வியாழன், 13 ஆகஸ்ட், 2020

"வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்..."


"வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்..."

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் நமது குடும்ப உறவுகளை பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன.

இனி அவர்கள் இருவர் அல்ல ஒருவர் என்ற இயேசுவின் வார்த்தைகள் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுப்பதும், இருப்பதை பகிர்ந்து கொள்வதும் அனுதினமும் குடும்பங்களில் மட்டுமே நடக்கக்கூடிய தொடர் நிகழ்வாக உள்ளது.

இன்றைய நாளிலே திருமணத்தின்போது கணவனும் மனைவியும் இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்று கூறிய வாக்குறுதிகளை  நினைவு கூற அழைக்கப்படுகிறோம்.

வாக்குறுதிகள் என்பது வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமல்ல அது வாழ்வாக படவேண்டியவை.

உயிருள்ளவரை இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்று கூறிய வாக்குறுதிகளை வாழ்வாக்க கணவன்-மனைவி இருவருக்கும் சம உரிமையும், கடமையும், பொறுப்பும் உள்ளது. இதையே  இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

ஒருவர் மற்றவருக்காக தன்னையே அர்ப்பணித்து வாழக்கூடிய புனித உறவான குடும்ப உறவுக்காக இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு நன்றிகளை சமர்ப்பிப்போம்.

திருமணத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஏற்றவண்ணம் நமது வாழ்வு இருக்குமாயின் கடவுளுக்கு நன்றி கூறுவோம். ஒருவேளை வாக்குறுதிகளை மறந்து தடம்மாறி இருக்கக்கூடிய வாழ்க்கையில் நாம் இருப்போமாயின் நமது செயல்களை மாற்றி அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

கணவன்-மனைவி பிரிந்து இருப்பதை கடவுள் விரும்புவதில்லை.கடவுள் விரும்பாத ஒன்றை நாமும் நமது வாழ்வில் செயல்படுத்தாமல் இருக்க வேண்டும். 

ஆண்டவர் இயேசுவை பின் செல்லக்கூடிய நாம் நமது குடும்பங்களில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி கனவான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை தழைத்தோங்கிட குடும்பம் என்பது ஒரு குட்டி திருஅவை என்பதை மனதில் கொண்டவர்களாக, நமது குடும்பங்களை அமைத்துக்கொள்ள இறையருளை நாடி இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடராக அவரை பின்தொடர்ந்து செல்லும் குடும்பத்தினராக நமது குடும்ப செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள உறுதியேற்போம்.

"வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்..."


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...