ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

"விழுவது விளைச்சலைத் தருவதற்காகவே..."


"விழுவது விளைச்சலைத் தருவதற்காகவே..."

இயேசுவில் அன்புக்குரியவர்களே  இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிய விட்டால் அது அப்படியே இருக்கும். மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்..."  இன்றைய நாளில் நாம் அனைவரும் மிகுந்த விளைச்சலை தருவதற்கு அழைக்கப்படுகிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயேசு கிறிஸ்துவை இன்றும் நாம் பின்பற்றுகிறோம் என சொல்லிக்கொண்டு அவரை பின் தொடர்கிறோம். ஆனால் அவரைப் பின்தொடர்வதால் நம்மிடையே எழுந்த மாற்றங்கள் என்ன? அவரைப் பின்பற்றுவதால் நாம் இந்த உலகிற்கு கொடுத்த மிகுந்த விளைச்சல் என்ன? என்பதை சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

இயேசு மூன்றாண்டுகள் தன் பணி வாழ்வால் முக்கால்வாசி உலகத்திலுள்ள மனிதர்களின் மனதை கவர்ந்தார். அவரைப் பின்பற்றிய பலர் பல நல்ல சாட்சிகளாக, முன்மாதிரிகளாக  இருக்கின்றார்கள். 

உதாரணமாக: 

நாம் புனிதர்களை எடுத்துக்கொள்ளலாம். 

புனிதர்களை போலவே நாமும் அனுதினமும் ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிறோம். ஆனால் நாம் எத்தகைய மாற்றமாக... எத்தகைய முன்னுதாரணமாக இந்த உலகத்தில் வலம் வருகிறோம்? என நம்மையே நாம் கேள்விக்கு உட்படுத்தி பார்ப்போம்.

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். நாமும் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகிறோம் என சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் தங்களுடைய செயலாலும், சொல்லாலும் மாற்றத்தை உருவாக்காமல், மாற்றத்திற்கான காரணிகளாக இல்லாமல் இருப்போமாயின் நாமும் அப்படியேதான் மண்ணில் மடியாத கோதுமையாக  இருப்போம்.

ஆனால் இன்றைய நாளில் நாம் அனைவரும் மண்ணில் விழுந்து மடிந்த ஒரு கோதுமை எவ்வாறு அதிக விளைச்சலை தருகிறதோ அதுபோல இருப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.

இயேசுவை பின்பற்றுகிறேன் என்ற வாய் வார்த்தைகளையும், வெளி அடையாளங்களையும் தவிர்த்து சொல்லாலும்,செயலாலும் இயேசு கூறிய படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக, அதன் வழியாக பலருக்கு பலவிதமான மிகுந்த விளைச்சலைத் தரக் கூடியவர்களாக இவ்வுலகில் செயலாற்றிட இறைவனது அருளை வேண்டுவோம். "விழுவது விளைச்சலைத் தருவதற்காகவே..." என்பதை மனதில் கொண்டு ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய மண்ணில் விழுந்து மடிந்த கோதுமையாக மிகுந்த விளைச்சலை இச்சமூகத்தில் உருவாக்கிட ஆண்டவர் இயேசுவை பின் செல்வோம்.

"விழுவது விளைச்சலைத் தருவதற்காகவே..."

1 கருத்து:

  1. இந்த உலகம் முழுவதையும் நம்மால் மாற்ற முடியாவிட்டாலும் ஒருவரின் உலகையாவது நாம் மாற்றுவோம்! மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...