செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

செபம். 30th Sunday 2019

ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்கு சமம் என்கிறார் புனித அகுஸ்தினார். இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் செபிப்பது குறித்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம். மனிதன் தன் வாழ்வின் மிகச் சிறந்த ஆறுதலை செபத்தில் இருந்துதான் பெறுகிறான். செபம் என்பது நம்மையும் கடவுளையும் இணைக்கும் ஒரு கருவி. செபம் எந்த விதத்திலும் கடவுளின் மனதை செபம் மாற்றுவது இல்லை மாறாக அது செபத்தின் மனதை மாற்றுகிறது என்கிறார்கள். சிலர் செபம் என்பது ஒரு வகையான உரையாடல். இது கடவுளுக்கும் நமக்கும் இடைப்பட்டது. இன்று நாம் வாழும் சூழலில் நமது செபம் என்பது எதன் அடிப்படையில் அமைந்துள்ளது என்பது தான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி. விவிலியத்தில் செபிக்கும் மனிதர்கள் பலரை காணலாம். தொடக்கநூலில் ஆபிரகாம் சேதோம் கெமோரா மக்களுக்காக செபித்தார் என்பதை 18 - ஆம் அதிகாரம் 16 லிருந்து 33 வரை நாம் வாசிக்க கேட்கலாம். ஆபிரகாம் மனைவியான ஆகார் தம் மகனுக்காக வேண்டுவது பற்றி தொடக்கநூல் 12 –ஆம் அதிகாரம் 15 லிருந்து 21 வரை நாம் வாசிக்க கேட்கலாம். இஸ்ரயேல் மக்கள் அடிமை தளத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமென்று அவர்கள்; ஆண்டவரை எதிர் பார்த்து காத்திருந்தனர், அவரிடம் மன்றாடினர் இதை குறித்து நாம் திருவிவிலியத்தில் காணலாம். ஆண்டவரே நான் திக்குவாயன் என்னால் பார்வோனிடம் பேச முடியாது என்று மோசே இறைவனிடம் வேண்டியதை நாம் திருவிவிலியத்தில் காணலாம். அடிமைதனத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் அனுதினமும் எங்களுக்கு உணவு வேண்டும், இறைச்சி வேண்டும், தண்ணீர் வேண்டும் என்று மக்கள் மோசே வழியாக இறைவனிடம் வேண்டியதை நாம் விடுதலை பயண நூலில் இருந்து வாசிக்க கேட்கலாம். இன்று நாம் வாழும் உலகில் செபிப்பது பற்றி சிந்திக்கும் போது பலர் சில செபங்களை வார்த்தைகளாக திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது செபம் என்கிறார்கள். இன்னும் சிலரோ ஆண்டவரே ஆண்டவரே என சத்தமாக அறிக்கை இடுவதையும் செபம் என்கிறார்கள். சிலர் அமைதியாக இருப்பதே செபம் என்கிறார்கள். இதில் எது சரி? எது தவறு? எதை நாம் செய்ய வேண்டும்? என்பது அல்ல நம் நோக்கம். எந்த வகை செபத்தில் நாம் நிறைவடைகிறோம். எதை நாம் பின்பற்றுகிறோம் என்பது தான் நமது நோக்கம். பின்பற்றுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் ஆனால் நாம் செபிக்கும்போது எப்படி செபிக்கிறோம் என ஆராய வேண்டும். நாம் செபிக்கும் போது நம் இயல்பை வெளிப்படுத்த வேண்டும். வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே நாம் செபம் செய்வதால் அதை கடவுள் கேட்கிறார் என்பது அர்த்தமாகாது என திருவிவிலியத்தில் சபை உரையாளர் புத்தகம் கூறுகிறது. கடவுள் விண்ணகத்தில் இருக்கிறார் நாம் மண்ணுலகில் இருக்கிறோம். எனவே குறைவான சொற்களைப் பயன்படுத்துங்கள் என சபை