ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

கிறிஸ்துவின் மனநிலை நமது மனநிலையாகிட...(11.4.2022)

கிறிஸ்துவின் மனநிலை நமது மனநிலையாகிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தது. யூதாஸ் எப்படிப்பட்டவர்? அவரை நம்பலாமா? அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதையும் இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் யூதாசோடு தன் பயணத்தை தொடர்கிறார்.

இவ்வளவுக்கு யூதாசைப்பற்றித் தெரிந்தவர், ஏன் யூதாசிடம் முக்கியமானப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். 


இயேசு யூதாசுக்கு திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருகிறார். ஆனால் யூதாசு கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறிது, சிறிதாக பயன்படுத்தி தன்னையே கறைபடித்துக்கொள்கிறார்.

அதுபோலவே பரிசேயர்களும் இலாசரை உயிர்த்தெழச்செய்த நிகழ்ச்சி வாயிலாக  ஏராளமான யூதர்கள் மனம் மாறினார்கள். அவர்கள் இயேசுவில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். இயேசுவிடம் பலர் நம்பிக்கை கொள்வது, அதிகாரவர்க்கத்தினருக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்த தொடங்கியது. அதற்காக அவர்கள் இலாசரை கொல்வதற்கும் துணிந்து விட்டார்கள். இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டும், இயேசுவின் போதனை மற்றும் வாழ்வு அடிப்படையில் தங்கள் வாழ்வை சரியான பாதையில் அமைத்துக் கொள்வதற்கு பதிலாக கரை படுத்துக் கொள்ளக் கூடியவர்கள் ஆகவே பரிசேயர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய நாள் நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.


இந்த இறைவார்த்தை பகுதிகள் என்று நமது வாழ்வுக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் மனநிலையை கொண்ட மனிதர்களாக இருக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது தன்னோடு இருப்பவன் தன்னை காட்டிக் கொடுப்பான் என அறிந்திருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவனும் மீட்புப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசு செயல்பட்டார். தனக்கு எதிராக எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருந்த பரிசேயர்களும் சதுசேயர்கள் மறைநூல் அறிஞர்களும் தங்கள் தவறான வாழ்வை மாற்றிக் கொண்டு இறைவனின் மக்களாக செயல்பட வேண்டும் என்பதே இயேசுவின் வாழ்வும் பணியும் நமக்கு வெளிப்படுத்துகிறது.

மரியாவின் திருத்தலம் பூசுதல் இயேசுவின் இறப்பை நினைவுத்துவது போல நம் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு நன்மை தனங்களும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்னும் நம்மை அதிகமாக அன்பு செய்கிறார் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. வழிகாட்டும் இறைவனின் வாழ்க்கை வழித்தடத்தில் பயணம் செய்கின்ற நாம் ஒவ்வொருவருமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மனநிலையை நமது மனநிலையாக கொண்டு வாழ இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு ஜெபிப்போம்.


சனி, 9 ஏப்ரல், 2022

திருமண திருப்பலிக்கன மன்றாட்டுக்கள்

திருமண திருப்பலிக்கன  மன்றாட்டுக்கள் 

1.  திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழ்வை எதிர்க்க கொள்ள துணிவோம்… (10.04.2022)

 வாழ்வை எதிர்க்க கொள்ள துணிவோம்… 

    இயேசுவின் நண்பர்களே! 



    குருத்து ஞாயிறு என்றாலும் இன்றைய நாள் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய துன்பங்களையும், இறப்பையும் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்;.


    பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே! அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். இறந்தபோதும் அவ்வாறே.


    இன்று இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததே தமதுப் சாவினை சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து பார்க்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இந்நாளில் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் கோட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உணர முயல்வோம்.



ஏன் இயேசு எருசலேம் செல்ல வேண்டம்?

இதுவரை இறைவாக்கினர் யாரும் எருசலேமில் மடிவதில்லை என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். ஆனால் தன்னால் அந்நிலையை பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும்  தங்களின் சுயலாபத்தால் மாற்ற வல்லவர்கள் என்பதை நன்றாக அறிந்தே எருசலேம் நகருக்குள் இயேசு நுழைகிறார்.


ஏன் இன்றைய நாளில் இயேசு எருசலேமுக்குள் நுழைய வேண்டும்?

    யூதர்களின் ஆண்டுகளில் ‘நிசான்’ என்னும் மாதம் மிகவும் முக்கியமானது. காரணம் அவர்களுக்கு இதுவே முதல்மாதம், இந்த மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நாள், அந்த நாளில் தான் யூதர்கள் தங்கள் பாஸ்கா விழாவினைக் கொண்டாடுவார்கள்.( வி.ப 12:2) இதில் பலியிடுகின்ற ஆட்டினை நான்கு நாட்களுக்கு முன்பாக தேர்ந்தெடுப்பார்கள் (லேவி 23) அதாவது குருத்து ஞாயிறான இன்று தான் மாசற்ற ஆட்டுக்குட்டியினை தேர்ந்தெடுத்து புனித வெள்ளியன்று பலியிடுவர். இயேசுவும் தன்னையே பலியிடப்படுகின்ற செம்மறியாக இந்நாளில் கையளிக்கின்றார். இதனால் தான் இயேசு இன்று எருசலேமில் நுழைகிறார். 


ஏன் இயேசு கழுதை மீது பயணம் செய்ய வேண்டும்?

    இறைவாக்கினர் செக்கரியாவின் இறைவாக்கை நிறைவேற்றுகிற வகையில் கழுதையின் மீது இயேசு அமர்ந்து வருகிறார். 

    கழுதை தாழ்ச்சியின் அடையாளம், ஒதுக்கப்பட்டவர்களின் சின்னம், அடிமையின் விலங்கு, அமைதியின் சிகரம், பொதுவாக வெற்றிப் பெற்றவர்கள் தன்னை அரசனாகக் காண்பித்துக் கொண்டவர்கள் குதிரையின்மீது தான் பவனி வருவார்கள் ஆனால் இயேசு அனைத்தையும் தலைகீழாக்க மாற்றப்போட்டவார். அதன் விளைவே கழுதை பயணம். மேலும் விரைவில் தாம் பலரால் எள்ளி நகையாடப்படுவதன் உருவகம். 


ஏன் மக்கள் ஓசன்னா கீதம் இசைத்தனர்?

    இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டு பின் தொடர்ந்த மக்கட்கூட்டம் அவரை அரசராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனார். அவரை ஓர் அரசராக ஏற்றுக் கொண்டதை அவர்களின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. வழிகளில் தங்கள் மேலுடைகளை விரித்து அரசருக்கு தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர். 

ஏன் ஒலிவமரகிளை பயன்படுத்தப்பட்டது?

ஒலிவமரம் என்றாலே வெற்றியின் அடையாளம். அதன் கிளைகளைத் தறித்து வெற்றிக்கீதம் பாடுகின்றனர். இதோ எம் அரசர் எருசலேமுக்குள் நுழைந்து விட்டார் என்று புகழ்கின்றனர். எனவே ஓசான்னா! ஓசான்னா என ஆர்ப்பரிக்கிறார்கள். இதை அனைத்தையும் பார்க்கின்ற பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள் அதனை ஜீரணிக்க முடியவி;ல்லை.


    இந்நிலையில் இயேசுவின் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என சிந்திக்கின்ற போது… 

இந்த வெற்றியின் ஆர்பரிப்பு, இன்னும் சில நாட்களில் புலம்பலாக மாறும்…. என்பதையும், 

இந்த ஓசான்னா கீதம், ஒழிக என்ற குரலாக மாறி ஒழிக்கும்… என்பதையும், 

இந்த ஒலிவ மரத்தின் இலைகள், கிளைகள் அனைத்தும் முள்முடியாக மாறும்…. ஏன்பதையும், 

இவர்களின் ஆடைவிரிப்பு அனைத்தும் அவரின் ஆடையையே கழற்றிவிடுவதாக மாறும்… என்பதையும்,  

கூட்டமாக பின் தொடர்ந்தவர்கள், தான் கைதுச் செய்யப்பட்ட பின்பு தம் பின்னால் ஒருவரும் நிற்கா வண்ணம் ஓடி மறைவாhர்கள்… என்பதையும், 

மக்களின் மத்தியில் அரசராக பவனி வந்தவர், இரு கள்வர்களின் நடுவில் அசைய முடியாமல் அறையப்பட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் தொங்குவார்… என்பதையும் இயேசு நன்றே அறிந்திருந்தார். மரணத்தைக் கண்முன் கொண்டிருந்தாலும், தான் அடைய இருந்த இலக்கினை மிகத் தெளிவாக கடந்து சென்றாhர் இயேசு. இயேசு தன் வாழ்வில் போற்றலையும் தூற்றலையும் சமமாக எடுத்துக் கொண்டாhர். மனிதத்தின் பாவத்தின் விளைவாக கிடைத்த சாவினை வெற்றிக்கொள்ள சாவினை ஏற்க துணிந்தார்.

இந்த இயேசுவின் வாழ்வு இன்று நமக்கு தரும் பாடம் இயேசு  வாழ்வின் எதார்த்தங்களை துணிவோடு சந்தித்து சாதித்ததுப்  போல வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை இறைத்திட்டம் எனக்கருதி துணிந்து ஏற்க சிலுவையில் தொங்கும் இயேசுவை நமது மனக்கண்முன் இருத்தி வாழ்வை எதிர்க்க கொள்ள இறையருள் வேண்டுவோம். 



வெள்ளி, 8 ஏப்ரல், 2022

பலருக்கு வாழ்வு கொடுப்போம்....(9.4.2022)

பலருக்கு வாழ்வு கொடுப்போம்....


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


"ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" (யோவா 11:50) தலைமைக்குரு கயபாவின் இவ்வறிக்கை ஒரு இறை வாக்கு. அறிவுள்ள விவாதம். உண்மையின் வெளிப்பாடு. ஒரு முன்னறிவிப்பு. ஆதாம் என்னும் ஒரு மனிதனால் வந்த பாவத்தையும் சாபத்தையும்,இயேசு தன் இறப்பால் அழிக்க இருப்பதை, கயபா தலைமைக்குரு தன்னை அறியாமல் முன்னறிவிக்கிறார். பவுலடியார் இதை உறுதிசெய்கிறார். "ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது".( உரோ5 :12)

ஒரு மனிதனின் பாவத்தால் மனிதன் சிதறினான். நாடுகள் சிதறின. பல மொழிகள் உண்டாயின. ஆனால் இயேசு என்ற ஒற்றை மனிதனின் வாழ்வு இவை அனைத்தையும் மாற்றிக் கொடுத்தது ...இன்னும் பலவிதமான பிரிவினைகளுக்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இன்றைய நடைமுறை இதுதான். ஒருசில நல்லவர்களின் இறப்புதான் பலருக்கு வாழ்வைக் கொடுக்கிறது. ஒருவருடைய தவறான வாழ்வு பலருக்கு அழிவைக் கொண்டுவருவதும் உண்மையே. நல்லவர் ஒருவர் இன்று அறிதாக உள்ளது. பொல்லாதவர் கூட்டம் பெரிதாக உள்ளது. நல்லவர் ஒருவராக நாமிருப்போம். பலருக்கு வாழ்வு கொடுப்போம். 


வியாழன், 7 ஏப்ரல், 2022

கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் எனப்படுகிறார்கள்.....(8.4.2022)

கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் எனப்படுகிறார்கள்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தெய்வங்கள் ஆகிறார்கள் என்று இன்றைய வாசகத்தில் இயேசு குறிப்பிடுகிறார்.

" வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிகொண்டார்" என்று யோவான் நற்செய்தியாளர் கூறுவது போல, நம் மத்தியில் குடிகொள்ள வந்த வார்த்தையான இறைவன், நாம் ஒவ்வொருவரும் அவரது தெய்வீக தன்மையில் பங்கு பெற வேண்டும் என விரும்புகிறார். 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா உலகின் யதார்த்த நிலையை சுட்டிக் காட்டி, அவைகளின் மத்தியிலும் ஆண்டவரின் உடனிருப்பை உணர்த்துகிறார் . 

               சுற்றி இருக்கின்ற சூழல் திகிலை ஏற்படுத்தினாலும், மனிதர்கள் நம்மை தீமையிலும் பொறாமையிலும் வீழ்த்த நினைத்தாலும்,   இறைவன் இருக்கிற இடத்தில் அவரை வெற்றி கொள்ள யாருமில்லை. அவரே வலியவரின் கையினின்று வறியவரை மீட்கக் கூடியவர். 

       எனவே, இமைகள் மூடாது நம்மை கண்ணின் மணி போல காத்திடும் நம் இறைவனின் வார்த்தையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, அவரது வார்த்தைகளை இதயத்தில் நிறைத்தவர்களாக, அவரது அன்பில் நம்மை இணைத்துக் கொண்டவர்களாக, அவரது தெய்வீக தன்மையில் நாமும் பங்கு பெற இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இத்திருப்பலயில் செபிப்போம்.

புதன், 6 ஏப்ரல், 2022

நிலை வாழ்வை நமதாக்கிக்கொள்ள...(7.4.2022)

நிலை வாழ்வை நமதாக்கிக்கொள்ள...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீங்கள் என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றுமே  சாக மாட்டீர்கள் என்று கூறுகிறார்.
ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த யூதர்கள், அவற்றுக்கு செவி கொடுக்க, ஆண்டவரது வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மனம்  இல்லாதவர்களாக இருந்தார்கள். 

          ஆனால் வார்த்தையான இறைவன் இவ்வுலக படைப்பின் முதல் முதல் பொழுதில் இருந்தே நம்மோடு உரையாடிக் கொண்டே இருக்கிறார். இந்த உலகை படைப்பதற்கும் அவரது வார்த்தைகளே அடித்தளமாக இருந்தன. தான் தேர்ந்து கொண்ட இஸ்ரேல் மக்கள் பாவத்தில் மூழ்கிய போதும் அவர்களது பாவத்தை சுட்டிக்காட்டி, மன்னித்து அவரது வார்த்தைகளை உடன்படிக்கையாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குகிறார். 
"நானே உங்கள் கடவுள், நீங்கள் என் மக்கள்" என்று தனக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் உள்ள உறவின் பிணைப்பை வெளிப்படுத்துகிறார்.

 அதே வார்த்தையான இறைவன் இன்றும் நம்மோடு உரையாடுகிறார். அவர் படைத்த இயற்கையின் இன்னொலியின் வழியாகவும், நமது ஆன்மாவின் ஆழத்தில் எழும் மெல்லிய குரலோசை வழியாகவும், நாம் வாழ தம்மையே இழக்கும் நமது பெற்றோரின் வார்த்தைகள் வழியாகவும்,  அன்றாட வாழ்வில் எதிர்வரும் சவால்களில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க நமக்கு வழிகாட்டும் நல்ல மனிதர்கள் வழியாகவும் ஆண்டவர் நம்மோடு உரையாடுகிறார்.  அவரது குரலுக்கு செவிமடுக்க, அவரது வார்த்தைகளை கடைபிடிக்க, நிலை வாழ்வை நமதாக்கிக்கொண்டு ஆண்டவரின் அன்புப் பிள்ளைகளாக வாழ அருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான அழைப்பு...(6.4.2022)

பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான அழைப்பு .... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இன்றைய வாசகத்தில் இயேசுவுக்கும் யூதர்களுக்கும் இடையே விடுதலை குறித்தும் அடிமைத்தனம் குறித்தும் விவாதம் நடக்கிறது 

 கடவுளின் வார்த்தை அவர்களுக்கு விடுதலை அளிக்கும் என்கிறார் இயேசு. அவர்களோ "நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை என்கின்றனர்.  இயேசுவோ "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று சொல்லி, அவர்களின் அறிவுக்கு  கண்களைத் திறக்க முயல்கிறார்.

ஆபிரகாமின் வழிமரபினரான யூதர்கள் பல ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தனர், பின்னர், பாபிலோனுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர். இயேசுவின் காலத்தில்கூட அவர்கள் உரோமைப் பேரரசின் அடிமைகளாய்த்தான் இருந்தனர். இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மறுத்ததே அவர்களின் பொய்மையின் அடிமை என்பதைக் காட்டுகிறது.

 எனவேதான், இயேசு அவர்களுக்கு நினைவூட்டுகிறார், "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று. அந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கவே இயேசு இந்த உலகிற்கு வந்தார்.

ஆனால் யூதர்கள் இயேசு கொண்டு வந்த விடுதலையை அறியவுமில்லை, அதனைப் பெற  விரும்பவுமில்லை. ஆனால், கிறித்தவராகிய நாம் இயேசு சொன்ன வார்த்தைகளை அறிந்திருக்கிறோம். ஆனால் பல நேரங்களில்  பாவங்களுக்கும், அடிமைகளாய் வாழ்ந்து வருகிறோம். இந்த உண்மையை அறிக்கையிட்டு, இயேசுவின் மன்னிப்பையும், விடுதலையையும் இத்தவக்காலத்தில் பெற்றுக் கொள்ள முயல்வோம் அதற்கான அருளை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். 

திங்கள், 4 ஏப்ரல், 2022

ஆண்டவரின் வழிகள் செம்மையானவை...(5.4.2022)

ஆண்டவரின் வழிகள் செம்மையானவை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முகத்தில் இரண்டு கண்கள் இருந்தாலும் அவை பார்க்கும் பார்வை ஒன்று தான். இரண்டு காதுகள் இருந்தாலும் அவை கேட்கும் செய்தி ஒன்று தான். இறைவனும் மனிதனும் இருந்தாலும் ஆன்மாவை ஆட்சி செய்பவர் இறைவன் மட்டும் தான். 

ஆம் அன்புக்குரியவர்களே!
               நான் போன பின் என்னை தேடுவீர்கள். நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார். ஆண்டவர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கும்.  ஆண்டவர் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும். ஆண்டவர் இருக்குமிடத்தில் அன்பு நிலைத்திருக்கும். ஆண்டவர் குடிகொள்ளும் ஆன்மாவை கொண்ட மனிதன் அவரைப் போலவே மேன்மையான வழிகளை நாடக் கூடியவனாக இருப்பான். ஆண்டவராம் இறைவன் நமது பெயர் ஒவ்வொன்றையும் தனது உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளார். நமது வாழ்வுக்கான நல்வாழ்வின் திட்டங்களை வகுத்தவராக இருக்கின்றார். அந்த நல்வாழ்வின் பாதையில் நம்மை நாளும் கரம் பற்றி வழி நடத்துகின்றார். 
                   நமது பாதையில் கற்களும் முட்களும் குறுக்கிட்டாலும் நம்மைத் தமது கரங்களில் ஏந்தக் கூடியவராக இருக்கிறார். இதை உணரும் உள்ளம் சோர்ந்து போவதில்லை, மனமுடைந்து போவதில்லை. 
               எனவே ஒரே பார்வையை காணும் நமது இரண்டு கண்களைப் போல நாமும் ஆண்டவரோடு இணைந்து அவர் நமக்கென்று வகுத்திருக்கின்ற நல்வாழ்வினை கண்டு கொள்வோம்.  நம்மை பலமிழக்கச் செய்யும் தேவையற்ற பழக்கங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வோம். செம்மையான பாதையினைக் கண்டுகொண்டு அப்பாதையில் புது வாழ்வின் பயணத்தை தொடர்ந்திட இன்றைய திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

தன்னையறிதல்...(4.4.2022)

தன்னையறிதல்...


தன்னை  பற்றிய ஆழமான புரிதலே இந்த தரணியில் ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ள வழிவகுக்கும்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
          இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை பற்றியும் தனது தந்தையைப் பற்றியும் ஆழமாக அறிந்திருந்தார். தன்னை பற்றி அவர் கொண்டிருந்த நலமான,  ஆழமான புரிதலே தந்தையின் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்க வைத்தது.

            மனிதர்களாகிய நாமும் நம்மை பற்றி ஆய்ந்து அறிந்து கொள்ளவே இந்த தவக்காலம் நமக்கு தரப்படுகிறது. இந்த தவக் காலத்தில் நம்மை குறித்து நாம் ஆய்வு செய்கின்ற போது,  நமது செயல்கள், நமது சொற்கள், நமது எண்ணங்கள் வழியாக நம்மை நாம் அறிந்து கொள்வதன் வழியாக இறைவனை அறிந்து கொள்ள இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 


தன்னை அறிந்து கொள்வதே
கடவுளை அறிந்து கொள்வதற்கான வழி.  இயேசு தன்னை அறிந்து இருந்தார். எனவே, தந்தையாம் இறைவனின் விருப்பத்தை அறிந்து கொண்டார். அதை நிறைவேற்றக் கூடியவராக இயேசு செயல்பட்டார்.  

    இந்த இயேசுவைப் போல நாமும் இறைவனின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமாயின்,  நம்மைப் பற்றிய ஆழமான புரிதல் இருக்கவேண்டும்.  நம்மைப் பற்றிய ஆழமான புரிதல் நம்மிடம் இருக்கும்போது இந்த சமூகத்தில் நாம் சந்திக்கக் கூடிய சவால்கள் எதுவானயினும் அனைத்திற்கு மத்தியிலும் நாம் ஆண்டவருக்கு உகந்த மக்களாக இருக்க முடியும்.                                    இன்றைய முதல் வாசகத்தில் செய்யாத குற்றத்தை சூசன்னாவின் மீது சுமத்தி மரண தண்டனைக்கு இழுத்துச் செல்லப்பட்ட நேரத்தில் கூட சூசன்னா மனிதர்களை நம்பவில்லை.  ஆண்டவரை நம்பினாள்.  நான்  நேர்மையானவள். நான் எத்தவறும் செய்யவில்லை.  ஆனால் இந்த மக்கள் என்னை தவறாக தீர்ப்பிட்டு
 எனக்கு மரண தண்டனை விதிக்க இழுத்துச் செல்கின்றார்கள்.   இந்நேரத்திலும் நான் நேர்மையானவள் என்பதை அறிந்த  ஒரே நபர் இறைவன் ஒருவரே.  அந்த இறைவன் என்னை காத்தருள்வார் என்று நடக்கக்கூடிய நிகழ்வுக்கு தன்னை முழுவதும் கையளிக்கின்றார் அந்த சூசன்னா. சூசன்னா தன்னைப் பற்றி அவர் கொண்டிருந்த ஆழமான புரிதல், தான் நம்புகிற இறைவன் மீது அவர் கொண்டிருந்த ஆழமான புரிதல், அன்று தானியில் இறைவாக்கினர் மூலமாக, 
உண்மை மெய்ப்பித்து காண்பிக்கப்பட்டு, தவறான தீர்ப்பிட்ட மனிதர்கள் தண்டனைக்கு உள்ளானார்கள்.  சூசன்னா பாதுகாக்கப்பட்டார் என்பதை முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  இந்த இறைவார்த்தை பகுதிகள் இன்று நமக்கு உணர்த்துகின்ற வாழ்வுக்கான பாடம்,  நாம் கடவுளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதற்கு நாம் நம்மைப் பற்றிய ஆழமான புரிதலில் வளர வேண்டும்.  நம்மை பற்றி நாம் கொண்டிருக்கக் கூடிய ஆழமான புரிதலே இந்த அகிலத்தில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை உணர்ந்து கொள்ள நமக்கு வழிவகுத்து தருகிறது. நம்மைப் பற்றிய ஆழமான புரிதலில் நாளும் வளருவோம். அதன் வழியாக இறைவனோடு உள்ள உறவில் இன்னுமாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரின் மக்களாக, அவர் காட்டும் பாதையில், பயணம் செய்வோம். அதற்கு நம்மை நாம் அறிந்து கொள்ள, இன்றைய நாளில் இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

சனி, 2 ஏப்ரல், 2022

புதிய பாதையில் புதிய வாழ்வு வாழ....(3.4.2022)

புதிய பாதையில்  புதிய வாழ்வு வாழ

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றையநாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் புதிய 
வாழ்வை வாழ நமக்கு அழைப்பு தருகின்றன.  இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய  அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை பற்றி நாம் வாசிக்க கேட்டோம்.  இனி இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களால் மீள முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களாக அனைத்து விதமான நம்பிக்கையையும் இழந்து போயிருந்த சூழ்நிலையில் இறைவாக்கினர் எசாயா வழியாக அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை இறைவன் முன் மொழிகின்றார். 

       கடந்தவைகளை நினைவூட்டி, எதையும் செய்ய ஆற்றலுள்ள ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் என்பதை அவர்களுக்கு உணர்த்துகின்றார்.  எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த நேரத்தில், ஒரு புறம் கடல், மறுபுறம் எகிப்திய படையினர் சூழ்ந்திருக்க,  கடலை இரண்டாகப் பிரித்து இந்த மக்கள் பாதுகாப்புடன் வெளியேற பாதை அமைத்துக்கொடுத்த அந்த கடவுள், இன்று அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்டு வருவார்; புதிய வாழ்வைத் தருவார்; புதிய பாதையை காட்டுவார்; புது செயல்களை  நீங்கள் முன்னெடுக்க உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்ற செய்தியினை இறைவன் வலியுறுத்துகிறார். 

 இதையே இன்றைய முதல் வாசகம் ஆக நாம் வாசிக்க கேட்டோம்.  இந்த முதல் வாசகம் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம், வாழ்வில் பல விதமான இன்னல்களையும் இடையூறுகளையும்  நாம் சந்தித்து இருந்தாலும் அந்த இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும் நம்மோடு இருந்து நம்மை மீட்டு வரக் கூடியவராக இறைவன் இருந்திருக்கிறார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. 

        பல நேரங்களில் நம்மோடு இருந்து நமது துன்ப நேரத்தில் நமது துன்பத்தில் இருந்து நம்மை மீட்டு வந்த இறைவனை நாம் உணர்ந்திருக்கிறோமா?  சில நேரங்களில் அந்த இறைவனை உணர மறந்திருக்கிறோம்.  ஆனால் கடவுள் எந்நாளும் நம்மோடு இருக்கிறார். நமது துன்பங்களிலிருந்து நம்மை மீட்க கூடியவராக இறைவன் இருக்கிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

     இந்த வாசகங்கள் வலியுறுத்துகின்ற வார்த்தைகளின் அடிப்படையில்,  ஆண்டவர் நம்மோடு துணை  இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து துணிவோடு ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழக்கூடிய மனிதர்களாய் நீங்களும் நானும் இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 

     இத்தகைய ஒரு அழைப்பை திருத்தூதர் பவுலும் தன் வாழ்வில் பெற்றார்.  இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுபவர்களை எல்லாம் கொன்று குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆணையினைப் பெற்றுக் கொண்டு புறப்பட்ட ஒரு மனிதன், ஆண்டவர் இயேசுவின் பால் ஈர்க்கப்பட்டவராய்,  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தனக்கு உரிமையாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பை என கருதுகிறேன் எனக் கூறி தன்னை முழுவதுமாக தன்னிடமிருந்த தன்னுடைய அடையாளங்களான, தான் ஒரு உரோமை குடிமகன் என்பதை, தான் ஒரு படித்த மேதை என்ற அனைத்து விதமான பட்டங்களையும் அடையாளங்களையும் புறந்தள்ளிய ஒரு மனிதனாக, ஆண்டவரை தன் உரிமைச் சொத்தாக மாற்றிக் கொள்ள வேண்டுமென தனது வாழ்வை மாற்றிக் கொண்டார். 

     கடந்த காலங்களை மறந்தவராய் கடந்த கால தவறுகளை எல்லாம் விட்டொழித்து,  எந்த மனிதர்களை, எந்த இயேசு கிறிஸ்துவின் பெயரை அறிக்கையிடுபவர்களை கொல்ல வேண்டுமென புறப்பட்டாரோ, அந்த இயேசு கிறிஸ்துவை அறிவிக்கக் கூடியவராக, பல மைல் தூரம் சென்று அறிவிக்கக் கூடியவராக, அவருக்காக தனது உயிரையும் இழக்கக் கூடிய ஒரு மனிதராக பவுல் மாறினார்.  இந்தப் பவுலை போலவே நீங்களும் நானும் மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  

            ஆனால் பல நேரங்களில் நாம் இயேசுவைப்போல மாறுவதை விட, இயேசுவைப் போல  மாற முயற்சிப்பவர்களை விமர்சனம் செய்பவர்களாகவும்,  இயேசுவுக்காக தன்னுடைய இன்ப துன்பங்களை தியாகம் செய்பவர்களை விமர்சனம் செய்யக் கூடியவர்களாகவும், இயேசுவின் பொருட்டு நல்லது செய்கின்ற நபர்களின் நல்ல உள்ளங்களை உணராத மனிதர்களாகவும் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். 

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்மணியை இயேசுவின் முன்னிலையில் வந்து நிறுத்தி,  இந்த பெண்ணை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்லுகிறீர்?  என்ற கேள்வியை இயேசுவின் முன்னிலையில் நாங்கள் ஓசையும் சட்டத்தை பின்பற்ற வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை இயேசுவின் முன்னிலையில் எழுப்புகிறார்கள். 

 ஒரு பெண் தவறு செய்தால் அவளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பாக இயேசுவிடம் வந்து  கருத்து கேட்க வேண்டிய அவசியம் அங்கு இல்லை.  ஆனால் அன்று அவர்கள் அதை செய்தார்கள்.  ஏன் செய்தார்கள் என்று சிந்திக்கின்ற போது,  இயேசுவின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. 

              ஒருவிதத்தில் இயேசு கிறிஸ்து, இந்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்லுங்கள் என்று சொல்லியிருந்தால், 
மோசேயின்  சட்டத்தைப் பின்பற்றுகிற நபராக இருந்திருப்பார். 

      அதே சமயம் அன்றைய காலகட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் கொண்டது உரோமை ஆட்சி அதிகாரம். ஆட்சியாளர்களுக்கு மத்தியில் உரோமை ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார் என கூறி குற்றவாளியாக நிறுத்திவிட முடியும் என்ற எண்ணத்தோடு அவர்கள் அக்கேள்வியை எழுப்பினார்கள். 

    ஒருவேளை இயேசு இந்த பெண்மணியை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து 
 கொல்ல வேண்டாம் என குறிப்பிட்டிருந்தால், இவர் மோசேயின் சட்டத்தை  மீறினார் எனக் கூறி, யூத சமயங்கள் கற்பிக்கின்ற  சட்டங்களுக்குப் புறம்பாக செயல்படுகின்ற நபர் இவர்  எனக் குற்றம்சாட்டி அவரை கைது செய்யலாம் என்ற எண்ணத்தோடு முன் வந்து அவர்கள் அந்த பெண்மணியை நிறுத்தினார்கள். 

     இயேசு அந்த பெண்மணியை உற்று நோக்கினார்.  பொதுவாகவே யூத சமூகத்தில் பெண்ணை ஒரு பகடைக் காயாகவும் பெண்களை இழிவாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும்,  பல விதமான கொடுமைகளையும் நிகழ்த்தக்கூடிய மனிதர்களாகத் தான் யூதர்கள் இருந்தார்கள்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்வையும் அங்கு இயேசு படம்பிடித்துக் காட்டுகின்றார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் என்று கொண்டு வந்து நிறுத்தினார்கள். இருவர் நிற்க வேண்டிய இடத்தில் பெண் மட்டுமே குற்றம் செய்த பெண்ணாக நிறுத்தப்பட்டு இருந்தாள். 

            அந்தப் பெண்ணின் சார்பாக இயேசு பேசவில்லை. மாறாக, உங்களுள் பாவம் செய்யாதவர் முதல் கல்லை எறியட்டும் எனக் கூறியவராய், தன் போக்கில் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இயேசுவின் இந்த வார்த்தைகள் சுற்றியிருந்தவர்கள் என் இதயத்தில் குத்தியது.  குற்றம் இல்லாத மனிதர்கள் அங்கு எவரும் இல்லை.  எனவே தான்
பெரியவர் தொடங்கி சிறுவர் வரை அனைவரும் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள் என விவிலியம் குறிப்பிடுகிறது.  

       அனைவரும் குற்றம் சுமத்த வந்தவர்கள் எல்லாம் எதுவும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு, குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, இயேசுவை எப்படியாவது குற்றவாளியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அங்கு நின்ற அவர்களெல்லாம் ஒன்றும் சொல்லாமல் கலைந்து சென்றார்கள். 

       இயேசு அந்த பெண்ணை பார்த்து, "அம்மா! யாரும் உன்னை தீர்ப்பிட வில்லையா? என்று கேட்கிறார். அவரும் இல்லை ஐயா என்கிறார்.  நானும் உன்னை தீர்ப்பிடவில்லை. நீர் போகலாம்.  இனி பாவம் செய்யாதீர் என்று கூறி அந்தப் பெண்மணியை அனுப்பி வைக்கின்ற நிகழ்வினை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கலாம். 

          இந்த நற்செய்தி வாசகம் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் பல நேரங்களில் கடவுள் நமக்கு செய்த அளப்பரிய காரியங்களை மறந்தவர்களாக, கடவுளின் இருப்பை உணராதவர்களாக, பல நேரங்களில் துன்பங்கள் வருகின்ற போது, நாம்
கடவுளுடைய பராமரிப்பை உணர்ந்திராத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நமக்கு இறைவன் உணர்த்துகின்ற பாடம், எல்லாச் சூழ்நிலையிலும் இறைவன் நம்மோடு இருக்கிறார்.  நம்முடைய இன்ப துன்பங்களில் துணை இருந்து நம்மை வழிநடத்துகிறார்.  பல நேரங்களில் அவரை விட்டு விலகிச் செல்லக் கூடிய நிலையில் நாம் இருந்தாலும்,  நாம் செல்லும் பாதை தவறு என்பதை சுட்டிக்காட்டி நம்மை நல்வழிப்படுத்தக்  கூடிய நபராக இறைவன் இருக்கிறார்.  அந்த இறைவனின் உடனிருப்பையும், அவரின் பராமரிப்பையும் நாம் உணர்ந்து கொள்ள நம்மைக் குறித்து நாம் சுய ஆய்வு செய்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.  நாம் செல்லுகின்ற பாதை இயேசுவுக்கு உகந்த பாதையா?  நாம் செய்கின்ற செயல்கள் இயேசுவுக்கு உகந்த செயலா? நாம்
எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் இறைவனுக்கு உகந்த எண்ணங்களா? என சீர்தூக்கிப் பார்த்து,  இறைவனுக்கு புறம்பான எண்ணங்களும் செயல்களும் சொல்லும் நம்மிடத்தில் இருக்குமானால் அதையெல்லாம் சரி செய்து கொண்டு, ஆண்டவரின் உடனிருப்பை நம்பி, அவர் நமக்குத் தருகின்ற புதிய வாழ்வினை உணர்ந்து கொண்டவர்களாக ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்குத் தந்து கொண்டிருக்கக் கூடிய புதிய நாளில்,  நாம் இயேசுவைப் போல மாறக்கூடிய, புதுப் பிறப்பு அடைந்த மனிதர்களாக மாறிட அழைக்கப்படுகிறோம். 

              நாம் ஒவ்வொருவருமே கடந்த கால நிகழ்வுகளை மறந்து, தவறிப்போன தருணங்களை மறந்து,  இனி வருகின்ற நாட்களில் இறைவனின் உடனிருப்பை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக, அவரின் உடனிருப்பில்  தொடர்ந்து பயணம் செய்யக் கூடிய மனிதர்களாக, புதிய மனிதர்களாக, புதிய பாதையில், புதிய வாழ்வை நோக்கி  பயணிக்க, இறைவன் அழைக்கின்றார். 

        இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, இயேசு கற்பிக்கின்ற புதிய பாதையில் புது வாழ்வைத் தொடங்கிட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

நேசிப்பது நாமாக இருக்க...(2.4.2022)

நேசிப்பது நாமாக இருக்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
   இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைப் பிடித்து வரச் சென்றவர்கள் இயேசுவை பிடிக்காமல் விட்டு விட்டு வருகிறார்கள்.  ஏன் இயேசுவை நீங்கள் பிடித்து வரவில்லை? என்ற கேள்வியை எழுப்புகிற போது  அவரைப் போன்ற ஒருவரை நாங்கள் இதுவரை கண்டதில்லை என்று பதில் கூறக் கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இன்றைய இறை வார்த்தையானது  இன்று நமக்கு உணர்த்துகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன? என ஆராயும் போது இயேசு இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது அவர் அனைவருக்குமான ஒரு மனிதராக இருந்தார்.  அவரின் பார்வையில் பாரபட்சம் என்பதில்லை.  மனிதர்களை மனிதர்களாக நோக்கினார். பணத்தின் அடிப்படையிலோ, ஓர் இனத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, மனிதர்களை பிரித்துப்பார்க்க கூடியவராக இயேசு இருக்கவில்லை. அவர் அனைவரையும் சமம் எனக் கருதினார். 

                 எப்படி உதிக்கின்ற சூரியன் நல்லோர் தீயோர் என வேறுபாடு பாராமல் அனைவரின் மீதும் தனது ஒளிக் கீற்றினை வீசுகிறதோ,  அது போல கடவுளும் அனைவரையும் தம் பிள்ளைகள் எனக் கருதி நாம் எந்நிலையில் இருந்தாலும் அனைவரும் மீட்பு பெறுமாறு தனது வாழ்வை அர்ப்பணித்தார். 

    எனவே தான் பல நேரங்களில் பரிசேயர்களின் செயல்களை அவர் குற்றம்சாட்டிய போதும் கூட அவர்களும் தங்கள் செயல்கள் தவறு என உணர்ந்து கொண்டு நல்லதொரு மன மாற்றத்தை அடைந்து கடவுள் விரும்பும் மக்களாக வாழ வேண்டும் என்பதன் அடிப்படையில் தான் அவர்கள் செய்கிற தவறை தவறு எனச் சுட்டிக் காண்பித்தார்.  அதனால் தவறு என சுட்டிக் காண்பிக்கக்கூடிய ஒரு மனிதனாக இயேசு செயல்பட்டார்.  நாமும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போலவே இந்த சமூகத்தில் வாழ அழைக்கப்படுகிறோம்.

         இந்த இறைவார்த்தைப் பகுதியானது நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன?  என சிந்திக்கின்ற போது  அன்னை தெரசாவின் வாழ்வே நம் கண்முன் வந்து செல்வதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அன்னை தெரசா அவர்கள் கூறுவார்கள், "வெறுப்பது யாராயினும் நேசிப்பது நீங்களாக இருங்கள்" என்று. 

நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் பல நேரங்களில் அநீதிகளை கண்டு அது அநீதி எனச் சுட்டிக் காட்டுகின்ற போதும், பல நேரங்களில் நல்ல செயல்களை மட்டுமே முன்னெடுப்பதால் பலருடைய கேலிக்கூத்துக்கும் எள்ளி நகையாடக் கூடிய செயல்பாடுகளுக்கும் நாம் உள்ளாகின்ற போதும் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒரு வாக்கியம், வெறுப்பது யாராக இருப்பினும் நேசிப்பது நாமாக இருக்க வேண்டும் என்பது தான்.  

     இயேசுவை பல நேரங்களில் யூதர்கள் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.  அவர் மீது குற்றம் கண்டுபிடித்து அவரை தண்டித்து கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரைப் பின்தொடர்ந்தார்கள்.  ஆனால் இயேசு அவர்களை நேசிக்கக் கூடியவராக இருந்தார். 

       எனவேதான் அவர்கள் செய்கிற தவறுகளை சுட்டிக் காண்பித்து, அவர்கள் அதனை சரிசெய்து கொண்டு ஆண்டவரின் மக்களாக இருப்பதற்கு வழி காண்பித்தார்.  இந்த இயேசுவைப் போலவே நாமும் இந்த சமூகத்தில் வாழ இந்நாளில் அழைக்கப்படுகிறோம்.  எனவே அன்புக்குரியவர்களே! 
வெறுப்பது யாராயினும் நேசிப்பது நாமாக இருப்பதற்கான அருளை வேண்டி இந்த திருப்பலியில்  இணைந்து தொடர்ந்து செபிப்போம்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...