செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

இளையோர் ஞாயிறு 2019

இளையோர் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறைஇயேசு கிறிஸ்துவி;ல் பிரியமான இளையோரே, இறைமக்களே,
    திருஅவையின் எதிர்கால நம்பிக்கைகளாய் நம் மத்தியில் வலம் வரும் இளையோரின் வாழ்விற்கு அழகு சேர்க்கும் அற்புதமான ஞாயிறு இந்த இளையோர் ஞாயிறு. திருத்தந்தை பிரான்சிசு அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய், திருஅவையின் எதிர்கால தூண்களாள் திகழும் இளையோர் மீது அவர் கொண்டிருக்கின்ற அன்பின் வெளிப்பாடே இளையோர் பற்றி எடுத்துரைக்கும் சிந்தனைகள். கரடு முரடான பாதையில் பயணிக்கும் இளம் தலைமுறையினரை மென்மையான பாதையில், மிருதுவான பாதையில் வழிநடத்தும் பொறுப்பு திருஅவைக்கு உள்ளதென்பதைத் தெளிவாய் உணர்ந்ததால், திருத்தந்தை அவர்கள் இந்த ஆண்டின் இளையோர் ஞாயிறை நம் அனைவரின் தாயான மரியாவின் வார்ததைகளை வாழ்வாக்க நம்மை அழைக்கிறார். ‘இதோ ஆண்டவரின் அடிமை, உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்ற அன்னை மரியாவின் பதில்மொழி நம்முடைய வாழ்வில் மேலோங்க வேண்டுமென்ற சிந்தனையை மிகத் தெளிவாக வழங்குகிறது இந்த இளையோர் ஞாயிறு.
இளைஞர்களின் வாழ்வானது இன்று பல தளங்களில் சிக்குண்டு உலகத்தின் இன்பங்களுக்கும், போலியான, எதிர்மறையான பல்வேறு சூழல்களுக்கும் அடிமையாகி இன்று தங்களுடைய வாழ்வையே இழக்கும் நிலைக்கு மாறிவிட்டனர். இந்திய அளவில் தென்படும் சமயம் சார்ந்த சிக்கல்களிலும், மதம் சார்ந்த பிரச்சனைகளிலும், நுகர்வுக் கலாச்சாரத்தாலும், அலைபேசியின் தவறான போக்குகளினாலும், உறவுச்சிக்கல்களினாலும், ஆணவக்கொலைகள், சாதிய வன்முறைகள், தவறான கருத்தியல்கள், சிற்றின்ப ஆசைகள் இவற்றில் ஏதாவது ஒன்றில் அடிமையாகி ஆண்டவரின் அழைப்பினை நிராகரிக்கும் மக்களாக, கடவுளின் வார்த்தையை உதாசீனப்படுத்தும் மனிதராக இன்று இளையோர் உருவாக்கப்பட்டுவிட்டனர். இத்தகைய அடிமைநிலை நம்மில் நீக்கப்பட்டு, முழுமன சுதந்திரத்தோடும், இறைவன் மீது கொள்ளும் ஆழமான நம்பிக்கையினாலும் எவ்வாறு அன்னை மரியா எப்படி நான்  ஆண்டவரின் அடிமை உமது சொற்படி நிகழட்டும் என்றாரே அவ்வாறு நாமும் ஆண்டவரின் அடிமைகளாக உருவாகிட அழைக்கின்றது, இத்தகைய சிந்தனையில் வேரூன்றிட முயற்சிப்போம்.
அன்னை மரியாவின் வாழ்வு ‘ஆம்’ என்ற சொல்லின் வழியாக அவனிக்கு மீட்பைக் கொண்டு வந்தது. அதே போன்று நம்முடைய பதில்மொழியின் அடிப்படையி;ல்தான் நாம் முன்னோக்கிப் பயணிக்க இருக்கும் வாழ்வும் அமைந்திருக்கிறது என்பதை ஆழமாய் புரிந்துகொள்வோம். இறைவனின் வார்த்தையில் நம்பிக்கைக்கொண்டு, இறைவுறவில் எந்நாளும் மகிழ்ந்திட, இறைவனுக்காய் அடிமைநிலையை ஏற்க நம்மையே இத்திருப்பலியில் ஒப்புக்கொடுப்போம். இறைவனின் அருள் வேண்டி ஒருவர் மற்றவருக்காய் மனமுவந்து செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை: (சபை உரையாளர் 1: 2, 2: 21-23)
    அன்பிற்கினியவர்களே இன்றைய முதல் வாசகமானது சபை உரையாளிரின் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வாகத்தின் தொடக்கத்திலேயே ஆணித்தரமாகவும் வெளிப்படையாகவும் ‘வீண் முற்றிலும் வீண், எல்லாமே வீண் என்கிறார் சபைஉரையாளர். இன்றைய அறிவியல் உலகில் உண்மையில்லாத மாயையை உண்மையென நினைத்து அதன் பின்னே போவதை தெளிவாக உணர்த்துகிறார். இன்று நாம் வைத்திருப்பது பிறர் கொடுத்தவையே, அவ்வாறே இன்று நாம் ஓடி உழைத்து சேர்த்துவைப்பதும் பிறர் பயனுக்காகவே இதனால் என்ன பயன்? உடல், மன அமைதி இழந்து வாடுவது தேவைதானா? என்பதை உணர்வதில்லை. ஆகவே இறைவனைத் தவிர இவ்வுலகில் இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமில்லை, நம்முடன் பயணிக்கப்போவதும் ஒன்றுமில்லை என்று உணர்ந்தவர்களாய் இன்றைய முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:  (கொலோசையர் 3: 1-5, 9-11)
கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்
