வியாழன், 27 ஆகஸ்ட், 2020

திருமண திருப்பலிக்கான சிந்தனை - 1


கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாளில் திருமண தம்பதிகளாக இங்கு வந்திருக்கக்கூடிய உங்களை கடவுளின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஆறு அருள் சாதனத்தை தங்கள் வாழ்க்கையில் பெறுகிறார்கள்.
1. திருமுழுக்கு
2.  புதுநன்மை
 3. ஒப்புரவு 
4. உறுதிபூசுதல் என்ற நான்கு அருள் சாதனத்தையும் தனிமையில் பெற்றுக் கொண்ட நீங்கள், இப்போது ஐந்தாவது அருள் சாதனமான திருமணத்திற்காக இணைந்து வந்திருக்கிறீர்கள்.

 இன்று இந்த அருள் சாதனத்தை பெறுவதற்காக இணைந்து இருக்கக்கூடிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மூன்று காரியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

1. உங்கள் திருமண வாழ்வில் நீங்கள் கடவுளோடு இணைந்து இருக்க வேண்டும்.

செல்வன்...... செல்வி...... என அழைக்கப்பட்டு கொண்டிருந்த  நீங்கள் இருவரும் இன்றைய நாளில் இருந்து இந்த திருமணம் என்னும் அருள் சாதனத்தை பெறுவதன் வழியாக, இன்று முதல் திரு........ திருமதி....... என்று அழைக்கப்படுகிறார்கள். 

உங்கள் திருமண வாழ்வை நீங்கள் கடவுளின் முன்னிலையில் துவங்குவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். திருமண வாழ்வை துவங்குவதற்கு மட்டும் கடவுள் முக்கியமல்ல உங்கள் வாழ்க்கையின் இறுதி உயிர் மூச்சு உள்ளவரை  கடவுளோடு நீங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுளை சாட்சியாகக் கொண்டு திருமண வாழ்வில் இணையக் கூடிய நீங்கள் இருவரும் இறுதிவரை கடவுளோடு இணைந்திருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கு அருளுகின்ற குழந்தைகளை நல்ல முறையில் ஞானத்தோடும், இறை உணர்வோடும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு இச்சமூகத்தில் உங்களுக்கு   இன்று அதிகமாகிறது. எனவே கடவுளோடு இணைந்திருங்கள்.

2. உங்களுக்குள் இணைந்திருங்கள்.


கடவுளின் முன்னிலையிலும் இறைமக்களின் முன்னிலையிலும் இன்று நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என ஒருவருக்கு ஒருவர் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளல்ல அவை செயல் வடிவம் பெற வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் உங்களுக்குள் எப்போதும் இணைந்திருக்க வேண்டும்.

இன்று நாட்டில் பல இடங்களில் ஒலிக்கக் கூடிய வார்த்தைகள் தனித்திரு என்பதாகும். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் இணைந்திருங்கள்.

நீங்கள் இருவரும் இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்று கூறவிருக்கும்  நீங்கள் கொடுக்கும்  வாக்குறுதியை செயலில் வெளிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்குள் கோபமோ, பொறாமையோ, சண்டையோ இருக்கக்கூடாது. 

உங்களுக்குள் விட்டுக்கொடுத்து கொள்ளுங்கள். ஆனால் யாரிடமும் உங்களை நீங்கள் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். 

இறைவனின் முன்னிலையில் இணையக் கூடிய நீங்கள் இறுதிவரை இணைந்தே இருங்கள் எனவே உங்களுக்குள் எப்போதும் இணைந்திருங்கள்.

3. உறவுகளோடு இணைந்திருங்கள்

திருமணம் என்னும் இந்த திருவருள் சாதனத்தின் வழியாக கணவன் மனைவியாக மாறக்கூடிய  உங்கள் வழியாக பல உறவுகள் இன்று இணைகின்றன. உறவுகளின் மத்தியில் இன்று இணையக் கூடிய நீங்கள் இருவரும், இறுதிவரை உறவுகளோடு இணைந்திருக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். 

கணவனுக்கு மனைவி வழியாக பல உறவுகள் கிடைக்கின்றன. அந்த உறவுகளை தன் சொந்த உறவுகள் என்று எண்ணி எப்போதும் அவர்களோடு இணைந்து இருக்க வேண்டும். அதுபோலவே மனைவி என்பவளும் கணவன் வழியாக வருகின்ற அனைத்து உறவுகளையும் இன்முகத்தோடு எப்போதும் ஏற்றுக்கொண்டு, உபசரிக்க கூடிய நல்ல ஒரு மனைவியாக திகழ வேண்டும். 
இன்று உங்களுக்கு இந்த திருமணம் என்னும் அருள்சாதனத்தின் வழியாக கிடைக்கக்கூடிய புதிய உறவுகளை எப்போதும் இறைவன் தந்த பரிசு என்பதை உணர்ந்தவர்களாக உறவுகளோடு எப்போதும் இணைந்து வாழ அழைக்கப்படுகிறார்கள்.

எனவே அன்புக்குரியவர்களே திருமணம் என்னும் அருள்சாதனத்தால் இணைய வந்திருக்கக்கூடிய நீங்கள் இருவரும் கடவுளோடும், உங்களுக்குள்ளும், உறவுகளோடும் எப்போதும் இணைந்து ஒருவரோடொருவர் இன்புற்று வாழ இன்றைய நாளில் உங்களுக்காக இறையருளை நானும் இங்கு வந்து இருக்கக்கூடிய உறவினர்களும் இணைந்து இறைவனிடத்தில் ஜெபித்து மன்றாடுகிறோம். 

இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...