செவ்வாய், 6 செப்டம்பர், 2022

கடமையை உணர்ந்து கடமையாற்றுவோம்! ( 25-8-22 )

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


                   இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்பிக்கைக்குரியவர், இந்த நம்பிக்கைக்குரிய கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவருமே, அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொண்டு,  நல்லதொரு இறை மக்களாக இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகிறார்.  

      இந்த முதல் வாசகத்தின் பின்னணியோடு நற்செய்தி வாசகத்தை நோக்குகிற போது,  நாம் ஒவ்வொருவருமே நமது கடமைகளை சரிவர செய்யக்கூடிய நல்ல பணியாளர்களாக, பொறுப்பாளர்களாக, நாம் இருக்க வேண்டுமென்ற அழைப்பை இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்குத் தருகிறார்.

           கடமையை செய்கின்றபோது கடமைக்காக செய்யாமல் நமது கடமையை உணர்ந்தவர்களாக, மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, கடவுள் ஒருவருக்கே கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் நாம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, நமது கடமைகளை சரிவர செய்வதற்கான ஒரு அழைப்பினை இறைவன் நல்ல வீட்டு வேலையாள் உவமை வழியாக நமக்கு உணர்த்துகிறார். 

           இந்த இறை வார்த்தைப் பகுதியோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொண்டு நம்பிக்கைக்குரிய கடவுளுக்கு நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக நாம் இருப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

திருத்தூதர் பர்த்தலமேயு! (24-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


          இன்று தாய்த்திரு அவையானது திருத்தூதர் பர்த்தலமேயுவை நினைவு கூர்ந்து கொண்டாடிட நமக்கு அழைப்பு விடுகிறது. விலியத்தை பொறுத்த வரையில் இவரை நத்தனியேல் என்று அழைத்து இருக்கிறார்கள். இவரை இயேசு கபடற்றவர் என குறிப்பிடுகிறார்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்பைக் கண்டவர். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு பயணித்த போது அவரது வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்வை அவருக்கு உகந்த ஒரு வாழ்வாக மாற்றிக் கொண்டு அவரின் உண்மை சீடராக, படைப்பிற்கு எல்லாம் சென்று நற்செய்தி பறைசாற்றுகின்ற ஒரு மனிதனாக, இந்த பர்த்தலமேயு விளங்கினார் என்பதை அவரின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த பர்த்தலமேயுவை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில், இறைவன் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம், இந்த பர்த்தலமேயுவை  போல நாமும் கடவுளின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக, அந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற  மனிதர்களாக, இச்சமூகத்தில் வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

தூயவரைப் பின்பற்றும் தூய வாழ்வு! (23-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 



           நாம் ஒவ்வொருவருமே கடவுளோடு இணைந்து வாழ்வதற்கான ஒரு அழைப்பை இன்றைய முதல் வாசகம் வாயிலாக திருத்தூதர் பவுல் நமக்கு கொடுக்கிறார். கடவுளோடு இணைந்து வாழ வேண்டுமாயின், உட்புற தூய்மை என்பது அவசியமானது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. குருட்டு வழிகாட்டிகளாக,  தவறான பாதையில் மக்களை வழிநடத்த கூடியவர்களாக,  நாம் இல்லாமல் நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொண்டவர்களாக நமது எண்ணங்களையும் செயல்களையும் கடவுளுக்கு உகந்ததாக மாற்றிக் கொண்டு, அவரின் பாதையில் பயணம் செய்கின்ற மனிதர்களாக மற்றவர்களையும் அவரின் பாதையில் பயணம் செய்ய ஊக்கமூட்டவும்,  நாம் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

                    இந்த உள்ளார்ந்த மாற்றத்தோடு, தூய்மையோடு கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ்ந்து,  அவரோடு இணைந்து என்றும் இன்புற்று வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

அன்னை மரியா விண்ணக அரசி. (22-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


