சனி, 5 பிப்ரவரி, 2022

உண்மைச் சீடர்களாக... (06.02.2022)

உண்மைச் சீடர்களாக... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!




    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் தன்னுடைய பணிக்கு நம்மை அழைக்கின்றார்.  அவரது பணிக்கு அழைக்கப்படும் போது பல நேரங்களில், அவரது அழைப்பை நாம் உணர்ந்து கொள்வது இல்லை. காரணம், நாம் பாவிகளாக இவ்வுலகத்தில் வாழ்கின்றோம் என நாம் எண்ணிக் கொண்டிருப்பது அதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இத்தகைய எண்ணத்தோடு இருந்தவர்தான் எசாயா.  ஆனால் எசாயாவின் பாவங்களை இறைவன் மன்னித்து, அவரை தன் பணிக்கு தகுதி உள்ளவராக மாற்றுகிறார். நம்மையும் அவ்வாறு அவர் தகுதி உள்ளவராக மாற்றுகிறார்.  

    அவரது பணியைச் செய்ய நம்மை அழைக்கின்றார். அவரது பணியை செய்ய நம்மிடம் திறந்த மனதும் ஆழமான நம்பிக்கையும் அவசியம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக உணர்த்துகின்றார். பலநேரங்களில் நம்மை எல்லாம் இறைவன் அழைப்பாரா? என்று எண்ணி நாம் ஆண்டவரை புறம் தள்ளுகிறோம்.  ஆனால் கடைநிலையில் இருந்த என்னையும் ஆண்டவர் அழைத்தார் என்ற பவுலடியாரின்  வார்த்தைகளுக்கு ஏற்ப, கடவுள் நம்மை அழைக்கின்றார். நம்மை அவரது பணிக்காக அழைக்கின்றார்.  அவரது அழைப்பை உணர்ந்து கொண்டு, அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, எப்படி பேதுரு அவர் மீது நம்பிக்கை கொண்டு கடலில் வலையை வீசி மீன்களைப் பிடித்தாரோ அதுபோல, நாமும் அந்த ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பேதுரு, தான் கொண்டிருந்த நம்பிக்கையில் தன் வாழ்வின் இறுதிவரை  நிலைத்திருந்தார்.  அவரைப் போல நிலைத்திருந்து நாமும் இறையாட்சியின் பணியினை இவ்வுலகத்தில் செய்திட இறைவன் அழைக்கின்றார். நாம் அவரது அழைப்புக்கு செவி கொடுத்து அவரது உண்மைச் சீடர்களாக முயலுவோம். 

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

பணியாற்றிட ...(5.2.2021)

 பணியாற்றிட ...

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்கள் நம்மை தளரா மனதோடு பணி செய்ய அழைப்பு விடுக்கின்றன.  இயேசுவின் சீடர்களுக்கு,  உணவருந்தக் கூட நேரம் இல்லாத வகையில் அவர்கள் தொடர்ந்து இறையாட்சிப் பணியை செய்து வந்தார்கள். அவர்கள் மீது பரிவு கொண்ட இயேசு அவர்களுக்கு ஓய்வு தர விரும்பினார். ஆனாலும் அவர்களால் ஓய்வு எடுக்க இயலாத நிலை ஏற்பட்டது.

    ஆனால் அந்த இக்கட்டான நிலையைக் கண்டு, அங்கிருந்தவர்கள் மனம் தளர்ந்து போகவில்லை, கோபம் அடையவில்லை. மாறாக ஆண்டவரின் பணியைச் செய்வதை ஆனந்தமாகக் கருதி செய்தார்கள். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பல நேரங்களில், நாம் நமது சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் கடந்து, நமது இன்பமான நேரங்களை அடுத்தவரின் நலனுக்காக தியாகம் செய்யக்கூடிய சூழல்கள் உருவாகுமானால், அந்த நேரங்களில் எல்லாம் நாமும் இயேசுவின் சீடர்களைப் போல, அயராது பணி செய்கிறோம் என்பதை மனதில் இருத்தியவர்களாய், தொடர்ந்து பணியாற்றிட இறையருளை வேண்டுவோம்.


வியாழன், 3 பிப்ரவரி, 2022

நேர்மையோடும் உண்மையோடும் வாழ ... (4.2.2022)

நேர்மையோடும் உண்மையோடும் வாழ ...



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று நாம் தாய் திருஅவையாக இணைந்து புனித அருளானந்தரின் திருநாளை சிறப்பிக்க திருஅவை நமக்கு அழைப்பு தருகிறது.

 ஜான் என்னும் பெயர் கொடுக்கப்பட்டதால் என்னவோ, திருமுழுக்கு யோவான் போலவே வாழவும் இறக்கவும் செய்கின்றார். 

1693 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அருளானந்தர் கொலை களமாகிய ஒரியூரை நோக்கி குதிரைவண்டியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டார். அவருடைய உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டு, இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அப்போது அவர் புல்லூர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது, அருளானந்தரின் நிலைகண்டு அவர்மீது பரிதாபப்பட்ட ஓர் இந்துப் பெண்மணி தன்னுடைய வீட்டிலிருந்து கொஞ்சம் மோர் கொண்டு வந்து, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். அதை அன்போடு பருகிய அருளானந்தர் அந்தப் பெண்மணியிடம், “இந்த ஊரின் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “புல்லூர்” என்றார். அருளானந்தர் அவரிடம், “இனிமேல் இந்த புல்லூர் என அழைக்கப்படாது, மாறாக நெல்லூர் என அழைக்கப்படும்” என்று ஆசிர்வதித்து சென்றார்.

அவர் ஆசிர்வதித்தனால், இன்றைக்கு அந்த ஊர் நெல் விளையும் ஊராக விளங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்தும் வறண்டு கிடக்கும்போது இந்த ஊர்மட்டும் வளம்கொழிக்கும் ஊராக இருப்பதைப் இன்றும் காண முடிகிறது. 


    உண்மையைச் சொல்லும் போதும், நன்மையை செய்யும்போதும்,  இன்னல்களை சந்திக்க வேண்டும் என்பது இயல்பான ஒன்று. இன்னல்களை சந்திக்கின்ற நேரங்களில் நாம் நமது சுய இயல்பை மாற்றிக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தை, இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. 


    உயிர் போகும் என தெரிந்திருந்தும், திருமுழுக்கு யோவான் அரசனின் குற்றத்தை சுட்டிக் காட்டினார். அரசனது தவறை சுட்டிக் காட்டுவதால் தண்டனைக்கும் அவரது கோபத்திற்கும் உள்ளாக நேரிடும் என அறிந்திருந்தும் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ளாது, இறையாட்சியின் மதிப்பீடுகளை தன் வாழ்வில் வெளிப்படுத்திக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவான் அநீதியை, தீமையை சுட்டிக்காட்டுகிறார். நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், இடத்திற்கு ஏற்றார் போல நிறத்தை மாற்றும் பச்சோந்தியாய் மாறிக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்களுக்கு மத்தியில் நாம், திருமுழுக்கு யோவானைப் போல, நேர்மையோடும் உண்மையோடும் வாழ இறையருள் வேண்டுவோம்.

புதன், 2 பிப்ரவரி, 2022

பணியாளர்களாக வாழ்ந்திட...(3.2.2022)

பணியாளர்களாக வாழ்ந்திட... 

இயேசுவில் அன்புக்குரியவர்களே!




    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


    நற்செய்தி பணியாற்றும் போது நாம் எதை எடுத்துச் செல்ல வேண்டும், எதை எடுத்துச் செல்லக் கூடாது என்பதனை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் உணர்த்துகிறார். நாம் நிலையானது என எண்ணி இந்த உலகத்தில் சேர்த்து வைக்கக் கூடிய எவற்றையும் இறையாட்சிப் பணிக்கு எடுத்துச் செல்ல தேவையில்லை  என்பதையும் நாம் இறையாட்சி பணிக்கு ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும், இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன.


    அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிப் பணியில் பங்கு பெறுகின்ற நாம், எதை எடுத்துக் கொண்டு நாம் நற்செய்தி பணியினை செய்கிறோம்?  நற்செய்திப் பணியை இன்று வியாபாரமாக்குபவர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், இறைவன் உண்மையான நற்செய்திப் பணியாளர்களாக வாழ்ந்திட நமக்கு அழைப்புத் தருகிறார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுப்போம். 

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

இறைவனுக்கு அர்ப்பணமாக்க...(2.2.2022)

 இறைவனுக்கு அர்ப்பணமாக்க...

இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    ஆண்டவர் இயேசுவை கோவிலில் அர்ப்பணித்ததை இன்றைய நாளில் நாம் நினைவு கூருகிறோம். கோவிலில் இயேசுவை அர்ப்பணிப்பது அக்காலத்தில் நிலவிய யூதச் சடங்கு முறைகளுள் ஒன்றாக இருந்தது.  இன்றைய காலகட்டத்தில் நாமும் ஆலயத்திற்கு செல்கிறோம்.  பலவற்றை காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோம் கடவுளுக்கு.  ஆனால் நாம் ஒப்புக் கொடுக்கக்கூடிய அனைத்துமே அவரால் உண்டாக்கப்பட்டவை. அவரால் உண்டாக்கப்பட்டதை அவரிடமே நாம் காணிக்கையாக தருகின்றோம். நாம் இந்த காணிக்கையை வழங்கும் போது எத்தகைய மனநிலையோடு இருக்கிறோம்? என்பதை சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஏதோ கடமை இருக்கிறது,  காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் காணிக்கையை கொடுக்கின்றோமா? இன்று பல இடங்களில் ஆடம்பர காணிக்கை கொடுக்க கூடிய நிகழ்வானது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிகமான காணிக்கையை ஒரு குடும்பம் தரவேண்டும் என எண்ணுவது, அது பலரின் மத்தியில் அவர்களுக்கு கவுரவத்தை தரும் என்ற மனப்பான்மையோடு அவர்களை அச்செயலில் ஈடுபட வைக்கிறது. 

நாம் அனுதினமும் ஆலயத்திற்கு செல்கிறோம்.  ஆண்டவரிடத்தில் எதை காணிக்கையாக்குகிறோம் என்பதை விட, எந்த மனநிலையோடு காணிக்கையை தருகிறோம் என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்ப்போம்.  கடமைக்காகவும், வீண் பெருமைக்காகவும், சுற்றத்தாரின் பார்வையையும் மனதில் கொண்டு நாம் காணிக்கைகளை ஆண்டவரிடத்தில் கொடுப்போமாயின்,  அது ஆண்டவருக்கு உகந்தது அல்ல. மாறாக, முழு மனதோடு எல்லாம் வல்ல இறைவனை மனதில் இருத்தி, நாம் செய்கின்ற அறச்செயல்கள் தான் இறைவன் விரும்புகின்ற காணிக்கை. கடவுள் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறார். இரக்கத்தை காணிக்கையாக இறைவனிடத்தில் சமர்ப்பிப்போம். ஆடம்பரங்களை தவிர்த்து, அமைதியான வழியில் வாழ்வை நடத்துவோம்.  அந்த வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணமாக்க இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

திங்கள், 31 ஜனவரி, 2022

நம்பிக்கைக்குரிய மனிதர்களை ஊக்கப்படுத்தவும் ...(1.2.2022)

நம்பிக்கைக்குரிய மனிதர்களை ஊக்கப்படுத்தவும்


இயேசுவில் அன்புக்குரியவர்களே!





    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி, கை வைக்க முடியும் எனக் கூறுவார்கள்.  இரண்டு நம்பிக்கைக்குரிய நபர்களை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.  இருவரும் தங்களிடம் இருப்பதை எல்லாம் வைத்து நல்ல உடல் நலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பியவர்கள்.  அதில் ஒருவர் தனது மகளின் நலனை விரும்பினார். ஒரு பெண்மணி தன்னுடைய நலனை விரும்பினாள்.  ஆனால் தங்களிடம் இருந்த எதுவும் அவர்களுக்கு நலனைத் தரவில்லை. ஆனால் ஆண்டவரிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை  அவர்களுக்கு உடல் நலனை தந்தது.  நாமும் இந்த உலகத்தில் நிலையானது என எண்ணி எதை எதையோ பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் பிடித்துக் கொண்டு இருப்பவை எல்லாம் நமக்கு எப்போதும் கை கொடுப்பதல்ல.

    நாம் ஆண்டவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே,  நமக்கு எல்லா நேரத்திலும் கைகொடுக்கும். அந்த நம்பிக்கையோடு இந்த சமூகத்தில் நல்ல பணிகளை செய்வோம். நம்பிக்கைக்குரிய மனிதர்களை உருவாக்கவும், நம்பிக்கைக்குரிய மனிதர்களை ஊக்கப்படுத்தவும் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.  





ஞாயிறு, 30 ஜனவரி, 2022

இலக்கை நோக்கி பயணிக்க.... (31.01.2022)

 இலக்கை நோக்கி பயணிக்க....

இயேசுவில் அன்புக்குரியவர்களே!





    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

நாம் இந்த சமூகத்தில் நல்லதை செய்கின்ற போது,  அதனை உணராத பலர் நம்மை உதாசீனப்படுத்தக் கூடும்.   இன்றைய நாளிலும் இயேசு செய்த அரும் செயல்களை கண்டும், பலர் அவரால் தங்களுக்கு பொருளாதார இழப்பு தான் ஏற்பட்டது என்று கருதி, ஆண்டவர் இயேசு செய்த நல்லதை உணர்ந்து கொள்ளாமல்  ஆண்டவர் இயேசுவை தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்லுமாறு அனுப்புகின்றனர்.  

தீய ஆவி பிடித்திருந்தது மனிதனை இயேசு குணப்படுத்துவதாக சமூகத்தோடும் தம்மோடும் உறவுகளோடும் ஒன்றிணைந்து வாழ அவனுக்கு வழிவகை செய்து கொடுக்கின்றார்.

சமூகத்தோடு ஒன்றிப்பு: இந்த மனிதன் தங்கியிருந்து இடம் கல்லறை என்று மாற்கு குறிப்பிடுகின்றார். மனித நடமாட்டத்தைவிட்டு ஒதுங்கி, ஊருக்கு வெளியே கல்லறையிலே தங்கியிருந்த மனிதரை இயேசு குணப்படுத்தி, ஊருக்குள் அனுப்பி வைக்கிறார்.

தம்மோடு ஒன்றிப்பு: இந்த மனிதர் "தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்" என்னும் செய்தி, அவர் தன்னிலை மறந்து, தாம் யார் என்பதையே உணராது வாழ்ந்து வந்ததைக் குறிக்கிறது. அதுமட்டுமல்ல, குணம்பெற்ற அவர் "ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன்" இருந்ததை மக்கள் கண்டனர் என்றும் பார்க்கிறோம். எனவே, இயேசு அம்மனிதரைத் தம்மோடு ஒருங்கிணையச் செய்தார்.

உறவினரோடு ஒன்றிப்பு: நலம் பெற்ற மனிதர் இயேசுவோடு இருக்கவேண்டும் என்னும் விருப்பத்தைத் தெரிவித்தபோது, "உம் உறவினருக்கு அறிவியும்" என்று சொல்லி அவரை உறவினர்களிடம் ஒன்றுசேர்க்கிறார்.

தீய ஆவியில் இருந்து குணம் பெற்ற மனிதன் சமூகத்தோடும் தம்மொடும் உறவுகளோடும் ஒன்றிணைந்தது போல மண்ணில் வாழுகின்ற மனிதர்களாகிய நாமும்ஒன்றித்து வாழ இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகின்றோம்...


ஒன்றித்து வாழ்வதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுகின்ற போதும் அல்லது பலர் ஒன்றித்து வாழ நாம் வழிகாட்டுகின்ற போதும் இயேசுவைப் போலவே நாமும் பலரின் எதிர்ப்புகளை சந்திக்க நேரலாம் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஒன்றித்து வாழ்வதே இறைவனது விருப்பம் என்பதை உணர்ந்தவர்களாக நாம் ஒன்று வாழவும் பலர் ஒன்றித்து வாழ வழிகாட்டும் இறைவன் அருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்.

இயேசு இந்த மனிதரைத் தீய ஆவியிடமிருந்து மட்டும் விடுவிக்கவில்லை, மாறாக அவர் தம்மிடமிருந்தும், உறவினர், குடும்பத்தினரிடமிருந்தும், ஊர், சமூகத்தைவிட்டும் பிரிந்திருந்த நிலையை மாற்றி, மீண்டும் அவரை ஒரு முழு மனிதராக, சமூகத்தின் முழு உறுப்பினராக மாற்றி அனுப்புகிறார்.

மன்றாடுவோம்: 

நாம் பல நேரங்களில் நல்ல பணிகளைச் செய்யும் போது, அங்கு அது நல்ல பணி என அறிந்திருந்தும்,  அந்த பணியை நாம் செய்து கொண்டிருப்பதால் அங்கு இருக்கக்கூடிய சிலர், தாங்கள்  பாதிக்கப்படுவதாக உணர்ந்து எங்கள் பகுதியில் நீங்கள் உங்கள் நல்ல பணிகளைச் செய்ய வேண்டாமெனக் கூறி நம்மை அவ்விடத்தை விட்டு அகற்றக்கூடிய பணியில் ஈடுபடலாம். இத்தகைய நிகழ்வுக்கு உதாரணமாக, நாம் எத்தனையோ நிகழ்வுகளை குறிப்பிடலாம்.

    இரோம் சர்மிளா என்ற பெண்மணியை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம்.  இராணுவ அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளை எதிர்த்து,  உண்ணாவிரதப் போராட்டத்தை பல ஆண்டுகளாக மேற்கொண்டவர். ஆனால் அவர் தேர்தலை சந்தித்தபோது, அவரை அந்த மக்கள்  நிராகரித்தார்கள். இதுபோல எத்தனையோ நபர்களை நாம் பட்டியலிடலாம். இத்தகைய சூழ்நிலைகளை நாம் நமது வாழ்வில் சந்திக்கின்ற போது மனம் தளராது ஆண்டவர் இயேசுவைப் போல, செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் நன்மையை செய்வோம். ஓரிடத்தில் நாம் நிராகரிக்கப்பட்டால் அங்கேயே நாம் தேங்கி விடாது ஆண்டவரின் அருள் துணையை நாடி நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்தவர்களாய் அடுத்த அடியை எடுத்து வைத்து தொடர்ந்து பயணிப்போம்.  நம்மை ஏற்றாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நன்மை செய்வது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும்.   அந்த இலக்கை நோக்கி பயணிக்க இறையருள் வேண்டுவோம்.





சனி, 29 ஜனவரி, 2022

பொதுக் காலத்தின் 4-ஆம் ஞாயிறு 3-ஆம் ஆண்டு (30.01.2022)

 

பொதுக் காலத்தின் 4-ஆம் ஞாயிறு
3-ஆம் ஆண்டு



நாள் : 30.01.2022


திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! உங்கள் அனைவரையும் இக்கல்வாரி பலிக்கு அருள்பணியாளர்கள் மற்றும் வளன் அன்பியத்தின் சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்;.. 
இன்றைய திருவழிபாட்டின் மையக்கருத்தாக இருப்பது அன்பு. நமது செயல்கள் அனைத்திலும் அன்பே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பவுலடியாரும் அன்பின் பரிமணங்களை இன்றைய வாசகங்களில் அடுக்கிக்கொண்டே செல்கிறார். அன்புத் தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பண்பு என்றும் அவர் நமக்கு விளக்குகிறார்.
அன்பை அடிப்படையாகக் கொண்டு நற்செய்தி அறிவிக்கும் இறைவாக்கினர்களுடைய பணி எவ்வளவு துன்பங்கள்  நிறைந்ததாக இருந்தாலும் அன்பின் அடிப்படையில் துன்பங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து அன்பு பணியினை நாம் முன்னெடுத்துச் செல்ல அழைக்கப்படுகிறோம். 
அழைக்கும் இறைவனுடைய குரலுக்கு செவிக் கொடுத்தவர்களாய் நம் வாழ்வில் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அனைவரையும் அன்பு செய்து வாழ இறையருளை வேண்டி இன்றைய திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

 
மன்றாட்டுக்கள்

1. அன்பே உருவான இறைவா! திருத்தந்தை. ஆயர்கள், அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் அனைவருக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் நீர் விடுத்த அழைப்பை நன்கு உணர்ந்து உமது அன்பும், உடனிருப்பே எங்களுக்கு இவ்வுலகில் எல்லா வெற்றிகளையும் தேடித்தரும் என்பதை உணர்ந்துச் செயலாற்ற அவர்களுக்கு தேவையான ஆற்றலை தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பின் அரசரே எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்களும் மக்களும் அன்பே அனைத்திற்கும் முதன்மை என்பதை உணர்ந்திடவும்; பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் பெற்றுச் சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. அன்பின் நாயகனே எம் இறைவனே! எங்கள் குடும்பங்கள் உமது அன்பை நிறைவாய் பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும் வாழவேண்டிய அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பை விதைத்த இயேசுவே, உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கியக் காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அன்பால் எல்லோரையும் நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ள நல் எண்ணங்களை அருளவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



மறையுரை

இயேசுவில் அன்புக்குரியவர்களே!
    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த உலகத்தில் அன்பை விதைக்கவே அழைக்கப்படுகிறோம். நாம் கண்ணில் காணுகின்ற  ஒவ்வொருவரையும் அன்பு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாம் பலரால் புறக்கணிக்கப்படலாம், பலரின் எதிர்ப்புகளுக்கு ஆளாகலாம். ஆனால் அன்பு செய்வதை மட்டுமே நாம் நம் இலக்காக கொண்டுச் செயல்பட அழைக்கப்படுகிறோம்.
  இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் எரேமியாவை அழைப்பதையும், அவரை தம் இறைவாக்குப் பணிக்கு தகுதிபடுத்தியதையும் வாசிக்க கேட்டோம். எரேமியாவின் அழைப்பு இறைவனது வார்த்தைகளை யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும், குருக்களுக்கும் எடுத்துரைப்பதாகும். அதிலும் குறிப்பாக யூதாவின் தலைவர்களும் அரசர்களும், குருக்களும் இறைவனுடன் செய்த உடன்படிக்கைக்கு எதிராக செய்கின்ற தவறுகளையும், தவறான சிலைவழிபாட்டையும் சுட்டிக்காட்டும் ஒரு உயரியப் பணி. இத்தவறுகளில் இருந்து தங்களை சரி செய்யவில்லை என்றால் அது எருசலேம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை எடுத்துரைக்கின்ற பணி. இதனால் எரேமியா சந்தித்த இடர்பாடுகள் ஏராளம். தங்களிடம் குற்றம் காண இவர் யார்? இவரது வார்த்தையை இறைவனது வார்த்தை என்று நாங்கள் எப்படி ஏற்பது? ஏங்களை விட வலிமையானவரா இவர்? என்ற கோணத்தில் பலவிமான இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. எனவே பலரின் ஏளனத்திற்கும், கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளானர். ஆனாலும், இறைவாக்கினர் எரேமியா தன் இறைவாக்குப் பணியிலிருந்து பின்வாங்கவே இல்லை. ஏளனம் செய்து எள்ளி நகையாடிய மக்களையும் இறைவனது அன்பு மக்களாக மாற்றிட தொடர்ந்து இறைவாக்கு பணியாற்றியவர் இந்த இறைவாக்கினர் எரேமியா. இவரை போலவே அன்பால் அனைவரையும் இறைவனிடம் அழைத்துச் செல்ல நாம் அழைக்கப்படுகின்றோம்.
    இந்த அன்பையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் வலியுருத்துகிறார். இந்த உலகத்தில் உயரிய நெறி என்றால் எது என்பு மட்டுமே இந்த அன்பின் அடிப்படையில் தான் இயேசு தன் உயிரை நமக்காக தந்தார். பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த அன்பை அதிகமாக வலியுருத்துகிறார். காரணம் இந்த கொரிந்து நகரம் ஒரு வியபார நகரமாகும். பலதரப்பட்ட மக்கள் வியாபார நோக்கத்தில் குடியேரிய செவ்வம் படைத்தவர்களின் கூடாரமாக திகழ்ந்த இடம் அது. பணம் பத்தும் செய்யும் என்பதற்கு ஏற்ப தாங்களே உயர்ந்தவர்கள்., தங்களுக்கு அனைத்து திறமைகளும் உண்டு என்ற மமதையில் வாழ்ந்தவர்கள் அவர்கள். ஆனால் திருத்தூதர் பவுல் அனைத்தும் இருந்தாலும் அடிப்டையானது அன்பு என்பதை அவர்களுக்கு வலியுருத்துகிறார். அதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கும் வலியுருத்துகின்றன. பவுலின் இத்தகைய போதனை அவர்களிடையே காணப்பட்ட போட்டி, பெறாமை, நான் என்ற மமதையை சுட்டிக்காட்டியது. எனவே கொரிந்து நகர மக்களின் எதிர்ப்பை பவுல் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் தன் பணியிலிருந்து பின்வாங்கவில்லை பவுல். இவரது வாழ்வு நமக்கு நம்பிக்கையோடு அன்பின் பணியை அகிலத்தில் முன்னெடுக்க அழைப்பு தருகிறது.
    இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு எசாயா இறைவாக்கினரின் சுருளேட்டை வாசித்த பிறகு இன்று வாசிக்க கேட்ட இறைவாக்கு தன்னில் நிறைவேரியது என்று கூறிய போது அதை அங்கு இருந்தவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மெசியாவை பற்றி இக்கூற்று மெசியாவை எதிர்நோக்கும் யூதர்களுக்கானது பிற இனத்தாரோடு இணைந்து சொல்லும் இவருக்கு எப்படி இது பொருந்தும் என எண்ணி கோபம் கொண்டே இவர் யோசேப்பின் மகன் தானே! என்று இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இயேசு தான் யாருக்காக, எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறேன் என்பதை, தெளிவு படுத்துகிறார். எலியா மற்றும் எலிசா போல தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது என்பதை ஆணித்தரமாக வலியுருத்துகிறார். ஏனெனில் கடவுள் அனைவரையும் ஒன்றென கருதினார். அனைவருக்கும் நலமானதை முன்னெடுத்தார்.  இந்த ஆண்டவரின் அடிச்சுவட்டை பின்பற்றுகின்ற நாமும் அன்பின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இன்று நமது நாட்டில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள சிறையில் உள்ள அருள்சகோதரி சகாய மேரியின் வாழ்வும் இந்த அன்பின் பதையில் அமைந்ததே. 153 வருடங்களாக பெண்களுக்கான கல்வி பணியை தொடரும் அருள்சகோதரிகளின் வாழ்வில் அவர்கள் சந்தித்துவந்த சவால்களுல் இதுவும் ஒன்று. அன்பின் பாதையில் பயணம் செய்து துன்பங்களை சந்திக்கும் நபர்களுக்காக நாம் செபிக்க கடமைப்பட்டுள்ளோம்.   எப்படி இறைவாக்கினர் எரேமியாவும், திருத்தூதர் பவுலும், இயேசுவும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அன்பின் பாதையில் பயணம் செய்து அனைவருக்கும் வழிகாட்டினார்களோ அவர்களைப் போல நாமும் சவால்களுக்கு மத்தியிலும் நாம் ஆண்டவரின் அன்பு பதையில் பயணம் செய்து, பகைப்பவரையும் மன்னித்து அன்பு செய்து வாழ அழைக்கப்படுகிறோம். இதற்கான அருளை இறைவன் நமக்கு தர இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து செவிப்போம். 


எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய...(30.01.2022)

 எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய...




இயேசுவில் அன்புக்குரியவர்களே!

    கடவுள் நாம் பிறப்பதற்கு முன்பாகவே நம்மை அறிந்தவர். நம்மை இவ்வுலகத்தில் அவர் பிறக்க வைத்ததற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை கண்டுகொண்டு இச்சமூகத்தில் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த உலகத்தில் அன்பை விதைக்கவே அழைக்கப்படுகிறோம். நாம் கண்ணில் காணுகின்ற  ஒவ்வொருவரையும் அன்பு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாம் பலரால் புறக்கணிக்கப்படலாம். 


    இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அவரது சொந்த ஊரில் உள்ளவர்கள் புறக்கணிக்கிறார்கள்.  ஆனால் இயேசு நலமானதை செய்தார்.  நாமும் அவரைப் போலவே  நலமானதை செய்ய வேண்டும்.  அன்போடு அனைவரிடத்திலும் பழக வேண்டும். நம்மை புறக்கணிப்பவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.  அதற்காகத்தான் இறைவன் நம்மை அழைத்தார். அன்று எரேமியாவை  அழைத்தது போல, நம்மை அழைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு, வாழ்வில் எப்போதும், எல்லாச் சூழலிலும் நல்லதை செய்ய இறையருள் வேண்டுவோம்.






வெள்ளி, 28 ஜனவரி, 2022

இக்கரைக்கு அக்கரை பச்சை...(29.01.2022)

இக்கரைக்கு அக்கரை பச்சை...



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    இக்கரைக்கு அக்கரை பச்சை என்று கூறுவது போல, பல நேரங்களில் ஊருக்கு அதிகமாக உபதேசம் செய்யக்கூடிய நபர்கள் எல்லாம், தங்கள் வாழ்வில் ஒரு இன்னல் என்று வருகின்றபோது, தடுமாறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய மனிதர்களாகத் தான் இயேசுவின் சீடர்களை இன்றைய நாள் வாசகங்களில்  காணமுடிகிறது.  இயேசுவோடு இந்த சமூகத்தில் அவர்களும் பயணம் செய்தவர்கள்.

    இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டவர்கள். இயேசு செய்த புதுமைகளை எல்லாம் கண்டு வியந்து போனவர்கள். ஆனால் தங்கள் வாழ்வில் ஒரு துயரம் வருகின்றபோது, என்ன செய்வது என தெரியாது உயிரை காத்துக் கொள்ள வேண்டுமென அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்களின் நடுக்கத்தையும் அச்சத்தையும் அறிந்த இயேசு அவர்களுக்கு நம்பிக்கையை தருகிறார். அங்கு இருக்கக்கூடிய இன்னலையும் அகற்றுகிறார்.  

    நாம் நமது வாழ்வில் பல நேரத்தில் நம்பிக்கையை பற்றி பேசுகிறோம். ஆனால் வாழ்வில் இக்கட்டான சூழலை சந்திக்கின்ற போதெல்லாம் நாம் நமது நம்பிக்கை எவ்வாறு உள்ளது என்பதை சிந்திக்கவும், அதனை சீர் தூக்கிப் பார்த்து ஆழமான நம்பிக்கையோடு பயணிக்கவும் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.



வியாழன், 27 ஜனவரி, 2022

இறையாட்சி என்பது என்ன?(28.01.2022)

 இறையாட்சி என்பது என்ன?



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

    இறைவனது விருப்பம் நிறைவேறுவது தான் இறையாட்சி. இறைவனது விருப்பம் எப்படி நிறைவேறும்? இறைவன் இது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டும் எனச் சொல்லி நிறைவேறுவது அல்ல இறையாட்சி.  இறைவனது விருப்பங்கள் அனைத்தும் இம்மண்ணில் உள்ள ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், பிரதிபலிக்கப்படுவது தான் இறைவனது இறையாட்சி ஆகும்.


    ஒரு சிறிய கடுகு விதை வளர்ந்து பல  பறவைகள் வந்து தங்கக் கூடிய வகையில் பயன்படுகிறது என்றால், கடவுளின் படைப்பின் சிகரமான மனிதர்களாகிய நாம் நமது செயல்பாடுகளால், இந்த அகிலம் முழுவதும் மகிழும் வண்ணம், இந்த அகிலத்தில் பல நன்மைகளை செய்யக்கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனது விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறுவது தான்  இறையாட்சியின் மதிப்பீடாக மாறுகிறது. சமத்துவத்தோடும், அன்போடும், நீதியோடும், நேர்மையோடும் நாம் வாழுகின்ற சமூகத்தில் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு, தோள் கொடுத்து, எப்போதும் ஒருவர் மற்றவருக்கு துணையாக இருந்து பயணிக்கக் கூடியவர்களாக நாம் மாறுவதும், இவ்வுலகத்தில் உள்ள ஒட்டுமொத்த நன்மைகளையும் உள்ளத்தில் இருத்துவதோடு நிறுத்தி விடாமல், அதனை நமது வாழ்வு மூலம் வெளிப்படுத்துவதுமே இறைவனது ஆட்சி. அதுவே இறைவன் விரும்புவது. இறைவன் விரும்பும் இறையாட்சியின் மதிப்பீடுகளை நாம் நமது வாழ்வில் செயலாக்கப்படுத்த இறையருளை வேண்டுவோம்.




Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...