செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

மாற்றத்தின் முதல் விதையான புனித ஜான் மரிய வியானி 2019

மாற்றத்தின் முதல் விதையான புனித ஜான் மரிய வியானி
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்று தாய்த்திரு அவையானது புனித ஜான் மரிய வியானி எனப்படும் குருக்களின் பாதுகாவலரை நினைவுகூற நம்மை அழைக்கிறது. இன்று குருக்களின் விழா. இன்று நாம் நினைவு கூறும் புனித ஜான் மரிய வியானி என்பவர் ஒரு எளிமையானவர். இவருக்கு படிப்பு என்பது பாகற்காய் போன்றது. இலத்தின் மொழியில் புலமை இல்லாததால் பல முறை பல தேர்வுகளில் தோற்றவர். குருவாக தகுதியற்றவர் என பல அருள் தந்தையர்களால் கூறப்பட்டவர். மன்னிப்பதே கிறித்தவத்தின் மகத்துவம் எனவே தம் வாழ்வில் பெரும்பகுதியை பாவ மன்னிப்பு வழங்கும் இருக்கையில் அமர்ந்து செலவிட்டவர். அன்னை மரியாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். இவரின் வாழ்வு நமக்கு கற்பிக்கும் பாடம் ஏராளம். ஆனால் இன்று இவரின் வாழ்விலிருந்து நாம் மாற்றத்தின் முதல் விதையான புனித ஜான் மரிய வியானி என்ற தலைப்பில் நமது சிந்தனைகளை சீர்தூக்க பார்க்க இருக்கிறோம்.
மாற்றம் என்பது மட்டுமே உலகில் மாறாத ஒன்று. மாற்றம் மண்ணில் வேண்டுமானால் முதலில் மனதில் மாற்றம் வேண்டும். அனுதினமும் நாம் பலவற்றை கற்கின்றோம், பலவற்றை கற்பிக்கின்றோம். ஆனால் அதில் எவை நம் வாழ்வை முதலில் மாற்றியது என்பதை சிந்திக்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாம் இன்று நினைவு கூறும் புனித யோவான் மரிய வியானி பிரான்ஸ் நாட்டில் உள்ள லியோன் நகரத்தில் உள்ள டார்லி என்னுமிடத்தில் மே மாதம் எட்டாம் நாள் 1786 ஆம் ஆண்டு பெற்றோருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பு தடைபட்டது. ஆடுகளை மேய்க்கும் வேலையானது இவருக்கு கொடுக்கப்பட்டது. ஆடுகளை மேய்தாலும் ஆண்டவர் இயேசுவின் அன்புக் கட்டளைகளை உள்ளத்தில் ஏற்றவராய். தனக்கு பள்ளி படிப்பை தொடர யாரும் உதவிடத போதும் கூட தன் நி;லை யாருக்கும் வரக்கூடாது என்பதை உணர்ந்தவராய் பல வசதியற்ற மாணவர்கள் படிப்பை தொடர அவர்களுக்கு என்று ஒரு சிறிய விடுதியை இலவசமாக நடத்தினார். என்னைப் போல் பலர் படிப்பை வசதியின்றி பாதியில் நிருத்தியுள்ளனர் என பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் மாற்றத்தை விதைக்கும் முதல் விதையாக செயல்பட்டார் பனித ஜான் மரிய வியான்னி.
இவர் எங்கே சென்றாலும் மரத்தாலான அன்னை மரியாவின் சிருபத்தை எப்போதும் கையில் எடுத்துக்கொண்டு செல்வார். ஆடுகள் மேய்க்கும் போதும் கூட மரத்தாலான அன்னை மரியாவின் சிருபத்தின் முன்பு முழந்தாளிட்டு செபம் செய்து கொண்டே இருப்பாராம் இவர். இன்று பலவிதமான சூழல்களுக்கு மத்தியில் பம்பரமாக சுற்றி வரக்கூடிய நமக்கு புனித ஜான் மரிய வியானி போல தினமும் செபிக்க ஆசை. ஆனால் நேரமில்லை. இவர்; செபியுங்கள் என போதிப்பதை விட அதற்கு செயல் வடிவம் தரும் முதல் விதையாக செயல்பட்டவர் நாம் நினைவுகூறும் புனித ஜான் மரியவியான்னி.
இவர் குருவாக வேண்டும் என்ற ஆசையால் குருகுலம் நாடிச் சென்றார். நம்மில் பலருக்கு அன்னிய மொழி எப்படி பல நேரங்களில் அன்னியமாகவே தெரிகிறதோ அது போலவே இவருக்கும் இலத்தின் மொழி அந்நியமாக தெரிந்தது. கடுமையாக முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், முயற்சியை நிறுத்தாது கடுமையாக முயன்றார். கற்க வேண்டும் என்றானதற்கு பிறகு மொழிக்கு பயத்தால் முடியுமா? என்பது போல இவர் தன் தாய்மொழியில் அனைத்தையும் கற்றுக் கொண்டார். சிலமுறை முயன்றும் முடியாத போது இது இனி என்னால் இயலாது எனக்கூறி ஒதுங்குவோர் மத்தியில் வேறு வழியில் இதை எப்படி முயற்சிக்கலாம் என்று சிந்தித்து. தன் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரக்கூடிய மாற்றத்திற்கு முதல் விதையாக செயல்பட்டவர் புனித ஜான் மரிய வியான்னி.
கிரிக்கெட் மோகம் தலைவிரித்து ஆடும் இன்றைய சூழலில் தன்னம்பிக்கை பேச்சாளர் திரு. சுகிசிவம் அவர்கள் கூறுவார் கிரிக்கெட் விளையாட்டை வெறிகொண்டு பார்க்கும் நாம் அதிலிருந்து வாழ்க்கையை உணர முயல வேண்டும்  என்று. கிரிக்கெட் விளையாட்டில் ஒருவர் பந்தை அடித்து மதிப்பெண்கள் எடுக்க முயலும் போது எத்தனை பேர் அவரை சுற்றி அவரை தோற்கடிப்பதற்காக நிற்கிறார்கள் என்று பார்க்கும் போது 11 நபர்கள். அதுதான் வாழ்க்கை நாம் வாழ்வில் முன்னேறிச் செல்ல விரும்பினால் நம்மை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கூட்டமே காத்திருக்கும் என்கிறார். அவர்களை எதிர்கொண்டு வாழ முதலில் நாம் பழக வேண்டும். இதனை எதிர்கொண்டவர் புனித ஜான் மரிய வியானி இலத்தின் மொழி தெரியவில்லை, இவர் குருவாக தகுதியற்றவர், இவர் முழுமையாக இறையியல் படிக்காதவர் என பலவிதமான குறைகளை கூறி இவர் குருவாக திருநிலைப்படுத்துவதற்கு முன்பும், திருநிலைப்படுத்தப்பட்ட பின்பும் குறை கூறியவர்கள் பலர். எப்படி கிரிக்கெட் விளையாட்டில் 11 பேர் இணைந்து ஒருவரை வீழ்த்த வேண்டுமென்ற எண்ணத்தில் சுற்றி நிற்கும் போது, மட்டையைப் பிடித்துள்ள ஒருவர் அவர்களை எதிர்கொண்டு விளையாடுகிறாரோ அதுபோல நாமும் அனைவரையும் எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு அனைவரையும் எதிர் கொண்டவர் புனித ஜான் மரிய வியானி.
இவர் முழுமையான இறையியலை இலத்தின் மொழியில் பயிலாதவர். எனவே, இவர் பாவ மன்னிப்பு வழங்க தடை விதிக்க வேண்டும் என சில அருள்தந்தையர்கள் பிரான்ஸ் நகரின் ஆயருக்கு கடிதம் எழுதி அதை அனைத்து பங்கிற்கும் அனுப்பி கையொப்பம் பெற்ற போது அதில் இவரும் கையொப்பம் இட்டுவிட்டு அமைதியாக இருந்தார். இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற கூடியக்கூட்டத்தை கண்டு அதை தடுக்க எண்ணியவர்கள் பலர். ஆனால், அவர் செய்த அந்த பணியை அர்த்தமுள்ள வகையில் செய்ய எவரம் முன் வரவில்லை. தம்மை மட்டம் தட்டும் மனிதர்கள் மத்தியில் எதிர்வாதம் செய்வதை விட தன்னை நோக்கி வரக்கூடிய  மக்களுக்கான பணியே முக்கியம் என தன் குருத்துவப் பணியின் முதல் விதையாக இருந்து செயல்பட்டு வந்தவர் புனித ஜான் மரிய வியானி. “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று” (மாற்கு12:10) என்பதற்கு ஏற்ப, பிரான்ஸ் நாட்டில் பல இடங்களில் இருந்து இவரிடம் பாவமன்னிப்புப் பெற மக்கள் கூட்டம் கூட்டமாக பிரான்சில் உள்ள ஆர்சு நகரை நோக்கி பயணம் செய்தனர். எனவே பிரான்சு நாட்டின் அரசும்; இந்த கிராமத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் முன்பதிவு அலுவலகத்தை புதிதாக துவங்கியது.
அன்புக்குரியவர்களை இன்று நாம் வாழும் இவ்வுலகில் பெரும்பான்மையான மக்கள் மற்றவர்களின் வளர்சியைக் கண்டு பொறாமைப்படும் மனிதர்களாகத் தான் அதிகம் காணப்படுகின்றனர். நம் நாட்டு அரசியலில் கூட ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை குறை கூறிக்கொண்டே அரசியல் செய்கிறார்கள். ஆனால் அவர்களால் குறைகளை நிறைகளாக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சிகளை அவர்கள் எடுப்பது இல்லை என்பது தான் இன்று வெள்ளிடைமலை.
அன்புக்குரியவர்களே “இருபதாயிரம் வெற்றுப் பேச்சுகளை விட ஒரு துளிச் செயல் மேலானது” என்கிறார் விவேகானந்தர். “நீ விரும்பும் மாற்றமாக முதலில் நீ மாறிடு” என்கிறார் காந்தியடிகள். இவர்களின் வார்ததைகளின் அடிப்படையிலும், புனித ஜான் மரிய வியானியின் வாழ்வும் நம்மை மாற்றத்தைப் பற்றி பேசுவதை விட அதற்கு செயல்வடிவம் தரும் முதல் விதையாக வாழ, மாற அழைக்கின்றது. எவ்வாறு குருவாவதற்கு முன்பும், குருவானனதற்கு பின்பும் பலரால், பல சூழ்ச்சிகளால், வாழ்வில் முன்னேற விடாது தடை கற்களாக பலர் மாறி நின்ற போது, தடைகளை கடந்து மாற்றத்தின் முதல் விதையாக எதையும் கண்டு துவண்டுவிடாமல் தன் பணிகளை மட்டுமே முன்னெடுத்து புனித ஜான் மரிய வியானி செயல்பட்டாரோ, அவரை போல நீங்களும் நானும் வாழ்வை அமைத்திட மாற்றத்தைப் பற்றி போசுவதை விட மாற்றத்தின் முதல் விதையாக மாறிட அருள் வேண்டியவர்களாய் இத்திருப்பலியில் தொடர்ந்து பயணிப்போம் மாற்றத்தின் முதல் விதையாக மாறிட...

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...