இன்று தாய்த்திரு அவையானது, கன்னி மரியா, இறைவனின்  அரசி என்பதை நினைவுகூர்ந்து கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் அன்றைய காலகட்டத்தில் அடிமைத்தனத்திலிருந்து நம்பிக்கையற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு,  நம்பிக்கையின் அடிப்படையில் உங்களுக்கு ஒரு ஆண்மகவு தரப்படும் என இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த வார்த்தைகளை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

      நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து வாசிக்க கேட்டோம். கன்னியாக இருந்த நிலையிலும் கடவுளின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த ஒரு பெண்மணியாக கடவுளை தன் வயிற்றில் சுமந்து, இந்த மண்ணில் இயேசுவுக்கு உரு கொடுத்தவர் அன்னை மரியா.

        இந்த இயேசு கிறிஸ்துவை விண்ணக அரசராக நாம் பார்க்கிறோம். விண்ணகத்தின் அரசராகிய இந்த இயேசு கிறிஸ்துவை சுமந்த தாயும் விண்ணக அரிசியாக திகழப்படுகிறாள் . திகழப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த அன்னை மரியா, விண்ணக அரசி என்பதை நாம் கொண்டாடுவதற்கான ஒரு அழைப்பைத் திரு அவை நமக்கு இன்று வழங்கி இருக்கிறது. சமூகத்தில் இருந்த பலவிதமான சட்டதிட்டங்களுக்கு மத்தியிலும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், கடவுளின் வார்த்தைகளின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்ட ஒரு பெண்மணியாக, கடவுளுக்காக தன் வாழ்வை அன்னை மரியா அர்ப்பணித்தது போல, நாமும் அர்ப்பணிப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார். 

             இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, கடவுளின் வார்த்தைகளுக்கு மட்டுமே கீழ்படிந்து, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழுகிற மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

மீட்பினை உரிமையாக்கிக் கொள்வோம்! (21-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
  
          

மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே, வாழுகிற ஒவ்வொரு நாளுமே, எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தாலும், வாழுகிற ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு எதுவாக இருக்கிறது என சிந்திக்கிற போது, ஒவ்வொரு மனிதனுமே இறுதி நாளில் மீட்கப்பட வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு, தம் வாழ்வை நகர்த்தக்கூடியவர்களாக இருக்கின்றோம். இறைவன் நம்மை மீட்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார். 

    அவரின் மீட்பை நாம் கண்டு கொள்ள வேண்டுமாயின் இவ்வுலக வாழ்வில் நாம் எண்ணுவது எதுவாக இருந்தாலும், நாம் செய்வது எதுவாக இருந்தாலும், அதை கடவுள் அறிய மாட்டார் என்பது அல்ல, நமது எண்ணங்களையும் செயல்களையும் கடவுள் அறிந்திருக்கிறார். அந்த எண்ணங்களும் செயல்களும் கடவுளுக்கு உகந்தவையாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை இன்றைய இறைவார்த்தைப் பகுதி நமக்கு தருகிறது. இந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் கடவுளுக்கு உகந்த வகையில் இருக்குமாயின், நாம் நமது வாழ்வில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடும். இந்த தடைகளுக்கு மத்தியிலும் நாம் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும். 

             அதற்கான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக, தடைகளை எல்லாம் கடவுள் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் தகர்த்தெரியக் கூடிய மனிதர்களாக நாம் ஆண்டவரை நோக்கி, அவரது பாதையில் பயணப்பட அழைக்கப்படுகிறோம்.

     முதன்மையான இடத்தை நாடுவதை விட, கடைசியாக இடத்தை நாடுங்கள். அப்போது நீங்கள் முதன்மையானவர்களாக மாறுவீர்கள் என இறைவன் நற்செய்தி வாசகத்தில் குறிப்பிடுகிறார். 

