வெள்ளி, 3 மார்ச், 2023

இயேசுவின் மீது கண்களை பதிய வைப்போம்! (31-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

             ஆண்டவர்   இயேசுவின் மீது நமது கண்களை பதிய வைக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த இயேசுவின் மீது தனது பார்வையை பதித்த இருவரை பற்றி இன்றைய நற்செய்தி வாசக நமக்கு எடுத்துரைக்கிறது.

 ஒன்று யாயீர் என்ற மனிதன். தன்னுடைய மகளின் உடல் நலத்திற்காக ஆண்டவர் இயேசுவை நாடி வருகிறார். நீர் வந்து எனது மகளை தொட்டால் அவள் குணம் பெறுவாள் என்று சொல்லி நம்பிக்கையோடு இயேசுவை அழைத்துச் செல்கிறார் ‌‌.  இன்னொரு புறம் 12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒரு பெண்மணி, தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் செலவு செய்தும் குணம் பெற முடியாத நிலையில் ஆண்டவர் இயேசுவின் மீது தனது கண்களை பதிய வைத்தவளாய், நம்பிக்கையோடு அவரின் மேலாடையை தொட்டால் போதும், நான் குணம் பெறுவேன் என்று நம்பிக்கை கொண்டவளாய் இயேசுவின் மேல் ஆடையை தொட்டு குணம் பெறுவதை நாம் வாசிக்க கேட்டோம்.

      இந்த வாசகங்களின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சீர்தூக்கி பார்க்கிற போது, நாம் இந்த இயேசுவின் மீது எத்தகைய கண்களை பதிய வைத்திருக்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம். நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக நம்பிக்கையோடு இந்த இயேசுவின் மீது நாம் பார்வையை பதிக்கிற போது, இந்த இயேசுவிடமிருந்து நலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. இந்த இறைவார்த்தை வலியுறுத்தும் வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்டு இனி வருகின்ற நாட்களில் நம்பிக்கையோடு கடவுளின் மீது நமது பார்வையை பதிய வைக்க ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

நம்பிக்கையால் சான்று பகருவோம்! (30-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய இறை வார்த்தையின் வழியாக நம்பிக்கையால் சான்று பகருகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு தரப்படுகிறது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேய் பிடித்திருந்த ஒரு மனிதனிடத்தில் இருந்து அப்பேயை அகற்றுகின்றார். இயேசுவின் இந்த செயலைக் கண்டு இயேசுவால் தங்களுடைய தொழிலுக்கு இழப்பு ஏற்பட்டதாக எண்ணி பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இயேசு செய்த அரும் அடையாளங்களை கண்டிருந்தாலும் கூட, அவர் செய்த செய்கையினால் இயேசுவை ஏற்றுக் கொள்ள தயங்கியவர்களாக இவ்விடத்தை விட்டு அகன்று விடும் என்று சொல்லியபோது, இயேசு மற்றொரு இடத்திற்கு நற்செய்தி ஆற்றுவதற்காக தன் பயணத்தை மேற்கொண்டார்.

 அவர் தன் பயணத்தை மேற்கொள்ளுகின்ற அந்த தருணத்தில் குணம் பெற்ற மனிதன் தானும் உம்மை பின் செல்ல விரும்புகிறேன் என்று சொன்னபோது நீ உன் வீட்டிற்கு சென்று உறவுகளை சந்தி என்று சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். வீட்டிற்கு அனுப்பப்பட்ட நபர் வீட்டிற்கு சென்றதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த மக்களுக்கு எல்லாம் தான் எப்படி குணம் பெற்றேன் என்பதை எடுத்துரைக்கக் கூடியவராக, தான் அறிந்து கொண்ட இந்த இயேசுவை அடுத்தவருக்கு அறிவிக்கின்ற ஒரு மனிதனாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

   இந்த மனிதனைப் போலவே எத்தனையோ நன்மைகளை ஆண்டவரிடமிருந்து
பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே நாம் அறிந்து அன்பு செய்கின்ற அந்த ஆண்டவரை நமது நம்பிக்கையின் நிமித்தமாக  மற்றவருக்கு அறிவிக்கின்ற நல்லதொரு சாட்சிகளாக மாறிட இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு,  நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்  நாம் மற்றவருக்கு இந்த இயேசுவை அறிவிக்கின்ற மனிதர்களாக மாறிட ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

வார்த்தைகளை வாழ்வாக்குவதே வாழ்வின் இலக்கு! (29-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
                  இன்றைய வாசகங்கள் அனைத்துமே நாம் எத்தகைய ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றன. ஆண்டவர் இயேசுவின் மலைப் பொழிவை இன்று நாம் வாசிக்க கேட்கிறோம். இயேசு கூறிய இந்த மலைப்பொழிவின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்கிற போது, அர்த்தமுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழ்கின்றவர்களாக நாம் இருப்போம் என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

 இன்றைய முதல் வாசகம் ஏழைகளை கடவுள் நம் மத்தியில் விட்டு வைத்திருக்கிறார் என்பதை எடுத்துரைக்கிறது. இந்த ஏழைகளோடு இணைந்த வாழ்வு என்பது அவர்களின் வாழ்வு நெறிப்பட வேண்டும், அவர்களின் வாழ்வும் உயர வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் நமது செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. இவர்களை ஏழைகள் எனப்புறம் தள்ளினாலும் அவர்களை கடவுள் அழைத்திருக்கிறார். ஒவ்வொருவரும் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள்.  மண்ணில் வாழுகிற ஒவ்வொரு உயிருமே கடவுளின் பிள்ளைகள் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. இந்த உலகம் ஒதுக்கி தள்ளுபவர்களைக் கூட அரவணைப்பவர்களாகத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். இந்த ஆண்டவர் இயேசுவை பின்பற்றக் கூடிய நாம் ஒவ்வொருவருமே  அவரின் மலைப்பொழிவை மனதில் இருத்தியவர்களாக நமது வாழ்வில் ஏழைகள் மீது அக்கறை கொண்ட ஒரு வாழ்வாகவும் நீதியை பின்பற்றுகின்ற ஒரு வாழ்வாகவும், நீதிக்காக துன்புறுகின்ற மனிதர்களாகவும், எப்போதும் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவது மட்டுமே நம் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவர்களாக தொடர்ந்து செயலாற்றிட இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நம்பிக்கையோடு பயணிப்போம் (28-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
              ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களோடு படகில் சென்ற போது பெரும் காற்று வீச சீடர்கள் அஞ்சி நடுங்கிய போது காற்றையும் கடலையும் கடவுள் அடக்கியதை குறித்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம். இயேசுவின் சீடர்கள் எல்லாம் இயேசுவோடு எப்போதும் உடன் பயணித்தவர்கள். அவர் செய்த எண்ணில் அடங்காத புதுமைகளை உடனிருந்து கண்டவர்கள். ஆனால் தங்கள் வாழ்வில் ஒரு துன்பம் என வருகிறபோது அவர்கள் அனைத்தை மறந்தவர்களாக கடவுளே நாம் சாகப் போகிறோம் என்று கத்தக் கூடியவர்களாக மாறிப் போனார்கள்.

      பல நேரங்களில் இந்த சீடர்களை போலத்தான் நாமும் இருக்கிறோம். நம் வாழ்வில் எதிர்பாராத நேரத்தில் வருகிற துன்ப துயரங்களில் நம் உடனிருந்து நம்மை காத்து வழி நடத்திய கடவுளை துன்பம் நேருகிற போது மறந்து போனவர்களாக பல நேரங்களில் நாம் நம்பிக்கை இழந்தவர்களாக, கடவுளை நோக்கி புலம்பக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று நாம் கண்டு விசுவாசிக்கின்ற ஆண்டவர் நம் வாழ்வில் வருகின்ற துன்பங்களை எல்லாம் தகர்த்தெறிவதற்கான ஆற்றலை தருபவர் என்பதை ஆழமாக உணர்ந்தவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் எல்லாவிதமான இன்ப துன்பங்களுக்கு மத்தியிலும் கடவுளுக்கு உகந்தவர்களாக அவர் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
 

சின்னஞ்சிறு செயல்களும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும்! (27-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
       ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறையாட்சியை ஒரு சிறிய கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். அதாவது மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே சின்னஞ்சிறிய செயல்கள் மூலமாக இறையாட்சியை மண்ணில் மலர்விக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்து உணர்த்துகிறார். நாம் செய்கிற சிறிய செயல் எப்படி இறைவனது ஆட்சியை இந்த மண்ணிற்கு கொண்டு வரும் என்ற கேள்வி நம்மிடம் எழலாம். எப்படி ஒரு சிறிய விதையானது முளைத்தெழுத்து பல பறவைகள் வந்து தங்குவதற்கான இடமாக மாறுகிறதோ அதுபோல நாம் செய்கின்ற சின்னஞ்சிறிய செயல்கள் அனைத்துமே காணுகிற பல மனிதர்களால் தங்கள் வாழ்விலும் பின்பற்றப்பட்டு, அது மிகப்பெரியதாக வளரும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை இந்த மண்ணில் மலர்விப்பதற்கு நீங்களும் நானும் சிறு விதைகளாக, சின்னஞ்சிறிய செயல்கள் மூலம் இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு அன்போடும் சகோதரத்துவத்தோடும் மனிதநேயமிக்க மனிதர்களாக நாளும் இந்த சமூகத்தில் வாழ்வோம். நம் சின்னஞ்சிறிய செயல்களால் இறைவனுடைய ஆட்சியை இந்த மண்ணில் மலரச் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நம்பிக்கையோடு பயணம் செய்வோம்! (26-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
             ஆண்டவர் இயேசுவின் பணியை செய்ய அழைக்கப்பட்டு இருக்கக்கூடிய நீங்களும் நானும் இந்த இயேசுவை உறுதியாக பற்றிக்கொண்ட மனிதர்களாக, நம்பிக்கையோடு அவரை இதயத்தில் சுமந்தவர்களாக நற்செய்தி பணியாற்றிட அழைக்கப்படுகின்றோம். இந்த நற்செய்தி பணியை செய்வதற்கு நமக்கு பணமுமோ பொருளோ அவசியம் அல்ல. மாறாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே போதும் என்ற மனநிலையோடு தொடர்ந்து பயணம் செய்ய அழைக்கப்படுகின்றோம்.

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது பணியை செய்ய அனுப்பிய சீடர்களுக்கு எதை எடுத்துச் செல்வது, எதை எடுத்துச் செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்துகின்றார். அவர்கள் பணத்தையோ பொருளையோ நம்பிச் செல்ல வேண்டாம். இந்த ஆண்டவரை நம்பி உங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள் என்ற ஆறுதலான வார்த்தைகளை கடவுள் அவர்களுக்கு தருகிறார். செல்லுகின்ற இடத்தில் எல்லாம் இறையாட்சியை பற்றிய நற்செய்தியை அறிவிக்க சொல்கிறார். ஏற்றுக்கொள்பவர்களுக்கு எல்லாம் அமைதியை தரச் சொல்லுகிறார். இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்க கூடிய நாமும் நமது வாழ்வில் நாளும் இயேசுவை அறிவிக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் இறையாட்சி இந்த மண்ணில் வளர்வதற்கு நீங்களும் நானும் நல்லதொரு முன்மாதிரிகளாக, நமது செயல்கள் மூலம் இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய அழைக்கப்படுகிறோம்.

    நாம் காணுகின்ற மனிதர்களுக்கு எல்லாம் அமைதியை கொடுக்கின்றவர்களாகவும், நம் வாழ்வு மூலமாக அவர்களின் வாழ்வு  மேலோங்குவதற்கு நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நாளும் கடவுளை இதயத்தில் சுமந்தவர்களாக நம்பிக்கையோடு பயணம் செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளின் பாதையில் நாளும் பயணம் செய்து ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை இம்மண்ணில் மலர்விப்பதற்கான கருவிகளாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் !

நற்செய்தியை பறைசாற்றுவோம் (25-1- 23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
   உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற வார்த்தைகளை ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார். நம் ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை பறைசாற்றுகின்ற மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் நற்செய்தியை எப்பொழுது நாம் பறைசாற்ற துவங்குகிறோமோ, அப்பொழுது நலம் தருகின்ற பல நல்ல பணிகளை நாம் செய்வோம் என்பதை இன்றைய  இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது‌. ஈராயிரம் ஆண்டுகளாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற இந்த இயேசு கிறிஸ்துவை எத்தனை நபர்களுக்கு நாம் அறிவித்திருப்போம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம்.  திருமுழுக்கு வாயிலாக இந்த இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கான ஆற்றல் பெற்றிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவரும் அப்பணியினை தொடர்ந்து செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

புதன், 1 மார்ச், 2023

இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம்! (24-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
       ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை காண்பதற்காக அவர் தாயும் சகோதரர்களும் வெளியே நின்று கொண்டிருந்த போது, இயேசுவின் இடத்தில் சென்று சிலர், உம் தாயும் சகோதரர்களும் உம்மை காண்பதற்காக வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னபோது, யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என்ற கேள்வியை எழுப்பியவராக தன் தாய் யார் தன் சகோதரர் யார் என்று விளக்கத்தையும் கொடுத்தார். 

         இறை வார்த்தையை கேட்டு அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறவர்களே
என் தாயும் சகோதரர்களும் ஆவார் என்று இயேசு கூறியதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இயேசுவின் சகோதரர்களாக இன்றும் என்றும் நாம் இருப்பதற்கான ஒரே வழி, அவரின் வார்த்தைகளைக் கேட்டு அதனை வாழ்வாக்குகின்றவர்களாக நாம் இருக்க வேண்டும். எப்போது ஆண்டவரின் வார்த்தைகளை நாம் வாழ்வாக்க துவங்குகிறோமோ அப்போது ஆண்டவர் இயேசுவின் சகோதரர்களாக நாம் மாறுகிறோம் என்பதை உணர்ந்தவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளின் வார்த்தையை வாழ்வாக்குவதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

ஆண்டவரின் பணியை ஆர்வத்துடன் செய்வோம்! (23-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
         இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தீய ஆவி பிடித்த மனிதர்களிடத்தில் இருந்து தீய ஆவியை அகற்றுகிறார். இயேசுவின் இச்செயலை ஏற்றுக் கொள்ள விரும்பாத அங்கிருந்த பரிசெயர்களும் சதுசேயர்களும், தீய ஆவியின் தலைவனை கொண்டு தான் இவர்  இப்பணியை செய்கிறார் என்று சொல்லி, இயேசுவின் பணியை நிராகரிக்கிறார்கள்.


ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களின்  வார்த்தையை கொண்டே, அவர்களோடு உரையாடி, அவர்களை வாயடைக்கச் செய்கின்றார். பல நேரங்களில் நாம் நல்ல பணிகளை முன்னெடுக்கிற போது, இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முயற்சிக்கிற போது, நம் வாழ்வை பலரும் ஏளனம் செய்யலாம். பல நேரங்களில் பலர் நாம் செய்கிற செயல்களை விமர்சிக்கவும் செய்யலாம். விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், சரி, யார் எப்படி நினைத்தாலும் சரி, நாம் செய்ய விரும்புகின்ற நன்மைத்தனங்களை செய்கின்ற நபர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.

 இயேசுவின் பணியை பலரும் விமர்சித்த போது ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் பதில் தருகின்றவராக இயேசு செல்லவில்லை. பல நேரங்களில் அதனை எதிர்கொள்வதற்காக அவர்களோடு அவர் உரையாடச் செய்தார். ஆனால் அவர் உரையாடிய போது அவர்கள் மௌனம் காத்தார்கள். அப்படி மௌனம் காத்த நேரத்தில் எல்லாம் ஆண்டவர் தாம் செய்ய விரும்பிய பணியை செய்யாமல் சென்று விடவில்லை. தான் செய்ய விரும்பிய நல்ல பணியினை தொடர்ந்து செய்கிறவராக இருந்தார்.

 இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், நாம் செய்ய விரும்புகின்ற ஆண்டவரின் பணியினை ஆற்றலோடு தொடர்ந்து செய்வதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கிறிஸ்துவில் ஒன்றிணைக்கப்பட வேண்டும்! (22-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
      ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது பணிக்கென சீடர்களை அழைப்பதையும், தனது பணிக்கு ஆயத்தமாக்குவதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கின்றோம்.

       ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கக்கூடிய மனிதர்களாக நாம் இருப்பதற்கு நல்லதொரு மனமாற்றம் பெற்ற மனிதர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். மனம் மாற்றம் பெற்றவர்களாக  ஆண்டவர் இயேசுவின் பணியைச் செய்ய முற்படுகிற போது நாம் ஒளியில் நடக்கின்ற மக்களாக இருப்போம். 

முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்டது போல காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியை கண்டார்கள் என்ற வார்த்தைக்கு இணங்க, இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அதனை பின்பற்றுகின்ற மனிதர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாம் முன்னோக்கிச் செல்லுகிற போது நாமும் ஒளியில் நடக்கின்ற மனிதர்களாக இருப்போம். இந்த இயேசுவின் பாதையில் நடக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும் யாரைச் சார்ந்தவர்கள் என்று எண்ணி நமக்குள் சண்டைகளையும் சச்சரவுகளையும் பிளவுகளையும் உருவாக்கக் கூடாது என்பதை இன்றைய இரண்டாவது வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.  நான் பவுலை சார்ந்தவன் அப்பல்லோவை சார்ந்தவன் என கொரிந்து நகர மக்கள் பிரிந்திருந்த போது, நாம் கிறிஸ்துவால் இணைக்கப்பட்டவர்கள், கிறிஸ்துவால் ஒன்றிணைந்திருக்கிறோம் என்பதை பவுலடியார் எடுத்துரைத்து அந்த மக்களிடமிருந்த பிரச்சனைகளை சரி செய்து அவர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இன்று நீங்களும் நானும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாக நம்மிடம் இருக்கின்ற சின்னஞ்சிறிய தவறுகளை எல்லாம் சரி செய்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் பெயரால் இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து மனமாற்றம் பெற்றவர்களாக இயேசுவின் பணியைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. இந்த வார்த்தைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து ஜெபிப்போம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

நற்செயல் புரிய நன்மனம் தாரும்!(21-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
  நாளும் நாம் பின்பற்றி செல்லுகின்ற இந்த கடவுளை நாம் எப்படி உணர்ந்து இருக்கிறோம் என்பதை மீண்டுமாக சுய ஆய்வு செய்து பார்க்க இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது.

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு தரப்பட்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். கடவுள் செய்த வல்ல செயல்களை எல்லாம் கண்டு இந்த இயேசுவை நாடிச் செல்கின்ற மக்கள் கூட்டம் ஒருபுறம். இந்த இயேசு செய்கின்ற பணியினை தவறுதலாக புரிந்து கொண்ட உறவினர் கூட்டம் ஒரு புறம், என இருவகையான மனிதர்களை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பல நேரங்களில் நன்மைத்தனங்களை முன்னெடுக்கிற போது,  பல புதிய உறவுகள் நம்மை நாடி வருவதை நாம் கண்கூடாகக் காண முடியும். அதே சமயம் நாம் நன்மைத்தனங்களை முன்னெடுப்பதால் ஒவ்வொரு நாளும் நமது பெயரும் புகழும் உயர்கிறது என்றால், நமது உறவுகளிடையே அது ஒரு வெறுப்பையும் ஒரு விதமான தவறுதலான புரிதலையும் உருவாக்குகிறது.

      எத்தகைய எண்ணங்கள் மற்றவர் மனதில் இருக்கிறது என்பதை விட நாம் எத்தகைய மனநிலையோடு ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இதயத்தில் இருத்திப் பார்க்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். நாம் செய்கிற ஒவ்வொரு செயலையுமே, கடவுளுக்கு உகந்த மனிதர்களாக, கடவுளின் மனநிலையை நம்மில் பிரதிபலிக்கின்ற மனிதர்களாக நாளும் இந்த சமூகத்தில் செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...