் கண் தெரியாதவராக, காது கேட்க  இயலாதவராக இருந்தார். இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருந்தால் வாழ்க்கையையும், கடவுளையும் நாம் வஞ்சித்து புலம்பிக் கொண்டிருப்போம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் இத்தடைகளை எல்லாம் கடந்து பல சாதனைகளை படைத்தார். எழுத்தாளராகவும், அரசியலில் ஈடுபட்டாளராகவும், பேராசிரியராகவும் விளங்கினார். மேலும் ஏராளமான நிறுவனங்கள் உடல் ஊனமுற்றவர்களுக்காக ஏற்படுத்தினார். 

இவரைப் போலவே இரண்டு கைகளும், கால்களும் இல்லாத நிக் என்ற நபரைப் பற்றியும் நாம் அறிந்து இருக்கலாம். இன்று இவர் பலருக்கு தன்னம்பிக்கை தரும் சக்தியாக திகழ கூடியவர்.

இன்று  நம்மிடம் இருக்கக்கூடிய குறைகளை எண்ணி, நம்மை நாம் ஏற்றுக்கொள்ளாமல் அடுத்தவரோடு மதிப்பிட்டு பல நேரங்களில் இவ்வுலகில் நாம் இப்படிக் உருவானதற்கான காரணம் என்ன என்பதை அறியாதவர்களாகவே இருந்து செல்கிறோம்.

குறைகளோடு இருப்பினும் நாம் அனைவரும் கடவுளின் கையில் இருக்கக்கூடியவர்கள்.  கடவுள் நம்மை பயன்படுத்தி இச்சமூகத்திற்கு பலவிதமான நன்மைகளை செய்கின்றார். அதனடிப்படையில் இயேசுவோடு எத்தனையோ நபர்கள் இருந்தாலும், அவர்களுள் பேதுருவை தேர்வு செய்து அவரின் தலைமையில் திரு அவையை உருவாக்கினார். இந்த திரு அவையால் இவ்வுலகத்திற்கு எத்தனையோ நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்றன.

அனுதினமும் திருப்பலிகளில் கலந்து கொள்ளக்கூடிய நாம் அனைவரும் இந்த திருஅவையை வழிநடத்தக்கூடிய தலைவர்களுக்காக ஜெபிக்கிறோம். தொடர்ந்து திரு அவைக்காக  ஜெபிக்கவும், திருஅவையில் இருக்கக்கூடிய நிறை குறைகளை ஏற்றுக் கொள்ளவும், குறைகளை சரி செய்து நல்ல ஒரு சாட்சியை வாழ்வாக திருஅவையில் உள்ளவர்கள் விளங்கும், இந்த திருஅவை பல நல்ல விதமான முயற்சிகளை தொடர்ந்து செய்யவும் இன்றைய நாளில் சிறப்பாக திருஅவையில் வழிநடத்தக்கூடியவர்களுக்காக ஜெபிப்போம்.

திரு அவையின் தலைவராக நாம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்  என பலரை கூறினாலும், உண்மையில் திருஅவையின் தலைவர்கள் பொதுமக்களாகிய நாம் ஒவ்வொருவருமே. நாம் நமது வாழ்வை சரி செய்துகொள்ளவும் நம்மை வழிநடத்த தேர்வு செய்யக்கூடிய இந்த திருஅவை தலைவர்கள் நேரிய வழியில் செயல்படவும், நமது வாழ்வால் அவர்களுக்கு வழிகாட்டக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். ஏனெனில் திருஅவை தலைவர்கள் உருவாகுவது குடும்பங்களிலிருந்து. 
குடும்பங்களில் நல்ல நேர்மறையான பொதுநல சிந்தனை கொண்ட நல்ல  நபர்களாக நமது குழந்தைகளை உருவாக்கி திரு அவையை வழிநடத்த இறைவன் கையில் நம் குழந்தைகளை காணிக்கையாக ஒப்படைப்போம். 


"நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்..."

2 கருத்துகள்:

  1. ஆண்டவர் உங்கள் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். நீங்கள் அவருக்கு உரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  2. கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்களாக! அவரது அன்பிலும் அருளிலும் நிறைந்தவர்களாக! செல்கின்ற இடமெல்லாம் அன்பால் நன்மைகள் செய்பவர்களாக வாழ்வோம்! நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...