      இந்த வாசகப் பகுதியோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கிற போது, நாம் முதன்மையானது என எண்ணி, பலவற்றை நாடி இந்த சமூகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், நாம் கடவுளின் வார்த்தைகளை மட்டும் இதயத்தில் இருத்தியவர்களாய், இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அனுதினமும் அமைத்துக் கொள்ளக்கூடிய மனிதர்களாக ஒவ்வொரு நாளும் பயணிக்க இறைவன் அழைப்பு தருகிறார். அத்தகைய அழைப்புக்கு செவி கொடுத்த மனிதர்களாக நாம் பயணம் செய்கிற போது இம்மண்ணுலக வாழ்வில் வருகிற தடைகளை எல்லாம் கடவுளின் துணையோடு எதிர்கொண்டு, இறுதி நாளில் நாம் மீட்பை உரிமையாக்கிக் கொள்ள முடியும். அந்த மீட்பை உரிமையாக்கிக் கொள்ள இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக் கொண்டு அனுதினமும் நமது வாழ்வில் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் மனிதர்களாகிட இறைவன் அழைப்பு தருகிறார். இந்த அழைப்பிற்கு நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


மதிப்பு மிகுந்தவர்களாக பணியாற்றிடுவோம்! (20-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
     
   

இன்றைய நாளின் வாசகங்கள் வழியாக இறைவன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வாழ்வுக்கான பாடத்தை கற்பிக்கின்றார். மற்ற மனிதர்களுக்கு முன்னிலையில் மதிப்பை தேடக்கூடிய மனிதர்களுக்கு, கடவுள், முதல்வராக இருக்க விரும்புபவர் தொண்டனாக இருக்கட்டும் என்று தொண்டாற்றுவதற்கான ஒரு அழைப்பை தருகின்றார்.

              இன்றைய முதல் வாசகத்தில் கூட நான் இஸ்ரயேல் மக்களோடு என்றும் வாழ்வேன் என்று கூறிய இறைவன், நம் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் வார்த்தைகளின் வழியாக நமது வாழ்வை அவர் ஒவ்வொரு நாளும் நெறிப்படுத்துகிறார். மதிப்பையும், பணத்தையும், பதவியும், தேடி ஓடக்கூடிய மனிதர்களாகிய நாம், இதில் நிறைவு காண்பதை விட, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ, தொண்டராக இருந்து, அனைவருக்கும் பணி செய்து, அந்த பணியின் நிமித்தமாக மகிழ்ச்சியை கண்டு கொள்வதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார்.

      மதிப்பை எங்கோ தேடுவதை விட, நமது செயல்களால் கடவுளின் மதிப்புக்கு உரிய மனிதர்களாக நாம் மாறிட, இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்பு தருகிறார். இறைவனின் அழைப்புக்கு செவிகொடுத்தவர்களாய், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


திங்கள், 5 செப்டம்பர், 2022

அன்பே அணிகலன் ஆகிட! ‌ (19-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் எலும்புகளுக்கு இறை வார்த்தையை எடுத்துரைக்கிறார். அவை உருப்பெறுகின்றன என்பதை நாம் வாசிக்க கேட்டோம். ஆண்டவருடைய வார்த்தைக்கு ஆற்றல் அதிகம் என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய இறை வார்த்தைப் பகுதி நமக்கு  அழைப்பு விடுக்கின்றது. ஆனால் இந்த ஆண்டவருடைய வார்த்தைகள் அனைத்துமே எதை மையப்படுத்துகின்றன என சிந்திக்கின்ற போது அவை அனைத்துமே அன்பை மையப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம்.

    மண்ணில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் பல மதங்கள் இருந்தாலும் அனைத்து மதங்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. இந்த அன்பை நாம் ஒருவர் மற்றவரோடு பகிர வேண்டும் என்பதைத்தான் அனைத்து மதங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதை நாம் அறிந்திருந்தாலும் அன்பற்ற சூழல் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

   மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே தான் மற்றவரால் அன்பு செய்யப்பட வேண்டும் என எண்ண எண்ணுகிறோம். ஆனால் நாம் மற்றவரை அன்பு செய்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிற போது பல நேரங்களில் அன்பு செய்ய விரும்புகின்ற மனிதன், அன்பு செய்ய இயலாத நிலையில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.  ஆனால் இன்றைய நாள் இறை வாழ்த்தையின் வாயிலாக இறைவன் நம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்பதையும், இந்த அன்பின் அடிப்படையில் இந்த அகிலத்தை நாம் ஆள முடியும் என்பதையும் இறைவன் வலியுறுத்துவதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 

ஒரு கவிஞன் எழுதினார்,  இந்த சமூகத்தில் மனித மனங்கள் கலங்குவது அணுகுண்டுகளால் அல்ல, அன்பற்ற இதயங்களால் என்று கூறினார். 

