கிறிஸ்து அரசர் பெருவிழா முன்னுரை
இறைவன் இயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரையம் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று நம் தாய் திருஅவை கிறித்து அரசர் பெருவிழாவை கொண்டாட நம்மை அழைக்கின்றது. திருஅவை வரலாற்றை திரும்பி பார்க்கும் போது நானே முதன்மையானவன், என்னிடமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று வாழ்ந்த பல அரசர்களை நாம் காணலாம். அந்நேரங்களில் அரசனை விட உயர்ந்தது அகிலத்தை மீட்டெடுத்த ஆண்டவர் இயேசு என திருஅவை தந்தையர்கள் தொடக்க காலத்தில் வலியுறுத்தினார்கள். அதனால் பலவித துன்பங்களை எதிர்கொண்டார்கள். இச்சூழலில் உருவானதுதான் இந்த கிறிஸ்து அரசர் பெருவிழா. இன்றைய நாளின் இரண்டாம் வாசகமானது புனித பவுல் கொலேசிய நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில், இயேசு இவ்வுலகில் உள்ள அனைத்துக்கும் முதன்மையானவர். இவ்வுலகில் உள்ள அனைத்தும் அவருக்கு அடிபணிகின்றன என்று கூறி, இயேசுவை உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் முதன்மையான அரசனாக காட்டுகின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு சிலுவையின் அறையப்பட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கி உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் போது, அவரின் அருஞ்செயல்களை கண்டுவியந்த பலர் அவரை எள்ளி நகையாடுகிறார்கள். நீ அரசன் என்றால் முதலில் உன்னை விடுவித்துக் கொள்; என்று கூறும் போது இயேசு அமைதிகாத்தார். ஒரு அரசன் என்பவன் தன் இறக்க கூடிய சூழல் ஏற்படும் போது கூட தன் நாட்டையும், தன்னை நம்பியுள்ள மக்களையும் காத்தருள வேண்டும். இதையே ஒரு அரசனுக்குரிய உயரிய பண்பாக பல தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதற்கு ஏற்றார் போல அகிலத்தின் மீட்புக்காக குற்றமற்ற இயேசு நமக்காக பலியானார். இயேசுவை போன்று பல நல்ல தலைவர்கள் நம் நாட்டில் உருவாக்கிடவும், இன்று தலைவர்களாக செயல்படுபவர்கள் தன்னல எண்ணங்களை விடுத்து பொதுநலனுடன் பன்முகத்தன்மைக் கொண்ட நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டக் கூடியவர்களாக வாழ அருளை வேண்டி, இன்றைய நாளில் நாம் அனைவரும் இணைந்து நமது நாட்டிலுள்ள தலைவர்களுக்காகவும், வருங்கால தலைவர்களுக்காகவும் இணைந்து இத்திருப்பலியில் செபிப்போம்.
சகோ. சகாய ராஜ் ஜே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக