திங்கள், 17 ஆகஸ்ட், 2020

எங்களுக்கு என்ன கைமாறு கிடைக்கும்?


எங்களுக்கு என்ன கைமாறு கிடைக்கும்?


அனைவருக்கும் வணக்கம் .
இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பது பழமொழி 
பதவி இல்லாதவன் பாதி மனிதன் என்பது புதுமொழி 

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகில் எதை செய்தாலும் எங்களுக்கு கைமாறாக என்ன கிடைக்கும் பணமா? பதவியா? பொருளா? எனக் கேட்பவருக்கு பஞ்சமில்லை.

இன்று இவ்வுலகில் எதை செய்தாலும் கைமாறாக என்ன கிடைக்கும் ? என்ற எதிர்பார்ப்போடு செயல்படுபவர்களில் அதிகம்.
இதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.

"நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றியவர்களாயிற்றே எங்களுக்கு என்ன கிடைக்கும் ?" என்று இயேசுவிடம் சீடர்கள் கேட்டார்கள்.

பொதுவாக கடவுளின் கைமாற்றை எதார்த்தமாக இப்படி கூறுவது உண்டு.

அரசன்  தன் மந்திரியிடம் கடவுள் ஒரு திருடன் காரணம் ஆதாம் தூங்கும் போது அவனுக்குத் தெரியாமலேயே விலா எலும்பு ஒன்றை திருடி விட்டார் என்றான்.

அதைக்கேட்டு மந்திரியார் அரசே! வெளிப்படையாக பார்க்கும்போது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை போலத் தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல உங்களிடம் உள்ள செப்பு குடத்தை ஒருவன் உங்களுக்கு தெரியாமல் எடுத்து விட்டு அதற்கு பதிலாக தங்க குடத்தை  கொடுத்தால் அவனை குறை சொல்வீர்களா? என்றார். 
அரசர் நிச்சயமாக இல்லை என்றார்.

உடனே மந்திரியார்  அது போலத்தான் கடவுளும் விலா எலும்பை எடுத்து கொண்டார். ஒரு பெண்ணை பரிசாக கொடுத்தார் என்று கூறினார்.

கடவுளோடு நாம் கொள்ளும் உறவின் தொடக்கத்தில் சிலவற்றை நாம் இழக்க நேரிடக் கூடும். ஆனால் இந்த இழப்பிற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பல மடங்கு நன்மைத்தனத்தையும், வரங்களையும் வாழ்வில் அனுபவிக்க முடியும்.

கடவுளின் கைமாறு கணக்கிட முடியாதது. ஆனால் அவருக்காக அனைத்தையும் இழக்க நாம் தயாரா? என்ற கேள்வியை எழுப்பினால் தயார் என கூறக் கூடியவர்கள் பலர். ஆனால் ஆண்டவர் இயேசுவுக்காக அனைத்தையும் இழப்பவர்கள் மிகவும் குறைவு.

கடவுளின் இறையாட்சி கனவான அன்பு, நீதி, சமத்துவம், மனிதநேயம் இதற்காக தம்மையே இழந்தவர்கள் பலர். இதில் இயேசுவின் சீடர்களும் அடங்குவர். இவர்களின் உடல் இம்மண்ணை விட்டு அழிந்தாலும் இவர்களின் புகழ் இன்றளவும் அழியாமல் அனைவர் மனதிலும் நிலையாக பதிந்துள்ளது.

எரிந்துகொண்டிருக்கும் மெழுகு திரியைப் பார்த்து யாரும் அழிந்து கொண்டிருக்கிறது என கூறுவதில்லை.
அதுபோலவே ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி கனவுக்காக தன்னையே இழக்கக்கூடிய எவரும் அழிந்து போவதில்லை. 

நிலை வாழ்வுக்கு நாமும் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ள ஆண்டவர் இயேசுவுக்காக அற்பசுகங்களை கைவிட்டு இறையாட்சியின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவத்திற்காக சிறுசிறு காரியங்களை இழக்கத் தயாராவோம்.

என்ன கைம்மாறு  கிடைக்கும் ?என்பதை விட இயேசுவுக்காக எதை இழக்கத் தயாராக இருக்கிறோம்?என்று சிந்திப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...