     நாம், நாம் வாழ்கின்ற இந்த சமூகத்தில், நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய நபர்களிடத்தில் அன்பை பகிரக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகிறார்.  இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், காணுகிற மனிதர்களிடத்தில் அன்பை பகிரக் கூடியவர்களாக நாம் இருப்பதற்கான அருளினை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

வியாழன், 1 செப்டம்பர், 2022

இறைவார்த்தையின் ஒளியில் நமது வாழ்வை சீர்படுத்துவோம்! (18-8-22)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

இன்றைய நாளின் முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இஸ்ரயேல் மக்களிடையே நான் மீண்டுமாக எனது பெயரை புனிதப்படுத்துவேன் எனக் கூறுகிறார். இவ்வார்த்தைகள் இந்த இஸ்ரயேல் மக்களின் செயல்பாடுகளால் கடவுளின் பெயர் புனிதமற்ற நிலையில் இருந்தது என்பதை நாம் நினைவு கூர அழைப்பு விடுக்கின்றது. 

     கடவுளுக்கு தகாத வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்த நிலையிலும் கூட, கடவுள் அந்த மனிதர்களின் மீது இரக்கம் காட்டக் கூடியவராய் அவர்களுடைய குற்றம் குறைகளை எல்லாம் மன்னித்து, அவர்களின் துன்பத்தை அவர்களிடம் இருந்து அகற்றி, அவர்களுக்கு புதிய இதயத்தையும், புதிய ஆவியையும் தருவதாக வாக்களிக்கின்றார்.  இந்த இறைவார்த்தையின் பின்னணியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை நோக்குகிற போது, திருமண விருந்துக்கு அழைக்கப்பட்ட பலரைக் குறித்த உவமையை இயேசு இன்றைய நாளில் எடுத்துரைக்கிறார். 

       யூதர்கள் தாங்கள் மட்டுமே மீட்புக்குரியவர்கள்; மெசியா வருவார்; வந்தவர் தங்களை மீட்டுச் செல்வார்  என்ற எண்ணத்தோடு இருந்தவர்கள்.  இப்படிப்பட்ட அழைக்கப்பட்ட நிலையில் இருந்த நிலையிலும் கூட, அவர்கள் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாமல், அவரின் வார்த்தைகளை உதாசீனப்படுத்தக் கூடிய மனிதர்களாக  இருந்தார்கள் என்பதை வரலாற்றிலிருந்தும், விவிலியத்தின் துணை கொண்டும் நாம் அறிகிறோம். 

       ஆனால் இயேசுவினுடைய இறை வார்த்தையானது யூதர்களையும் கடந்து,  புறவினத்தாருக்கும் தரப்பட்டது.  புறவினத்தார் பலரும் ஆண்டவரின் வார்த்தைகளை
கேட்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டார்கள். 

                   ஆனால் ஒரு சிலர்,  கடவுளுக்கு தகாத வகையில், தகுதியற்ற நிலையில் இருந்தார்கள்.  திருமண ஆடை இன்றி விருந்தில் பங்கெடுக்க வந்த நபரை போன்று, பலரும் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கையற்ற நிலையில் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.

            அத்தகைய நபர்களை குறித்தே ஆண்டவர் இந்த உவமையை எடுத்துரைக்கிறார்.  