உரையாளர் கூறுகிறார். செபம் என்பது நம்முடைய இயல்பை நாம் அப்படியே பிரதிபலிப்பதாகும். உதாரணமாக திருவிவிலியத்தில் யோனா நினிவே நகர மக்களை இறைவன் அழிக்கப்போகிறார் ஏனெனில் நீங்கள் எல்லாம் பாவம் செய்து இருக்கிறீர்கள் என கூறிவிட்டு கடவுள் அவர்களை அளிப்பதை நான் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன் என கூறிக்கொண்டு ஒரு செடியின் நிழலில் அமர்ந்த வண்ணமாய் அந்நகரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அந்நகரில் இருந்த மக்களோ பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார்கள். இறைவனும் அவர்களை மன்னித்தார். ஆனால் யோனாவோ ஆண்டவரிடம் இவர்களை அழித்துவிடும் இல்லையெனில் இவர்கள் என்னை ஏளனம் செய்வார்கள் என்று கூறி தனது இயல்பை வெளிப்படுத்தும் விதமாக செபிப்பதை நாம் யோனாவின் வாழ்விலிருந்து காணலாம். நாம் நமது இயல்பை வெளிப்படுத்தும் போது தான் இறைவன் நமக்கு தெளிவு ஏற்படுத்துவார்.  புலம்பல் நூல் எனப்படும் எரேமியா நூலில் நாம் பலவகையான புலம்பல்களை காணலாம். நீங்கள் பாவம் செய்வதினால் உங்களை இறைவன் தண்டிப்பார் என அறிவித்த பின்பு மக்கள் மனம் திரும்புவார்கள் ஆனால் எரேமியாவோ அவர்களை கடவுள் அளித்த போடுவார் அதை நான் கண்களால் காண்பேன் என கூறிக்கொண்டு கடவுளின் செய்தியை அறிவிப்பார். பின்பு ஆண்டவரே ஏன் என்னை சோதிக்கிறீர் நீர் சொல்லும் வார்த்தைகளை நான் அறிவிக்கிறேன் ஆனால் இருந்த மக்களை நீர் அழிக்கவே இல்லை. எனவே இவர்கள் எல்லாம் என்னை எள்ளி நகையாடுகிறார்கள் என்று கூறி தன் இயல்பை இறைவனிடம் எடுத்துரைத்து வேண்டுவதை எரேமியா புத்தகத்தில் பல இடங்களில் நம்மால் காண இயலும். நமது வாழ்வில் நாம் கடவுள் முன்பு கொள்ளும் உரையாடலில் நாம் எதை பேசுகிறோம்? என்பதை இன்றைய நாளில் நாம் ஆராய வேண்டும். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என பேசும் மனிதர்கள் உண்டு. இதையே பெர்னாட்சா இன்று பலர் இறைவனிடம் வேண்டுவதாக கூறிக்கொண்டு பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறுவார். சில மனிதர்கள் வாக்குறுதி கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலரோ பிறரைப் பற்றி குறை கூறக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இதையே இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது போல சில மனிதர்கள் பிறரை பற்றி குறை கூறுவதையும், தன்னை மட்டும் உயர்த்தி கூறுவதே செபமாக எண்ணுகிறார்கள். இதையே இன்றைய நற்செய்தி வாசகங்களில் நாம் காணலாம். நாம் நமது செபம் என்னும் உரையாடலின் போது நாம் எதை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க இன்று அழைக்கப்படுகிறோம். நாம் நம்மை பற்றி இறைவனிடம் பேசிக்கொண்டு இருக்கிறோமா? அல்லது நம் உணர்வுகள், நமது எண்ணங்கள் குறித்து பேசுகிறோமா? அல்லது பிறரை பற்றி நாம் பேசுகிறோமா? இன்றைய நற்செய்தி வாசகத்தில் காணப்பட்ட பரிசேயர் இறைவனை நோக்கி நான் கொள்ளையர் போலவோ, விபச்சாரம் செய்பவர் போலவோ, நேர்மையற்றவர் போலவோ, ஏன் மற்ற மனிதர்களைப் போலவோ, ஏன் இங்கு நிற்கக்கூடிய அந்த வரிதண்டுபவரைப் போலவோ அல்ல. மாறாக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். என் வருவாயில் 10 பங்கை உனக்கு கொடுக்கிறேன் என்று கூறுகிறான். அவன் செபித்ததில் தவறு இல்லை. அவன் செய்ததை அவன் சொல்லி இறைவனிடத்தில் அறிக்கையிட்டான். நான் நன்றி கூறுகிறேன், என் வருவாயில் 10 பங்கை கொடுக்கிறேன், அவன் செய்தது இவை இரண்டும் எனவே அதை இறைவனிடம் சொல்லி காண்பிக்கின்றான். அதே சமயம் அவன் செய்யாமல் இருந்திருக்க வேண்டியது என்று பார்க்கும் பொழுது அவன் மற்றவரை இறைவன் முன்னிலையில் மட்டும் தட்டுகிறான் உதாரணமாக கொள்ளையரை போலவோ, விபச்சாரம் செய்பவரை போலவோ, நேர்மையற்றவரை போலவோ, ஏன் மற்ற மக்களைப் போலவோ அங்கு நிற்கக்கூடியவ வரிதண்டுபவரைப் போலவோ அல்ல நான் என குறிப்பிடும் பொழுது மற்ற மனிதர்களை இயல்பாகவே மட்டம் தட்ட கூடிய ஒரு செயலானது அங்கு வெளிப்படுகிறது. அவன் தான் செய்தவைகளை கூறி இறைவனிடம் செபிப்பது தவறல்ல. ஆனால் தன்னை விட மற்றவர்கள் எல்லாம் பாவிகள் என்ற வகையில் பிறரை கடவுள் முன் மட்டம் தட்டுவதை கடவுள் எப்படி பொறுத்துக் கொள்ள இயலும். ஏனெனில் தொடக்கநூல் 1- ஆம் அதிகாரம் 27 ஆம் வசனம் கூறுகிறது. “கடவுள் மனிதனை தம் உருவிலும், சாயலிலும் படைத்தார். கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட ஒரு மனிதனை இன்னொரு மனிதன் குறை கூறுவதை எப்படி இறைவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியும். நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதை தம் வாழ்வில் காட்டியவர் இயேசு. உண்மையை கூறி வந்ததனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் அறைந்து தொங்க விடப்பட்ட போது இயேசு இறைவனை நோக்கி வேண்டினார் “ஆண்டவரே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார் என்பதை திருவிவிலியம் மத்தேயு நற்செய்தி 20 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம். அன்புக்குரியவர்களே இன்று இருவர் அல்லது மூவர் கூடினால் அவர்களிடம் அவர்களில் பலர் பிறரைப்பற்றி பேசுவதையும், பிறரை எள்ளி நகையாடுவதை இயல்பாக கொண்டிருக்கிறார்கள். இதனை இறைவன் விரும்புவது இல்லை இதனை திருப்பாடல் ஒன்று கூறுகிறது. நாம் நேர்மையாளராக இருக்க விரும்பினால் இகழ்வார் குழுவில் நாம் அமரக்கூடாது என்கிறது. நாம் கடவுள் முன்னிலையில் பிறரை பற்றி குறை கூறி மட்டம் தட்டும் போது கண்டிப்பாக அதை கடவுள் கேட்பதில்லை. அன்புக்குரியவர்களே நாம் வேண்டல் செய்யும் போது இறைவன் அதை கேட்கிறார். நாம் அமைதியில் அமரும் போது கடவுள் நம்மோடு பேசுகிறார். நாம் இதுநாள்வரை செபித்த செபங்கள் எப்படிப்பட்டவை என சிந்திப்போம். எண்ணங்களே ஒரு மனிதனின் செயலில் வெளிப்படும் என்பார்கள். நமது செபத்தில் நல்லெண்ணமும், நம்மைப் பற்றிய எண்ணங்களும், பிறரைப் பற்றிய நேர்மறையான எண்ணங்களை மட்டுமே கொண்டவர்களாய் வழிபட உறுதியோர்ப்போம். இத்தகைய மனநிலையோடு தொடர்ந்து நம்பிக்கையை அறிக்கையிட்டவர்களாய் தொடர்ந்து இந்த நற்கருணை வழிபாட்டில் நல்மனதுடன் இறைவேண்டல் செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...