இறைவன் இயேசுவில் அன்பானவர்களே! புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து இன்றைய இரண்டாம் வாசகமானது எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக புனித பவுலடியார் நம்மை ஒன்றித்து வாழ அழைக்கின்றார். நாம் வாழும் இந்த உலகில் பலவிதமான பிரிவினைகளும், பலவிதமான வேறுபாடுகளாலும் மனிதர்கள் ஆங்காங்கே பிரிந்து வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஒன்றுபட்டு வாழ்வது என்பது இன்று அரிதான காரியமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் இந்த உலக எண்ணங்களை விடுத்தும், இவ்வளவு நாட்டங்களையும், ஆசைகளையும், இச்சைகளையும் கலைந்து ஆண்டவர் இயேசுவைப் பற்றிய மேலான எண்ணம் கொண்டவர்களாய் வாழ்வதற்கான அழைப்பினை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு வழங்குகிறது. நம்வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும், நாம் எவற்றை செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் நம் வாழ்வில் கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்பதையும் இன்றைய இரண்டாம் வாசகமானது தெளிவாக எடுத்துரைக்கிறது. நம்மிடையே இருக்கக்கூடாத ஒரு முக்கியமான பண்பு வேறுபாட்டுணர்வு. நான் வேறு நீ வேறு என்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து நாம் அனைவரும் கிறிஸ்துவால் இணைக்கப்பட்டவர்கள். நம்முள் கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பவர் என்ற கருத்தினை இன்றைய இரண்டாம் வாசகத்தில் வழியாக மிக ஆழமாக நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இத்தகைய சிந்தனைகளோடு புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து வாசிக்கப்படும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்…
மன்றாட்டுகள்
1. திருஅவைத் தலைவர்களுக்காக மன்றாடுவோம்.
    அன்பின் ஊற்றே எம் இறைவா! எம் திருஅவைத் தலைவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். மாறிவரும் காலச்சுழ் நிலைகளுக்கேற்ப காலத்தின் அறிகுறிகளை அறிந்து, இளைஞர்களை கிறிஸ்துவின் மனநிலைக்கு ஏற்ப வழிநடத்த தேவையான ஆற்றலை திருஅவையின் தலைவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நாட்டுத்தலைவர்களுக்கா மன்றாடுவோம்.
    வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்ற இறைவா! எம் நாட்டுத்தலைவர்களை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். உண்மையின் வழியில் அவர்கள் நடக்கவும், ஏழை, எளிய கைவிடப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு தேவையான செயல் திட்டங்களைத் தீட்டவும் அருள் தாரும். மேலும் இப்புதியச சூழலுக்கேற்ப எம் இளைஞர்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டு நல்லதொரு தலைவர்களாய் உருவாகிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. பெற்றோர்களுக்காக மன்றாடுவோம்.
    தாயும் தந்தையுமான இறைவா! நாங்கள் வாழ்வதும், இயங்குவதும், இருப்பதும் உம்மாலேதான். உமது அருளிற்காகவும், ஆசீருக்காகவும் நன்றி கூறும் இவ்வேளையில் எம் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எங்கள் பெற்றோர்களுக்காக உம்மை வேண்டுகின்றோம். அவர்கள் மாறி வரும் இந்த அறிவியல் உலகத்தில் தங்கள் குழந்தைகளை புரிந்துகொள்ளவும், அன்பு செய்யவும் அரவனைக்கவும் ஆற்றல் தாரும். சமூக முரண்பாடுகளுக்கு மத்தியில் இப்பெற்றோர்கள் வளரும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தேவையான அருள் வரங்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அனைத்து இளைஞர்களுக்காகவும் மன்றாடுவோம்.
    அருட்பெரும்ஜோதியாகிய இறைவா! இளைஞர்கள் அiவைருக்காகவும் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். உமது மனநிலையை பெற்றவர்களாய் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, குடும்ப நலன், சமூக நலன் மற்றும் திருஅவையின் நலனில் அக்கறைகொண்டவர்களாய் வாழவும், சமூக தொடர்பு ஊடகங்களை அனைவரின் வளர்ச்சிக்காக பயண்படுத்திடவும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், திருமண வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு தகுந்த துணை கிடைக்கவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. இயற்கைக்காக மன்றாடுவோம்.
    எங்கும் நிறைந்திருக்கும் இறைவா! உம் அருள் வளங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். மனிதர்கள் தங்கள் சுய நலத்திற்காக இயற்கை வளங்களை சுரண்டுவதை தவிர்கவும், புவி வெப்பமயமாதலை உணர்ந்து மரங்களை பாதுகாக்கவும் அருள்தாரும். மேலும் எங்களுக்கு தேவையான பருவ மழையை பொழிந்து இயற்கை வளங்கள் மற்றும் கால்நடைகள் செழிக்கவும் அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

1 கருத்து:

  1. Sagayam! An interesting invitation from you for the youth to turn themselves towards our Mother Mary and to follow her in bringing up God's kingdom. Wonderful! Keep it up!

    பதிலளிநீக்கு

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...