   இந்த இறை வார்த்தையோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கிறோம். இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, அவரது பாதையில் நடக்கிறோமா?  அவருக்கு தகுதி உடையவர்களாக நாம் இருக்கின்றோமா?  கேள்வியை இதயத்தில் எழுப்பிப் பார்ப்போம். நம்மை நாமே சரி செய்து கொண்டு, சீர்படுத்திக் கொண்டு, கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ இன்முகத்தோடு இந்த நாளைத் துவங்குவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நேர்மையோடும் இரக்கத்தோடும் செயல்படுவோம். ( 17-8-22)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


இன்றைய முதல் வாசகமானது இஸ்ரயேல் மக்களின் அழிவுக்குப் பிறகாக, அவர்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு சென்றதற்குப் பிறகாக, அவர்களை ஆள்வதற்கென உருவாக்கப்பட்ட தலைவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாததன் விளைவு, அவர்கள் இத்தகைய துன்பத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் எடுத்துரைப்பதாக இன்றைய முதல் வாசகம் அமைந்துள்ளது.  இந்த இறைவார்த்தைப் பகுதியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை ஒப்பிட்டு பார்க்கிறபோது, ஒரு நிலக்கிழார் தன்னிடம் வேலை செய்வதற்காக ஒரு நாளில் பல்வேறு நேரங்களில் தம்மிடம் வரக்கூடியவர்களை எல்லாம் அழைத்து, அவர்களுக்கு வேலைகளை பகிர்ந்து கொடுத்து, அவர்களுக்கு தேவையானதை தன் விருப்பம் போல, தன்னிடம் இருப்பதிலிருந்து கொடுக்கக் கூடிய நபராக இருப்பதை நாம் வாசிக்க கேட்டோம்.

           இறுதி நேரத்தில் வேலைக்கு வந்தவர்களுக்கும் இவர் தங்களுக்கு தருவது போன்ற ஊதியத்தை தருகிறாரே என பலர் எண்ணிய போது தனக்குரியதை தன் விருப்பம் போல மற்றவருக்கு கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் கடவுளின் பணியை செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கக் கூடிய கூடிய நீங்களும், நானும், நாம் இருக்கின்ற தளத்தில் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழவும், கடவுளின் திருவுளத்தை அறிந்து அதனை செய்கின்ற மனிதர்களாக இருப்பதற்குமான ஒரு அழைப்பை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகிறார். நம்மிடம் அவர் ஒப்படைத்து இருக்கின்ற பலவிதமான பொறுப்புகளை, கடமையை உணர்ந்து, கடமை உணர்வோடு, மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து அதை செய்யக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இன்றைய வாசகங்கள் நமக்கு தருகின்றன. 

       இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம். கடவுள் நமக்கென கொடுத்து இருக்கக்கூடிய பணிகளையும் பொறுப்புகளையும் சரிவர செய்யக்கூடிய மனிதர்களாக, நீதியோடு செயல்படக்கூடிய நபர்களாக நாம் இருக்கின்றோமா என்று கேள்வியை எழுப்பி பார்ப்போம்.  இருக்கிறோம் என்றால் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். ஒருவேளை நம்மிடத்தில் ஏதேனும் ஒன்று குறைவுபடுவது போன்ற உணர்வு எழுகிறது என்றால் நாம் கடவுளின் திட்டத்தை உணர்ந்து கொண்டு, அவர் நம்மிடம் ஒப்படைத்து இருக்கிற பணிகளை எல்லாம், இன்முகத்தோடு ஏற்று நீதியோடும் நேர்மையோடும் அவருக்கு உகந்த வகையில் அதனை செய்வதற்கான ஆற்றலை வேண்டி மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.



இறை மகிமைக்காக! (16-8-22)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

இன்றைய முதல் வாசகத்தில் தீர்ப்பகுதியின் அரசன் தன்னை கடவுளுக்கு இணையாக கருதி, கடவுளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து விதமான ஆராதனைகளையும், தனக்கு செலுத்துமாறு மக்களை வற்புறுத்துவதை, நாம் முதல் வாசகமாக வாசிக்க கேட்டோம். கடவுள் மனிதனை இவ்வுலகில் படைத்ததன் நோக்கம், அனைவரும் இணைந்து இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் மண்ணில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும் மற்றவர் முன்னிலையில் மதிப்பு பெறக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே நாட்டம் கொண்டவர்களாக, இந்த உலக இச்சைகளுக்கு இடம் கொடுத்தவர்களாக பணம் பதவி, பட்டம் என, பலவற்றை நாடக்கூடிய மனிதர்களாக இருக்கிறார்கள். 

ஆனால் கடவுள் இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக, நீங்கள் முதன்மையான இடத்தை நாடுவதை விட, கடைசியான இடத்தை நாடக் கூடிய மனிதர்களாக, இருங்கள், அப்பொழுது கடவுள் உங்களுக்கு முதன்மையான இடத்தை வழங்குவார் என்ற வாழ்வுக்கான செய்தியை, இறைவன் தருகிறார். 

இறைவன் தரக்கூடிய இந்த இறைவார்த்தையின் அடிப்படையில், நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, இந்த உலகத்தின் போக்கின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல், நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  எதை செய்தாலும் கடவுளுக்காக என்ற மனநிலையோடு நமது கடமையை உணர்ந்து பலனை எதிர்பாராமல் நல்ல செயல்கள் பலவற்றை முன்னெடுப்பதற்கான ஒரு அழைப்பினை இறைவன் தருகிறார். இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, செயல் வடிவம் கொடுக்கக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் இன்றைய நாளில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.



சுதந்திரமும் விண்ணேற்பும்! (15-8-22)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
    
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
     
 

இன்று நம் தாய் திருநாடு சுதந்திரம் பெற்ற 75 ஆவது ஆண்டினை நாம் நினைவு கூருகின்றோம். அதே சமயம் திரு அவை அன்னை மரியாவின் விண்ணேற்பை நினைவு கூற நமக்கு அழைப்பு விடுக்கிறது.  இந்த நல்ல நாளில் உங்கள் அனைவருக்கும் விழா வாழ்த்துக்களை முதலில் உரித்தாக்கி மகிழ்கிறேன். 

        கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி வாழ்வது தான் சுதந்திரம் என்ற மனநிலையோடு இன்று நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்று சுதந்திரம் பெற்ற போது பாரதி சுதந்திரத்தைக் குறித்து பாடுகிற போது, பாரினில் இனி நாம் யாருக்கும் அடிமை இல்லை. பரம்பொருள் ஒருவனுக்கே நாம் அடிமைகள் என்று பாடினார். பாரதியின் இவ்வார்த்தைகள் உலகில் வாழ்கிற போது நாம் எவருக்கும் அடிமைகள் இல்லை. இறைவன் ஒருவரைத் தவிர என்பதை வலியுறுத்தினாலும் , இந்த வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் அன்னை மரியா என்பதை நாம் நினைவு கூர அழைக்கப்படுகிறோம்.

      சமூகத்தில் இருந்த பலவிதமான பிரச்சனைகளுக்கு மத்தியில், பலவிதமான சட்டங்களுக்கு மத்தியில், கடவுளுக்கு மட்டுமே பயந்த ஒரு பெண்மணியாக மரியா தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். மரியாவின் விண்ணேற்பு நமது மீட்பை குறித்து சிந்திப்பதற்கான ஒரு அழைப்பை நமக்கு தருகிறது. ஆதாம் ஏவாளின் பாவத்தின் விளைவாக வீழ்ச்சியை சந்தித்த மனித இனம்,
புதிய ஏற்பாட்டின் ஆதாம் ஏவாளாகிய இயேசு மரியாள் வழியாக மீட்பை அடைந்தது.

அந்த மீட்பை நினைவு கூரும் விதமாகவே, விண்ணேற்பில் கடவுளின் முன்னிலையில், ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை திரு அவை இன்றைய நாளில் நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

       இந்த நல்ல நாளில் நமது நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த,  உயிர் தியாகம் செய்த ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுக்கு கூர்ந்து, அவர்களுக்காக இறைவனிடத்தில் மன்றாடவும், அன்னை மரியாவை போல ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழவும் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
    

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...